Thursday, 16 March 2017

முத்துக்குவியல்-45!!!

ஆதங்க முத்து:

சென்ற வாரம் பெங்களூரிலிருந்து தஞ்சைக்கு இரவில்      பயணித்தோம். இரவு ஏழு மணிக்கு ரயில் புறப்பட ஆரம்பித்ததும் 10 பேர் அடங்கிய குழு வந்து சேர்ந்தது. அதில் இருவர் எங்களுக்கு மேல் படுக்கையிலும் இன்னும் இருவர் எதிர்ப்படுக்கைகளிலும் மற்றவர்கள் அடுத்தடுத்த பெட்டிகளிலும் அமர்ந்தனர். அதில் வயது முதிர்ந்த ஒருவர் இருந்தார். எல்லோரும் மாற்றி மாற்றி அவரிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரே சப்தம், இரைச்சல், உணவை எடுத்து ஒருத்தர் மாற்றி இன்னொருத்தரிடம் கொடுப்பதுமாக அமைதி என்பது ஒரு சதவிகிதம் கூட அங்கில்லை. அங்கு நான் மட்டும்தான் பெண். நானும் என் கணவரும் ஒரு வழியாக சாப்பிட்டு, படுக்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னதும் மெதுவாக எழுந்து நின்றார்கள். நாங்கள் படுக்கையை விரித்து படுத்ததும் பார்த்தால் எங்கள் காலடியில் சிலர் அமர்ந்து கொண்டு மறுபடியும் சுவாரஸ்யமான பேச்சைத் தொடர்ந்தார்கள். நாங்கள் எங்கள் பக்கம் லைட்டை 'ஆஃப்' செய்தால் எதிர்ப்பக்கம் லைட்டைப்போட்டுக்கொண்டு, இரவு 11 மணி வரை இந்தக் கதை தொடர்ந்தது. என் கணவர் உறங்கி விட்டார்கள். என்னால் இந்த சப்தத்தில் உறங்க முடியவில்லை. பாத்ரூம் பக்கம் அடிக்கடி போய் வந்தேன். அப்படியும்கூட ஒரு அடிப்படை நாகரீகமோ, அடுத்தவருடைய அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறோமே என்கிற சிறு குற்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை. 12 மணிக்கு மேல் தான் உறங்க ஆரம்பித்தேன். இரவுப்பயணம் என்பது நெடிய பயணத்தை உறங்கியவாறே கழித்து விடலாமென்பதுடன் உடல் களைப்பையும் குறைத்துக்கொன்டு விடலாமென்று தான் நிறைய பேர் இரவுப்பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள். எத்தனை நோயாளிகள், சிறு குழந்தைகள், சரியாக உறங்க முடியாதவர்கள் கூடவே பயணம் செய்கிறார்கள்! அடிப்படை நாகரீகமோ மனிதாபிமான உணர்வோ இல்லாத இந்த மாதிரி மனிதர்களை என்ன செய்வது?

அசத்திய முத்து:

அபிலாஷா ஒரு மாற்றுத்திறனாளி. சிறு குழந்தையாக ஒரு வயதில் இருந்த போது ஃபிட்ஸ் வந்திருக்கிறது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மருந்தின் அளவை அதிகமாய்க்கொடுத்ததால் இவரது வலது காது கேட்காமல் போய் விட்டது. கேட்க முடியாததால் பேசும் திறனும் போய் விட்டது. நான்கு வயதில் இவருக்கு இவரைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. காது கேட்கும் திறனுக்காக ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருக்க மறு பக்கம் ஐந்து வயதில் சென்னையில் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த இவர் மற்ற  ஆசிரியைகளின் கிண்டல்களால் மிகவும் மன பாதிப்பையடைந்தார்.வேறு பள்ளியில் சேர்த்த பிறகு தான் ஆசிரியைகளின் அன்பாலும் அரவணைப்பாலும் இவருக்கு தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது. மற்ற‌வர்கள் பரதம் ஆடும்போது தரையில் ஏற்படும் அதிர்வை வைத்து, அதை இசையாக மாற்றி இவர் பரதம் கற்றுக்கொண்டார். படிப்பு, ஓவியம், அபாக்ஸ் என இவர் இப்போது சகலகலாவல்லியாக இருக்கிறார். தன்னைப்போலவே பாதிக்கப்பட்டவர்கள் தன்னைப்போல அனைத்தும் சாதிக்க வேண்டுமென்ற உந்துதலில் 'Voice of the Unheard ' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர்கள் தங்கள் குறைகளைப்பற்றிய விழிப்புணர்வை முதலில் அடைய வேண்டூம் என்பது தான் இவரின் முதல் நோக்கம். அதோடு அவர்கள் தங்கள் பாதிப்புகளை எப்படியெல்லாம் சரி செய்யலாம், அதிக குறைகள் இல்லாதவர்கள் அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்லுவது, வசதி இல்லாதவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, சமூக வலைத்தளத்தில் இவரின் அமைப்பைப்பற்றிய செய்திகளை வெளியிடுவது, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கும் கூடப்பிறந்தவர்களுக்கும் கவுன்ஸிலிங் தருவது என்று உற்சாகமாக இருக்கிறார் இவர். வசதியற்றவர்களுக்கு ஸ்பீச் தெரஃபியும் காது கேட்கும் கருவியும் வாங்கித்த‌ர வேண்டும், கிராமங்களிலும் சேவைகள் செய்ய கால் பாதிக்க வேன்டும் என்று இவரின் கனவுகள் விரிகின்றன!

அருமையான முத்து:

அன்பான‌வர்கள் தரும் பழையமுதம்கூட அருமையான, சுவையான விருந்தாகும். அன்பில்லாதவர்கள் தரும் அறுசுவை விருந்து எந்த சுவையும் தருவதில்லை. இந்த அர்த்தத்தைப்பொதிந்து விவேக சிந்தாமணி சொல்லும் இந்தப்பாடலை படித்துப்பாருங்கள்!

விவேக சிந்தாமணி

ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பில்லாக்கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவார் ஆயின்
கப்பிய பசியினோடு
கடும்பசி ஆகும் தானே

[ கப்பிய பசி=முன்பிருந்த பசி]

அறிய வேண்டிய முத்து:

செம்மை வனம்

எதுவும் செய்யாத வேளாண்மை’ எனப்படும் இயற்கை வேளாண்மையின் களம். தஞ்சாவூரில் இருந்து 35 கிலோ மீட்டரில் செங்கிப்பட்டியை அடுத்த ஆச்சாம்பட்டியில் இருக்கிறது. இங்கு தேக்கு மரத்தில் தொடங்கி, மா, பலா, வாழை, காய்கனிகள் என குதிரைவாலி வரைக்கும் அனைத்து வகையான தாவர வகைகளும், அரியவகை மரங்களும் உண்டு. இயற்கை வேளாண்மையின் விளைநிலமாக மட்டும் இல்லாமல், மரபு மருத்துவம், மரபுத் தொழிற்பயிற்சி என மரபு வாழ்வியலின் ஆசான் பள்ளியாக இருக்கிறது செம்மை வனம்.

தொடர்புகொள்ள

தஞ்சாவூர்:

1961, விவேகானந்தர் தெரு,
ராஜாஜி நகர் விரிவு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் – 613 004.
தொலைபேசி: 04362 – 246774

இசை முத்து:

'சர்க்கர‌ முத்து' என்ற மலையாளத்திரைப்படத்தில் வரும் இந்த பாடலை பார்த்து, கேட்டு ரசியுங்கள்!
22 comments:

KILLERGEE Devakottai said...

நம் நாட்டில் பொதுநாகரீகம் தெரியாத ஜடங்கள் நிறைய உண்டு

மற்ற விடயங்கள் நன்று
சகோ இந்தியா வந்து இருக்கின்றீர்களா ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆதங்க முத்து .... மிகவும் வேதனையளிக்கும் விஷயம்தான்.

இதுபோன்று அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்களால் தாங்கள் சொல்வதுபோல நோயாளிகள், சிறு குழந்தைகள், சரியாக உறங்க முடியாதவர்கள் போன்றோருக்கு மிகவும் கஷ்டமே. அதனை அவர்களே உணர வேண்டும். சொல்லியும் கேட்காதவர்களை என்னதான் செய்வது.

இரவினில் தொல்லையின்றி நிம்மதியாகப் படுத்துப் பயணம் செய்யவும் கொடுத்து வைத்திருக்கணும் போலிருக்குது.

அசத்திய முத்து + அருமையான முத்து ஆகிய இரண்டுமே நன்றாக உள்ளன.

பகிர்வுக்கு நன்றிகள்.

Angelin said...

ஆதங்க முத்து ..உங்களது ஆதங்கம் நியாயமானதே ..மேலும் ரெயிலில் மட்டுமில்லைக்கா பிளேனிலும் இந்த வளவள சத்தம் ஊருக்கே கேட்கிறாராபோல சிலர் பேசுவாங்கக்கா .பொதுவா பயணம் செய்யும் பலர் வெவ்வேறு மனநிலையில் பிரயாணித்துக்கொண்டிருப்பாங்க உடல்நிலை மனநிலை எல்லாம் பயணத்தின்போது இன்னும் கஷ்டத்தில் இருக்கக்கூடும் இம்மாதிரி டிஸ்டர்பன்ஸ் இன்னும் அசதியையே கூட்டும் அவங்களுக்கு புரியனும் இதெல்லாம் .

அபிலாஷா அசத்துகிறார் ..அந்த முதல் பள்ளி ஆசிரியர்கள் மிக மோசமானவர்கள் :(

செம்மைவனம் மற்றும் விவேக சிந்தாமணியும் அருமை .

Chellappa Yagyaswamy said...

உங்கள் ஆதங்க முத்து எனக்கும் பரிச்சயமானதே. இரவாவது, பகலாவது, அரட்டை அடிக்கவும், ரயிலை அழுக்குப்படுத்தவும் என்றே பலர் பயணிக்கிறார்கள். செல்வமோ கல்வியோ இவர்களிடம் சேர்ந்தாலும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்னும் நாகரிகம் மட்டும் இவர்களிடம் சேருவதேயில்லை. மென்மையாக அவர்களிடம் தெரிவித்தாலும் ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலையைத் தொடங்கிவிடுவார்கள்.அதுமட்டுமன்றி, நம்மைப் பற்றித் தங்களுக்குள் இளக்காரமாகச் சிரித்தும் தங்கள் வட்டார வழக்குப்படி இகழ்ந்தும் பேசி, மேலும் மேலும் நமக்குத் தொந்தரவு தருவார்கள். இதனாலேயே நான் இரயிலில் இரவில் பயணிப்பதை தவிர்த்துவிடுவதுண்டு.

- இராய செல்லப்பா நியூஜெர்சி

கரந்தை ஜெயக்குமார் said...

மற்றவர்களின் நிலைமையினை அறியாத இதுபோன்ற
மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான்
இருக்கிறது. சுய நலம், தங்களது மகிழ்ச்சி மட்டுமே இவர்களுக்குப் பெரிது
.
அபிலாஷா போற்றுதலுக்கு உரியவர்
நன்றி சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் முத்தை தவிர மற்ற அனைத்தும் அருமை...

ஸ்ரீராம். said...

உண்மைதான். ரயில் பயணத்தில் இது மாதிரிச் சங்கடங்கள் நிறையவே உண்டு. நானும் அனுபவித்திருக்கிறேன். இந்த மாதிரி அனுபவங்களால் நம்மால் யாருக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது என்றும் நினைப்பேன்.

Ramani S said...

உணர்வுக் கலவையாய் முத்துச்சரம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

athira said...

அத்தனை முத்துக்களும் அருமையான முத்து.. முதல் முத்துக்கூட அருமைதான் ஏனெனில் அப்படியான குணத்தில் இருப்போர்ர் யாராவது இதைப் படிக்க நேர்ந்தால் திருந்தி விடுவார்கள்...

பாடல் கேட்க நன்றாக இருக்கு..

தி.தமிழ் இளங்கோ said...

இந்த முத்துக்குவியலில் எல்லோரது கவனத்தையும் இழுத்த ஆதங்கமுத்து என்னையும் இழுத்து விட்டது. உங்கள் ஆதங்கம் சரிதான். குப்குப் என்ஜின் கால, மனதுக்குப் பிடித்தமான ரெயில்பயணம் போல் இப்போது இல்லை. நம்முடைய வயதும், மனதும் ஒரு முக்கிய காரணம்) ரெயில்வே ரிசர்வேஷனும் முன்புபோல இல்லை. ஆன்லைன் முறை வந்த பிறகு கிடைப்பதே அரிதாக இருக்கிறது.

ஒரு பழைய பாடலை (விவேக சிந்தாமணி) மீண்டும் படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. ‘காணக் கண்கூசுதே’ என்று தொடங்கும் அவ்வையார் தனிப்பாடல் இதனுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

Thenammai Lakshmanan said...

ஐந்து முத்துக்களும் அருமை மேம் :)

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
தஞ்சைக்கு நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இனி ஜூன் மாதம் திரும்பச் செல்வேன் துபாய்க்கு.

மனோ சாமிநாதன் said...

விரிவான், அருமையான பின்னூட்டம் தந்தற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் அருமையான பின்னூட்டம் தந்ததற்கும் அன்பு நன்றி ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் இராய செல்லப்பா! நானும் இனி ரயில் பிரயாணமென்றால் SIDE LOWERல் மட்டுமே பிரயாணிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன்! நீண்ட தூர பிரயாணங்கள் இப்போதெல்லாம் காரில் செல்வது ஒத்துக்கொள்வதில்லை. விமானப்பயணங்கள் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே உள்ளது. முக்கியமான காரணங்களுக்கு இந்த ரயில் பயணங்களைத் தவிர்க்க முடியவில்லை!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை!!