Friday, 13 October 2017

முத்துக்குவியல்-48!!

தகவல் முத்துக்கள்:

1. தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால்



உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.  குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது இந்த இணைய முகவரி நமக்குத் தேவைப்படும் இரத்த வகையை, அதற்குரியவரை கண்டெடுக்க உதவும்.. விவரங்களுக்கு: http://www.bharatbloodbank.com/ 

3. வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

மருத்துவ முத்து:

நம் உடலில் தசைகளின் சக்தி உற்பத்திக்கு கிரியாட்டின் என்ற வேதிப்பொருள் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதிலிருந்து தினந்தோறும் 2 சதவிகிதம் கிரியாட்டினைன் என்ற கழிவுப்பொருள் உடலெங்கும் ஓடும் இரத்ததில் கலந்து சிறுநீரகத்திற்குச் சென்று அங்கு வடிகட்டப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேறுகிற‌து. சிறுநீரகம் எதனாலோ பழுது படும்போதோ அல்லது நோய்வாய்ப்படும்போதோ சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தி குறைகிறது அல்லது வடிகட்டியின் ஓட்டைகள் பெரிதாகின்றன. அதனால் கழிவுப்பொருள்கள் அதிகமாக வெளியேறுகின்றன. அல்லது இரத்தத்திலேயே கழிவுப்பொருள் தங்க ஆரம்பிக்கின்றன.

கிரியாட்டினைன் அதிகரிக்க காரணங்கள் அதிகம் உள்ளன. சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ள‌வர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். இவை தவிர, சில மருந்துகளின் தாக்கத்தினாலும் கிரியாட்டினைன் அதிகரிப்பதுண்டு. URINARY TRACT INFECTION AND OBSTRUCTION பிரச்சினையினாலும், சில சமயம் அதிக அளவு மாமிசம் உண்பதனாலும்கூட இது அதிகரிக்கிறது.

பொதுவாக இரத்தத்தில் கிரியாட்டினைன் அதிகரிக்கும்போது, இலேசான அதிகரித்தலுக்கெல்லாம் மருந்து கொடுப்பதில்லை. பொதுவாய் இரத்தத்தில் கிரியாட்டினைனின் அளவு 0.5 1.3 க்குள் இருக்க வேண்டும். இதில் ஒன்றிரண்டு புள்ளிகள் ஏறினால் அது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்படுவதில்லை. நாமும் நிம்மதியாக இருந்தோமானால் அது மெல்ல மெல்ல அதிகரித்து விடும் அபாயம் இருக்கிறது. எதனால் இது அதிகரித்திருக்கிறது என்பதை நாம் மருத்துவரின் உதவியுடன் கண்டறிதல் அவசியம்.

சமீபத்தில் ஒரு அக்குபிரஷர் மருத்துவர் ஒரு எளிய வைத்திய முறையைச் சொன்னார். அதை எனக்கு நெருங்கிய சினேகிதியிடம் சொன்னதில் அதை அவர் உபயோகித்து அவரின் கிரியாட்டினைனின் அளவு குறைந்து நார்மலுக்கு வந்து விட்டது.

அந்த வைத்தியம்:

ஒரு தம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். அது கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் டீத்தூள் [ எந்த பிராண்டாக இருந்தாலும் பரவாயில்லை, ரெட் ரோஸ் அல்லது தாஜ்மஹால் எதுவாக இருந்தாலும் ] போட்டு அந்த டீ டிக்காஷன் பாதியானதும் வடிகட்ட வேண்டும்.


உடனேயே சாதாரண தண்ணீர் பாதி டம்ளர் எடுத்து டீ டிக்காஷனுடன் கலந்து விடவும்.இப்போது அது ஒரு தம்ளராகி விடும். சீனி எதுவும் கலந்து விடாமல் அப்படியே குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இதைக்குடிக்க வேண்டும். இவ்வாறே 12 நாட்கள் குடித்து 13ம் நாள் கிரியாட்டினைன் அளவை பரிசோதித்துப்பார்த்தால் அது குறைந்திருக்கும். இன்னும் குறைய வேண்டுமென்றால் இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் 12 நாட்கள் குடிக்க வேண்டும்.

அசத்தும் முத்து:

உத்திரப்பிரதேசம் லக்னோவைச்சேர்ந்த டாக்டர் சரோஜினி அகர்வால் ஒரு சாதனைப்பெண்மணி! தற்போது 80 வயதிற்கு மேலிருக்கும் இவர் கடந்த 30 வருடங்களாக பெண் குழந்தைகளுக்கான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். 800க்கும் அதிகமான பெண் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து அவர்களை சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். மேல் படிப்பு படிக்க வைக்கவும் இவரின் ஆசிரமம் உதவுகிறது.



பல பெண்கள் முதுகலைப்பட்டம் பெற்று பிரகாசிக்கிறார்கள். இத்தனையும் செய்து வரும் இவர் 30 வருடங்களுக்கு முன் தன் மகளை ஒரு விபத்தில் இழந்தவர். அந்த மரணமே அனாதைகளாக வீசியெறியும் பெண் குழந்தைகளைக்காக்கும் உத்வேகத்தை இவருக்குக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் தன் வீட்டிலேயே மூன்று அறைகளில் தன் காப்பகத்தை நடத்தி வந்தவர் இத்தனை வருடங்களில் ஒரு மூன்றடுக்கு வீட்டைக்கட்டி வாசலில் ஒரு தொட்டிலையும் நிறுவியிருக்கிறார். வேண்டாத குழந்தைகள் அங்கே வந்து விழ விழ இவர் அத்தனை குழந்தைகளையும் தன் இல்லத்தில் வைத்து, காத்து வருகிறார். கண்ணினி மையம், நூலகம், கைத்தொழில் களங்கள், தையலகங்கள், தோட்டம், டெலிவிஷன் அறை என்று பல வசதிகளை தன் ஆசிரமத்து பெண் குழந்தைகளுக்காக இவர் உருவாக்கியிருக்கிறார். குழந்தைகள் நலத்திற்கான தேசீய விருதும் பல விருதுகளும் பெற்றுள்ள இவருக்கு நாமும் சல்யூட் செய்வோம்!!

இவரைத்தொடர்பு கொள்ள: தொலைபேசி: 094511 23170
விலாசம்: 2/179, மனிஷா மந்திர் மார்க்,
           விரம் காந்த்- 2, கோம்தி நகர்,
           லக்னோ, உத்திரப்பிரதேசம்- 226010 

ரசித்த முத்து:

இலேசான வெய்யில் கீற்றோடே பூந்தூறலாய் மழை பெய்யும்போது அதைப்பார்க்க கண்கள் கோடி வேன்டும்போல இருக்கும் எப்போதும்! அதுவும் சுற்றிலும் பசுமையும் கரிய மேகங்களும் பச்சைப்பசேலென்று மலைகளுமாய் இயற்கையின் பேரழகை நம் விழிகள் அள்ளிப்பருகும்போது மனதின் உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்? இத்தனை அழகிற்கிடையே ஒரு இனிமையான பாட்டு! கேட்டு, பார்த்து ரசியுங்கள்!!

19 comments:

துரை செல்வராஜூ said...

நல்ல செய்திகள்.. அருமையான தொகுப்பு..

டாக்டர் சரோஜினி அகர்வால் அவர்களின் பணி போற்றுதலுக்கு உரியது..

KILLERGEE Devakottai said...

அனைத்தும் நல்ல விடயங்கள் நன்று
டாக்டர் சரோஜினி அகர்வால் அவர்களை தொடர்பு கொள்ளும் வழிகள் ஏதாவது கொடுத்திருக்கலாம்.

Avargal Unmaigal said...

எனக்கு பிடித்த நடிகரின் காணொளி பார்த்து மகிழ்ந்தேன்

Yaathoramani.blogspot.com said...

அத்தனையும் முத்தான தகவல்கள்
பாடல் கேட்டு மகிழ்ந்தேன்
மனம் சில்லிட்டது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

முத்துக்கள் அனைத்தும் அருமை.
பாடல் மிக அருமை.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி! சரோஜினி அகர்வால் அவர்களைத் தொடர்பு கொள்ளுவதற்கான விலாசமும் தொலைபேசி எண்ணும் கொடுத்து விட்டேன்.

மனோ சாமிநாதன் said...

காணொளி பார்த்து ரசித்து எழுதியது மகிழ்வாய் இருந்தது மதுரைத்தமிழன்!

மனோ சாமிநாதன் said...

பாடலை ரசித்ததற்கும் பதிவைப் பாராட்டியதற்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் இனிய பாராட்டு மிகவும் மகிழ்ச்சியைத்தந்தது கோமதி அரசு!!

பூ விழி said...

எல்லா தகவல்களும் அருமை சிஸ் தேவையானவை தெரிந்து கொள்ளவேண்டியவை
கிரியாட்டினைன் பற்றிய குறிப்புகள் உபயோகமானது
டாக்டர் சரோஜினி அகர்வால் பற்றிய தகவல் விவரங்களுடன் கொடுத்தமைக்கு நன்றி

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள்.

மருத்துவ முத்து குறித்துக் கொண்டேன். என் தங்கைக் கணவருக்கு அனுப்பவேண்டும்.

அசத்தும் முத்தை அடுத்த வார பாஸிட்டிவ் பகுதிக்கு எடுத்துக் கொண்டேன். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான செய்திகளின் தொகுப்பு
நன்றி சகோதரியாரே

தி.தமிழ் இளங்கோ said...

பயனுள்ள தகவல்கள். குறிப்பாக ரெட் சொசைட்டியின் போன் நம்பர்.

'பரிவை' சே.குமார் said...

முத்துக்குவியல் எப்பவும் போல் அருமை அம்மா...
பாடல் மிக அருமை அம்மா... என்ன படம் இது? புதிய படமா?

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள தகவல்களின் தொகுப்புக்கு நன்றி.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்து முத்துக்களும் வழக்கம்போல் அருமை. ரெட் நம்பரைக் குறித்துக் கொண்டோம். மருத்துவத் தகவல்கள் பயனுள்ளவை. டீ மருத்துவம் குறித்துக் கொண்டோம்...

மிக்க நன்றி சகோதரி/மனோ அக்கா...

(எப்படியோ உங்கள் பதிவுகள் விடுபட்டுவிடுகிறது...மூன்று நாட்கள் கணினி க்ரோம் வேலை செய்யதாதால் அப்புறம் தீபாவளி பிஸி...என்று விடுபட்டது போலும் - கீதா)

Kanchana Radhakrishnan said...

அத்தனை முத்துகளும் அருமை.
பேத்தி விஹானாவுக்கு வாழ்த்துகள்