Thursday, 9 June 2016

பிச்சைக்காரன்!

இன்று என் ஏழு வயது பேரன் வரவேற்பறையை ஒரு தியேட்டர்போல அலங்காரம் செய்து குடிப்பதற்கு பழரசங்கள், கொரிப்பதற்கு நொறுக்கல்கள் எல்லாம் செட் பண்ணி எங்களை அமர வைத்து ஏதேனும் சினிமா பார்த்தே ஆக வேண்டுமென்றார். அவருக்காக தலையாட்டவும் ஒரு லிஸ்ட் காண்பித்து  which film would you like to see sir? என்று கேட்டார். அவர் தியேட்டர்  மானேஜராம்! அப்படி செலெக்ட் செய்த படம் தான் பிச்சைக்காரன்! பேரனுக்காக ஆரம்பித்து, கடைசியில் படத்தில் ஆழ்ந்து போக ஆரம்பித்து விட்டோம்.

விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் சாதனா டைட்டஸ் கதாநாயகியாகவும் நடித்த படம் இது.
கதாநாயகனின் தாய் கணவன் இல்லாது தனி மனுஷியாக போராடி மகனை வளர்த்து ஆளாக்குகிறாள். மிகப்பெரிய நூற்பாலைகளின் உரிமையாளராக ஆகி வெளிநாட்டில் படித்து திரும்பிய மகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறாள். அன்றே கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து தாயை கோமா நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஆங்கில வைத்தியம், கேரள ஆயுர்வேத வைத்தியம் எல்லாம் செய்தும் பலனில்லாது  தவிக்கும் மகனிடம் ஒரு துறவி ‘ 48 நாட்கள் [ஒரு மண்டலம்] பிச்சைக்காரனாக வாழ்ந்தால் அவனின் தாய் பிழைப்பாள் என்று சொல்கிறார். அவன் யாரென்ற அடையாளம் வெளியில் தெரியக்கூடாது என்றும் தினமும் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் என்றும் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கும்போது அவன் கையில் காசு இருக்கக்கூடாது என்றும் சொல்கிறார்.

அவனால் உடனே அதற்கு ஒப்புக்கொள்ள முடியவில்லை. தயங்குகிறான். குழம்புகிறான். கடைசியில் அம்மா என்ற மந்திரச்சொல் பிச்சைக்காரனாக அவன் முடிவு எடுக்கக் காரணமாகிறது. முதல் நாள் அவனுக்கு பிச்சை எடுக்கத்தெரியவில்லை. அவனைப்பார்த்தால் பிச்சைக்காரனாக மற்றவர்களுக்கும் தெரியவில்லை. தன் பணக்காரக்களையைப்போக்க அவன் பலவிதங்களிலும் கஷ்டப்படுகிறான். எங்கே போய் பிச்சை எடுப்பது, எப்படி பிச்சை எடுப்பது என்றும் புரியவில்லை. கடைசியில் பிச்சைக்காரர்கள் கூட்டம் ஒன்று அவனுக்கு நட்பாகவும் உதவியாகவும் அமைய அவன் பிச்சையெடுக்க ஆரம்பிக்கிறான்.
யதேச்சையாக அம்மா தனக்காகப் பார்த்து வைத்திருந்த பெண் சாலையில் விழுந்து கிடக்கும் ஒருவனுக்கு உதவுவதைப்பார்க்கிறான். மனம் கனிகிறது. மனசில் அன்பு பிறக்கிறது. அவளும் அவனை நேசிக்க ஆரம்பிக்கிறாள்.

அந்த நாற்பத்தெட்டு நாட்களை அவன் பிச்சையெடுத்து கழிப்பதற்குள் அவன் சொத்துக்கு அலையும் பெரியப்பா, அவனை அழிக்கத்துடிக்கும் ரவுடிக்கும்பல், அவனைக்கவிழ்க்க அலையும் வில்லன்கள் அனைவரையும் எதிர்கொண்டு அவன் போராட வேண்டியிருக்கிறது. அவனின் நிஜ அடையாளத்தைக் காட்ட முடியாமல் பல தடவைகள் தவிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்த சத்திய சோதனையை அவன் உறுதியாக ஏற்கிறான்.

இடையே அவனின் காதலி அவன் பிச்சைக்காரன் என்பதை தெரிந்து கொள்கிறாள். கோபத்துடனும் ஆவேசத்துடனும் அவனை விட்டு விலகுகிறாள். கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அங்கே  வேதனை பிறக்கையில் தான் தெரிகிறது தன்னால் அவனை மறக்க முடியாதென்பது! ‘ வேறேதும் வேலை செய்து பிழைக்க முடியாதா?’ என்று கேட்கையில் அவன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான். ‘நான் கொடுக்கும் பணத்தையாவது ஒரு பிச்சையாக நினைத்து ஏற்றுக்கொள்ளக்கூடாதா? என்று அவனிடம் கேட்கிறாள். அவன் உடனே மண்டியிட்டு கைகளை நீட்டி யாசிக்கிறான். அவள் அந்தக் கைகளில் தன் முகத்தைப்புதைத்து அழுகிறாள். ரொம்பவும் கவித்துவமான காட்சி இது!

ஆனால் யதேச்சையாக அவள் அவன் யாரென்பதை கணினி மூலம் அறிகிறாள். அவனிடம் உண்மையைச் சொல்லாமல் அவன் பிச்சையெடுப்பதற்கும் உதவி செய்கிறாள்.

இறுதியில் அவன் ஒரு மண்டலம் பிச்சையெடுத்து, அந்தப் பணத்திலேயே சாப்பிட்டு, அடுத்தவர்களுக்கு உதவி செய்து, பாக்கியை கோவில் உண்டியலில் போட்டு 48 நாட்களையும் முடிக்கிறான். அவன் தாய் உயிர்த்தெழுகிறாள்!

தாயை சக்கர நாற்காலியில் அமர்த்தி தள்ளிக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவன் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னருகே பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் ஒருவனை கவனிக்காமல் இருக்கிறான். அவன் தாய் சொல்கிறாள்
“ ஒன்று அவனுக்கு பிச்சையிடு அல்லது இல்லை என்று சொல்லியனுப்பு. அவனைக் காக்க வைக்காதே. பிச்சைக்காக காத்திருக்கும் வலியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது”!

அவனும் அவளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, படம் அங்கே ஸ்டைலாக முடிவு பெறுகிறது!

ரொம்ப நாட்களுக்குப்பிறகு இந்தப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன். ரொம்பவும் நுணுக்கமான உணர்வுகளும் சில அழகிய காட்சிகளுயும் மெலிதான நகைச்சுவையும் பிச்சைக்காரர்களுக்கென்றிருக்கும் நியாயங்களும் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது. இந்தப்படத்தை அவசியம் பார்க்கலாம்!    
 

16 comments:

ஸ்ரீராம். said...

ஓ... நல்ல படமாக இருக்கும் போலிருக்கிறதே... பார்த்து விடுகிறேன்.

Dr B Jambulingam said...

வித்தியாசமான கதை. பகிர்வுக்கு நன்றி.

Srimalaiyappanb sriram said...

அருமை ... http://ethilumpudhumai.blogspot.in/

KILLERGEE Devakottai said...

அழகிய விமர்சனம் சினிமா பார்க்காத என்னைக்கூட பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது அவசியம் பார்க்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகானதொரு கதையை தாங்கள் சொல்லியுள்ளவிதம் மிகவும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

வாய்ப்பு கிட்டும்பொழுது அவசியம் பார்ப்பேன் சகோதரியாரே
அருமையான விமர்சனம்

‘தளிர்’ சுரேஷ் said...

சுவாரஸ்யமான விமர்சனம்! நன்றி!

துரை செல்வராஜூ said...

திரைப்படங்களில் அவ்வளவாக நாட்டம் இல்லை.. ஆயினும் - தாங்கள் விவரித்துள்ள விதம் அந்தப் படத்தைப் பார்க்கும்படி தூண்டுகின்றது..

மனோ சாமிநாதன் said...

பார்த்து விட்டுச் சொல்லுங்கள் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஸ்ரீமலையப்பன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோதரர் கரைந்தை ஜெய‌க்குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!!