Saturday 9 July 2016

அழகிய கண்ணே!!!

20 நாட்களுக்கு முன் ஒரு விடியற்காலை. முதல் நாள் இரவு தான் சென்னையிலிருந்து திரும்பியிருந்தேன். படுக்கும்போது மூடிய வலது கண்ணில் விரல்கள் பட்ட போது இலேசாக ஒரு வலி. அப்படியே உறங்கி விட்டேன். காலை முகம் கழுவியவாறே கண்ணாடியில் பார்த்த போது வலது கண்ணில் வெள்ளை விழி சிறிது கூடத் தெரியாத அளவு இரத்த சிவப்பாக மாறியிருந்தது. கருவிழியும்  அந்த இரத்தச் சிவப்பில் பழுப்பு கலர் போலத் தெரிந்தது. ஆனால் பார்வையில் எந்த வித்தியாசமும் இல்லை. என் கணவர் பதறிப்போய் ஏற்கனவே அந்தக் கண்ணில் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்த என் சகோதரி மகளை தொலைபேசியில் அழைத்தார். பயப்படத்தேவையில்லை என்று சொன்ன எங்கள் மகளிடம் திருச்சியிலுள்ள‌ அவரின் கிளினிக்கிற்கு உடன் வருவதாகச் சொல்லி திருச்சி சென்றோம்.

எங்கள் பெண் பரிசோதனை செய்து விட்டு கண்ணில் சொட்டு மருந்து ஊற்றி  dialate செய்து ரெடீனாவும் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தார். இது Subconjunctival hemorrhage  என்றார்.




வெள்ளை விழியை மூடி பாதுகாத்துக்கொண்டிருக்கும் conjunctiva என்ற மெல்லிய டிஷ்யூவிலுள்ள மிகச் சிறிய இரத்தக்குழாய்களில் ஏதேனும் ஒன்று சில சமயங்களில் நிலையில்லாமல் ஏறி இறங்கும் அதிக உயர் இரத்த அழுத்தம் காரணமாகவோ அல்லது கண்களில் திடீரென்று ஏற்படும் விபத்தாலோ அல்லது தலையில் உள்ள நரம்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டாலோ இந்த இரத்தக்குழாய்கள் மிகவும் இலேசானது என்பதால் உடைந்து  இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது என்று சொன்னார். வெள்ளை விழிக்கும் conjunctiva என்ற இந்த மெல்லிய திரைக்கும் இடையே இந்த இரத்தக்கசிவு ஏபடுவதால் இரத்தம் வெளியே வருவதில்லை.

சில சமயங்களில் பலமாகத் தும்மினால்கூட‌ இந்த நிலை ஏற்படுகிறது. லேஸிக் அறுவை சிகிச்சை அல்லது காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் கூட ஒரு காரணமாகிறது!

எனக்கு வேறெந்தக் காரணமும் இல்லை காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டதைத்தவிர! ஆனாலும் இப்படி நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு கடுமையான தலைவலி இருந்தது நினைவுக்கு வந்தது
.
இதற்கு எந்த மருந்துகளும் தேவையில்லை என்று கூறிய என் பெண் ஒரு சொட்டு மருந்தைத்தந்தார். அதை தினமும் மூன்று தடவைகள் உபயோகிக்கும்படி சொல்லி இந்த சொட்டு மருந்து கூட கண்களுக்கு ஒரு குளுமை தருவதற்காக மட்டுமே என்றும் இந்த சிவப்பு 15 நாட்களில் தானாகவே சரியாகி விடுமென்றும் கூறினார். ஒரு வாரத்திற்குப்பின் சிறிது சிறிதாக கருஞ்சிவப்பு சிவப்பாக மாற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கண் முழுவதுமாக இருந்த சிவப்பு மறைய ஆரம்பித்தது.  நான்கு நாட்களுக்கு முன் இது முழுவதுமாக மறைந்து விட்டது!

பொதுவாக 50 வயதைக்கடந்த பின் கண்களில் இப்படி ஏதேனும் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. ஒரு நாள் காலை எழுந்ததும் உங்கள் வெள்ளை விழிகள் முழுமையாக சிகப்பாக காட்சி தந்தால் பயந்து விட வேண்டாம். உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகவும்.

14 comments:

கோமதி அரசு said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.
உங்கள் அழகிய கண்களுக்கு பதிப்பு ஒன்றும் என்று படித்ததும் மகிழ்ச்சி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய, முன்னெச்சரிக்கைப் பதிவு. நன்றி.

துரை செல்வராஜூ said...

அழகிய கண் அழகாகவே இருக்க வேண்டும்!..
பயனுள்ள தகவல்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

’கண்’ போன்ற மிகவும் பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

அடடா....

திடீரென இப்படி ஆனால், என்ன ஏது எனத் தெரியாமல் கஷ்டம் தான்.

தி.தமிழ் இளங்கோ said...

பயனுள்ள பதிவு. கண்ணின் படம்தான் பயமுறுத்தி விட்டது.

KILLERGEE Devakottai said...

பலருக்கும் பயன் பெறும் வகையில் தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

சாரதா சமையல் said...

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு அக்கா. உங்கள் கண் நன்றாக உள்ளது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

எங்கள் வீட்டிலும் சமீபத்தில் இருவருக்கு இதே பிரச்னை. மாமா, மதுரை அர்விந்த் ஆஸ்பத்திரியிலும், தங்கை உள்ளூர் கண் மருத்துவமனையிலும் சரி செய்து கொண்டனர். மாமாவுக்கு முன்பு நடந்த காடராக்ட் அறுவைச் சிகிச்சையில் வைத்த லென்ஸ் உள்ளேயே நொறுங்கி இருந்தது. அதைச் சரி செய்தனர்.

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள தகவல்
நன்றி சகோதரியாரே

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்

Bhanumathy Venkateswaran said...

Thanks for the useful information! Take care of your eyes.

'பரிவை' சே.குமார் said...

விழிப்புணர்வு பகிர்வு அம்மா...
இப்போது கண் எப்படியிருக்கிறது அம்மா...?

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
யாவரும் அறிய வேண்டிய விடயத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-