Wednesday, 18 November 2015

முத்துக்குவியல்-39!!!!

குறிப்பு முத்து:

கரப்பான் பூச்சிகளை விரட்ட:


1. வெள்ளரி தோல்களை ஒரு அலுமிய பாத்திரத்தில் போட்டு வைத்தால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் கிட்டே வராது.

2. 2 மேசைக்கரண்டி பேக்கிங் சோடாவையும் 3 மேசைக்கரண்டி சீனியையும் கலந்து பூச்சிகள் நடமாடும் இடத்தில் தூவினால் சர்க்கரையுடன் பேக்கிங் சோடாவையும் செர்ந்து சாப்பிட்டு கரப்பான்கள் இறந்து விடும்.

3. பிரியாணி இலையைப்பொடி செய்து தூவினாலும் இந்த மணத்திற்கு அவை கிட்டே வராது. வந்து உண்டாலும் இறந்து விடும்.

தகவல் முத்து:

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பர்ட் நோபல் முதன் முதலாக டைனமைட்டை கண்டுபிடித்தார். சிறிது நாட்களில் அவர் சகோதரர் இறந்த போது, இவர் இறந்ததாக தவறாகப் புரிந்து கொண்ட ஒரு பிரெஞ்சு நாளிதழ், டைனமைட் கண்டு பிடித்த இவர் ஒரு மரண வியாபாரி என்று குறிப்பிட்டிருந்தது. தன் பெயர் உலக சரித்திரத்தில் தவறாக இடம் பெறப்போகிறது என்று அஞ்சினார். தீர யோசித்தவர்தன் உயிலை எழுதினார். அதன் படி, தன் சொத்துக்களில் பெரும் பங்கை இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் என்ற ஐந்து பிரிவுகளில் உலகளாவிய பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் தன் பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி விட்டு இறந்து போனார். நோபல் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து 1901ஆம் ஆண்டு டிசம்பர் 10ந்தேதியிலிருந்து முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன் முதலாக எக்ஸ்ரேயைக் கண்டு பிடித்த ராண்ட்ஜன்  பரிசு பெற்றார்.

பக்தி முத்து:

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திலிருந்து ஈசான பாகத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஈஸ்வரவாசல். பொங்கு சனீஸ்வரன் தலம் என்று போற்றப்படும் திருக்கொள்ளிகாட்டிலிருந்து திருநள்ளாறு சென்று நள மகாராஜாவைப்பிடிக்க தன் காக வாகனத்தில் சனீஸ்வரன் புறப்பட்டுச் செல்லும்போது, இரவு நேரம் வரவே காக்கைக்கு கண் தெரியாது என்பதால் ஓரிரவு காரையூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீசங்கர நாராயணர் சிவாலயத்தில் தங்கினார். சனி பகவான் ஓர் இரவுக்காலம் இங்கே தங்கியதால் இத்தலம் சனி ஈஸ்வர வாசல் என்ற பெயர் பெற்றுவிட்டது. திருவாரூரிலிருந்து நாகூர் செல்கிற வழித்தடத்தில் இந்த ஆலயம் உள்ளது.

குடகுமலைப் பகுதியிலிருந்து புறப்பட்டு வருகிற காவிரி, கும்பகோணத்திற்கு வரும்போது அரசலாறு வெட்டாறாகப் பாய்ந்து பிரிகிறது. தென்புலமாகப் பிரியும் வெட்டாறு திருவாரூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கங்கனாஞ்சேரிப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்காக வளைந்தோடுகிறது. விருத்தம் என்ற சொல்லுக்கு வட்டம், வளைப்பது என்று பொருள். இத்தலத்தில் சூரியமைந்தனாகிய சனிபகவானது அபூர்வமான கானகப்பகுதியை வளைத்தபடி வருவதால் ‘விருத்த கங்கா’ என்று பெயர் பெறுகிறது.

ஆலயத்தின் அருகில் உள்ள விருத்த கங்காவில் காலை பூஜைகளைச் செய்வதற்கு முன்பு நீராடிவிட்டு, மும்முறை ஆசமனம் செய்து, அந்த நதிக்கு காரகத்துவ பலன் தரும் சக்தியையும் அருளினான் சனீஸ்வரன் .  இத்தலத்தில் கிழக்குமுகமாக நின்று, நதியில் நீராடி வருவோருக்கு மங்களகரமான பார்வையைத் தருகிறார் என்கிறது தலவரலாறு. மாங்கல்ய பலம் குறைவாக இருப்பவர்களுக்கு நலம் அருள்வதாக நம்பிக்கை உண்டு. 

அதிசய முத்து:

ராஜஸ்தான் மாநிலத்தில் பிபலண்டரி கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் கிராமத்தில் பெண்குழந்தை பிறந்தால் 111 பழக்கன்றுகளைத் தருகிறது. இதனை அந்தக் குடும்ப உறுப்பினர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறத்துல் நட்டு பராமரிக்க வேண்டும்.  இது தவிர கிராமத்தில் 31000 வசூலித்து, அந்தக்குடும்பத்தினருக்கு 10000 ரூபாய் கொடுத்து விட்டு, மீதமுள்ள 21000 ரூபாயை வைப்பு நிதியில் வங்கியில் போடுகிறார்கள். 111 பழ மரக்கன்றுகள் வளர்ந்து பலன் தரும்போது அந்தப்பெண் குழந்தையின் வளர்ச்சிக்கும் படிப்பிற்கும் உதவுகிறது. அந்தப்பெண்ணுக்குத் திருமண‌ம்
நிச்சயமாகும்போது மொத்த வைப்பு நிதியும் தரப்படுகிறது. இந்த கிராமத்தில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 60 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் இதுவரை நடப்பட்டுள்ளன. கிராமத்தில் மரங்கள் நடுவது பெண் குழந்தைகளுக்கு மரியாதை தருவதாகும். அதோடு ஊரும் பசுமையடைகிறது என்கிறது இந்த கிராமம்! 

27 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதியதோர் செய்தியை எனக்குத் தந்துள்ள ’தகவல் முத்து’ அருமை.

பசுமையான ‘அதிசய முத்து’ ஆச்சர்யம் அளிக்கிறது. :)

பகிர்வுக்கு நன்றிகள்.

Dr B Jambulingam said...

அனைத்து முத்துக்களும் அருமை. கோயில்களைப் பொருத்தவரை திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு ஆகிய கோயில்களுக்குச் சென்றுள்ளேன். ஈஸ்வரவாசல் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன்
வாய்ப்பு கிடைக்கும்போது என் தளங்களுக்கு வாருங்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

கரந்தை ஜெயக்குமார் said...

பிபலண்டரி கிராமம் போற்றுதலுக்கு உரியது

துரை செல்வராஜூ said...

ராஜஸ்தான் - பிபலண்டரி கிராமத்தில் - பெண் குழந்தைகளைப் பெருமையுடன் பேணும் செயல் போற்றுதற்குரியது..

வாழ்க நலம்..

திண்டுக்கல் தனபாலன் said...

பிபலண்டரி கிராம பஞ்சாயத்து நிர்வாகம் போல் எங்கும் இருக்க வேண்டும்...

priyasaki said...

எல்லாமே அருமையான முத்துக்கள் அக்கா. பிபலண்டரி கிராமத்தினை போல் ஏனைய கிராமங்களும் பின்பற்றவேண்டும்.

கீத மஞ்சரி said...

அனைத்தும் அருமை. ராஜஸ்தான் கிராம மக்களின் செயல் அசத்துகிறது. இப்படி ஒவ்வொரு ஊரும் சிந்தித்து செயல்பட்டால் பெண்சிசுக்கொலை நிச்சயம் குறையும். குறைவதென்ன.. மறைந்தேபோகும்.

கரப்பான்பூச்சிகளை விரட்ட இவ்வளவு எளிய வழிகளா? மிகவும் நன்றி மேடம்.

‘தளிர்’ சுரேஷ் said...

ராஜஸ்தான் மாநில கிராமவாசிகளின் செயல் பாராட்டுக்குரியது! சிறப்பான தகவல்கள்! நன்றி!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

ஸ்ரீராம். said...

எல்லா தகவல்களுமே சுவாரஸ்யம்.

ரூபன் said...

வணக்கம்
அம்மா

ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பரிவை சே.குமார் said...

எல்லா முத்துக்களுமே அருமை அம்மா...
அதிசய முத்து அதிசயிக்க வைத்தது.

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாரஸ்யமான தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் இதுவரை ஈஸ்வரவாசல் சென்றதில்லை என்ற தகவல் எனக்கு ஆச்சரியமளிக்கிறது சகோதரர் ஜம்புலிங்கம்! வருகைக்கும் ரசித்து பாராட்டியதற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

Thulasidharan V Thillaiakathu said...

முத்துகள் அனைத்தும் முத்துகள்.

ராஜஸ்தான் முத்துதான்...

தகவல் முத்து அறிந்ததுதான் என்றாலும் மீண்டும் நினைவுபடுத்துக் கொள்ள உதவியது.

மிக்க நன்றி அனைத்து முத்துகளுக்கும்..