Tuesday 30 September 2014

முத்துக்குவியல்-31!!

மருத்துவ முத்து:

என் சினேகிதி ஒருவர் என் வீட்டில் தங்கும்போதெல்லாம் வெந்நீரை அடிக்கடி எடுத்து சுடச்சுட, ரசித்து ரசித்து குடிப்பார்.  நான் அதைப்பார்த்து சிரிக்கும்போதெல்லாம் வெந்நீரின் மகிமைகளை எடுத்துச் சொல்வார். அவர் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதானென்பது எனக்கும் தெரியும். என்றாலும் இப்படி ரசித்து ரசித்து குடிப்பது அபூர்வம் என்று நினைத்துக்கொள்வேன். இதோ, உங்களுக்கும் வெந்நீரின் நற்பயன்களை எழுதி விட்டேன்!!
வெந்நீரின் நன்மைகள்:
எண்ணெய் பலகாரங்கள், இனிப்பு சாப்பிட்டால் சில சமயங்களில் நெஞ்சு கரிக்கும். அப்போது ஒரு தம்ளர் வெந்நீரை மெதுவாக குடித்தால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய் விடும்.
காலையில் சரியாக மலம் கழிக்கவில்லையென்றால் வெந்நீரை குடியுங்கள். உடன் பயன் கிடைக்கும்.
உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனக்கல்கண்டு கலந்து குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய் கசப்பும் மறைந்து விடும்.
உடல் வலிக்கு நல்ல வெந்நீரில் குளித்து இந்த சுக்கு கலந்த வெந்நீரைக் குடித்து படுத்தால் நன்கு தூக்கம் வருவதுடன் வலியும் மறைந்து விடும்.
அதிகம் தூரம் அலைந்ததனால் ஏற்படும் கால்வலிக்கும் வென்னீர் தான் தீர்வு. பெரிய பிளாஸ்டிக் வாளியில் பொறுக்குமளவு சூடான வெந்நீர் கொட்டி உப்புக்கல் போட்டு அதில் கொஞ்ச நேரம் பாதங்களை வைத்து எடுங்கள்.
காலில் இருக்கும் அழுக்கைப்போக்க வெந்ந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதங்களை வைத்து எடுங்கள்.
மூக்கில் அடைப்பு ஏற்பட்டால் வெந்நீரில் சில சொட்டுக்கள் நீலகிரித்தைலம் விட்டு முகர்ந்தால் தீர்வு கிடைக்கும்.
வெய்யிலில் அலைந்து விட்டு வந்து உடனே ஐஸ் தண்ணீர் அருந்துவதைக்காட்டிலும் சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது தான் தாகம் தீர்க்கும் நல்ல வழி.

குறிப்பு முத்து:

சாதத்தில் எறும்புகள் வந்து விட்டால்:
ஒரு சிறு கிண்ணத்தில் சீனியைப்போட்டு சாதத்தின் மீது வைத்தால் எறும்புகள் சாதத்தை விட்டு நக்ர்ந்து சீனியை மொய்க்க ஆரம்பித்து விடும்.

வருத்தப்பட வைத்த முத்து:

இரு மாதங்களுக்கு முன் நடந்தது இது. சென்னை ஏர்ப்போர்ட்டில் எனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறும்போது அந்த சம்பவம் நடந்தது. எனக்கு முன்னால் தனது உடமைகளுடன் சென்றவர் ஒரு சிகிரெட்டை எடுத்து பற்ற‌ வைத்துக்கொண்டு தீக்குச்சியை தூக்கி எறிந்தார். சற்று அருகில் நின்று கொன்டிருந்த போலீஸ்காரர் உடனே அருகில் வந்தார். ' ஏர்ப்போர்ட் உள்ளே சிகிரெட் பிடிக்கக்கூடாதென்று உனக்குத் தெரியாதா?' என்று கேட்டதும் உடனே சிகிரெட் பிடித்தவர் அதை அணைத்தார். போலீஸ்காரர் அதற்கப்புறமும்  விடவில்லை. ' நீ தூக்கியெறிந்த தீக்குச்சியை எடுத்து இதோ இந்தக்குப்பைக்கூடையில் போடு' என்றார். அவரும் வாயைத்திறக்காமல் கீழே கிடந்த தீக்குச்சியை எடுத்து குப்பைக்கூடையில் போட்ட பிறகு தான் அந்த போலீஸ்காரர் அவரை விட்டார். பார்த்துக்கொண்டிருந்த எனக்குத்தான் மிகவும் வருத்தமாக இருந்தது. வெளி நாட்டில் வசிக்கிறோம். அங்குள்ள சட்ட திட்டங்களை மதிக்கிறோம். அவற்றை மீறுவதற்கு பயப்படுகிறோம். பயந்து கொண்டாவது அவற்றைப் பின்பற்றுகிறோம். அங்குள்ள பொது இடங்களில் குப்பைகள் போடாமல் அதற்கென்றே வைத்திருக்கும் குப்பைத்தொட்டியில் போடுகிறோம். இங்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம் நாடு என்பதாலா? அல்லது குப்பைகள் எல்லா இடங்களிலும் இல்லாமலேயாவா இருக்கிறது என்ற அலட்சியத்தாலா?










 









 

36 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல் இரண்டு முத்துக்களும் அருமை.
பயனுள்ளவை. பாராட்டுகள்.

மூன்றாவது முத்து தாங்கள் சொல்வது போல சற்றே வருத்தப்படத்தான் வைக்கிறது.

பகிர்வுக்கு நன்றிகள்.

இளமதி said...

வணக்கம் மனோ அக்கா!

முத்துக் குவியலில் மூழ்கித் திளைத்திட்டேன்!
புத்துணர்வு கொண்டேன் புரிந்து!

வெந்நீர்தான் என விருப்பமும்!.. எங்கள் வீட்டில் 24 மணி நேரமும் சுடுநீர்ப் போத்தலில் முடிய முடிய விட்டு வைத்திருப்போம். அதிகம் உபயோகிப்பவள் நானே!
அதன் பலன்கள் நானும் அனுபவத்தில் கண்டதே...

குறிப்பு முத்து உபயோகமானது!

வருத்தப்பட வைத்த முத்து உண்மையில் கோபத்தை வரவைத்தது அக்கா!

அத்தனையும் மிகச் சிறப்பு!
நன்றியுடன் வாழ்த்துக்களும் அக்கா!

இராஜராஜேஸ்வரி said...

மருத்துவ முத்து பயன் மிக்கது..

கோமதி அரசு said...

மருத்துவ முத்து மிக தேவையான ஒன்று.. குறிப்பு முத்து குறித்து வைத்துக் கொண்டேன்.
வருத்தமுத்து ஏன் இவர்கள் இப்படி என்று நினைக்க வைக்கிறது.

சீனு said...

எனக்கும் கூட வெந்நீரை நிதானமாக ரசித்துக் குடிக்கத் தான் பிடிக்கும்.. அப்படிக் குடித்தால் ஒரு கோப்பை குளம்பி குடிப்பதை விட அற்புதமான உணர்வைக் கொடுக்கும்...

அந்த எறும்பு சரக்கை மேட்டர் சூப்பர்

ஸ்ரீராம். said...

வெந்நீரின் பயன்கள் அருமை. குறிப்பாக உடல் வலிக்கும் வாய்க் கசப்புக்கும் சொல்லப்பட்ட குறிப்பு.

குறிப்பு முத்து... அட!

நம்நாடு என்ற உரிமை! ஆனாலும் இப்படிக் குப்பை போட வேண்டாமே!

priyasaki said...

அனைத்து முத்துக்களும் அருமையான முத்துக்கள்தாம். வெந்நீர் குடிப்பதால் நிறைய நன்மைகள் இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கேன். மிக பயனுள்ள முத்து.
இப்படி வேறு விடயங்களிலும் நடந்துகொள்கிறார்கள்.வருந்ததக்க விடயம். நன்றி மனோக்கா.

ezhil said...

வென்னீரின் பயன் தெரிகிறது..இருந்தாலும் பழக்கம் இன்னமும் வரவில்லை....

இதில் மட்டும் தான் நம்மைக் குறித்து பெருமை கொள்ள முடியவில்லை..

Kasthuri Rengan said...

ஆகா பயன் தரும் பதிவு...

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

ஹ ர ணி said...

அன்புள்ள மனோ சாமிநாதன் அவர்களுக்கு,

வணக்கம். தொடர்பணிகளால் இன்றுதான் உங்களின் வாழ்த்தை வாசித்தேன். தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றிகள் பல. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

கீதமஞ்சரி said...

வெந்நீரின் மகத்துவம் அறிந்தது முதல் நானும் ரசித்து ரசித்து வெந்நீரைக் குடிக்கிறேன். நன்றி மேடம். குறிப்பு முத்து அட போட வைக்கிறது. எவ்வளவு எளிமையாக உள்ளது. இதை விட்டுவிட்டு என்னென்னவோ செய்துகொண்டிருந்தோமே.

வருத்தப்பட வைத்த விஷயம் உண்மையில் சிந்திக்கவேண்டிய ஒன்று. எல்லா இடத்திலும் குப்பை இருந்தால் நாமும் போடலாம் என்று எண்ணுவது எவ்வளவு தவறு? தண்டனைகளுக்கு பயந்து தவறு செய்யாமலிருப்பதை விடவும் மனசாட்சிக்கு பயந்து தவறு செய்யாமலிருக்கும் நிலை வரவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வெந்நீரின் மகிமை ,அருந்தினவர்களுக்கே தெரியும். இங்கும் மகன் மருமகள் எல்லோரும் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மிக நன்றி மனோ.

Geetha said...

வணக்கம் சகோதரி
உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் கோர்த்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்..நன்றி.

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் அருமை அம்மா..

கே. பி. ஜனா... said...

வென்னீர் பற்றிய தகவல்கள் பன்னீராய் மணத்தது...

saamaaniyan said...

ஆமாம், வெந்நீருக்கு நிறைய மருத்துவகுணங்கள் உண்டு. ஐரோப்பாவில் வெந்நீர் தெராப்பி என ஒரு துறையே உருவாகிவிட்டது ! தசைபிடிப்பு காரணத்தால் ஏற்படும் வலிக்கு வெந்நீர் நல்ல நிவாரணம் ஒத்தடமாய் கொடுக்காமல் ஷவர் போல வலிக்கும் இடத்தில் பொழிய விடுவது சிறந்த பலனை கொடுக்கும்.

நீங்கள் கூறிய "குப்பை" பற்றி...

நான் இந்தியாவிலிருந்து திரும்பிய பிறகு ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு பிறகு அவரும் இந்தியா சென்று திரும்பியுள்ளார்...

" ஊர் ரொம்ப மாறிடிச்சி... சிக்னல்ல காரிலிருந்து குப்பையை வெளியே வீசினேன்... ஒரு போலீஸ்க்காரர் உடனடியா கண்டித்தார் ! "

என்றார்.

"இங்க குப்பையை எறியாத நீ அங்க எதுக்குய்யா வீசுன ?! "

என்னையும் அறியாமல் விழுந்த வார்த்தைகள் ! அவர் அசட்டுசிரிப்பு சிரித்தார் !!!

இந்த குணாதிசய மாற்றம் எனக்கும் புரியவில்லையம்மா !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr


எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

Jaleela Kamal said...


மிகவும் பயனுள்ள பதிவு மனோ அக்கா.
வெந்நீர் நானும் ரொம்ப ரசித்து குடிப்பேன் மனோ அக்கா

அந்த சிக்ரெட், நம் நாட்டில் ஏன் இப்படி சிலபேர் இருக்கிறார்கள்.திருந்தமாட்டுகீறார்களே?

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது இளமதி! உங்களுக்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கோமதி அரசு!!

மனோ சாமிநாதன் said...

இத்தனை பேர் வெந்நீரை ரசித்துத்க்குடிக்கிறார்களா என்று வியக்க வைக்கிறது உங்களின் பின்னூட்டம் சீனு! பாராட்டுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டத்திற்கு இனிய நன்றி ஸ்ரீராம்?!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி பிரியசகி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி எழில்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி மது!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி!!

மனோ சாமிநாதன் said...

நெடு நாட்களுக்குப்பின் வருகை தந்து கருத்துரை வழங்கியதற்கு அன்பு நன்றி வல்லி சிம்ஹன்!!

மனோ சாமிநாதன் said...

வலைச்சர அறிமுகம் பற்றி தெரிவித்ததற்கு அன்பு நன்றி ரூபன்!!

மனோ சாமிநாதன் said...

வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்ததற்கு அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஜனா!

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சாமானியன்! நம்மைப்போல் வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு இந்த வருத்தம் என்றுமே இருக்கும். வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஜலீலா!!