Sunday, 11 October 2015

கோழி திக்கடி!!!

இந்த முறை சமையல் குறிப்பிற்கு ஒரு அசைவ உணவு!

பொதுவாக கோழி சேர்த்து செய்யும் சமையலில் புலவு, பிரியாணி வகைகள் அல்லது கோழி வறுவல், குழம்பு வகைகள் என்று சமைப்போம்.

கோழி திக்கடி என்ற இந்த குறிப்பில் அரிசி உருண்டைகள் சேர்த்து கோழித்துண்டுகளுடன் சமைக்கப்படுகிறது. இதற்கு பக்க உணவோ, அல்லது சாதமோ தேவையில்லை. இதுவே முழு உணவாகிறது! இனி கோழி திக்கடியை எவ்வாறு சமைப்பது என்று பார்க்கலாம்.

கோழி திக்கடி


தேவையானவை:
கோழித் துண்டுகள்- 750 கிராம்
•வறுத்த அரிசி மாவு- 1 டம்ளர்
•மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
•மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
•நறுக்கிய கொத்தமல்லி- 1 கப்
•நறுக்கிய புதினா- 1 கப்
•பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1+1/2 கப்
•மெல்லியதாக அரிந்த வெங்காயம்- அரை கப்
•பொடியாக நறுக்கிய தக்காளி- 1 கப்
•தேவையான உப்பு
•தேங்காய் விழுது- அரை கப்
•கெட்டியான தேங்காய்ப்பால்- 1 கப்
•முட்டை-1
•எண்ணெய்- 4 மேசைக்கரண்டி

•கீழ்க்கண்ட பொருள்களை அரைக்கவும்:

•ஏலக்காய்-1, பட்டை-1, கிராம்பு-1, சோம்பு-1 மேசைக்கரண்டி, தனியா-1 மேசைக்கரண்டி, மிளகாய் வற்றல்-10, சிறிய பூண்டிதழ்கள்-10, துருவிய இஞ்சி- 1 மேசைக்கரண்டி

செய்முறை:

•அரிசிமாவு வறுக்கப்பட்ட மாவாகவோ முன்னாலேயே ஆவியில் வேகவைக்கப்பட்ட மாவாக இருக்க வேண்டும். கொழுக்கட்டை மாவு அல்லது இடியாப்ப மாவு இதற்குச் சிறந்தது.
•மாவை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
•முட்டையை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
•ஒரு அகன்ற வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
•சின்ன வெங்காயம் 1 கப் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
•பின் அரைத்த மசாலாவை மஞ்சள் தூளுடன் சேர்த்து மெதுவான தீயில் வதக்கவும். பின் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து குழைய வதக்கவும்.
•3 தம்ளர்கள் நீர், உப்பு, கோழித்துண்டுகள் சேர்த்து வேக வைக்கவும்.
•கோழி பாதி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
•குழம்பு நன்கு கொதித்து வருகையில் அதிலிருந்து முக்கால் தம்ளர் குழம்பை எடுத்து ஆற வைக்கவும்.
•மீண்டும் 2 கப் நீர் குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும்.
•ஆறிய குழம்பு, முட்டை, மீதி சின்ன வெங்காயம், பாக்கியுள்ள மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் இவற்றை சரியான அளவு உப்புடன் மாவில் சேர்த்து நன்கு மிருதுவாகப் பிசையவும்.
•சிறிய உருண்டைகள் செய்து இலேசாக தட்டி குழம்புக் கலவையில் போடவும். உருண்டைகள் எல்லாம் வேகும்வரை 10 நிமிடங்கள் குழம்பைக் கொதிக்க விடவும். உருண்டைகள் வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றவும்.
•குழம்பு கொதித்து வருகையில் அடுப்பை அணைக்கவும். 

16 comments:

துரை செல்வராஜூ said...

புதிய செய்முறை.. எளிய குறிப்புகள்..

ஷார்ஜாவில் தங்களது - உணவகத்தின் பெயர் என்ன!..
எங்கிருக்கின்றது என அறிய விரும்புகின்றேன்..

வாழ்க நலம்..

Avargal Unmaigal said...

தக்கடி என்றுதான் அழைப்பார்கள். திக்கடி என்று அழைக்கமாட்டார்கள் எனக்கு பிடித்த உணவு.. அம்மாவின் மறைவுக்கு பின் இன்றுதான் ( 12 ஆண்டுகளுக்கு பின் ) அதை கண்ணால் கிடைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஹும்ம்ம்ம் பெரு மூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை....

ஸ்ரீராம். said...

செய்து பார்க்கிறேன் என்று நான் சொல்ல முடியாத ரெசிப்பி! கோழிக்கு பதில் காலிஃப்ளவர் அல்லது மீல் மேக்கர் போடலாமோ? முட்டை சேர்க்காமல் செய்யலாம்! ஒரு கற்பனைதான்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்குக் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் செல்வராஜ்!

ஷார்ஜாவில் 25 வருடங்களுக்கு மேலாக நாங்கள் நடத்தி வந்த எங்கள் உணவகத்தை, இரண்டு வருடங்களுக்கு முன் என் கணவர் மிகவும் உடல் நலம் குன்றி மீண்டு வந்த வேளையில் இனி மன அழுத்தம் வேண்டாம் என்று [ வளைகுடா நாடுகளில் வியாபாரம் செய்வது எப்போதுமே மிக மன அழுத்தம் உண்டாக்கும் ஒரு விஷயம்] இன்னொருவருக்கு விற்று விட்டோம். அங்கு எங்களுக்கு விசா இருப்பதாலும், எங்கள் மகன் இருப்பதாலும் காடாறு மாசம், நாடாறு மாசன் என்பது போல இங்கும் [தஞ்சை] அங்குமாக இருக்கிறோம். வருகிற 24ந்தேதிக்குப்பிறகு அங்கு தானிருப்போம். நீங்கள் ஷார்ஜா வருகிறீர்களா? வரும் விபரம் தெரிவித்தால் நானும் என் கணவரும் உங்களை வரவேற்க தயாராக இருப்போம்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் பகுதியில் தக்கடி என்று சொல்லுவார்கள் போலிருக்கிறது அவர்கள் உண்மைகள்! என் இஸ்லாமிய சினேகிதி திக்கடி என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்! எது எப்படியிருந்தால் என்ன, தஞ்சை வந்தீர்களென்றால் அல்லது வெளி நாடென்றால் ஷார்ஜா வந்தீர்களென்றால் நிச்சயம் என் வீட்டில் உங்களுக்கு நான் சமைத்துத் தருகிறேன்!

மனோ சாமிநாதன் said...

இந்தக் குறிப்பிற்கு நீங்கள் பின்னூட்டம் தரமாட்டீர்கள் என்று தான் நினைத்தேன் சகோதரர் ஸ்ரீராம்!! வந்து, அதுவும் சுவையாக பின்னூட்டமிட்டது பெரு மகிழ்ச்சி! உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் போட்டு செய்யலாம் கோழிக்கு பதிலாக! மீல்மேக்கர் ருசியை மாற்றி விடும்!

Nagendra Bharathi said...

அருமை

சென்னை பித்தன் said...

மன்னிக்கவும்! எஸ்கேப்!

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்..

தாங்கள் கூறுவது உண்மையே..

நீங்கள் கூறுவது போல- மிகவும் மன அழுத்தம் தான் இங்கே..

விடுமுறையில் - மருமகனையும் மகளையும் பேத்தியையும் காண்பதற்கு அபுதாபிக்கு வந்துள்ளேன்..

தாங்கள் கூறும் 24ல் மீண்டும் பயணத்திற்கு ஆயத்தமாகி விடுவேன்..

தங்களின் அன்பான தகவல் கண்டு மகிழ்ச்சி..
மீண்டும் ஒரு சுபவேளையில் சந்திக்க இறைவன் நல்லருள் புரிவானாக..

வாழ்க நலம்!..

KILLERGEE Devakottai said...


பதிவர் விழா பதிவு நான் நேற்றே நான் வெளியிட்டு விட்டேன்.

Thenammai Lakshmanan said...

ரொம்ப டேஸ்டா இருக்கே. செய்து பார்க்கிறேன் :)

Thulasidharan V Thillaiakathu said...

தாமதம்...எங்களில் துளசிக்கு இது ஓகே....குறித்துவிட்டாயிற்று

ஆனால் கீதாவிற்கு ஏதேனும் சப்ஸ்டிடியூட் ஃபொர் கோழி...முட்டை...அதனால் காலிஃபளவர், உருளை போட்டுச் செய்யலாம் அப்படித்தான் அசைவ குறிப்புகளைச் செய்வதுண்டு....கிட்டத்தட்ட இதே முறைதான்...இது திருநெல்வேலிப்பக்கத்தில் செய்வதுண்டு என்ற நினைவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் அன்பு நன்றி நாகேந்திர பாரதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் சென்னை பித்தன்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் அன்பு நன்றி துளசிதரன்!