Tuesday 6 January 2015

ராஜராஜனின் 'தாராசுரம்'!

சில தினங்களுக்கு முன் தாராசுரம் சென்றிருந்தேன். ஏழெட்டு வருடங்களுக்கு முன் சினேகிதியருடன் பார்த்த அனுபவம் இருக்கின்றது.  சோழ மன்னர் இரண்டாம் ராஜராஜன் கட்டிய இந்தக்கோவிலின் அழகைக் காண இரண்டு கண்கள் போதாது. நாங்கள் சென்ற முறை சென்ற போது கோவில் தனித்து, யாருடைய வருகையுமற்று நின்றது. இப்போதோ சுற்றிலும் புல்வெளி வளர்க்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, வாகன‌ங்கள் அணிவகுப்பும் மக்கள் திரளுமாய் என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் கூடவே இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. ஒவ்வொருத்தரும் தனித்தனியே சொல்லிச்சொல்லி ரசித்து, ஒவ்வொரு சிற்பத்தையும் வியந்து பார்த்தார்கள். இப்போது நாமும் தாராசுரத்திற்குச் செல்லலாம்.


தஞ்சையிலிருந்து கும்பகோணத்திற்குச் செல்லும்போது, கும்பகோணத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவு இருக்கும்போது தாராசுரம் வருகிறது.
கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். இக்கோவிலும், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலும், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலும் அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.
இரண்டாம் இராசராசன் எடுப்பித்த காரணத்தால் இராசராசேச்சுரம் என்றும் தாரன் என்னும் அரக்கன் வழிபட்டதால் தாராசுரம் என்றும் ஐராவதம் என்னும் இந்திரனுடைய வெள்ளை யானை வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலமாதலால் இத்தலம் ஐராவதேச்சுரம் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது.


ஒரு சமயம் யமன் முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தில் இறங்கி நீராடினான். உடன் வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டான் என்பதும் ஒரு புராண வரலாறு.


இந்திய சிற்பக் கலைக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டாகத் தாராசுரம் திகழ்கிறது
 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.


இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.


வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலது புறம் அமைந்துள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.



நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து ஒரு கல்லை உருட்டி விட்டால் அது ஒவ்வொரு படியிலும் உருளும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. தற்போது சில படிகள் சிதிலமடந்திருப்பதால் படிகளைச் சுற்றி இரும்புக்கதவுகளால் மூடி வைத்திருக்கிறார்கள்.


ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.



குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.



கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவரையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் ஆகியவை சோழர்களின் சைவப்பற்றுடையவன் இரண்டாம் இராஜராஜன் என்பதைக் காட்டும்.

கூர்ந்து பார்த்தால் ஒரு முகத்திற்கு மூன்று உடல் இருப்பது தெரியும்!!
கோயிலின் முன் ரத மண்டபத் தூண்கள் ஒவ்வொன்றும் தனித்தனிக் கதைச் சொல்லும் கருவூலமாகத் தோன்றுகின்றன. ராமாயண, மகாபாரத கதைகள், ரதி மன்மதன் கதைகள், பரத நாட்டிய கர்ணங்கள், சிவபுராணக் கதைகள் என்று எண்ணிலடங்கா கதைகளை சொல்கின்றன சிற்பங்கள்.
சிரித்த முகத்துடன் அன்னம் பாலிக்கும் அற்புத அன்னபூரணி, கண்ணப்பர், கோர பாவத்துடன் தோன்றும் அகோர வீரபத்திரர், பறவை மிருகம் மனித உடலுடன் சரபேஷ்வரர், தென் புறத்தில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்த கோலத்துடன் பரந்து விரிந்த முக அமைதியுடனும் கிரேக்க சுருள் முடியுடன் கூடிய தெட்சினாமூர்த்தி சிற்பம் போன்ற பெரும் பெரும் சிற்பங்களின் பேரழ்கை இங்கு காணலாம்.


 ஒவ்வொரு தூணின் நான்கு பட்டைகளிலும் சிற்றோவியங்கள் போல் ஆயிரக்கணக்கான புடைப்புச் சிற்பங்கள். பார்த்துப் பார்த்து பிரமிக்கவும் பரவசப்படவும் வைக்கும் சிறு சிறு பிரமாண்டங்கள்! ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒரு அம்சம் அரிதான அற்புதமாகத் திகழும். ஆனால் அரிதும் அழகும் நிரம்பிய சிற்பங்களை இந்த ஒரே ஆலயத்திற்குள் கொட்டி வைத்திருக்கிறார்கள் சிற்பிகள்.
தற்போது தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமான இக்கோயிலைத் தொல்பொருள் துறையினர் அழகு வாய்ந்த இதன் பழமையைப் பாதுகாத்து வருகின்றனர்.



மூன்றாம் குலோத்துங்கச் சோழனும் இந்தக் கோயிலில் புதிதாக பல திருப்பணிகளைச் செய்திருக்கிறான். ஆரம்பத்தில் பல கோபுரங்களுடன் கூடிய பிரகாரங்கள் இருந்ததாக தெரிகிறது. ஆனால் இப்பொழுது கோபுரத்துடன் கூடிய ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே இருக்கிறது.



இந்தக் கோயிலுக்கும் இதற்கு முற்பட்ட தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கும் பல பொதுவான ஒற்றுமைகள் உண்டு. ஆனால், இந்தக் கோயில், ஒவ்வொரு பகுதியிலும் கற்சிற்ப வேலையில் உருவங்கள் அமைப்பதிலும் அளவு கடந்த செல்வமும் நேரமும் செலவிடப்பட்டு, கலைஞர்களின் திறமை மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.


 

28 comments:

ப.கந்தசாமி said...

கலையை ரசித்தேன்.

unmaiyanavan said...

அருமையான கோயில் வர்ணனை.
படங்களும் அதற்கேற்ற விளக்கங்களும், அந்த கோயிலுக்கு ஒரு முறை செல்ல வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஸ்ரீராம். said...

சிற்பக்கலைக்குச் சிறப்பு வாய்ந்த இடம். நானும் சென்று ரசித்து, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தேன்.

Asiya Omar said...

அக்கா, படங்கள் மிக அழகு.மிக அருமையான விளக்கம்.நாங்கள் சுற்றுலா சென்றிருந்த சமயம் என் கணவரும் ஒன்று விடாமல் படம்,வீடியோ எடுத்தது நினைவு வருகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் அருமையான விளக்கம்...

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான படங்களுடன் விளக்கம் அருமை! பகிர்வுக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வர்ணனையுடன் நல்ல தகவல்கள்! கோயிலின் சிற்ப அழகு புகைப்படத்திலேயே மனதைக் கொள்ளைக் கொள்ளுகின்றது. தாராசுரம் செல்லும் ஆவலைத் தூண்டியுள்ளது. பார்ப்போம்....

கரந்தை ஜெயக்குமார் said...

படங்களுடன் கூடிய அருமையான பதிவு சகோதரியாரே
தஞ்சையிலேயே இருந்தும், தாராசுரத்தற்குப் பல முறை சென்று வந்திருந்தும், இக் கோயிலுக்கு இது வரை செல்லாதது வருத்தமளிக்கின்றது சகோதரியாரே
அவசியம் விரைவில் செல்ல வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது
நன்றி சகோதரியாரே

துளசி கோபால் said...

அருமை.

நானும் இந்தப்பயணத்தில் போய் வந்தேன். துளசிதளத்தில் இடுகை கட்டாயம் வரும். அதற்கு இன்னும் எத்தனை மாதங்களோ?

'பரிவை' சே.குமார் said...

அழகான படங்கள்...
அருமையான விளக்கம்...
நல்ல பகிர்வு அம்மா.

KILLERGEE Devakottai said...


படங்களும் விளக்கவுரைகளும் அருமை நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் அன்பு நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சொக்கன் சுப்ரமண்யம்!

மனோ சாமிநாதன் said...

ரொம்பநாட்கள் கழித்து வருகை தந்ததற்கும் கருத்துரை சொன்னதற்கும் அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி துளசிதரன்! அவசியம் விரைவில் தாராசுரம் சென்று ரசியுங்கள்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! நீங்கள் இதுவரை தாராசுரம் கோவில் செல்லாதது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! விரைவில் சென்று ரசியுங்கள்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி துளசி! சீக்கிரம் நீங்களும் தாராசுரம் பற்றி பதிவிடுங்கள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

viyasan said...

அழகான படங்கள். நான் தாரசுரத்துக்குப் போயிருந்தபோது, அங்குள்ள அர்த்தநாரீசுவரர் சிலையின் அழகைக் கேள்விப்பட்டு, பேர்லின். ஜெர்மனியிலிருந்து ஒரு ஓவியம் கற்கும் மாணவி அங்கு வந்திருந்தார். அவருக்கும், அவரது நண்பனுக்கும் எங்களுடைய காரில் கும்பகோணம் வரை இடம் கொடுத்தோம். தாரசுரத்தின் சிலைகள் உலகப்புகழ் பெற்றவை, அதிலும் அங்குள்ள அர்த்தநாரீசுவரர் சிலை பற்றய தகவல்கள் ஓவியம், சிற்பம் கற்கும் மேலைநாட்டு மாணவர்களின் பாடப் புத்தகங்களிலேயே உண்டாம்.

இராச ராச சோழனை, ராஜேந்திர சோழனை, குந்தவி நாச்சியாரை எல்லாம் இந்தியர் என்றழைப்பதை விட தமிழர்கள் என்று கூறுவது தான் சரியானது, ஏனென்றால் இந்தியன் என்ற சொல்லைக் கூட அவர்களின் வாழ்நாளில் கேட்டிருக்க மாட்டார்கள் என்று அந்த ஜேர்மன் பெண்ணிடமும், அவரின் நண்பனிடமும் சொல்லி வைக்கவும் நான் மறக்கவில்லை. :-)

Asiya Omar said...

நலம் தானே அக்கா !முத்துச்சிதறலில் சமையற்குறிப்பு ஏதும் இப்போதைக்கு கொடுக்கவில்லையா? நானும் ஏதாவது புதிதாக கொடுத்திருக்கிறீர்களா என்று தேடிப் பார்த்தேன்.:) !

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா.

yathavan64@gmail.com said...

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

Chitra Raveendran said...

தங்களுடைய தாராசுரம் கோயிலின் பதிவை படித்து மகிழ்ந்தேன். நானும் ஜனவரி 11 ம் தேதி தாராசுரம் சென்றிருந்தேன். இரண்டாவது முறையாக இந்த கோயிலுக்கு சென்றேன். எத்தனை முறை பார்த்தாலும் நமது முன்னோர்களின் சிற்பக்கலை வியக்கவே வைக்கிறது. நான் பார்த்து ரசித்ததை தங்களுடைய பதிவு மறுமுறை என் கண் முன்னே நிறுத்தியதற்கு நன்றி!! பாராட்டுகள்!!

arun v said...

அறிய தகவல்கள், பகிர்வுக்கு நன்றி!
இதுவரை இத்திருத்தலத்தை பார்க்கும் வாய்ப்பமையவில்லை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எனது பிறந்த மண்ணான கும்பகோணம் செல்லும்போதெல்லாம் நான் போகுமிடங்கள் தாராசுரம் மற்றும் பட்டீஸ்வரம். இந்த கோயில்களுக்கு எத்தனை முறை சென்றுள்ளேன் என்று கூறமுடியாது. பள்ளி நாள்கள் முதல் நானும், நண்பர்களும் அடைக்கலம் ஆகும் கோயில்களில் தாராசுரம் கோயிலும் ஒன்று. தாங்கள் அக்கோயிலுக்குச் சென்று ரசனையுடன் பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகள்.