Tuesday 6 February 2018

முத்துக்குவியல்-50!!!!

அசத்தும், போற்றவும் வேண்டிய‌ முத்து:

1951ம் வருடம் 14 வயது ஜேம்ஸ் ஹாரிசன் (James Harrison) என்ற ஆஸ்திரேலிய‌ சிறுவன் ஒருவனுக்கு அவனது இடது நுரையீரலில் மூன்றில் இரண்டு பாகம் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உயிரைக் காப்பாற்ற 13 லிட்டர் [ 2 காலன்கள் ]இரத்தம் தேவைப்பட்டது. உயிரின் பெறுமதியை உணர்ந்த அச்சிறுவன் , தனக்குள்ளே "தனக்கு 18 வயது தாண்டும் போது ஒரு முறையாவது இரத்ததானம் செய்ய வேண்டும்" உறுதி பூண்டு கொண்டான்.


அவனது விருப்பத்திற்கு ஏற்ப இரத்த தானமும் செய்தான். அப்போது தான் ரீசஸ் (Rhesus Disease) நோயை குணப்படுத்துக் கூடிய மிக அரிதான Antigen அவனது இரத்தத்திலிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.

1960களில் பெண்களுக்கு ஏராளமான கருச்சிதைவுகள், மூளை சிதைவு உள்ள‌ குழந்தைகள் பிறத்தல், அனிமியா மற்றும் மஞ்சள் காமாலை தாக்குதல்கள் ஏற்பட்ட குழந்தைகள் என்று நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன. காரணம் கண்டுபிடிக்கப்படாமல் விஞ்ஞானிகள் குழம்பினார்கள். நெடுநாட்கள் ஆராய்ச்சிக்குப்பிறகே தாய்மையுற்ற‌ நிலையில் அந்தப்பெண்ணின் இரத்தம் அவள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் செல்களைத்தாக்குகிறது, அழிக்கிறது என்று கண்டு பிடித்தார்கள். இது தான் ரீசஸ் நோய்.  நெகடிவ் இரத்த குரூப் உள்ள தாயின் வயிற்றில் பாஸிடிவ் இரத்த குரூப் உள்ள கரு உருவாகி இருக்கும்போது  இந்த நோய் உண்டாகி குழந்தைக்கும் தாய்க்கும் சிதைவுகள் பல‌ விதங்களில் உன்டாகின்றன.



ஜேம்ஸ் ஹாரிசனின் இரத்தத்தில் RhD-negative blood and anti-D antibodies கலந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். மிகவும் அரிதான சிலருக்கு மட்டுமே இந்த வகை இரத்தம் இருக்குமாம். அதிலும் இவருக்கு இருப்பதோ மிகவும் உயர்ந்த வகை இரத்தம். இரத்தத்தைக்கொடுக்கக் கொடுக்க, அவரின் உடலில் ஊறும் இரத்தம் முன்னையும்விட பன்மடங்கு சக்தியுடன் பெருகுமாம். 

அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ் ஹாரிசன் 1,106க்கும் அதிகமான தடவைகள் இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளார். 18 வயதிலிருந்து இன்றைக்கு 78 வயது வரை இவரின் இரத்தத்திலுள்ள பிளாஸ்மா 2 மில்லியன் குழந்தைகளைக்காப்பாற்றியிருக்கிறது!




இவரல்லவா மனிதர் என்ற சொல்லுக்கு அர்த்தத்தைக் கொடுப்பவர்!
இவரை வாழ்த்துங்கள், இல்லை, கைகூப்பி வணங்க வேண்டியவர் இந்த மாமனிதர்!!

காணொளியில் இசை முத்து:

தர்பாரி கானடா ராகம் மயங்க வைக்கும் ராகம். ஊனை உருக்கி குழைய வைக்கும் ராகம். ராகங்களில் அரசன் என்ற பெயர் பெற்றது. தென்னிந்தியாவில் உருவெடுத்து அக்பரின் தர்பாரில் தான்ஸேன் என்ற கவியால் ஹிந்துஸ்தானி ராகமாக உருவெடுத்ததால் இது தர்பாரி கானடா என்று அழைக்கப்படுவதாக வரலாறு. ' சிந்து பைரவி' யில் ' பூமாலை வாங்கி வந்தேன்' பாடலில் ஜேசுதாஸ் அப்படியே குழைந்திருப்பார். '

மலரே மெள்னமா பாடலில் ஜானகியும் பாலசுப்ரமணியமும் அப்படியே மெய்மறந்து பாடியிருப்பார்கள். அதே பாடல் இங்கே இரு இளைஞர்கள் குரலில்,  ராஜேஷ் வைத்யாவின் வீனையில் எப்படி மெய்மறக்க வைக்கிறது என்பதை பார்த்து, கேட்டு ரசியுங்கள்!



தகவல் முத்துக்கள்:

குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை:

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது.

மேலும் விபரங்கள் பெற: 9916737471

இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

ஆச்சரிய முத்து:

ஒவ்வொரு வருடமும்  மார்ச் & அக்டோபர் மாதங்களில்  திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி ஆராட்டு விழா நடைபெறுகின்றது. இதில் மகாராஜாவின் குடும்பத்தினர்களும் அரண்மனையில் இருந்து ராஜ மரியாதையுடன் கிளம்பி சுவாமியுடன் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே விமான நிலய ரன்வேயை கடந்து கடலுக்கு செல்வார்கள். ஊர்வலம் செல்லும் பாதையில் இப்போது




திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஓடு பாதைகள் ஊர்வலம் செல்லும் வழியில் உள்ளது. ஆனாலும் பத்மநாப சுவாமியின் ஆராட்டு ஊர்வலம் இப்போதும் அதே பாதையில் நடக்கிறது. விமான நிலையம் அமைந்தாலும் ஊர்வலப்பாதை மாற்றப்படவில்லை. மாறாக ஊர்வலம் நடைபெறும்போது விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது நிறுத்தப்படும். ஊர்வலம் கோவிலுக்கு சென்றடைந்த பின்னரே விமான நிலையம் திறக்கப்படும். மதியம் 3 மணி முதல் இரவு 9 மணிவரை 6 மணி நேரத்திற்க்கு மூடி விடுவார்கள். உலகிலேயே திருவனந்தபுரத்தில் மட்டும்தான் ஒரு விழாவிற்காக  ஏர்போர்ட்டையே மூடுகிறார்கள் .



29 comments:

saamaaniyan said...

வணக்கம் அம்மா, நலமா ?

தகவல்கள் அத்தனையும் அருமையான நல்முத்துக்கள் !

ஜேம்ஸ் ஹாரிசனின் தொண்டுமனதை தொட்டதுடன், இந்த பதிவின் மருத்துவ தகவல்கள் நான் அறியாதவை... தெரிந்துக்கொள்ள வேண்டியவை. மலரே மெளனமா பாடலை சில நாட்களுக்கு முன்னர் கூட கேட்டுகொண்டிருந்தேன்... ஆனால் உங்களின் பதிவு மூலமாகவே அதன் ராகம் அறிந்தேன் ! என் சங்கீத ஞானம் அப்படி !!! திருவனந்தபுர நிகழ்வு ஆச்சரியமான ஒன்றுதான்.

நன்றி
சாமானியன்

எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

இளமதி said...

வணக்கம் மனோ அக்கா!

அருமையான முத்துக் குவியல் செய்திகள்!

நிச்சயமாகக் கைகூப்பி வணங்கிப் பாராட்ட வேண்டி மனிதர் ஜேம்ஸ் ஹாரிசன்.
அவரின் சேவை மனம் எம்மில் எத்தனை பேருக்குத்தான் வரும்... அதிசயமான மனிதர்!

இசை முத்து அற்புதம்!
ராஜேஷ் வைத்தியாவின் வீணையிசை கேட்டுக்கொண்டே இருக்கலாம். தேடித்தேடிக் கேட்பேன்.
இதில் பாடியவர்களும் மிக அருமையாகப் பாடியுள்ளார்கள்! ரசித்தேன்.

தகவல் முத்து மிகவும் பயனுடையது.

ஆச்சரிய முத்து உண்மையில் ஆச்சரியத்தைத் தந்தது.

அத்தனை முத்துக்களும் பிரகாசிக்கின்றன அக்கா.
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

முதல் முத்தை பாசிட்டிவ் செய்திக்கு எடுத்துக் கொள்கிறேன்.

சீர்காழி பாடும் "சிவசங்கரி... சிவானந்த லஹரி..." கூட தர்பாரி கானடாதானே? எனக்கு அதுதான் முத்திரைப்பாடல்!

இரத்தப்புற்றுநோய் விவரம் முன்னர் எஸ் எம் எஸ்களிலும் இப்போது வாட்சாப்பிலும் வந்த வண்ணம் உள்ளது. அதன் நம்பகத்தன்மை குறைவே. மேலும் இந்த மருந்து அந்த நோய்க்கான ஒரே மருந்தும் அல்ல.

வெங்கட் நாகராஜ் said...

நல்முத்துகள்.

பாடல் இனிமை.

ரத்த தானம் - வாவ். பாசிட்டிவ் மனிதர்.

துரை செல்வராஜூ said...

அரிய தகவல்கள்... அழகிய முத்துக்குவியல்...

திருவனந்தபுரம் செய்தி ஆச்சர்யம்...

தமிழகம் எனில் திருவிழாவை மாற்றி விடுவார்கள்..
அல்லது திருவிழாவையே நிறுத்தி விடுவார்கள்..
எல்லாவற்றுக்கும் ஒரு கும்பல் தயாராக இருக்கின்றது..

priyasaki said...

இரத்ததானம் பற்றிய தகவல் உண்மையில் போற்றுதலுக்குரியது. அவ்மனிதர் வணக்கத்துக்குரியவரே..
இசைமுத்து என்னோட பேவரிட் பாட்டு. திருவனந்தபுரம் செய்தி ஆச்சயர்யம் அளிக்கிறது. எல்லா முத்துக்களும் அருமை.

Yaathoramani.blogspot.com said...

அனைத்துமே இதுவரை அறிந்திராத
அறிந்திருக்கவேண்டிய அழகிய முத்துக்கள்
தொடுத்துத் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

அருமையான தகவல்கள். இந்த ராஜேஸ் வைத்தியா அவர்கள்தான் அக்காவின் மகளுக்கும் வீணை கற்றுக் குடுக்கிறார்... கனடாவுக்கு போய் நேரடி வகுப்பும் எடுத்திருக்கிறாராம்.

கரந்தை ஜெயக்குமார் said...

முத்துக்கள் அருமை

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பின் வந்து அழகிய கருத்துரையிட்டு, பாராட்டிச் சென்றிருக்கும் சாமானியனுக்கு என் அன்பு நன்றி!! விரைவில் உங்கள் தளத்திற்கு வருகிறேன்!

நெல்லைத் தமிழன் said...

அனந்தபுரம் ஆராட்டு உற்சவச் செய்தி முன்பே அறிந்திருக்கிறேன். மற்ற செய்திகளும் நன்று.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான முத்துக்கள்!!!

ஹேரிசன் எனும் மாமனிதருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! ஸ்ரீராமின் பாசிட்டிவ் செய்திக்குப் போகலாம்!!

(கீதா: ஆமாம் இப்போது இந்த ரீஸஸ் நோய்க்கு குழந்தை கருவிலிருக்கும் போதே ஊசி போட்டு விடுகிறார்கள் அதாவது தாய் நெகட்டிவ் க்ரூப் என்றால்...இல்லையா!!)

ரத்தப் புற்று நோய்க்கான மருந்து வாட்சப்பில் வந்தது...

கீதா: மனோக்கா அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஒரே மருந்து போதுமா...பார்க்க வேண்டும்..எங்கள் வீட்டிற்கருகில்தான் இருக்கிறது கான்சர் இன்ஸ்டிட்யூட். கனால் பேங்க் ரோடும்...

பங்களூரில் வள்ளி பாபா இன்ஸ்டிட்யூட் தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி/மனோக்கா

கீதா: திருவனந்தபுரம் ஆராட்டு நேரில் கண்டதுண்டு. அங்கிருந்த வரை 8 வருடங்கள்...

அப்புறம் அந்த இசை முத்து...வாவ்!!! என் மகன் ராஜேஷ் வைத்தியாவிடம் வீணை கற்றுக் கொள்ள விரும்பினான். ஆரம்பப் பாடங்கள் பயின்ற பிறகு. இதைப் பற்றிப் பதிவும் எழுதியுள்ளேன். ஆனால் நேரில் பார்க்க முடிந்தது எங்கள் வீட்டருகில் இருந்தது ஒரு குரங்கின் மூலம் தெரிய வந்ததும் ஆனால் அந்த நேரம் அவர் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார். அப்புரம் மகனுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை....
காணொளியில் பாடும் அந்தப் பெண் ஏர்டெல்லில் பாடவந்தாள் என்று நினைக்கிறேன்....ராஜேஷ் வைத்தியா எனக்கும் என் மகனுக்கும் ரொம்பப் பிடித்தவர். அவர் சிட்டிபாபுவும் சீடரும் கூட. தர்பாரி கானடா பாடல் ரொம்பப் பிடிக்கும் அந்த ராகமும் தான்...

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா, ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ, மாருகோ மாருகோ மாருகயி..,வசந்தத்தில் ஓர் நாள், சின்னஞ்சிறு வண்ணப்பறவை..எல்லாம்.இந்த ராகம் தான்...இல்லையா மனோக்கா

பதிவர் சுப்புத்தாத்தாவிற்கு மிகவும் பிடித்த ராகம்..!!!

நாங்கள் ரசித்தோம்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து கருத்துரை சொன்னதற்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!
ஜேம்ஸ் ஹாரிஸன் பற்றிய செய்தி நிச்சயம் உங்களின் பாஸிடிவ் செய்திகளில் இடம் பெறும் என்பது தெரியும் எனக்கு. நன்றி.' சிவ சங்கரி' பாடலும் தர்பாரி கானடா தான்!

மனோ சாமிநாதன் said...

அழகிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

ராமலக்ஷ்மி said...

அருமையான முத்துக்களின் பகிர்வு. வணக்கத்துக்குரியவர் ஜேம்ஸ் ஹாரிசன். இசை முத்து ரசிக்க வைத்தது.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதர‌ர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி பிரியசகி!!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்களுக்குப்பிறகான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ச்கோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ச்கோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்! இந்த இரத்தப்புற்று நோய்க்கான மருந்து வாட்ஸ் அப் எல்லாம் வருவதற்கு முன்னமேயே நான் சேகரித்து வைத்த விஷயம். எதிலேயோ படித்து எழுதி வைத்தேன்.
சில நாட்களுக்கு முன்பு கூட புற்று நோய்க்கு ஒரு வைத்தியம் படித்தேன். ஆச்சரியமாக இருந்தது. தினமும் ஒரு துண்டு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவது புற்று நோயை குணப்படுத்துகிறது என்று ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள்.
லிங்க் இதோ:
https://prsamy.wordpress.com/2012/07/20/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99/

அன்பு கீதா!

நீங்கள் பாடலை ரசித்து, பின் கருத்துரை எழுதியிருந்தது மகிழ்வாக இருந்தது.

நீங்கள் எழுதியிருந்த பாடல்களில் ' முல்லை மலர் மேலே ' தவிர மற்றவையெல்லாம் தர்பாரி கானடா தான். முல்லை மலர் மேலே ' கானடா' ராகம் ' அலைபாயுதே கண்ணா ' போல! சிந்து பைரவியில் வரும் பூமாலை வாங்கி வந்தேன் கூட சிலர் கானடா ராக்ம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Geetha Sambasivam said...

திருவனந்தபுரம் விமானநிலையம் மூடப்படுவது குறித்து முன்னரே தெரியும். Rh-ve ரத்த தானம் குறித்து இப்போதே அறிந்தேன். நானும் ஒரு நெகடிவ் ரத்தவகையைச் சேர்ந்தவள் என்பதால் இரு பிரசவங்களின் போதும் பட்ட கஷ்டங்கள், குழந்தைகளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் என எல்லாம் நினைவில் வந்து மோதின! இறை அருளால் கடுமையான மஞ்சள் காமாலையால் தாக்கப்பட்ட என் இரு குழந்தைகளும் பிழைத்துக் கொண்டார்கள். இதிலே வேடிக்கை என்னன்னா முதல் பிரசவத்தின் போது முதல் குழந்தைக்கு வந்த மஞ்சள் காமாலையைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். இரண்டாவது குழந்தை பிறக்கையிலேயே மஞ்சள் காமாலையுடன் பிறக்கவும் தான் விழித்துக் கொண்டார்கள். :)))) இரு குழந்தைகளும் பிழைத்தது நிச்சயம் ஓர் அதிசயம் தான் எங்களைப் பொறுத்தவரையில்.

ஏகாந்தன் ! said...

மலரே மௌனமாவை உங்கள் பக்கம் மூலமாக, மது, அபயின் குரலில்தான் முதன் முதலாகக் கேட்டேன். இனிமையான குரலில் திறமையாகப் பாடியிருக்கிறார்கள். ராஜேஷ் வைத்யாவின் வீணை கூடவே இழைய, கீபோர்டும், தபலாவும் சேர்ந்துகொள்கின்றன. உங்கள் கைங்கரியத்தில் ராக விபரமும் கூடவே அறிந்தேன்.

பாடலை ரசித்துக்கொண்டிருக்கையில் மதுவும், அபயும் கடற்கரையில் சுத்துவது, மலரைப்பிய்ப்பதுபோன்ற காட்சிகள் இசை ரசிகனுக்குத் தேவையில்லாதது. மனதை இசையிலிருந்து விலக்கி, வேறெங்கோ இழுத்துச் செல்வது.

Anuprem said...

சிறப்பான முத்துக் குவியல்கள்

ஜேம்ஸ் ஹாரிசன்...மனிதருள் மாணிக்கம்...


50 முத்துக்குவியலுக்கு எனது வாழ்த்துக்களும் ......

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும் அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!

மாறுபட்ட ரத்த வகைகளால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் மனதில் நெகிழ்வை உண்டாக்கின. எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டிலும் இதே கதைதான்! ஆனால் அவர் மனைவிக்கு இரு முறைகள் குழந்தைகள் கருவிலேயே இறந்தன. மூன்றாம் முறை பல மருந்துகள், கண்காணிப்புகள் எனத்தொடர்ந்து ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன‌!!

மனோ சாமிநாதன் said...

சிறப்பான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

மனோ சாமிநாதன் said...

படலையும் வீணையிசையையும் ரசித்து எழுதியிருந்ததற்கு அன்பு நன்றி ஏகாந்தன்! அந்தப்பாடலினூடே வந்த காட்சிகள் பற்றிய உங்கள் விமர்சனம் தான் என்னுடைய கருத்துக்களும்!