Monday 7 November 2016

முடக்கத்தான் வெங்காய தோசை!!

முடக்கத்தான் கீரையைப்பற்றி அனைவரும் அறிந்திருக்கிறோம். பொதுவாய் மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை அதற்கிருக்கிறது என்பது தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.





கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது.

ஆனால் முடக்கத்தான் கீரை எப்படியெல்லாம் பயன்படுகிறது நமக்கு என்பதை அறிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாய் நாம் ரொம்ப நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது இரத்தம் அப்படியே சிறுநீரையும் எடுத்துக்கொன்டு உடலின் எல்லா இடங்களுக்கும் செல்கிறது. நம் மூட்டுக்கள் அசையுமிடத்தில் சிறுநீரிலுள்ள யூரிக் ஆசிட் க்ரிஸ்டல்ஸ் அப்படியே படிந்து போய்விடுகிறது. இந்த வேலை நிறைய நாட்கள் தொடர்ந்து நடக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக நம் மூட்டுக்கள் பாதிப்படைகின்றன. நாம் மூட்டுக்களை அசைக்கும்போது படிப்படியாக வலி அதிகரிக்கிறது. முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் நம் மூட்டுக்களில் படர்ந்திருக்கும் யூரிக் அமிலத்தைக் கரைத்து அதை அபப்டியே சிறுநீரகத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறது. அவ்வாறு சிறுநீர் வெளியேறும்போது பொட்டாசியம், சோடியம் ஆகியவற்றை அப்படியே நம் உடலில் விட்டு விடுவதால் நமக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் முடக்கத்தான் கீரை ஒரு பெரிய மாற்றத்தை நம் உடலில் செய்து பாதுகாக்கிறது. மேலும் ஒரு கைப்பிடி இலையால் வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகிய நோய்களும் சரியாகும். முடக்கத்தான் சூப் தொடர்ந்து சாப்பிடும்போது நம் வயிற்றில் சேகரமாகி தங்கியிருக்கும் வாயு வெளியேறுகிறது. வயிறு லேசாவதை நாம் உண‌ர முடியும்.




இந்த முடக்கத்தான் கீரையை நாம் துவையல், சூப், தோசை செய்து சாப்பிடலாம். இந்தக்கீரையை அதிகம் கொதிக்க வைத்தால் அதன் சத்துக்கள் அழிந்து விடும். சூப் செய்தாலும் கொதி வரும்போது தீயை அணைத்து விட வேண்டும்.

முடக்கத்தான் தோசை பலமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. மிகவும் சுவையான முடக்கற்றான் தோசை தயாரிக்கும் விதம் பற்றி இப்போது சொல்லப்போகிறேன். அவசியம் செய்து பாருங்கள். இதற்கு தக்காளி சட்னி அருமையானதொரு பக்கத்துணை!

முடக்கத்தான் வெங்காய தோசை:





தேவையானவை:

பச்சரிசி 1 கப்
இட்லி அரிசி 1 கப்
உளுந்து கால் கப்
துவரம்பருப்பு 1 மேசைக்கரண்டி
வெந்தயம் அரை ஸ்பூன்
நன்கு கழுவி சுத்தம் செய்து அரிந்த முடக்கத்தான் கீரை 2 கப்
தேவையான உப்பு
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் 1 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை 2 மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசி வகைகளையும் துவரம்பருப்பு, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்து மையாக அரைக்கவும்.
பிறகு கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கரைத்து இட்லிக்கு பொங்க வைப்பது போல ஏழெட்டு மணி நேரம் பொங்க வைத்து உபயோகிக்கவும்.
தோசை சுடுகையில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து தோசை வழக்கம்போல சுடவும்.


8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்களைப்பற்றி மிகவும் விரிவாகச் சொல்லியுள்ளீர்கள்.

முடக்கத்தான் வெங்காய தோசை செய்முறையைக் கொடுத்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.

மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

சிவகுமாரன் said...

இங்கு உகாண்டாவில் வீட்டிற்கு பின்புறம் நிறையவே இந்தக் கீரை இருக்கிறது. எப்படி செய்வது எனத் தெரியவில்லை. இப்போது அறிந்து கொண்டேன். நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

இது போல் இனி செய்கிறோம்... நன்றி அம்மா...

கோமதி அரசு said...

முடக்கத்தான் தோசை செய்முறையும், அதன் பயன்களும் அருமை.

Anuprem said...

பயனுள்ள தவல்கள்....நானும் சாப்பிடது உண்டு...




”தளிர் சுரேஷ்” said...

வெங்காயம் போடாமல் மிளகு மட்டும் சேர்ந்து செய்து சாப்பிட்டது உண்டு! பகிர்வுக்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

முடக்கத்தான் கீரை சாப்பிட்டிருக்கிறேன்...
தோசை... ஊருக்குப் போகும் போது செய்து சாப்பிடணும் அம்மா...

அருள்மொழிவர்மன் said...

முடக்கத்தான் கீரை தோசையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை, பகிர்வுக்கு நன்றி. இங்குமா கிடைக்கிறது?