Sunday 21 April 2013

ஷார்ஜா உணவுத் திருவிழா!!

முன்பெல்லாம் ஷார்ஜாவில் நகரத்திற்குள்ளேயே எக்ஸ்போ என்று பெயரிட்ட  பெரிய வளாகத்திற்குள் நவீனக்கூடாரங்கள் அமைக்கப்பட்டு பல வித கண்காட்சிகளை நடத்தப்பட்டு வந்தன. வருடம் பூராவும் புத்தகக் கண்காட்சி, கைக்கடிகார கண்காட்சி, தொழில் சாதனக்கள் கண்காட்சி, கல்வி சம்பந்தமான கண்காட்சி, ரமதான் கண்காட்சி என்று மிகவும் சுவாரஸ்யமாக கண்காட்சிகள் இருக்கும்.  வருடம் ஒரு முறை உணவுக்காக கண்காட்சி அமைக்கும்போது, அதுவும் நுழைவுக்கட்டணமில்லை என்னும்போது கூட்டம் அலை மோதும்.

இப்போது இந்த எக்ஸ்போ வளாகம் நகர்ப்புற எல்லைக்கு வந்து விட்டது. அதனால் முன்போல அடிக்கடி போகும் வழக்கம் நின்று விட்டது. அதற்குப்பதிலாக அங்கங்கே அமைந்திருக்கும் பல பூங்காக்களில் சில கண்காட்சிகள் குளிர்காலத்திலும் இலேசன வெயில் தொடங்கும் காலத்திலும் நடைபெற்று வருவது தற்போதைய வழக்கமாகி விட்டது. சென்ற வாரம் ஒரு குழந்தைகள் பூங்காவில் உணவு சம்பந்தமான விழா என்று அறிவிப்புகள் அங்கங்கே போட்டிருப்பதைப்பார்த்ததும் இதற்குப்போய் வரலாமென்று புறப்பட்டோம்.



இரு மருங்கிலும் சிறு சிறு உணவகங்கள்.  அதன் வழியே சென்றால் இடையில் ஒரு மேடையில் சமையல் சம்பந்தமான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. லெபனான், செளதி அரேபியா, இராக்-இப்படி அரபு நாடுகளின் உணவு செய்முறை விளக்கமும் போட்டியும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சமையல் போட்டி நடைபெற்றுக்கொன்டிருக்கிறது!
பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து அவற்றின் தலைமை சமையல்காரர்கள் வருகை புரிந்து செய்முறை விளக்கக்கூட்டம் நடத்துகிறார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் இந்திய சமையல்காரர்கள் வருவதாகச் சொன்னார்கள்!

குழந்தைகள் விளையாடும் குட்டிப்பூங்கா! என் பேரன் விளையாட ஆயத்தமாகிறார்!

அருகேயிருக்கும் கால்வாய்!
வானுயர்ந்த கட்டிடங்கள்!!
நாங்கள் மாலையில் முன்னதாகவே சென்று விட்டதால் எங்குமே கூட்டமில்லை. குழந்தைகள் பூங்காவிலுமே கூட்டமில்லை.

மத்திய கிழக்கு அரபு நாடுகளின் பிரபல ஸ்நாக் ஐட்டமான ‘ ஃபலாஃபெல் இங்கே பிரசித்தம். கடந்த 37 வருடங்களாய் இங்கே வசித்து வந்தாலும், பல தடவைகள் பல இடங்களில் இந்த FALAFEL  ருசித்திருந்தாலும் இங்கு சாப்பிட்டது போல ஒரு அதி ருசியான ஃபலாபெல் வேறெங்கும் சாப்பிட்டதேயில்லை!

ஃபலாஃபெல் உருண்டைகள்!
அது வேறொன்றுமில்லை. வெள்ளைக்கொண்டைக்கடலையை ஊறவைத்து நாம் மசாலா வடைக்கு அரைப்பது போல கொரகொரப்பாக அரைத்து, கூடவே FAVA BEANS என்பதையும் சிறிது சேர்த்தரைத்து நறுக்கிய பூண்டு, சிறிது வெங்காயம், மிகக்குறைந்த அளவில் மிளகு, சீரகம், காரம் சேர்த்து சிறு சிறு வடைகளாய் தட்டி பொரித்தெடுப்பது தான் இந்த ஃபலாபெல் சிற்றுண்டி.

பெரிய அளவில் செய்யப்படும் ஃபலாஃபெல்கள்!
 இங்கே பிட்டா ப்ரெட் என்று மெல்லியதாக அரிசி சப்பாத்தி போல மைதாவில் செய்யப்பட்ட ஒன்று எல்லா பேக்கரிகளிலும் கிடைக்கும். அதே போல தஹிணி சாஸ் என்பதும் அரேபியரிடையே பிரசித்தம். வெள்ளை எள்ளுடன் பூண்டு சிறிது, எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து அரைத்துத்  தயாரிக்கப்படுவது அது. இந்த பிட்டா பிரெட்டில் இந்த சாஸை தாராளமாகத் தடவி அதனுள் இந்த Falafel வடைகள் சில வைத்து கூடவே லெட்டியூஸ் இலைகள், வெள்ளரித் துண்டுகள் வைத்து சுருட்டி கொடுத்தால் அது தான் Falafel Sandwich!!

ஃபலாஃபெல் சாண்ட்விச்!
அங்கே விளையாடிக்கொண்டிருந்த பல நாட்டுக் குழந்தைகளை ரசித்து விட்டு, இந்த ஃபலாஃபெல் உருண்டைகளை வாங்கி சாப்பிட்டு விட்டுத் திரும்பினோம், இன்னொரு நாள் சென்று முழுவதுமாய் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே!! 
 

34 comments:

வெங்கட் நாகராஜ் said...

புதிய விதமான உணவுகளை நாங்களும் அறிந்து கொண்டோம் நன்றி....

திண்டுக்கல் தனபாலன் said...

ஃபலாஃபெல் உருண்டைகள் வியப்பு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ருசியான பதிவு. படங்கள் எல்லாமே ஜோர் ஜோர்.

2004 இல் நான் அவ்விடம் வந்தபோது, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மிகப்பெரிய உலகச்சந்தை ஒன்று கண்டுக்ளிக்கும் பாக்யம் பெற்றேன்.பல்வேறு ஸ்டால்களைப் பார்த்து பிரமித்துப்போனேன்.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

கவியாழி said...

உணவுத்திருவிழாவில் மற்றதைப் பற்றி எப்போ சொல்லப் போகிறீர்கள்.ஆவலுடன் இருக்கிறேன்

கோமதி அரசு said...

ஃபலாபெல் சிற்றுண்டி புதிதாக இருக்கிறது.
ஷார்ஜா, உணவுத் திருவிழா விபரம் மற்றும் பேரன் விளையாட ஆயத்தமாகும் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

Asiya Omar said...

படங்களுடன் பகிர்வு அருமை அக்கா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நேரில் சென்றது போல இருக்கிறது இந்த உணவுத் திருவிழா!

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பதிவு நேரடியாகப்
பார்ப்பதைப்போன்ற உணர்வை ஏற்படுத்தியது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

நாவின் அறுசுவை மொட்டுக்களை அழகாய்த் தூண்டிச் சென்ற பதிவு .
அருமை.good photos.

MANO நாஞ்சில் மனோ said...

ஃபலாஃபல்......நம்ம ஊரு பருப்பு வடைமாதிரியான ருசியாக இருக்கும், அந்த ருசியும் ஒரு தனி வகையாக இருக்கும், எனக்கு மிகவும் பிடித்தமானது ஃபலாஃபல்...!

பால கணேஷ் said...

படங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தன! ஃபலாபெல படங்களையும் உங்களின் வர்ணனையும் படிச்சதுலயே சாப்பிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்!

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. ஃபலாஃபெல் உருண்டைகள் படத்தில் பார்க்கவே மொறுமொறுப்பாய் சாப்பிடும் ஆவலைத் தூண்டுவதாய் உள்ளன.

தி.தமிழ் இளங்கோ said...

பதிவும் படங்களும் அருமை. மேலைநாட்டு போட்டோகிராபி புத்தகத்தின் வடிவத்தை நினைவுறுத்துகிறது.

இளமதி said...

அழகான படங்கள், அருமையான உணவுத் திருவிழாவாக நல்ல பதிவு அக்கா.

அட அங்கும் இந்த ஃபலாபெல் பிரசித்தமோ? இங்கும்தான். ஃபலாபெல் சான்விட்ச் நாமே நமக்கு விரும்பியதை வைத்து வீட்டில் தயாரித்து சாப்பிடுவதுண்டு.
இந்த தஹிணி சாஸ் பற்றி உங்கள் மூலம் அறிந்தது மிக்க மகிழ்ச்சி. இங்கு ஒரு துருக்கியர் கடையில் இதை வாங்கி வந்த என் உறவினர் அதுபற்றி விபரம் சொல்லாமையால் என் கிச்சன் அலுமாரிக்குள் மூலையில் இருக்கிறது. அதன் பயன்பாடு எப்படியென உங்கள்மூலம் அறிந்தது சந்தோஷமே.

உங்கள் பேரனுக்கும் என் வாழ்த்துக்கள்!

அழகிய பதிவு. பகிர்விற்கு நன்றி அக்கா!

Vijiskitchencreations said...

Very nice.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்க‌ளுக்கும் க‌ருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் வை.கோபால‌கிருஷ்ண‌ன்!

மனோ சாமிநாதன் said...

விரைவில் ம‌றுப‌டியும் இது ப‌ற்றி விரிவாக‌ எழுதுவேன் சகோத‌ர‌ர் க‌வியாழி க‌ண்ண‌தாச‌ன்! வ‌ருகைக்கு அன்பார்ந்த‌‌ ந‌ன்றி!

மனோ சாமிநாதன் said...

வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் ம‌ன‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி கோம‌தி அர‌சு!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு ந‌ன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

வ‌ருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் ராம‌மூர்த்தி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்க‌ளுக்கும் வ‌ருகைக்கும் அன்பு ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் ர‌ம‌ணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்பு ந‌ன்றி ஸ்ர‌வாணி!

மனோ சாமிநாதன் said...

க‌ருத்துரைக்கும் வ‌ருகைக்கும் அன்பு ந‌ன்றி ம‌னோ! 37 வ‌ருட‌ங்க‌ளுக்குப்பிற‌கு அதி ருசியான‌ ஃப‌லாஃபெல் வ‌டை இப்போது தான் ருசித்தேன். அத‌னால் தான் அதைக்குறிப்பிட்டேன்!


மனோ சாமிநாதன் said...

பதிவை ரசித்ததற்கும் பாராட்டுரைத்ததற்கும் இனிய நன்றி சகோதரர் பாலகணேஷ்!

மனோ சாமிநாதன் said...

வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் ம‌ன‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் தமிழ் இள‌ங்கோ!

மனோ சாமிநாதன் said...

பேரனுக்கான வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி இள‌மதி!

இந்த தஹிணி சாஸ் அரேபியர் உண‌வு முறைகளில் சேர்க்கப்படுகின்றது. முத்தபல் என்ற பிரபல சாலட் இதை சேர்த்துத்தான் செய்ய்ப்படுகிறது. பல கட்லட் வகைகளிலும் கிரேவி வகைகளிலும் கூட சேர்த்து செய்யப்படுகின்றது!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பான‌ நன்றி விஜி!!

ஸ்ரீராம். said...

ஃபலாஃபெல்! வினோதமான பெயர்! ஏதோ டிரெஸ்ஸின் பெயர் போல! பெயர் தராத ஆர்வத்தைப் படம் தருகிறது. மசால் வேறு உருவம் போல இருக்கிறது!

மாதேவி said...

உணவு திருவிழாவுக்கு கூட்டிச் சென்று காட்டினீர்கள். சுவையான உணவும் கிடைத்தது.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

ர‌சித்து பின்னூட்டம் அளித்ததற்கு மனமார்ந்த நன்றி மாதேவி!