Saturday 22 April 2017

திருவையாறு பஞ்சநாதேஸ்வரர்!!

என் நெருங்கிய சினேகிதி திருவையாறு அருகே தில்லைஸ்தானம் என்ற ஊரில் இருக்கிறார். ரொம்ப நாளாய் திருவையாறு ஐயாரப்பர் கோவிலைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்ததால் சில நாட்களுக்கு முன்னே என் இன்னொரு சினேகிதியுடன் திருவையாறு கிளம்பினேன். கிளம்புவதற்கு முன் வழக்கம்போல ஐயாரப்பர் கோவில் பற்றிய விபரங்களை சேகரித்த போது பிரமிப்பின் உச்சநிலையை அடைந்தேன்! எத்தனை பிரம்மாண்டமான கோவில் இது! எத்தனை அரசர்களை இந்தக் கோவில் பார்த்திருக்கிறது! எத்தனை எத்தனை கல்வெட்டுக்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது! எத்தனை எத்தனை ஆச்சரியகரமான வரலாற்றுக்கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது!



முதலில் இந்த கோவில் உருவான கதையைப்பார்ப்போம்.

இத்திருக்கோவில் முதன் முதலாக "பிரியவிரதன்" எனும் சூரிய வம்ச  சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு.  கி.மு. முதலாம் நூற்றான்டில் வாழ்ந்த  சோழப்பேரரசன் "கரிகாற்பெருவளத்தான்" இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில்,  ஐயாற்றை அடைந்ததும், அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி நகர மறுத்தது.  "இதன்  அடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது" என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான்.  அடியில்  சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள், சண்டர், சூரியன் திரு உருவங்களும் யோகி  ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றியும் காணப்பட்டன.  மேலும் அகழ்ந்து ஆராய்ந்தபோது,  நியமேசர் எனும் சித்தரைக் கண்டு நின்றான். அவரும் கரிகாலனிடம்,  "தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட இறைவனுக்கு கோவில் எடுப்பாயாக" எனக் கூறி எவராலும்  வெல்வதற்கரிய தண்டமொன்றும் அளித்து கோவில் கட்டுவதற்கு வேண்டிய பொருளும் நந்தியின்  குளம்படியில் கிடைக்குமென்று கூறி என அருள் புரிந்தார்.  அது போலவே கரிகாற்சோழன் சிறப்பாக கோவில்  கட்டி, குடமுழுக்கும் செய்து, நிவந்தங்களும் அளித்தான்.  கரிகாற் சோழனுக்கு ஐயாறப்பரே  சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில்  கட்ட செய்தான். கோவிலின் உள்ளே  கர்ப்பகிரகத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்ககூடாது என்பதால் பிரகாரம் சுற்றக்கூடாது என்ற ஐதீகமும், சோழனால் கட்டப்பட்ட செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாகி இருப்பதும் -கரிகாலசோழன், அவர் மனைவி, இருவரின் சிலைகள் இருப்பதும் இவற்றிற்கு சாட்சியாக உள்ளன.

``குந்தி நடந்து குனிந்தொருகைக் கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி-வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.``

காடவர்கோன் நாயனார் பாடிய பாடலுடன் நான் திருவையாறுக்குள் நுழைவோம்!

இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரசிங்க வளநாட்டுப்பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும், சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில், இராசராச வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் வழங்கப்பெற்று வந்துள்ளது.



காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் அருள் நிறைந்த தரிசனத்தால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றான். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும் நந்தீசர் எனும் நாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் என்ற தகுதியும் அருளினார்.

அத்துடன் நில்லாது, இறைவன் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தே திருமணம் செய்துவைத்தார்.

சித்திரைப்பெருந்திருவிழா:

இது சித்திரைமாதத்தில் நிகழ்வது. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில் ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப்பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, திருக்கண்டியூரார் நகைகள் வழங்க, திருப்பழனத்தினர் பழங்கள் வழங்க, திருப்பூந்துருத்தியினர் பூக்கள் வழங்க, திருச்சோற்றுத்துறையினர் சோறு வழங்க, திருநெய்தானத்தினர் நெய் வழங்க, திருவேதிக்குடியிலிருந்து வேதியர் வர அந்தந்த ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப்பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது சப்தஸ்தானத் திருவிழா என்பர். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.  திருமழப்பாடியில் நந்திதேவருக்கு நடைபெறும் திருமணத்தை நடத்திவைக்க ஐயாறப்பன் கிளம்பும் நந்திதேவர் திருமண விழாவும் சித்திரைத் திருவிழாவும் இவ்வூரின் பெருவிழாகள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. இது நந்தி தேவருடைய திருமண ஊர்வலமாக கருதப்படுகின்றது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன. தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழு ஊர்களையும் சுற்றிவரும் காட்சி அற்புதமானதொன்றாகும்.

நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.



அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகருடன் அருணகிரி நாதர், பட்டிணத்தார், ஐயடிகள் காடவர்கோன், முத்துசாமி தீட்சிதர், வள்ளலார், தியாகராஜர் உள்ளிட்ட பலரால் பாடப்பெற்ற தலமிது.

அடுத்த வாரம் கோவிலுக்குள் செல்வோம்!

தொடரும்.....

16 comments:

KILLERGEE Devakottai said...

திருவையாறு பஞ்சநாதேஸ்வரர் வரலாறு அறிய தொடர்கிறேன்... சகோ

வை.கோபாலகிருஷ்ணன் said...

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவையாறு என்னும் பஞ்சநத க்ஷேத்ரம் பற்றிய ஆரம்பமே மிக அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.

பஞ்சநதம் என்றாலே திருவையாறைக் குறிக்கும். அந்த காலத்திலே (ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்பு) ஐந்து நதிகளைத் தாண்டிதான் இந்த க்ஷேத்ரத்திற்கு நாம் போக முடியுமாம்.

பூலோக கைலாசம் என்று அழைக்கப்படும் திவ்யமான க்ஷேத்ரமாகும்.

வயதான காலத்தில் கைலாசத்திற்கே செல்ல நினைத்த அப்பர் ஸ்வாமிகள், பனியிலும், முள்ளுக்காட்டிலும், ஏறி கை கால்களெல்லாம் புண்ணாகி, தேகத்தால் உருண்டு உருண்டு மலையிலே ஏற படு சிரமப்படும் போது, சிவபெருமான் அவருக்கு அசரீரி வாக்காகச் சொன்னார்: “நீர் பஞ்சநத க்ஷேத்ரமான திருவையாறுக்கு போகவும் .... அங்கு உமக்கு நான் கைலாச தரிசனம் தருகிறேன்”.

மலையிலிருந்து கீழே இறங்கி, திருவையாறு வந்து சேர்ந்த அப்பர் ஸ்வாமிகள் காவிரியில் ஸ்நானம் செய்தவுடன், அவருக்கு சிவபெருமாள் கைலாச தரிஸனம் கொடுத்து அருளினார். அதனால் இந்த ஸ்தலத்திற்கு தக்ஷிண கைலாசம் என்றே பெயருண்டு.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

சங்கீத மும்மூர்த்திகளுக்கும் இந்த திருவையாறு என்ற க்ஷேத்ரத்திற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உண்டு என்பது மேலும் சிறப்பானதொரு விஷயமாகும்.

பதிவினில் காட்டியுள்ள மூன்று படங்களும் மிக அழகாக உள்ளன.

வரலாறுகளை எல்லாம் சொல்லியுள்ளது, படிக்க சுவையாக உள்ளன.

பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

மேலும் தொடரட்டும்.

'பரிவை' சே.குமார் said...

கோவிலைப் பற்றி அறியத் தந்தீர்கள்...
தொடர்கிறேன் அம்மா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அப்பர் ஸ்வாமிகள் ஈசனுடன் இரண்டறக்கலந்த நாள் சித்திரை மாதம் சதயம் நக்ஷத்திரம் என்று கேள்விப்படுகிறோம். இன்று 22.04.2017 சித்திரை மாதம் - சதய நக்ஷத்திரமாக அமைந்துள்ளது.

தக்ஷிண கைலாசமான திருவையாறு க்ஷேத்ரத்தில் அப்பர் ஸ்வாமிகளுக்கு கைலாச தரிஸனம் கிடைக்கப்பெற்ற இந்த சிறப்புமிக்க திருவையாறு பஞ்சநத க்ஷேத்ரத்தைப் பற்றி, தாங்கள் இன்று (அப்பர் ஸ்வாமிகள் முக்தி அடைந்து இறைவனின் திருவடி சேர்ந்துள்ள தினமான இன்று) எழுதி வெளியிட்டுள்ளது சிறப்பானதோர் நிகழ்வாக அமைந்துள்ளது.

Yaathoramani.blogspot.com said...

சரித்திரச் சான்றுகளுடன் படங்களுடன்
பதிந்த விதம் மிக மிக அருமை
இதுவரை அறிந்திறாத திருத்தலம்
தொடர்கிறோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

இராய செல்லப்பா said...

முன்னுரையே பிரமாதமாக இருக்கிறதே! திருவையாறு தொகுதியில்தான் சிவாஜி கணேசன் தமது கட்சியின் சார்பில் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பதும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி அல்லவா?

- இராய செல்லப்பா நியூஜெர்சி

ஸ்ரீராம். said...

சிறப்பான கோவில் பற்றி சிறப்பான, சுவாரஸ்யமான தகவல்கள். அந்தக் கால அரசர்களுக்கு செல்வமும் அவர்களே தந்து கோவில் கட்டக் சொல்லியிருக்கிறார்கள் சித்த புருஷர்கள். இந்தக் கால அரசியல்வாதிகளை நம்பி யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்கள் கோவில் கட்ட மாட்டார்கள். தங்கள் கணக்கில் சுவிஸ்ஸில் கட்டி விடுவார்கள்!!!

கோமதி அரசு said...

கோவில் வரலாறு அருமை.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! அந்த காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் தஞ்சையிலிருந்து திருவையாறு வரும்போது வடவாறு,வெட்டாறு, வெண்ணாறு, குட‌முருட்டி, காவிரி ஆகிய ஐந்து நதிகளைக் கடந்து தான் வர வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

நல்வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் செல்லப்பா யக்யஸ்வாமி! சிவாஜி கணேசன் தோற்ற செய்தியை இந்த கட்டுரையை எழுதும்போது என் கணவரும் சொன்னார்கள்! அதுவரை நான் அந்த செய்தியை அறிந்திருக்கவில்லை.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!