Wednesday 4 January 2017

அன்பு மகளே!!!



என்னை மிகவும் நெகிழ வைத்த ஒரு கடிதம் பற்றி உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாய் புகுந்த வீடு சென்றிருக்கும் புதுமணப்பெண் அங்கு ஏதேனும் காரணங்களால் மனக்கிலேசமோ அல்லது வேதனையோ அல்லது குழப்பமோ அடைந்தால் அதைத் தன்னைப்பெற்றவர்களிடம் அந்தப்பெண் சொல்லும்போது பொதுவாய் பெற்றோர் அதற்கு 'நான் பார்த்துக்கொள்கிறேன் ' என்றோ 'புகுந்த வீட்டில் நீதான் எல்லாவற்றையும் அனுசரித்து நடந்து கொள்ள வேன்டும்' என்றோ சொல்லுவார்கள். இப்போதெல்லாம் நடப்பதே வேறு! நிறைய பெற்றோர் ' அங்கு உனக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? பேசாமல் புறப்பட்டு வந்து விடு' என்று சொல்வதைத்தான் நான் பார்க்கிறேன். அல்லது ' புருஷனை எப்படியாவது கைக்குள் போட்டுக்கொள். மற்றவர்களை நாம் வழிக்கு கொண்டு வந்து விடலாம்' என்ற வசனத்தையும் கேட்டிருக்கிறேன். இல்லயென்றால் ' மாப்பிள்ளையை எப்படியாவது நம் பக்கம் இழுத்து விடலாம். பொறுமையாக இரு' என்ற உபதேசத்தையும் கேட்டிருக்கிறேன்.   ஆனால் திருமணமான புதிதில் மனம் சரியில்லாமல் ஆதங்கத்துடன் மனம் புழுங்கியிருந்த தன் மகளுக்கு ஒரு அன்பான தந்தை எழுதியிருந்த இது போன்ற கடிதத்தை நான் இது வரை படித்ததில்லை.  ஒரு மாத இதழில் இதைப் படித்த போது மனம் சிலிர்த்துப்போனேன். அந்தக் கடிதத்தை அப்படியே எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

'கவலையை சுட்டெறி. அது மெதுவாக நுழைந்து, ஓசைப்படாமல் கடித்து உயிரைக்குடிக்கக்கூடிய நச்சுப்பாம்பு. அதற்கு இடம் தராதே' என்கிறது கீதை.

கவலையுறாதே. எழுந்திரு. உற்சாகமாக வாழ்க்கையை சந்தி. எத்தனையோ பிறவிகள் எடுத்து, புல்லாய், பூண்டாய், புழுவாய் மிருகமாய், பறவையாய்த் திரிந்து, புண்ணியம் செய்து பெற்ற பெறற்கரிய ஜன்மம் இந்த மானிட ஜன்மம் . அதுவும் கூன், குருடு, முடமாய்ப்பிறக்காமல் முழுமையாகப் பிறந்தது பேரதிர்ஷ்டம். 'அதை வீணாக்கலாமா?' என்று கேட்பார் ஆதி சங்கரர். 

சந்தோஷமாக, முக மலர்ச்சியுடன் பழகு. இனிமையாகப் பேசு. மனதுக்குள் விளக்கு ஏற்றி வைத்துக்கொள். அது முகத்தில் பிரகாசித்து உன்னைப்பார்க்கிரவர்கள் எல்லோரையும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கு, கோழைத்தனத்திலிருந்து வீரத்திற்கு அழைத்து வரட்டும். 

எண்ணம் குட்டி போடும் தன்மையுடையது. எந்த எண்ணமும் தனித்துத் தோன்றி, தனியாக மறைவதில்லை. தன்னைப்போல பத்து நூறு எண்ணங்களை அடுக்க்டுக்காய் தோற்றுவித்து விட்டுத்தான் போகும். ' நான் தோல்வி அடந்து விட்டேன்', 'நான் சோர்வாக இருக்கிறேன்', 'எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது' என்று ஒரு முறை, ஒரே ஒரு முறை நினைத்தாலும்கூட, அது குளத்தில் எறிந்த கல்லினால் எழும் வட்டங்களைப்ப்போல் பெரிதாகி பெரிதாகி, ஆளையே அழித்து விடும். எண்ணத்தை நீ ஏன் பயன்படுத்திக்கொள்ள‌லாகாது?

'நான் நல்லவள்' என்று நினை. ' நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று எண்ணு. ' எனக்கு எல்லோரையும் பிடித்திருக்கிறது. எனக்கு விரோதிகளே இல்லை. நான் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறேன். எனக்கு எல்லோரிடமும் பிரியம் உன்டு. எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்' என்று ஒருமுறை நினை. அந்த ஒரு எண்ணமே வேர்விட்டு, கிளைத்து, பெரிய ஆலமரமாகி அசைக்க முடியாத சக்தியாக உனக்குத் துணை நிற்கும். 

வாழ்க்கை அழகானது. வாழ்க்கை ரசிக்கத்தகுந்தது. தெய்வீகமானது. அது ஒரு வீணை. அதை அன்புடன் வாசித்து இன்னிசை எழுப்பு. 

அது உன் கையில் தான் இருக்கிறது!

ஒரு அருமையான தந்தையின் அற்புதமான அறிவுரை! இதை விடவும் ஒரு பெரிய சொத்து அந்தப்பெண்ணுக்குத் தேவையில்லை! இப்படியெல்லாம் தற்காலத்துப்பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு அறிவுரை சொன்னால் எத்தனை விவாகரத்துக்கள் முறிந்திருக்கும்!!

இப்படி கடிதம் எழுதியது மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்கள்! 1988ல் எழுதப்பட்ட இந்தக்கடிதத்தை தன் வாழ்வின் மூல சாசனம் என்று குறிப்பிடுகிறார் அவர் மகள் கிருஷ்ணா சிதம்பரம். அவர் மேலும் சொல்லுகிறார்" வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடத்தோன்றுகிறது. இத்தகைய பேரின்பமான வாழ்க்கையைத்தந்த இறைவனுக்கு எப்படி நன்றியை சொல்வது என்று தெரியவில்லை. இந்தப்பிறவி எடுக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்று மலைப்பாக இருக்கிறது' என்று பரவசப்பட்டு பேசுகிறார்.

நம்மில் பலருக்கும்கூட வாழ்நாள் முழுமைக்குமான வழிகாட்டுதலாய் இந்தக்க்டிதம் அமையும்!!  


11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரு பெண்ணுக்கு தன் வாழ்வினில் தன்னம்பிக்கையூட்டும் மிக அழகான அருமையான கடிதம். பகிர்வுக்கு நன்றிகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தற்போதைய சூழலை உள்ளபடி கூறியுள்ளீர்கள். பல வீடுகளில் இதுதான் நடக்கிறது. இக்கடிதம் ஒரு பாடம் போல உள்ளது. நேர்மறைக் கருத்துகள் என்றென்றும் நம்மை முன்னுக்கு அழைத்துச்செல்லும் என்பதற்கு இக்கடிதம் ஒரு உதாரணம். ஏதாவது ஒரு முயற்சியில் தோல்விடைந்துவிட்டதாகக் கூறும் நண்பர்களிடம் நான் கூறுவது இதுதான் : "தோற்றுவிட்டதாக நினைக்காதீர்கள். இந்த முறை வெற்றி பெறத் தவறிவிட்டோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்" என்பேன். பெரும்பாலும் அதையே நான் கடைபிடிக்கிறேன்.

துரை செல்வராஜூ said...

நல்லதோர் வீணை.. உண்மையான வார்த்தை.. அன்பின் வழி வாழ்க்கை..

Asiya Omar said...

அருமை அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புதமான அறிவுரை...! இதை விட வேறு எதுவும் சொல்ல வார்த்தையில்லை...

Yaathoramani.blogspot.com said...

அருமையான கடிதம்
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
கொடுத்து வைத்த மகள்
அருமை அப்பா
தன்னம்பிக்கையை ஊட்டும் வரிகள்

கீதமஞ்சரி said...

திருமணமான புதிதில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை சொல்லிமுடியாது.... புதிய மண்ணில் நடப்பட்ட செடி வேர்பிடிக்குமுன் சந்திக்கும் சவால்கள் மிக அதிகம்.. அப்படியான குழப்பமான சூழ்நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவுமே சரியானதாக இருக்கவாய்ப்பில்லை. அத்தருணத்தில் அப்பெண்ணுக்கு நம்பிக்கையான உறவுகள் முக்கியமாக பெற்றோர் பெண்ணின் குழப்பம் நீக்கி வழிநடத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் பல பெற்றோர் அப்படிச் செய்யத் தவறிவிடுகின்றனர். எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்துவிடுகின்றனர். அது பெண்ணின் வாழ்வையே சூறையாடிவிடும் என்பதை மிகவும் தாமதமாகவே புரிந்துகொள்ளநேரிடுகிறது. ஆனால் இக்கடிதத்தின் மூலம் தந்தை மகளின் வாழ்வை அழகான பாதையில் வழிநடத்தும் அற்புதம் விளங்குகிறது. பலருக்கும் உதவும் வாழ்க்கைப்பாடம் இது. பகிர்வுக்கு நன்றி மேடம்.

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான கடிதம். இப்படிச் சொல்லிக் கொடுக்கும் பெற்றோர் குறைவாகவே இருக்கிறார்கள் இப்போது என்பது தான் சோகம்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நிலாமகள் said...

அன்பு சகோ...
புத்தாண்டு வாழ்த்துக்கள்! நானும் அந்த மாத இதழில் படித்து நெகிழ்ந்து சிரத்தையாக டைப் செய்து என் மகள் மெயிலுக்கு அனுப்பினேன். மூத்தோர் சொல் அமிழ்து அல்லவா!

'பரிவை' சே.குமார் said...

நம்பிக்கையூட்டும் கடிதம்...