Saturday, 24 May 2014

அன்பிற்கேது எல்லை?

மகா கவி பாரதியின்

"வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு"

என்ற வைர  வரிகளைப்போல‌,

 பாவேந்தர் பாரதிதாசனின்

' வ‌ண்ண‌ப்பூவும் மணமும் போலே,
மகர யாழும் இசையும் போலே'

அன்பால் வாழ்க்கையில் காதலர் இருவர் இணைந்திருக்கும் அழகைச் சொல்லும் ஒரு பாடலை சமீபத்தில் படித்து ரசித்தேன்.

உண்மையான அன்பின் ஆழத்தை, சிறப்பை  அத்தனை அழகாய் காட்டியிருக்கிறார் இப்பாடலை எழுதிய சேரமான் பெருங்கடுங்கோன்! கலித்தொகையில் பாலைத்திணையில் வருகிறது இப்பாடல்!

தலைவன் பொருளீட்ட வேற்றூருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். நெடுநாள் பிரிவை எண்ணி அவனை அவன் வழியே செல்ல அனுமதிக்கவில்லை தலைவி! தானும் உடன் வருவதாகச் சொல்லுகிறாள். தலைவன் பதைபதைத்து இப்படி சொல்லுகிறான்.
பாடல்:

மரையா மரல் கவர, மாரி வறப்ப‌
வரை ஓங்கு அருஞ்சுரத்து, ஆர் இடைச் செல்வோர்
கரை அம்பு, மூழ்கச்சுருங்கி, புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்கு
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால்
என், நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர் அல்ல நெடுந்தகாய்! எம்மையும்
அன்புஅறச் சூழாதே ஆற்றிடை தும்மொடு
துன்பம் துணையாக நாடின், அது அல்லது
இன்பமும் உண்டோ எமக்கு?

தலைவன் சொல்கிறான்:

" கடப்பதற்கு மிகவும் கடினமான பாலைவனம்! வழி நெடுக கள்வர்களின் அம்புகள்! தன் கண்ணீரையே தண்ணீராக குடிக்கிற அளவு வரட்சி! தின்பதற்கு புல் இன்றி, கற்றாழையை புசித்து உயிர் வாழும் காட்டுப்பசு! இத்தனையும் கொண்ட கொடிய காடு! இத்தனி கொடிய காட்டு வழியே உன்னை நான் எங்கனம் அழைத்துச் செல்வது?"

பதில் உரைக்கிறாள் தலைவி:

" நான் என்ன காடு, பாலை பற்றியெல்லாம் அறியாதவளா? நீ சொல்லும் எதாலும் உனக்கு ஊறு நேர்ந்து விடாமல் காக்கவே நான் உன்னுடன் வருகிறேன்"

'துன்பங்கள் சூழ நீ செல்லும்போது உனக்கு உறுதுணையாக வருவதல்லாமல் எனக்கேது இன்பம்?'

ஒருவருக்கொருவர் இணை பிரியாது அன்பினால் வாழ்கின்ற இல்லற மாட்சிமையை இதை விட அழகாக வேறு எதுவும் சொல்ல முடியுமா?

நன்றி: Google


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அருமை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரிய மனமில்லாத தலைவன்+ தலைவி அன்பினைச்சொல்லும் அழகான இலக்கியப்பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

' வ‌ண்ண‌ப்பூவும் மணமும் போலே,
மகர யாழும் இசையும் போலே'
அன்பாட்சி மலரும் அழகிய பதிவு..

Seeni said...

அறிய தந்தமைக்கு மிக்க நன்றி..

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பாடல். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

Chokkan Subramanian said...

இல்லறத்தின் அன்பை வெளிப்படுத்தும் பாடல். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

priyasaki said...

மிகவும் அருமையான பாடல். இலக்கியவகுப்பை இனிமையாக்கிய என் தமிழாசிரியர் ஞாபகத்தில். நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றிகள் அக்கா.

ஸ்ரீராம். said...

தமிழ் அமுதம்.

Dr B Jambulingam said...

நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

Bavyakutty said...

மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images