Tuesday 21 April 2015

என்றும் எப்போதும்!!

நேரமின்மைக்கு ஆயிரம் காரணங்கள் இருந்த போதிலும் கிடைத்த 3 மணி நேர அவகாசத்தில் நான் பார்க்க விரும்பிய ஒரு திரைப்படத்தை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். முக்கிய காரணம் தொண்ணூற்றுகளில் நான் மிகவும் ரசித்த நடிகை மஞ்சு வாரியர்  14 வருடங்கள் இடைவெளிக்குப்பின்னர் கதாநாயகியாக இதில் நடித்திருந்தது தான்!




இது ஒரு மலையாள திரைப்படம். தலைப்பு 'என்னும் எப்போழும்'
[ என்றும் எப்போதும்] ஆங்கிலத்தில் அதன் கீழ்  ' ANY TIME, ALL THE TIME! 'என்று போடுகிறார்கள்.

தெளிவான திரைக்கதை. கொடூரமான மன உணர்வுகளுடைய கணவனிடம் 2 மாதங்களே வாழ்ந்து, அதற்கு மேல் முடியாமல் விவாகரத்தும் வாங்கி விடுகிறாள் கதாநாயகி தீபா. அந்த 2 மாத வாழ்விற்கு அடையாளமாகப்பிறந்த ஏழு வயது மகளுக்காகவே வாழ்கிறாள். அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் குணமுள்ள அவள் வழக்கறிஞராக வாழ்க்கையைத்தொடர்ந்தாலும், இன்னும் வலிக்கும் மன உணர்வுகளுக்கு வடிகாலாக தனக்கு மிகவும் பிடித்தமான நாட்டியப்பயிற்சியையும் கூடவே தொடர்கிறாள்!

காதாநாயகனுக்கு தன் அம்மாவைப்போன்ற ஒரு பெண்ணைத்தேடுவதிலேயே திருமணம் செய்து கொள்கிற வயதைத் தாண்டி போயும் கூட அதைப்பற்றிய அக்கறையில்லாமல் இருக்கிறான். தினமும் நெற்றியில் சந்தனம் வைப்பது கூட அவன் தன் அம்மாவின் நினைவாகத்தான் வைக்கிறான். ஒரு முறை சொல்வான், ' என் அம்மா என் கோபத்தைக்குறைக்கத்தான் அந்த சந்தனத்தை நெற்றியில் இடுவார்கள். சந்தனத்தின் குளிர்ச்சி கோபத்தைக்குறைக்கிறதாம். அம்மா இறந்த பிறகு சந்தனத்தின் குளிர்ச்சியும் குறைந்து விட்டது ' என்று! இளம் வயதில் குத்துச்சண்டை வீரனாக, இன்னுமே இசையை நேசிப்பவனாக இருந்த போதிலும் வாழ்க்கையில் சுவாரசியமற்று, மற்றவர்கள் பார்வையில் ஒரு ஒழுங்கற்றவனாக, சோம்பேறியாக வாழும் அவன் ஒரு மகளிர் பத்திரிகையில் ரிப்போர்ட்டராக பணி புரிகிறான்.



இவன் அலுவலகத்தில் இவனின் குணங்களுக்கு அனைவரும் ஒத்துப்போகிறார்கள், சீஃப் எடிட்டரும் கூட! ஆனால் வெளிநாட்டில் படித்து தலமைப்பொறுப்பையேற்பதற்காக வரும் அவரின் பெண்ணோ, கதாநாயகனின் ஒழுங்கீனத்தையும் குறைகளையும் ஏற்க மறுக்கிறாள். இவனை எப்படியாவது அலுவலகத்திலிருந்து வெளியேற்ற விரும்பி, சமீபத்தில் ஒழுங்கற்று கிடந்த சாலைக்காக மறியலில் ஈடுபட்ட தீபாவை பேட்டி எடுத்து வருமாறு அனுப்புகிறாள்.

அவனின் ஒழுங்கீனமான அணுகுமுறையால்  தீபா அவனுக்கு பேட்டி கொடுக்க நிர்தாட்சண்யமாக மறுத்து விடுகிறாள். அவன் நெற்றியில் தீற்றியிருக்கும் சந்தனக்கீற்று கூட 'சகிக்கவில்லை' என்று அவளைச் சொல்ல வைக்கிறது!

தீபாவின் மறுப்பு அவனுக்கு எரிச்சலை கொடுத்தாலும் தொடர்ந்து அவளை கவனித்து வந்ததில் அவளின் நேர்மை, கருணை, தைரியம் இவற்றால் அவன் ஈர்க்கப்படுகிறான். தீபாவின் குழந்தைக்கு அவன் கண்ணெதிரே விபத்து நடக்கும்போது பதறியடித்து அவளை மருத்துவமனையில் சேர்த்து கவனிக்கிறான். விபத்தில்லாமல் குழந்தையைப் பாதுகாக்கத் தவறியதாகச்சொல்லி தீபாவின் கணவன் தன் வழக்கறிஞரின் மூலம் குழந்தையை அதிரடியாகத் தூக்கிச் செல்லும்போது செய்வதறியாது தவிக்கும் தீபாவின் கண்ணீர் அவனைக் கலங்கடிக்கிறது.  தனியாய் தளர்வுடன் வீட்டுக்குத் திரும்பும் தீபாவிற்கு இரவு முழுவதும் வெளியிலேயே காரில் சாய்ந்தவாறு காவல் காக்கிறான் அவன். தீபாவின் குழந்தைக்கு நடந்த விபத்து தற்செயலானது அல்ல என்று கண்டு பிடிக்கும் அவன், விபத்து உண்டாக்கிய ஓட்டுனரைகண்டுபிடித்து, விபத்தை உண்டாக்கியது தீபாவின் கணவனின் வக்கீல்தான் என்ற உண்மையையும் அதிரடியாய் வெளிக்கொண்டு வந்து, கோர்ட்டில் நீதிபதி இனி குழந்தை தீபாவிடம் தான் இருக்க வேன்டும் என்ற தீர்ப்பிற்கும் தீபாவின் இழந்த புன்னகையை மீட்டெடுத்ததற்கும் காரணமாகிறான் அவன்!



தீபாவையும் அவளின் மகளையும் அவர்கள் வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்லும்போது, தீபா அவனிடம் பன்னகைத்தவாறே கேட்கிறாள்' இதெல்லாம் எதற்காக எனக்குச் செய்தீர்கள்?' என்று! அவன் ' தெரியவில்லை. உங்களின் நேர்மை, தைரியம் காரணமாக இருக்க்லாம். குழந்தையிடம் நீங்கள் காட்டிய பாசம் கூட காரணமாக இருக்கலாம். என் அம்மாவின் குணங்கள் உங்களிடம் நிறைந்திருப்பதைப்பார்த்தேன். அதுவும் காரணமாக இருக்கலாம்.  தெரியவில்லை எனக்கு! உங்களிடம் பேட்டி எடுக்கத்தான் உங்களை சுற்று சுற்றி வந்தேன். ஆனால் இப்போது அதெல்லாம் எனக்கு நினைவிலேயே இல்லை' என்கிறான் அவன். அவள் சிரித்தவாறே ' ' நாளை நீங்கள் பேட்டி எடுக்க வரலாம்' என்கிறாள். மறு நாள் முழுவதும் சினேகமும் புரிதலும் சிரிப்புமாக அவர்களிடையே பேட்டி தொடர்கிறது. இரவு அவனை தொலைபேசியில் அழைத்துக்கேட்கிறாள் அவள்.

' நீங்கள் ஏன் இப்பொதெல்லாம் நெற்றியில் சந்தனம் இடுவதில்லை?'
அவன் சொல்கிறான் ' அது சிலருக்குப் பிடிக்கவில்லை'!
அவள் புன்னகைத்தாவாறே சொல்கிறாள். ' இல்லை, எனக்குப்பிடித்திருக்கிறது! '
திரைப்படம் இங்கே முடிவடைகிறது!

விரல்கள் கூட தொடாமல் படத்தின் கடைசி வரியில் தான்  அழகாய்க் காதல் பிறக்கிறது! மலையாளத் திரையுலக சூப்பர் ஸ்டார்களான மஞ்சு வரியருக்கும் மோகன்லாலுக்கும் இந்த கதாபாத்திரங்கள் அல்வா சப்பிடுவது போல! இரண்டு பேரும் அனாயசமாக நடித்திருக்கிறார்கள்!  மிகவும் ரசித்துப்பார்த்தேன் இந்தப்படத்தை! முடிந்தால் நீங்களும் பார்த்து ரசியுங்கள்!

இசைப்பிரியர்கள் கேட்டு ரசிப்பத‌ற்கு  இந்தத் திரைப்படத்திலிருந்து
இங்கே ஒரு பாடல்!



 

23 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்த விமர்சனமே அந்த மளையாளத் திரைப்படக் கதையின் சிறப்பம்சங்களை மிக அழகாகத் தெளிவாக, மென்மையாக, மேன்மையாக விளங்க வைத்து விட்டது.

பகிர்வுக்கு நன்றிகள்.

Geetha said...

அவசியம் பார்க்கின்றேன்....உங்கள் விமர்சனம் அருமை

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல விமர்சனம். நேரம் இருக்கும்போது YOUTUBE வழியே இந்த படத்தை பார்க்கிறேன்.

priyasaki said...

நானும் மஞ்சுவாரியார் நடித்த how old are you. படம் பார்த்தேன்.மிகவும் நல்ல படம்.
படம் பற்றிய விமர்சனம் படம் பார்க்க ஆவலை ஏற்படுத்துகிறது. நல்ல விமர்சனம் அக்கா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
விமர்சனத்தை படித்த போது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

நல்ல படம் என்று தெரிகிறது. இவரின் மறு ப்ரவேசப் படம்தானே 'ஹௌ ஓல்ட் ஆர் யூ'? சில மலையாளப் படங்கள் -சால்ட் அன்ட் பேப்பர், பெங்களூர் டேஸ், திரிஷ்யம் போன்ற இன்னும் சில படங்கள் கணினியில் இருக்கின்றன. நேரம் ஒதுக்கிப் பார்க்க வேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அற்புதமான தங்களின் விமர்சனம் படத்தினைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது சகோதரியாரே
அவசியம்பார்க்கிறேன்
நன்றி

நிலாமகள் said...

அம்மா இறந்த பிறகு சந்தனத்தின் குளிர்ச்சியும் குறைந்து விட்டது '//

விரல்கள் கூட தொடாமல் படத்தின் கடைசி வரியில் தான் அழகாய்க் காதல் பிறக்கிறது! //

படம் பார்க்கத் தூண்டும் வரிகள்! தமிழில் ஜோதிகா நடிக்க இப்படம் தயாராவதாகக் கேள்வி.

அழகிய விமர்சனம்!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனையான படத்தை பார்க்க வேண்டும்...

அழகிய விமர்சனத்திற்கு நன்றி...

Thulasidharan V Thillaiakathu said...

எங்களுக்கு மிகவும் பிடித்த மஞ்சு அண்ட் லாலேட்டன்!! அதன் டைரக்க்டர் அருமையான டைரக்க்டர்.....எனவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்றிருக்கின்றோம்....நீங்கல் கொடுத்த விமர்சனமும் நன்று......

பகிர்வுக்கு மிக்க நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

ஹௌ ஓல்ட் ஆர் யூ தான் மஞ்சு இத்தனை வருடங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட அவரது கதை போலவே....தோன்றிய படம் மிகவும் அருமையாகச் செய்திருப்பார் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்....

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.

யூவில் இருக்கிறதா எனப் பார்க்கிறேன். இருந்தால் நிச்சயம் பார்க்க வேண்டும்....

மனோ சாமிநாதன் said...

என் விமர்சனத்திற்கு உங்களின் விமர்ச்னம் மிக அழகாக இருக்கிறது சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்குக் பாராட்டிற்கும் அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

அவசியம் பாருங்கள் சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி! நான் இன்னும் ' HOW OLD ARE YOU? 'பார்க்கவில்லை. இன்னும் இங்கு சிடியில் வரவில்லை. இந்தப்படம் இங்கு எல்லா அரங்கங்களிலும் வெளி வந்ததால் உடனேயே பார்க்க முடிந்தது!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அனு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

மஞ்சு வாரியரின் மறு பிரவேசம் தான் ' HOW OLD ARE YOU '? மேலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்கள் அனைத்துமே மிக நல்ல படங்கள்! விரைவில் அவற்றைப் பாருங்கள் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் பாருங்கள் ச‌கோதரர் ஜெயக்குமார்! படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் நிலா! ரொம்ப நாட்கள் கழித்து இங்கே வந்ததற்கும் கருத்துரை தந்ததற்கும் மிகவும் மகிழ்ச்சி!

தமிழில் ஜோதிகா நடிப்பது மஞ்சு வாரியரின் மறுப்பிரவேசப்படமான HOW OLD ARE YOU?என்பதாகும்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! இயக்குனரும் [சத்யன் அந்திக்காடு] பிரபலம் என்பதால் படமும் மோகன் லால், மஞ்சு வாரியர் தவிர்த்து நிறைய விமர்சனங்களுக்காளாகியிருக்கிறது! HOW OLD ARE யோஊ? இன்னும் பார்க்கவில்லை. இன்னும் இங்கு சிடியில் வரவில்லை. இந்தப்படம் இங்கு எல்லா அரங்கங்களிலும் வெளி வந்ததால் உடனேயே பார்க்க முடிந்தது!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்!