Tuesday 2 February 2016

திம்மக்கா ஒரு சரித்திரம்!!!

திம்மக்காவைப்பற்றி சில மாதங்கள் முன்பு ஒரு வார இதழில் படித்தேன். அசந்து போனேன். பொதுவாய் நாமெல்லோரும் ஓய்வு பெறும் வயது வந்த பின் இந்த ஓய்வை எப்படி கழிப்பது என்ற திட்டத்தில் இறங்குவோம். சுற்றுலாக்கள், பிடித்த மாதிரி ஓய்வை அனுபவிக்கும் திட்டங்கள் என்று மனதில் பல விருப்பங்கள் அலை மோதும். அந்த ஓய்வை அடுத்தவர்களின் நலனுக்காக கழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் தன் இரண்டாவது இன்னிங்ஸ்ஸைத் தொடருபவர்கள் இந்த உலகில் மிக மிக குறைவே! ஆனால் தன் இள‌ம் வயதிலிருந்து இன்று 101 வயது வரை தன் வாழ்க்கையை மற்ற‌வர்களின் நலனுக்காக அர்ப்பணம் செய்திருக்கும் திம்மக்காவை நினைத்துப்பார்க்கையில் மனம் பிரமித்து நிற்கிறது!!




இவருக்கு சொந்த ஊர் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கட்டனஹள்ளி என்ற கிராமம். ஒரு விவசாயின் மகளாகப்பிறந்ததால் அப்பாவுக்கு உதவியாக வயலுக்கு செல்லும் பழக்கம் சிறு வயதில் இருந்தது. ஹூலிகல் கிராமத்தில் வேலை செய்த சிக்கையாவுடன் பத்தொன்பது வயதில் திருமணமாகி வந்தவர் இவர். குழந்தைகள் இல்லாத துக்கம் இவர்கள் வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் குதூர் என்னும் இடத்திலிருந்து தங்கள் கிராமம் வரை நடந்து கொன்டிருந்த போது தான் பெயருக்குக்கூட இளைப்பாறிக்கொள்ள ஒரு மரம் கூட இரு மருங்கிலும் இல்லை என்பதைக் கண்டார்கள். இனி குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது போல மரங்களை நட்டு வளர்க்க வேன்டுமென்று முடிவு செய்தார்கள். கூலித்தொழிலாளர்கள் என்பதால் மரக்கன்றுகளை வாங்க அவர்களிடம் பணமில்லாதிருந்தது. எங்காவது வயலிலோ அல்லது காட்டிலோ விளையும் ஆல மரக்கன்றுகளை தேடிப்பிடித்து வீட்டில் வைத்து பதியன் போட்டு அவை ஓரளவு வள‌ர்ந்ததும் சாலையோரத்தில் நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள்.




தேசீய நெடுஞ்சாலையிலிருந்து அவர்கள் கிராமம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மரங்களை வளர்க்கத்தொடங்கினார்கள். மழை பொழியும்போது அதை பெரிய சிமிண்ட் குழியில் சேமித்து ஆண்டு முழுவதும் உபயோகிப்பது அவரின் கிராமத்து வழக்கம். கணவனும் மனைவியுமாக இடுப்பிலும் தலையிலும் தண்ணீர் குடங்களை சுமந்து வளரும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றினார்கள். எத்தனைப்பெரிய சாதனை இது!! 1955ல் தொடங்கிய இந்தப்பணி 1991 வரை தொடர்ந்தது. ஒரு பத்திரிக்கையாளர் கண்ணில் இவ‌ர்கள் சேவை பட‌, அவர் தன் பத்திரிகையில் அதை பிரசுரித்த பின்பு தான் திம்மக்காவைப்பற்றி வெளியுலகுக்கு விபரம் தெரிய ஆரம்பித்தது. வனத்துறை அதிகாரிகள் அவரைத் தேடி வந்து இனி அவரின் பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள்.  மாநில அரசும் பல வசதிகலைச் செய்து கொடுத்தது.
 
கணவர் மறைந்த பின் தனியாகவே கடந்த 25 வருடங்களாக மரங்களை வளர்க்கிறார் இவர். த‌ற்போது அவருக்கு வயதாவதால் முன்போல சுறுசுறுப்பாக பணியாற்ற முடியவில்லை என்பது இவரது ஆதங்கமாக இருந்தாலும் வனத்துறையினர் அந்தப் பணியைத்தொடர்வதால் சற்று நிம்மதியாக இருக்கிறார். ஆனாலும் மழை நீர் சேமிப்பு, பெண் கல்வி, பெண்கள் மீதான அடக்கு முறையை எப்படி கையாள்வது என்பது பற்றியெல்லாம் கிராம மக்களிடையே பிரசாரம் செய்து வருகிறார். இறுதி மூச்சு வரை கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேன்டுமென்பதே தன் லட்சியம் என்கிறார். இவர் புகழ் அமெரிக்கா வரை பரவியுள்ளது.




கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ், ஓக்லாண்ட் பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் மையங்களுக்கு இவரின் பெயரையே வைத்திருக்கிறார்கள். 1995ல் தேசீய சிறந்த குடிமகள் விருதும் 1997ல் இந்திராகாந்தி விருக்ஷமித்ரா விருது உள்பட ஏராளமான விருதுகளும் பெற்றிருக்கிறார் இவர்!!
கொஞ்சம்கூட தன்னலம் என்பதே இல்லாத எப்பேர்ப்பட்ட மனது இது! எத்தனையோ பேருக்கு இதையும் விட துன்பங்கள் வந்து வாழ்க்கையை ஒன்றுமேயில்லாததாக ஆக்கியிருக்கிறது. ஆனால் அத்தனை பேருக்கும் அந்தத் துன்பங்களை மறக்கக்கூடிய மாற்று சக்தியாக மற்ற‌வர்களுக்கு நல்லது செய்யும் மனப்பான்மையை கொண்டுவரமுடிந்திருக்கிறதா என்ன? இன்று நூற்றி ஒன்றாம் வயதிலும் இவர் கம்பீரமாக நிற்கிறார். 'சாலுமராடா திம்மக்கா என்று அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் சாலுமராடா என்றால் வரிசையாக அணிவகுத்து நிற்கும் மரங்கள் என்று அர்த்தம்! 384  ஆலமரங்களை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வளர்த்திருக்கும் இவர் உலக சுற்றுப்புற சூழல் தினத்தன்று பல கல்லூரிகளாலும் சர்வகலாசாலைகளாலும் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்! இவர் வள்ர்த்திருக்கும் ஆலமரங்களின் இன்றைய மதிப்பு ஒன்றரை கோடியாகும்!!

மரக்கன்றுகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தபோது திம்மக்கா சொன்னார்  "எங்களுக்கு இது கஷ்டமாகவே தெரியவில்லை.நாங்கள் இறந்த பிறகும் இவை எங்கள் பெயரைச் சொல்லும். ஊருக்கு நிழல் கொடுக்கும். பறவைகளுக்கு வீடாகும். பொட்டல்காடாக இருக்கும் எங்கள் கிராமத்துக்கு மழையைக் கொண்டுவரும். இதை விட ஒரு பெற்றோருக்கு வேறென்ன நிறைவு    வேண்டும்?"

இந்த மாதிரி மனிதர்களால் தான் இன்னும் மழை பொழிகிறது!!!

 

19 comments:

ஸ்ரீராம். said...

போற்றப்பட வேண்டிய மனுஷி.. பல நாட்களுக்கு முன்னரே இவரைப்பற்றி எங்கள் பாஸிட்டிவ் செய்திகளிலும் பகிர்ந்து இருக்கிறோம்.

KILLERGEE Devakottai said...

ஆச்சர்யமான அம்மையார்தான் பாராட்டப்பட வேண்டியவர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சரித்திர நாயகி திம்மக்காவைப பற்றிய செய்திகள் மிகவும் வியப்பளிக்கின்றன. எவ்வளவு ஒரு தன்னலமில்லா பொதுச்சேவை செய்துள்ளார் ... மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

// "எங்களுக்கு இது கஷ்டமாகவே தெரியவில்லை.நாங்கள் இறந்த பிறகும் இவை எங்கள் பெயரைச் சொல்லும். ஊருக்கு நிழல் கொடுக்கும். பறவைகளுக்கு வீடாகும். பொட்டல்காடாக இருக்கும் எங்கள் கிராமத்துக்கு மழையைக் கொண்டுவரும்.//

இந்த மாதிரி மனிதர்களால் தான் இன்னும் மழை பொழிகிறது என்பது உண்மையே!

பகிர்வுக்கு நன்றிகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திம்மக்காவைப் பற்றி படித்துள்ளேன். தங்களது பதிவு மூலம் மேலும் பல செய்திகளை அறிந்தேன். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

திம்மக்கா போற்றுதலுக்கும்
வணங்குதலுக்கும் உரியவர்
போற்றுவோம்
வணங்குவோம்

தி.தமிழ் இளங்கோ said...

வயதானவர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் திம்மக்கா. அவரைப் பற்றிய தகவல்களையும், படங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

துரை செல்வராஜூ said...

இந்த அம்மையாரைப் பற்றிப் படித்திருக்கின்றேன்..

மகா புண்ணியவதி!..

தங்கள் பதிவில் கண்டதும் மகிழ்ச்சி..

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான மனுஷி.....

இங்கேயும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...


திம்மக்காவைப் பற்றி படித்துள்ளேன். பாராட்டப்பட வேண்டியவர்.

மனோ சாமிநாதன் said...

பாசிடிவ் செய்திகளில் எப்படியோ நீங்கள் திம்மக்காவைப்பற்றி எழுதியதைப் பார்க்க தவறியிருக்கிறேன் ஸ்ரீராம்! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டம் தந்தத்ச்ற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி காஞ்சனா!

அருள்மொழிவர்மன் said...

‘’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

மேற்குறிப்பிட்ட வரிகளுக்கு இவ்வம்மையாரே உதாரணம். வணங்கப்பட வேண்டியவர். வாழ்க அவர் புகழ்!!

இன்று முகநூலில் 1000 likes வாங்குவதைப் பெருமையாய் நினைக்கும் இந்த இளைய சமுதாயமும் நாமும் இவ்வம்மையாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். இவரின் தொண்டு போற்றப்பட வேண்டியது.

இச்செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி! இன்றுதான் தங்கள் வலைப்பதிவைப் பற்றித் தெரிந்தது.
வரும் நாட்களில் பதிவுகளை வாசித்து கருத்தைப் பகிர்கிறேன்.