Monday 18 May 2015

அதிகாரம் அல்ல, அன்பு....!!!

அதிகாரம் அல்ல, அன்பு...
.
இது திரு. சோம.வள்ளியப்பன் எழுதிய புத்தகம். இது ஒரு சுய முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்கள் அடங்கியது என்று பொதுவாகச் சொல்லலாமே தவிர, உள்ளே புகுந்தால் அனுபவங்களும் அனுபவங்களூடே கிடைத்த விழிப்புணர்வும், சிந்தனைக்களஞ்சியங்களும் அறிஞர்கள் சொல்லி வைத்த அற்புதமான உண்மைகளும் ஒரு பொக்கிஷக்குவியலாக நம்மை பிரமிக்க வைக்கிறது! 



முதல் கட்டுரை சபை நாகரீகம் பற்றியது. பொதுவாகவே மேடைப்பேச்சுகள் எல்லாமே சுவாரஸ்யமாக அமைவதில்லை. எங்கள் குடும்ப நண்பர் ஒருத்தர், மேடையில் அடிக்கடி பேசுவார். கணீரென்ற குரலில் அவர் பேச ஆரம்பித்தாலே ஆயிரம் பேர் கூடியிருந்தாலும் அப்படியே சப்தங்கள் அடங்கிப்போய் அரங்கமே நிசப்தத்தில் அமிழும். அருவி போல தமிழ் கொட்டும் போது கூட்டம் அப்படியே அமர்ந்திருக்கும். ஒரு சிலரால் மட்டுமே இது போல கூட்டத்தினரை தன் வசமாக்கத்தெரிகிறது.

அதை விட்டு, கூட்டத்திற்கு சம்பந்தமில்லாதவற்றைப்பேசுவது, தனக்குக்கொடுத்த நேரத்தைப்புறக்கணித்து, யார் ரசிக்கிறார்கள், யார் ரசிக்கவில்லை என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது, சற்றும் இங்கிதமே இல்லாமல் சபையினரை ஒரு வழி பண்ணும் மேடைப்பேச்சாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களைப்பற்றித்தான் திரு.வள்ளியப்பன் ' சபை அறிந்து பேசு', சமயம் அறிந்து பேசு, பேசாதிருந்தும் பழகு என்கிறார். எத்தனை அழகான, ஆழமான பொருள் கொண்ட வரிகள்!

இப்படியே கடைசி பக்கம் வரை நான் ரசித்த கருத்துக்கள் இங்கே!

 உண்மையான பெரிய மனிதர்களுக்கு அடுத்தவர்கள் தன்னை அங்கீகரிகக் வேன்டுமென்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை. எல்லா இடங்களிலும் எதையும் அவர்கள் மனம் அமைதியாக ஏற்றுக்கொள்கிறது. அவர்கள் மனதளவில் உண்மையான பெரிய மனிதராகவே வாழ்கிறார்கள்.

சிலர் குளித்து உடை உடுத்தும்போதே ' நான்' என்ற கவசத்தை அணிந்தே தான் வெளியே வருகிறார்கள். இந்தக் கவசத்தை அவர்கள் கழற்றுவதேயில்லை. அதைத்தான் தன் பலம் என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். மிகப்பெரிய அறிவாளிகள் அப்படியில்லை. அவர்கள் யாரையும் மட்டம் தட்டுவதோ, தாங்கள் மேதைகள் என்று பறை சாற்றுவதோ கிடையாது. நிறைகுடங்களுக்கு எப்போதுமே தன்னைப்பற்றி எந்த சந்தேகமும் இருப்பதில்லை.

அமைதியும் மெளனமும் சில சமயங்களில் மிகப்பெரிய பலம். பேச்சைக் குறித்து கேட்பதையும் கவனிப்பதையும் அதிகப்ப‌டுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்.




வாழ்க்கையில் சிலவற்றைப் பார்க்கத் தவறுகிறோம். சில சமயங்களில் வண்ணக்கண்ணாடிகள் மாட்டிக்கொன்டு அவற்றின் வழியாகவே வெளியுலகைப் பார்க்கிறோம். சிலரைப்பற்றி நமக்கு பல வருடங்களாக தவறான கணிப்பு இருக்கலாம், துரோகம் செய்பவராக, நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கெடுதல் செய்பவராக! அவர்களை ஒரு மாற்றுப் பார்வை பார்த்தாலென்ன? ஒரு மறு பரிசீலனை செய்து பார்த்தாலென்ன? இதனால் கூட மன அழுத்தமோ, சில பிரச்சினைகளோ குறையலாம். மனம் இலகுவாகலாம்.

மற்றவர்கள் நம்மை சரியாகப் புரிந்து கொள்ளாமல் போவதற்கு நாம் தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறோம். நாம் நினைப்பதில் எது முக்கியம், எது முக்கியமில்லாதது என்பதை நமக்குச் சுற்றியுள்ளவர்களும் புரியுமாறு நாம் எப்போதுமே உணர்த்த வேன்டும். பிடிக்கிறதா, இல்லையா? அங்கீகரிக்கிறோமா, இல்லையா என்பதை வாய்மொழியால் மட்டுமல்ல, உடல் மொழியாலும் உரையாடல்கள் மூலமாகவும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ளாமல் செய்யும் பாராட்டோ, விமர்சனமோ ஏற்புடையது அல்ல. FEED BACK ஒரு பொறுப்புள்ள செயல். அதை சரியாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. சொல்லும்போது நல்லனவற்றுடன் தொடங்க வேண்டும். முதலில் நல்ல விஷயங்களை அழகாக, விரிவாகச் சொல்ல, பின்னால் சொல்லக்கூடிய குறைகளும் ச‌ரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

அன்பும் நம்பிக்கையும் ஒரு வழிச்செயல்பாடு அல்ல. கொடுத்தால்தான் திரும்பக் கிடைக்கும். கொடுப்பதை விட கூடுதலாகவே கிடைக்கும்.

பலவற்றையும் அவசரம் அவசரமாகச் செய்வதா? அல்லது ஒன்றிரண்டை மட்டும் நிதானமாகச் செய்வதா? மனதில் வாங்காமல் மேலோட்டமாகச் செய்வதா? அல்லது உள்ளார்ந்து உணர்ந்து செய்வதா? செய்வதை ர‌சிப்பதா? அல்லது எதையும் வேகமாக செய்து முடிப்பதா?
எது வாழ்க்கை?

வாழ்க்கையில் கற்க வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உடன் சக மனிதர்களுடன் வாழ வேன்டும். அவர்கள் வாழ உதவவும் வேண்டும். நம் வெற்றியில் நியாயம் இருக்க வேண்டும். மற்றவர்களின் மதிப்பையும் அன்பையும் பாராட்டையும் வேண்டாதவர்கள் இல்லை. அது சும்மா வருமா? அந்த விதம் நடந்து கொள்ள‌ வேன்டும்.

எல்லோரும் மனிதர்கள். ஆசாபாசம் உள்ளவர்கள். அவர்களை அவர்களாகவே பார்ப்பவர்களிடம், அவர்களைப் புரிந்து கொள்பவர்களிடம் எவருக்கும் அன்பு பிறக்கிறது. தனது ஆசையை நிறைவேற்ற முயல்பவர்களிடம் பாசம் வருகிறது. தன் தரப்பு நியாயங்களை உணருபவர்களுக்காக எதையும் செய்யலாம் என்ற முனைப்பு வருகிறது. எல்லா உறவுகளிலும் இந்த எதிர்பார்ப்பு, பிரதி அன்யோன்யம் உண்டு. மனைவி கணவனையும்  கணவன் மனைவியையும் மாமியார் மருமகளையும் மாணவன் ஆசிரியரையும் முழுமையாக புரிந்து நடக்கும்போது அங்கே முழு நம்பிக்கையும் அன்பும் வளர்கிறது. அதிகாரம் அல்ல, அன்பு. விரட்டுதல் அல்ல, புரிந்து கொள்ளுதல். இவை ஒத்துழைப்பையும் அதன் மூலம் வெற்றியையும் நிச்சயம் தரும்.

 

26 comments:

KILLERGEE Devakottai said...


தெளிந்த நீரோடைபோல் அழகான விமர்சனம் கண்டிப்பாக நூல் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலிடுகிறது ஆசிரியருக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.

கில்லர்ஜி

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக அழகான கட்டுரை இது.

திரு. சோம.வள்ளியப்பன் அவர்களை நான் நேரில் சந்தித்துள்ளேன்.

அவர் வெளியிட்டுள்ள நூலின் சாராம்சத்தை மிக அருமையாக தாங்கள், தங்களுக்கே உரிய பாணியில் எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

தி.தமிழ் இளங்கோ said...

சோமவள்ளியப்பன் எழுதிய ’அதிகாரம் அல்ல .... அன்பு’ – நூலுக்கான விமர்சனம் சுருக்கமாக இருந்தாலும், நூலை வாங்கி படிக்கும் ஆர்வத்தைத் தருகிறது.இவர் எழுதிய ’தொட்டதெல்லாம் பொன்னாகும்’ மற்றும் ‘பங்குச்சந்தை ஓர் அறிமுகம்’ – ஆகிய நூல்களை படித்து இருக்கிறேன். எளிமையான இயல்பான எழுத்து நடையில் எழுதுபவர்.

Yarlpavanan said...

சிறப்பாக அலசி உள்ளீர்கள்
சிறந்த பதிவு
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனைகள். புத்தகத்தில் எடுத்துத் தந்த துளிகள்..... தேன் துளிகள்.

புத்தகம் வாசிக்கத் தூண்டும் அறிமுகம். நன்றி.

ஸ்ரீராம். said...

மிக உபயோகமான புத்தகம் என்று தெரிகிறது.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

இந்நூலைப் படிக்கவில்லை. படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எழுதிய ஆசிரியருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பல சிறப்பான உண்மை கருத்துகள்....

கொடுப்பதை விட கூடுதலாகவே கிடைக்கும் - 100% உண்மை...

Iniya said...

புரிந்துணர்தல் தான் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று உண்மை உண்மை அத்தனையும்.அனைத்தும் முத்தான கருத்துகள்.

சாரதா சமையல் said...

இந்த நூலை வெளியிட்ட ஆசிரியருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா. உங்கள் தளத்தில் இன்று இணைந்து விட்டேன். இனி தொடர்கிறேன்.

Kasthuri Rengan said...

அருமையான நூல் அறிமுகம் வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கத் தூண்டும் வார்த்தைகள்
நன்றி சகோதரியாரே
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

சீராளன்.வீ said...

அதிகாரம் இல்லை இது அன்பு ..தங்கள் பதிவும் அதிகாரம் இன்றிய அன்புதான் நன்றி
வாழ்க வளமுடன் !

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் தெளிவான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு இதயம் கனிந்த நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி இனியா!

மனோ சாமிநாதன் said...

தள‌த்தில் இணைந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்குமன்பு நன்றி மது!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சீராளன்!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான நூல்....சிறப்பான சிந்தனைத் துளிகள். வள்ளுவரின் அவையடக்கத்தில் உள்ளது போல .நல்ல பகிர்வு சகோதரி! இதன் சில பக்கங்கள் வாசித்துள்ளோம் இப்போது முழுவதும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகின்றது...