Tuesday, 26 November 2013

இதுவும் கடந்து போகுமா?

10 நாட்களுக்கு முன் பிரபல சர்க்கரை நோய் நிபுணரைப்பார்க்கப் போயிருந்தேன். எடை பார்க்கும் மிஷின் மேல் நிற்கச் சொன்னது வரவேற்பில் இருந்த‌ பெண். அது எழுதிய எடையைப்பார்த்ததும் திகீரென்றது. 10 நாட்களுக்கு முன் வந்ததற்கும் இப்போதைக்கும் 4 கிலோ குறைந்திருந்தது. மனசு அப்படியே கலவரமாகி விட்டது. எப்படி இது 10 நாட்களில் சாத்தியமாகும்? உடலில் ஏதாவது மோசமான பிரச்சினை இருந்தாலொழிய இப்படி திடீரென்று எடை இறங்காது. குட்டையாய் குழம்பிப்போனது மனது. வேறெதிலும் மனம் பதியவில்லை. என் முறை வந்ததும் மருத்துவரிடம் பேசிய போது என் சந்தேகத்தைக்கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே ' இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உயரத்திற்கு சரியான எடையில் தானே இருக்கிறீர்கள்? இதற்கு மேலும் குறைந்தால் தான் கவலைப்பட வேண்டும்' என்றார். அப்போது தான் அவரைக்கூர்ந்து கவனித்தேன். அவரின் வாய் ஒரு பக்கம் கோணியிருந்தது. ஸ்ட்ரோக் வந்தவர்களுக்குத்தானே அப்படி இருக்கும்? எல்லா சந்தேகங்களும் மனதைக்குடைய அவர் எழுதிய மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். 
 
 

எடை குறைந்திருப்பற்றி என் புலம்பலைக் கேட்ட‌ என் கணவர் ' வீட்டிற்கு வந்து எடை பார்க்கும் க‌ருவியில் எடையை சரி பார்த்த பிறகு கவலைப்படுவதில் அர்த்தம் உண்டு. அதற்குள் எதற்கு குழம்பிப்போனாய்?' என்று கடிந்து கொண்டார்கள். அப்புறம் எங்கள் வீட்டு எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தால் பழைய எடை தான் இருந்தது. ஒரு மாதிரி உயிர் வந்தது. அப்புறம் விசாரித்ததில் நிறைய மருத்துவமனைகளில் நமக்கு முன் எடை பார்த்தவர்கள் சென்ற பிறகு திரும்ப அதை பழைய நிலைக்கு ஜீரோ செட்டிங்கிற்கு பணியாளர்கள் சரி செய்வதே இல்லை என்று தெரிந்தது!! இதனால் எத்தனை மனக்குழப்பம்! எத்தனை தவிப்பு!! அந்த மருத்துவரைப்பற்றியும் விசாரித்தேன். அவருக்கு சமீபத்தில் தான் ஸ்ட்ரோக் வந்து மருத்துவக்கண்காணிப்பில் இருந்ததாகச் சொன்னபோது திகைப்பாக இருந்தது. இந்த மாதிரி நிலையில் மருத்துவ பிராக்டீஸ் செய்யலாமா 

நான் பொதுவாக எந்த மருத்துவர் எந்த மருத்து எழுதிக்கொடுத்தாலும் மருந்துக்கடை வைத்திருக்கும் ஒரு சினேகிதிக்கு ஃபோன் செய்து அந்தந்த மருந்து வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் தராமல் இருக்குமா என்று கேட்டுக்கொள்வேன். அதே போல, அவர் எழுதிக்கொடுத்த மருந்தப்பற்றி கேட்டதும் ' இந்த மருந்தா? இது இந்திய அரசாங்கம்  தடை செய்யப்பட்ட மருந்தாயிற்றே?? இதை சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று தானே தடை செய்தார்கள்? தடையை நீக்கி விட்டார்களா என்ன? என்று என்னையே திருப்பிக்கேட்டார். சொரேலென்றது எனக்கு! அதற்க‌ப்புறம் என் குடும்ப டாக்டரிடம் சென்ற போது, அவர் சிரித்தவாறே ' உங்களுக்கு மட்டுமல்ல, நான் யாருக்குமே இந்த மாத்திரையை எழுதித் தரமாட்டேன்' என்றார். 

ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்றாலும் ஓரளவு கற்ற‌, படித்த அறிவு இருப்பதாலும், கேள்விகளும் விளக்கங்கள் கேட்பதாலும் அதிர்ஷ்டவசமாக தப்பித்திருக்கிறேன். படிப்பறிவு இல்லாதவர்களும் பொருளாதார வசதி இல்லாதவர்களும் தான் நம் சுதந்திர இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்ன செய்வார்கள்? 

சமீபத்தில் ஸ்ரீராம் தன் வலைத்தளத்தில் வெளியிட்ட ' மருத்துவ அராஜகங்கள்' என்ற பதிவைப்படித்தேன். சிந்திக்க வைத்த‌ பதிவு அது. ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராய் இருந்த குணால் சாஹாவிற்கே தன் மனைவியைத் தவறான சிகிச்சையிலிருந்து மீட்டெடுக்க முடியவில்லை என்றால் நம் நாட்டின் மிகச் சாதாரண பிரஜைகள் என்ன செய்ய முடியும்? அது போன்ற அராஜகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கிறது. விடிவு காலம் எப்போது?

 

36 comments:

Jaleela Kamal said...

mika arumaiyaana pakirvu manoo akkaa

Seeni said...

rompa vethanaiyaaka irukku..

ithu pontra sampavangalaal...

'பரிவை' சே.குமார் said...

இதுவும் கடந்து போகுமா?
போகனும் அம்மா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//படிப்பறிவு இல்லாதவர்களும் பொருளாதார வசதி இல்லாதவர்களும் தான் நம் சுதந்திர இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்ன செய்வார்கள்? //

கொஞ்சம் படித்தவர்களாகவே இருந்தாலும், டாக்டர் சொல்வதைத்தான் அப்படியே கேட்க வேண்டியதாக உள்ளது.

பெரும்பாலும்,அவர் எழுதித்தரும் மருந்துகளை அப்படியே நம்பித்தான் சாப்பிட வேண்டியுள்ளது.

மிகவும் கஷ்டம் தான்.

பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

கீதமஞ்சரி said...

எடையைப் பொறுத்தவரை எப்போதும் ஒரே எடை எந்திரத்தில் பார்த்துக்கொள்வது நல்லது. நீங்கள் சொல்வதுபோல் வீட்டிலிருக்கும் எடைக்கருவி சரியானதாக இருந்தால் கவலை வேண்டாம். ஆனால் மாத்திரைகள்? பகீரென்கிறது. அரசு தடை செய்த மாத்திரைகளை பரிந்துரைப்பது எவ்வளவு பெரிய தவறு? பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடத்தில் அலட்சியமும் சிடுசிடுப்பும் அதிகரிக்கின்றனவே தவிர அவர்களை மனிதர்களாகப் பார்க்கும் மனம் அருகிவருகிறது என்பது உண்மை.

கரந்தை ஜெயக்குமார் said...

மருத்துவத் துறை வணிகமயமாகிவிட்ட காலம் இது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

விடிவு காலம் : சந்தேகம் தான்...

கோமதி அரசு said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

பல மருத்துவர்கள் இப்படி அஜாக்கிரதையாக, பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்கிறார்கள்.....

மருத்துப் படிப்பிற்காக பல லட்சங்கள் கொடுத்து, இடம் பிடிப்பதும், படிப்பதும் தொடரும் வரை இந்த பிரச்சனைகள் வருவது நிச்சயம்......

உஷா அன்பரசு said...

மருத்துவ மனைகளில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாம போச்சு.. அலட்சியமா எடுத்துக்கிறாங்க... தவறான சிகிச்சையில் பலியாகறவங்க செய்தி பேப்பர்ல நிறைய வந்திட்டே இருக்கு..! மருந்தின் தன்மையை அறிந்தே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

Anonymous said...

பணம் மட்டும் தான் எல்லாமேவா ?
உயிரின் மீது இவ்வளவு அலட்சியமா ?
இவர்களுக்கு பக்கவாதம் வந்தால் தான் என்ன ?
பரலோகம் போனால் தான் என்ன ?
பாவம் சும்மா விடுமா ?

இளமதி said...

அக்கா... பகீரென இருக்கு பதிவு.

என்ன நடக்குமோ?
எதிர்காலம் என்ன ஆகுமோ?..

எதற்கும் என்றைக்கும் எந்தத் தொந்தரவும் தாராத ஆயுர்வேத சித்த வைத்தியங்களே மேலென நினைக்கிறேன்...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு அக்கா.

நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மிகவும் மகிழ்ச்சி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! இது போன்ற சம்பவங்கள் உயிருக்கே சில சமயங்களில் பாதுகாப்பின்மையைக் கொடுக்கும்போது வேதனை அளவிற்கு அதிகமாகி விடுகிறது! கருத்துரைக்கு அன்பு நன்றி சீனி!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

தடை செய்யப்பட்ட மருந்தை அறியாமல் சாப்பிட்டு பின்விளைவுகளால் மருத்துவமனையில் துன்பப்பட்டுப் போயிருக்கிறேன் அம்மா..கல்லூரி பருவத்தில். அதன் தாக்கம் வயிற்றுப்புண் உருவில் இப்பொழுதும் இருக்கிறது...
அறியாதவர்கள் பாடு மிக மோசம் தான்...

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! படித்தவர்களே அதுவும் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படித்து மாத்திரைகளின் தன்மைகளை அறிந்தவர்களே சில சமயங்களில் மருத்துவர்கள் சொல்லுக்கு தலையாட்டி விடுகிறார்களே!

ஆனாலும் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து எதற்கு, அது என்ன பலனளிக்கும் என்பதையாவது நாம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்!

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் கீதமஞ்சரி, நீங்கள் சொல்வது மாதிரி தவறான மாத்திரைகள் எத்தகைய பின் விளைவுகளை விளைவிக்கிறது? சாமிக்கு முன் பூசாரிக்கு பூஜை செய்ய வேண்டும் என்கிற மாதிரி, நிறைய மருத்துவ மனைகளில் அங்கு வேலை செய்யும் பெண்களின் அட்டகாசங்கள் தாங்கவே முடிவதில்லை! கருணை, அக்கறை என்கிற வார்த்தைகளுக்கு வேலையே இருப்பதில்லை இப்போதெல்லாம்!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! வணிக மயமாகி விட்ட இந்த உலகத்தில், மருத்துவம் மட்டுமல்ல, எல்லா துறைகளிலுமே எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டியுள்ளது. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!!

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அவசியம்படித்து அறிய வேண்டிய பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

மருத்துவ சம்பந்தப்பட்ட கட்டுரைகளாக வருகின்றனவே.நன்று.

ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்றாலும் ஓரளவு கற்ற‌, படித்த அறிவு இருப்பதாலும், கேள்விகளும் விளக்கங்கள் கேட்பதாலும் அதிர்ஷ்டவசமாக தப்பித்திருக்கிறேன்//கண்டிப்பாக மருத்துவர்களிடம் மிகவும் சுதாரிப்பாகம் இருக்க வேண்டும்நன் எழுதியதையும் பார்த்தீர்களாக்கா?

நிலாமகள் said...

மருந்தின்றி நோய் வென்று வாழ ஒரு வழி புலப்பட்டால் ... நன்றாகத் தான் இருக்கும்!

இரசாயன உரங்கள் இரசாயன மருந்துகள் சூழ் உலகில் வாழ சபிக்கப் பட்டிருக்கிறோம் சகோ...

ADHI VENKAT said...

கருத்துள்ள பகிர்வு. படித்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால்.... பாமரர்களின் நிலை!!!

இராஜராஜேஸ்வரி said...

இதுவும் கடந்து போகுமா?"

தொடர்ந்து வராமல் இருந்தால் சரி..!

ஸ்ரீராம். said...

எடை பார்க்கும் மெஷின் மட்டுமில்லை, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவியும் நாம் வீட்டிலேயே வைத்திருப்பதற்கும் மருத்துவர் வைத்திருப்பதற்கும் வேறுபாடும். 0 செட்டிங்க்ஸ் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த ரத்த அழுத்தம்பார்க்கும் கருவி வீட்டில் வைத்திருப்பவை அவ்வளவு சரியானதாகக் காட்டுவதில்லை. எங்கள் வீட்டிலேயே இதற்கு 3 உதாரணங்கள் உண்டு. வீட்டில் 220 காட்டிய ஒரு மாமாவுக்கு பயந்து போய் ஒரு மருத்துவருக்கு இருவராகக் காட்டினால் அங்கு ரத்த அழுத்தம். படு நார்மல்.

ஸ்ரீராம். said...

பயோக்ளிடசோன் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதற்குப் பக்க விளைவுகள் வரும் என்று சொல்லி முதலில் தடை செய்தார்கள். ஆனால் மருத்துவச் சங்கமே இதனால் பக்க விளைவுகள் கிடையாது என்று கூறி நான்கைந்து மாதங்களுக்குமுன் தடையை நீக்கச் சொல்லிக் கேட்டதில் தடையை நீக்கி விட்டார்கள்.

ஸ்ரீராம். said...



குழந்தைகளுக்கு ஜுரத்துக்குப் பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்தும் (இது வலிகளுக்கும் கொடுக்கப்படும்) ஒரு ஆன்டிபயாடிக் கேப்ஸ்யூலும் பல வருடங்களாய் மற்ற நாடுகளில் தடை செய்யப் பட்டிருப்பவைதான்.

Iniya said...

வணக்கம்...!
நான் இப்படி நடப்பதாக கேள்விப் பட்டிருகிறேன் இபொழுது தான் நேரடியாக அறிகிறேன்.நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். சேவை மனப்பான்மை இல்லாமல் பணம் மட்டும் குறிகோளாக இருப்பதே இதற்கு முதல் காரணம் மருத்துவத் துறைக்கு பெருமளவில் செலவு செய்ய வேண்டி இருப்பதும் ஒரு காரணம் தான் பணம் அனைவருக்கும் அவசியம் தான் அதே நேரம் ஆசிரியருக்கும் மருத்துவருக்கும் சேவை மனப்பான்மை அவசியம்.
பகிர்வுக்கு நன்றி...! தொடர வாழ்த்துக்கள்....!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

அடிக்கடி இப்படிப்பட்ட இன்றைய மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகள் எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன் ஸாதிகா! ஏனென்றால் எதிர்படும் ஆனுபவங்கள் அத்தனை கசப்பாகவும் பயம் தருவனவாயும் இருக்கின்றன! நாம் விழிப்புடன் இருந்தாக‌ வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

நீங்கள் எழுதிய பிறகு உங்கள் வலைத்தளம் சென்று ' மருத்துவர் மகாத்மியம்' படித்தேன். இந்த மாதிரி நிகழ்வுகள் தான் அடிக்கடி நடக்கின்றன. எங்கள் உறவினரும் நண்பரும் அடுத்தடுத்து இங்கு புதியதாய் கட்டப்பட்டிருக்கும் மருத்துவமனையில் நெஞ்சு வலிக்காக பரிசோதனை செய்து கொள்வதற்காக‌ போனபோது, இப்படித்தான் பரிசோதனைகள் செய்து இதயத்தின் இரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதாக சொல்லி விட்டார்கள்.இரு வீட்டாரும் அடைந்த அதிர்ச்சிக்கும் பர‌பரப்பிற்கும் வீட்டில் பெண்களின்
அழுகைக்கும் அளவே கிடையாது. உடனேயே சென்னை அப்பல்லோ சென்று பரிசோதித்ததில் இருவருக்குமே இரத்தக்குழாய்களில் அடைப்புக்கள் இல்லையென்று சொல்லி விட்டார்கள். என்னவென்று சொல்வது? இந்த காலத்தில் அதிஷ்டமும் இருந்தால்தான் தப்பிப்பிழைக்கலாம் போலிருக்கிறது!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கு ரொம்பவும் பேராசை நிலாமகள்! மருந்தின்றி நோயின்றி... ஆஹா! அந்த உலகம் எப்படி இருக்கும்?
இரசாயன உரங்கள், இர‌சாயன மருந்துகளுடன் இரசாயன கலப்படங்கள் நிறைந்த உணவுப்பொருள்கள், பித்தலாட்டங்கள், நாணயமின்மை சூழ்ந்த உலகில் வாழ சபிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்லுங்கள் நிலா!
வருகைக்கும் க‌ருத்துரைக்கும் இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கடந்து போகுமா என்பது ஆற்றாமையும் ஏக்கமும்.
நீங்கள் சொல்வது போல தொடர்ந்து வராமலிருந்தால் அது எத்தகைய பேறு!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஸ்ரீராம்!

நீங்கள் சொல்வது சரி தான்! இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியும் ஒவ்வொரு BRANDலும் ஒவ்வொரு READING என்று வேறு பட்டு காண்பிக்கின்றன! இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் மருத்துவர்கள் பலரும் இதையே உபயோகிப்பது தான்!

பயோக்ளிடாசோன் பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன். ஜூலை அல்லது ஆகஸ்டில் அதன் மீதான தடையை நீக்கி விட்டதும் தெரியும். ஆனால் உலக அளவில் அப்படி இல்லை. சில நாடுகளில் உபயோகிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. தடையை நீக்க வேண்டும் என்றும் தடை விதிக்கக்கூடாது என்றும் இரு வேறு அபிப்பிராயங்கள் உலகெங்கும் இருக்கிறது. இதை உபயோகிப்பதால் பக்க விளைவுகளே இல்லையென்று இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் நக்கீரன் இதைப்பற்றிய தமிழ் நாட்டு மருத்துவர்களின் விவாதங்களை வெளியிட்டிருந்தது. அப்போது gliptin group பற்றியும் சர்ச்சை வந்தது.
கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள‌ இனியா!

நீங்கள் சொல்வது போல இப்போது சேவை மனப்பான்மை மிக மிக குறைவு. மற்றெல்லா துறைகளையும் விட மருத்துவர்களுக்கு காருண்யமும் சேவை மனப்பான்மையும் உழைப்பும் நேர்மையும் மிக அதிகம் தேவை! எப்போது பணம் என்பது முதலிடத்தில் இருக்கிறதோ, அப்போது மற்றதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன!

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி!!

Asiya Omar said...

விழிப்புணர்வு பகிர்வு அக்கா.இது நாம் உஷாராக இருக்க வேண்டிய காலகட்டம்.