Monday 14 August 2017

திரை விமர்சனம்!!!!

பவர் பாண்டி!

பல நாட்களாக பார்க்க நினைத்த படம். இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்த போது, அதன் விமர்சனங்கள்,  கதையினால் கவரப்பட்டு, பெரிய திரையில் பார்க்க பெரிதும் முயற்சி செய்தேன்.  பல வித சூழ்நிலைகளால் முடியாமல் போய் விட்டது. நேரம் கிடைத்த போது, அது  அரங்கத்தை விட்டே போயிருந்தது. இங்கு வந்த பிறகு, இப்போது தான் ‘ பவர் பாண்டி’ திரைப்படத்தைப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் படம் பார்க்க ஆரம்பித்ததும் ஒவ்வொரு அங்குலமாக ரசித்துப்பார்த்தேன்.



படத்தின் பெயரில் மட்டும்தான் பழமை இருக்கிறது. ஆனால் படம் முழுவதும் புதுமைச் சிந்தனைகள்!இந்தப்படத்தின் நாயகனான 60 வயதைக்கடந்த முதியவருக்கும் அது போல உடல் மொழியிலும் உடைகளிலும் உணர்வுகளிலும் புதுமைச்சிந்தனைகள்!

முதியவருக்கு மகன் வீட்டில் சகல வசதிகளுடன் உடற்பயிற்சி சாதனங்களுட்ன் ஒரு அறை. அதுவும் மாடியில். கூடவே பக்கத்து மாடி வழியாக 20 வயது பையனின் நட்பு. மருமகளின் அக்கறை, பேரன், பேத்திகளின் கொஞ்சல்!

இந்த தினசரி சந்தோஷங்கள் அவருக்குப் போதவில்லை. சின்ன வயசிலிருந்து நியாயங்களைத்தட்டி கேட்ட பழக்கம் இந்த அறுபது வயதிலும் தொடர்கிறது. அதனால் வரும் பிரச்சினைகள் மகனின் மனதை சலிப்படைய வைக்கிறது. ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திலிருந்து போலீஸ்காரர்கள் வீட்டிற்கே வந்து புகார் செய்ய மகன் தனக்குத் தந்தை அவமானமிழைத்து விட்டதாக குமைந்து பேசும்போது தந்தை கோபத்திலும் மனக்கஷ்டத்திலும் வெடிக்கிறார். தனக்கு அந்த வீட்டில் சுத்ந்திரமில்லாதது போல உணர்கிறார்.
“பெருசு… உன் மகன் வாழ்க்கையையும்… உன் பேரன் பேத்தியோட வாழ்க்கையையும்தான் நீ வாழ்ந்துக்கிட்டிருக்கே. உன் வாழ்க்கையை எப்ப வாழப்போறே?” என்று பக்கத்து வீட்டு டீன் ஏஜ் பையன் ஒரு பக்கம் உசுப்பிவிடுகிறான்.



குடித்து விட்டு மகனிடம் புலம்பி வெடிக்கிறார்.
‘வயசான காலத்துல சும்மா இருக்கமாட்டியா?என்ற மகனின்கேள்விக்கு, ‘சின்ன வயசுல நீ எப்பவும் அப்பா மேல ஏறி விளையாடிக்கிட்டே இருப்பே. உன்னை நான் எப்பவும் தொந்தரவா நினைச்சதே இல்லை ராசா! ஏண்டா சும்மா இருக்குறதுன்னா அவ்ளோ ஈசியா போச்சா. அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ‘ என்று அழுகிறார்.

இரவோடிரவாக மகனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தன் சேமிப்புப் பணத்தையும் ஒரு பைக்கையும் எடுத்துக்கொண்டு இலக்கில்லாமல் பயணிக்கிறார்.

தன் வயதொத்த நண்பர்களிடம் நடுவழியில் தன் சிறுவயதுக்காதலை-‍நிறைவேறாத காதலையும் சோகத்தையும் சொல்கிறார் அவர்.  மிகச்சிறு வயதில் பாவாடை தாவணியில் மதுரை நகரிலிருந்து தன் கிராமத்துக்கு வந்திருக்கும் பூந்தென்றல் மீது அவருக்கும் வெள்ளை மனதுடன் சுற்றித்திரியும் வீர சாகசங்கள் செய்யும் அவர் மீது பூந்தென்றலுக்கும் காதல் பிறக்கிறது. கோயில் திருவிழா பின்னணியில் அவர்களுக்குள் காதல் மலருவது, மழையில் பாண்டி நனைவது கண்டு, குடையை பிடித்துக்கொண்டு ஓடி வரும் பூந்தென்றல், “மழையில் ஏன் நனையிறே? குடைக்குள் வா” என்று அழைக்க, “நீ ஏன் குடைக்குள் இருக்கே? வெளியே வா” என்று பாண்டி அழைக்க, இருவரும் கொட்டும் மழையில் நனைந்து குதூகலிப்பது என அழகிய கவிதையாய் அவர்கள் காதல் வளருகிறது.

இவர்களின் காதல், பூந்தென்றலின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் கத்தி களேபரம் செய்யாமல், எதையும் காட்டிக்கொள்ளாமல், திடுதிடுப்பென மகளுடன் மதுரைக்கு புறப்பட்டு விடுகிறார். பூந்தென்றல் உருக்கமாக ஒரு கடிதம் எழுதி, அதை பாண்டியிடம் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு, அப்பாவோடு கிளம்பிப் போய்விடுகிறார். காதலியை பிரிந்து தவிக்கும் பாண்டி, மதுரைக்குப் போய் பூந்தென்றலை சந்திக்க முயன்று, முடியாமல் தோற்று, விரக்தியுடன் சென்னை சென்று, சினிமாவில் சேர்ந்து, பவர் பாண்டி ஆகிறார்.

இப்போது அவரின் பயணம் சிறு வயது காதலியைத் தேடும் இலக்கோடு ஆரம்பிக்கிறது.

அதற்கு ஃபேஸ்புக் உதவி செய்ய, தன் தோழர்களிடம் விடை பெற்றுக்கொண்டு அவளைக்காண ஹைதராபாத் பயணிக்கிறார்.  கணவனை இழந்து மகளுடன் தனியாக வசிக்கும் அவள் அவரை வந்து சந்திப்பதும் பழைய நினைவலைகள் உள்ளத்தில் வந்து பாய இருவருமாய் பழங்கதைகள் பேசுவதும் சிரிப்பதும் நடப்பதும் உணர்வுகளைப்பகிர்வதுமாக அந்த ஒரு நாள் சந்திப்பு அழகிய கவிதையாய் மலர்கிறது.

துணைகளை இழந்து முதிர்ந்த வயதில் தனியாய் இருக்கும் அவர்கள் வாழ்க்கையில் இணைந்தார்களா என்பது தான் மீதிக்கதை.

முதியவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.
தன் முதல் காதலைப்பற்றி நண்பர்களிடம் கூறும்போது அவர் முகத்தில் இருக்கும் வெட்கமும் அது நிறைவேறமல் போனதைப்பற்றி கூறும் போது அவரிடும் தென்படும் ஏக்கமும், பேரக்குழந்தைகளுடன் இருக்கும் போது அவர் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியும், தனது மகன் திட்டினாலும் அதை மனதில் வைத்துக்கொண்டு வெளிக்காட்டாமல் இருக்கும் போது அவரின் மனதில் இருக்கும் வலியும் பல வருடங்களுக்கு பின் தன்னுடைய முதல் காதலியை சந்திக்கும் போது அவருக்கும் இருக்கும் உற்சாகமும் மீண்டும் தனது காதலை சொல்லும்போது அவரிடம் இருக்கும் குழந்தைத்தனமும் திரையில் பார்க்கும்போது அவரிடன் நடிப்பின் முதிர்ச்சி நமக்கு தெரிகிறது.



ரேவதி பழைய காதலியாய் இன்றைய நிலையில் பக்குவப்பட்ட ஒரு முதிர்ந்த பெண்ணாய் அனாயசமாக நடிக்கிறார். பழைய சிறு வயது காதலனைப் பார்த்து விட்ட சந்தோஷம், அதனால் ஏற்பட்ட மனநிறைவு, அதே சமயம் தனது இன்றைய நிலை பற்றிய ஜாக்கிரதை உணர்வு அத்தனையையும் தன் முகத்திலும் குரலிலும் மிக அழகாய் பிரதிபலிக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு தன்னை வந்து சந்திக்கும் பழைய காதலனிடம் ஓர் எல்லைக்குள் நின்று அன்பும் பரிவும் காட்டும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார். ’‘ ஏன் நீ என்னைத்தேடி வரவேயில்லை?’ என்று ராஜ்கிரணிடம் கேட்கும்போது அவர் மனதில் இன்னும் நிறைவேறாத ஏக்கமிருப்பதை அந்தக் கேள்வி அழகாய் வெளிப்படுத்துகிற்து.

இதில் ராஜ்கிரணின் நண்பனாக பக்கத்து மாடி வழியாக அடிக்கடி சந்தித்துப்பேசும் இருபது வயது பையனின் குணச்சித்திரம் மிகவும் சுவாரஸ்யம். இந்தக்கால இளைஞன் அவன். ராஜ்கிரண் ஒரு சமயம் அவனிடம் ‘ அந்தக்கால கேப்பைக்கூழில், பழங்களில் எல்லாம் எத்தனை விட்டமின்கள் இருக்கின்றன தெரியுமா? உங்களுக்கெல்லாம் ஐபாட் தெரிகிறது,, ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் தெரிகிறது, ஆனால் இதெல்லாம் தெரியவில்லை’ என்பார்.  அதற்கு அவன் அனாயசமாக ‘ விட்டமின்களுக்காக இதையெல்லாம் எதற்கு பெரிசு சாப்பிட வேண்டும்? கொஞ்சம் விட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் ஆயிற்று!’ என்று இந்தக்கால இளைஞனாய் பதில் சொல்லும்போது நம் முகம் தானாகவே சிரிப்பால் விரியும்.

குழந்தைகள்  குறிப்பாக மிக அழகாக நடிக்கின்றன. ஒரு கட்டத்தில் பேரன் தாத்தாவுக்காக தன் தந்தையிடம் கேள்வி கேட்கிறான். “ ஏம்பா தாத்தாவை திட்டினே? நான் உன்னைத்திட்டினா உனக்கு எத்தனை கஷ்டமாக இருக்கும்? அது போலத்தானே நீ திட்டும்போது தாத்தாவுக்கு கஷ்டமாக‌ இருக்கும்? '

இன்னொரு சமயம் ‘‘எனக்கு என் அப்பா அம்மாவவிட தாத்தா தான் ரொம்ப பிடிக்கும் ’ என்று சொல்கிறான். தாத்தா பேரக்குழந்தைகளை பிரிந்து எங்கோ தூரத்தில் இருந்தாலும் குழ்ந்தைகளின் நினைவு அவரை உருக்குகிறது. தன் பக்கத்து வீட்டு நண்பனுக்கு ஃபோன் பண்ணி அவர்களைப்பற்றி விசாரிக்கிறார். அவனும் போய் பேரக்குழந்தைகளிடம் ஃபோனை திறந்து வைத்துக்கொண்டு பேசுகிறான். குழந்தைகள் தங்களை விட்டுப்போன தாத்தா பற்றி கோபமாகப் பேசுகின்றன. இவனும் ‘ அந்த கிழம் அதுக்குன்னு இப்படி பண்ணிட்டுப்போயிருக்கக்கூடாது’ என்கிறான். உடனே அந்தக்குட்டி பேரன் சொல்லுகிறான், ‘ என் தாத்தாவை கிழம் என்று சொன்னால் அப்படியே அடிச்சு போட்டுடுவேன்!’

அதை அந்தப்பக்கம் கேட்கும் தாத்தா கண்களைத் துடைத்துக்கொள்கிறார். நாமும் தான்!!

எந்த வயதிலும் காதலும், நேசமும், அன்பும், நட்பும் ஒரே மாதிரியே இருக்கும்… என்பதை ராஜ்கிரணும் ரேவதியும் அத்தனை உண்மையாக திரையில் நிகழ்த்துகிறார்கள். ரேவதியின் ஒவ்வொரு பார்வையும் அதற்கு ராஜ்கிரணின் ஒவ்வொரு அசைவும் ஆயிரம் அர்த்தங்க்ள் சொல்கின்றன!! ‘‘உன் மனதில் நான் இன்னும் இருக்கேனா?’’ என்று ரேவதியிடம், ‘மெசேஜ்’ மூலம் கேட்கும் இடத்திலும், அவர் பதில் தராமல் போனதற்காக நேரில் போய் கதவைத்தட்டி, ‘‘நான் உன் கிட்ட பேச மாட்டேன், போ’’ என்று செல்லமாக கோபித்துக்கொள்ளும் இடத்திலும் மனசு அப்படியே கனத்துப்போகிறது.

அவரிடம் விளக்கம் சொல்ல வரும் ரேவதியிடம் அவர் கேட்கிறார், ‘ நம்ம வாழ்க்கையில் நம் பிள்ளைகள்தான் இருக்காங்க, ஆனால் நாம அவர்கள் வாழ்க்கையில் இருக்கோமா?”

ஆழமான, அர்த்தமுள்ள கேள்வி இது!

தன் மகளிடம் தன் சின்ன வயது காதலைப்பற்றி ரேவதி சொல்லுகையில் மகள் தன் அம்மாவின் இன்றைய வாழ்க்கைக்கு ஒரு துணை அவசியம் வேண்டும், அது ஏன் அவரது முந்தைய காதலராக இருக்கக்கூடாது? என்று அழகாய் அம்மாவிடம் வாதிடுகிறாள். ,மறுநாள் ராஜ்கிரணின் மகனும் வந்து அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு அழும்போது மெல்ல தன் மகனுடன் அவர் புறப்படுகிறார். கடைசி காட்சியில் ரேவதி, ராஜ்கிரணிடம் பழைய கருப்பு–வெள்ளை புகைப்படத்தை பரிசாக கொடுப்பதும், பதிலுக்கு ராஜ்கிரண், ரேவதியிடம் பத்திரமாக வைத்திருந்த பழைய காதல் கடிதத்தை கொடுப்பதும் ரேவதி அவருக்காக காத்திருப்பது போல சொல்வதும் அவர் திரும்ப வருவோமென்ற நம்பிக்கையில் கையசைத்து விடை பெறுவதும் அவர் மகன் புன்னகையுடன் கீழே குனிந்து கொள்வதும் -காட்சிகள் மறுபடியும் கவிதைகளாய் விரிகின்றன!!

மனித உறவுகளின் உன்னதமான உணர்வின் வெளிப்பாட்டை மிக அருமையாக திரைப்படமாக்கியுள்ளார் இயக்குனர் தனுஷ். தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கதவை திறந்து வைத்திருக்கிறார் என்று தான் அழுத்தமாகச்சொல்ல வேண்டும்.

தங்களது ஆசை, சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர், பிள்ளைகள் வளர்ந்த பிறகும், அதே பிள்ளைகளிடம் அடிமையைப் போல வாழாமல், தங்களுக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை தான் ப.பாண்டியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனுஷ். குறிப்பாக பேரன் பேத்தி எடுத்து தாத்தா ஆனவர்கள் கடைசிவரை அவர்களது மகன் வாழ்க்கையையோ, அல்லது பேரன்களின் வாழ்க்கையையோ தான் வாழ்கின்றார்கள்.. அவர்களுக்கான கடைசிக்கால வாழ்க்கை எங்கே தொலைந்து போனது என்பதை ராஜ்கிரணின் பவர் பாண்டி கதாபாத்திரம் வாயிலாக உயிரோட்டமாக உலவ விட்டுள்ளார்..

நாம் வாழ்ந்து கொன்டிருக்கும் இந்த வாழ்க்கை அன்பு, பாசம், , கோபம், கருணை, ஆதங்கம் ஏக்கம் போன்றவற்றால் நிறைந்திருக்கிறது. இதே உணர்வுகள் ஒரு அறுபது வயது மனிதருக்குள்ளும் இருக்கும் என்பதை ஒவ்வொரு மகனும் புரிந்து கொண்டு, தன் தந்தையை ஒரு குழந்தையைப்போல கவனிக்க வேன்டுமென்பதே இந்தத் திரைப்படத்தின் மையக்கருத்து!

தந்தையின் தோள்களில் கடைசியாக எப்போது சாய்ந்தோம்? தாய், தந்தையின் சிரிப்பை கடைசியாக எப்போது ரசித்தோம் என்ற் கேள்விகள் ஒவ்வொரு மகனிடமும் எழுந்தால் இந்தப் படம்  வெற்றி பெற்று விட்டது என்று அர்த்தம் கொள்ளலாம்!

22 comments:

தி.தமிழ் இளங்கோ said...

ரொம்பவும் ரசித்தே விட்டீர்கள் போலிருக்கிறது. உங்கள் பதிவே சொல்கிறது. நல்ல விமர்சனம். உங்கள் பதிவின் மூலம் படத்தின் கதையைத் தெரிந்து கொண்டேன். வாய்ய்ப்பு கிடைக்கும் போது (வேறு என்ன ... யூடியூப்தான் )இந்த படத்தினை பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

பார்க்கவேண்டும் என்று கணினியில் நீண்ட நாட்களாய் வைத்திருக்கும் படம். பார்க்கவேண்டும்!

துரை செல்வராஜூ said...

தங்களது விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றது..

அன்பின் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: விமர்சனம் அருமை....படம் நன்றாக இருந்தது....நான் பார்த்துட்டேன்

கீதா: இப்படத்திற்கு நல்ல கமெண்ட்ஸ் தான் வந்திருந்தது....நான் இன்னும் பார்க்கலை மனோக்கா..... பார்க்கணும்....

Anuprem said...

மிகவும் ரசித்து..பசங்களோடு பார்த்த படம்...


உங்க விமர்சனமும் அழகு..

KILLERGEE Devakottai said...

அலசிப்பகிர்ந்த விதம் அருமை சகோ
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம்
அருமை
நன்றி சகோதரியாரே

சாரதா சமையல் said...

நானும் மூன்று மாதங்களுக்கு முன்பு மகன் வீட்டிற்கு ( பெங்களூர் ) சென்றிந்த போது குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்தோம். நானும் மிகவும் ரசித்து பார்த்தேன். அருமையான படம். நீங்கள் விமரிசனம் பண்ணிய விதமும் அருமை மனோக்கா.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் ரசித்து பார்த்திருக்கிறீர்கள் என்பது நீங்கள் ரசித்து விமர்சனம் எழுதியிருக்கும் விதத்திலேயே தெரிகிறது. நல்ல படத்திற்கு நல்லதொரு விமர்சனம்.

Thenammai Lakshmanan said...

mika mika azagana vimarsanam mano mam . rasithu padithen. padam eduthavarkal padithu makilnthirupargal.

solli irukkum msg m thevaiyana ondruthan. hmmmm

'பரிவை' சே.குமார் said...

நல்ல படம்...
நச் விமர்சனம்.

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! ரொம்பவும் ரசித்துத்தான் இந்தப்படத்தைப்பார்த்தேன் சகோதரர் தமிழ் இளங்கோ! கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

படத்தைப்பார்த்து விட்டீர்களா ஸ்ரீராம்?

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்/கீதா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்க்ம் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

மனோ சாமிநாதன் said...

அழகிய கருத்துரைக்கு அன்பு நன்றி தேனம்மை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உரிய காலத்தில் எதிர்பார்த்ததை அடையாதவற்றை பின்னர் பல நாள் கழித்து அடையும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிடற்கரியது. இது அனைவருக்குமே வாய்ப்பதில்லை. பழைய நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டு, பல சூழல்களில் தன் இலக்கை அடைய முடியாமல் தவித்துக்கொண்டு அதே சமயம் தன்னையும் சமூகத்திலிருந்து தொலைத்துக்கொண்டு தனியாக ஏகாந்தமாக வாழ்வினை நடத்திக்கொண்டிருக்கும் பலருக்கு இத்திரைப்படம் மனதில் ஒரு ஆத்ம திருப்தியைத் தரும் என்றே நம்புகிறேன். வித்தியாசமான திரைப்படம்.