Sunday, 7 April 2013

அதி ருசியான முத்து!


சமையல் முத்து இன்று இனிப்பைத்தாங்கி வருகிறது!

இது எல்லோருக்குமே மிகவும் பிடித்த ஒரு இனிப்பு!

கிராமப்புறத்து பழமையான இனிப்பு! ரொம்பவும் குறைந்த பொருள்களைக்கொண்டு அதி ருசியைக் கொடுக்கக்கூடிய பால் கொழுக்கட்டையைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன். வெறும் அரிசிமாவுடன் வெல்லம், தேங்காய், ஏலக்காய் மட்டுமே சேர்த்து செய்து விடலாம் இதை!

என் அம்மா வீட்டில் 40 வருடங்களுக்கு முன்பு இதை அடிக்கடி செய்வது நினைவுக்கு வ‌ருகிறது. நல்ல பச்சரிசியை ஊற‌வைத்து, பின் தண்ணீரை வ‌டித்து நிழலில் உலர வைத்து, உரலில் இடித்து, பதப்ப‌டுத்திய மாவை இரண்டு முறை சலித்து பிற‌கு வெந்நீர் கலந்து பிசைவார்கள். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகள் செய்து மல்லிகை மொக்கு போல சற்று அழுத்தி ஒரு ஈரத்துணியில் போட்டு வைப்பார்கள். கொதிக்கும் நீரில் அவற்றைப்போட்டு ஒரு கொதியில் அவை வெந்து மேலே வந்ததும் தேவையான வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து இற‌க்குவார்கள்.

புகுந்த வீட்டில் என் மாமியார் செய்யும் முறை சற்று வித்தியாசப்படும். சிலர் தேங்காய்த்துருவல் சேர்க்காமல் கடைசியில் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்குவார்கள். இன்னும் சிலர் தண்ணீருக்குப்பதிலாக பாலில் பால் கொழுக்கட்டையை வேக வைப்பார்கள். எப்படிச் செய்தாலும் பால் கொழுக்கட்டையின் சுவையையே தனி தான்! என் கணவருக்கு மிகவும் பிடித்தது இது! பிறந்த நாளுக்கு என்ன செய்து தர என்று கேட்டால், என் கணவரின் பதில் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும், ' பால் கொழுக்கட்டை!' என்று!!



பால் கொழுக்கட்டை:

தேவையானவை:

ப‌ச்சரிசி‍- 1 கப்
பொடி செய்த‌ வெல்ல‌ம்- 2 க‌ப்
ப‌ச்ச‌ரிசி மாவு‍ தேவையான‌து
ஏல‌ப்பொடி-‍ 1 ஸ்பூன்
தேங்காய்த்துருவ‌ல்‍- அரை க‌ப்

செய்முறை:

ப‌ச்ச‌ரிசியை ஊற‌‌ வைத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் போதுமானது சேர்த்து நன்கு மைய‌ அரைக்க‌வும்.

இத்துட‌ன் போதுமான‌ அரிசி மாவு சேர்த்துப்பிசைய‌வும்.

பிசையும் பதம் வழுவழுவென்று முறுக்கு உரலில் போட்டுப் பிழியக்கூடியதாய் இருக்க வேன்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

ஒரு முறுக்கு உரலில் காராசேவு அச்சு போட்டு மாவை உள்ளே வைத்து மூடி கொதிக்கும் தண்ணீருக்கு மேல் உரலைப் பிடித்து தண்ணீரில் விழுமாறு மாவைபிழியவும்.

பால் கொழுக்கட்டை வெந்து மேலே வந்ததும் அடுத்த பாட்ச் பிழியவும்.

இது போல எல்லா மாவையும் பிழிந்து முடிக்கவும்.
எல்லாம் பிழிந்து மேலே வரும்போது பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் தளர இருக்க வேண்டும். அதனால் தண்னீர் பற்றாவிடில் போதுமான வெந்நீர் ஊற்றிக்கொள்ள‌வும்.

பிறகு வெல்லப்பொடி, ஏலம் சேர்க்கவும்.

ள‌ல்லாம் கலந்து குழைந்து வ‌ரும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.

5 நிமிடங்கள் மெதுவான தீயில் வைத்திருந்து விட்டு பாத்திரத்தை இற‌க்கவும்.

சுவையான பால் கொழுக்கட்டை தயார்!!

28 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதி ருசியான முத்துவாகிய பால் கொழுக்கட்டை செய்முறையும் படஙகளும் அருமை. பாராட்டுக்கள்.

இளமதி said...

அட...நல்லா வரும்போல இருக்கே... உண்மையில் அதிக ருசியான பால்கொழுக்கட்டைதான் அக்கா...
விரைவில் செய்து பார்த்திடுகிறேன்.

ஆனால் சிறிது சந்தேகம்...

//பால் கொழுக்கட்டை வெந்து மேலே வந்ததும் அடுத்த பாட்ச் பிழியவும்.

இது போல எல்லா மாவையும் பிழிந்து முடிக்கவும். //

முதல் பிழிந்தது வெந்து மேலே வரும்போது அதை அள்ளி எடுக்காமல் இப்படியே முழுமாவையும்
மேலுக்கு மேலாக எல்லாமாவையும் பிழிந்திடுவதா?
முதலில் பிழிந்தது அதிகமாக வெந்து கரைந்தே போகாதா?....

அதே நீரிலில் வெல்லப்பொடி, ஏலம் சேர்ப்பதா???

தெரியாததால் கேட்கிறேன். சிரிக்காதீர்கள் அக்கா....

நல்ல முத்தான குறிப்புப் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா...:).

கோமதி அரசு said...

ருசியான பால் கொழுக்கட்டை மணம் சாப்பிட வா வா என்கிறது.

என் அம்மா சிறு சிறு உருண்டைகளாய் உருட்டிப்போட்டு வேக வைப்பார்கள்.

மனோ சாமிநாதன் said...

அகலமான பாத்திரம் வைக்கும்போது, பால் கொழுக்கட்டை பிழிய வசதியாக இருக்கும் இளமதி. ஒரு பக்கம் பிழிந்து மேலே வந்ததும் இன்னொரு பக்கம் பிழிய வேன்டும். அல்லது சுற்றிலும் பிழிந்தால் அதற்கடுத்த தடவை நடுவில் பிழிய வேண்டும். ஒரே இடத்தில் பிழியக்கூடாது. கட்டியாகப் போய் விடும். பரவலாகப்பிழிய வேன்டும். அப்போது தான் வெந்து உடனே மேலே எழும்ப வசதியாக இருக்கும். வெந்து மேலே வரும் வரை அதை கரண்டியால் க‌லக்கக்கூடாது. கொசகொசவென்று இல்லாமல் அத‌ற்கு வேக தாராளமாக இடம் விட்டுப்பிழியும்போது, அவை மேலே வெந்து வந்த‌ பிறகு எத்தனை முறை க‌லக்கினாலும் உடைந்து போகவே போகாது. ஒவ்வொரு முறை வெந்ததும் அதைத் தனியாக எடுத்து வைக்கத் தேவையில்லை. அடுத்த பாட்ச் பிழிந்தாலும் முதலில் வெந்தது அது பாட்டிற்கு மேலும் வெந்து கொன்டிருக்கும்.

புரியும்படி விளக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் இள‌மதி. மேலும் சந்தேகங்கள் இருந்தால் அவசியம் தயங்காமல் கேளுங்கள். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன்!

சாப்பாட்டு விஷயம், அதுவும் நாட்டுப்பலகாரம் என்பதால் உங்களிடமிருந்து இன்னும் விரிவாகப் பின்னூட்டம் வரும் என்று எதிர்பார்த்தேன்!

மனோ சாமிநாதன் said...

நினைவலைகளைப்பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

Menaga Sathia said...

ஆஹா சூப்பார்ர் கூடிய சீக்கிரமே இந்த பால் கொழுக்கட்டையை செய்யனும்மா ஏன்னா என் பையனுக்கு பல் முளைக்க போகிறது..

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... இது புதுசா இருக்கே...! செய்து விடுவோம்...(வீட்டில் குறித்துக் கொண்டாயிற்று)

செய்முறை குறிப்புக்கு நன்றி...

ஸாதிகா said...

பால் கொழுக்கட்டை கேள்விதான் பட்டுள்ளேன்.இப்போதான் படத்தில் பார்க்கிறேன்.இதை சாப்பிடுவதற்காவது சார்ஜா வரவேண்டும்க்கா:)

இளமதி said...

மிக்க நன்றி அக்கா...:).
நல்ல விளக்கம். செய்து பார்க்கின்றேன்.

ம்.வழக்காமான உங்கள் ஃபோரொபைல் படம் இன்று பார்க்கும்போது என்னைப்பார்த்து சிரிப்பதாகத் தோன்றுகிறது..அவ்வ்வ்...:)

VijiParthiban said...

ஆஆ ... சூப்பர் பால்கொழுக்கட்டை அம்மா ... எனக்கு கடந்த முறை ஊருக்கு சென்ற போது என்னுடைய மாமியார் ( அத்தை) செய்துகொடுத்தார்கள்... மிகவும் சுவையாக இருந்தது... அதிலும் எனக்கு இனிப்பு என்றால் ம்ம்ம்ம்ம் சொலவே வேண்டியது இல்லை அப்படி புடிக்கும்.... நான்தான் மிக அதிகமாக சாப்பிட்டேன்... ஆனால் இப்பொழுது தங்கள் பதிவையும் படத்தையும் பார்த்தவுடன் எனக்கு அந்த ஞாபகங்கள் வந்துவிட்டன ( ஆசையும் )........ நன்றி அம்மா...

Asiya Omar said...

மிக இலகுவாக குறிப்பை சொல்லி விட்டீர்கள்,இதெல்லாம் பக்குவமாக செய்ய வேண்டும்.செய்ய ஆசை தான் பார்க்கலாம்.தற்சமயம் பார்த்து ருசித்து விட்டு செல்கிறேன் அக்கா.

'பரிவை' சே.குமார் said...

அம்மா...
நாங்கள் பால்கொழக்கட்டைசின்ன சின்னமாய் உருட்டி செய்வோம்...
எனக்கு ரொம்ப பிடிக்கும்...

சார்ஜா வந்தால் பால் கொழக்கட்டை அம்மா கையால் சாப்பிடலாம்...

ezhil said...

விளக்கம் தெளிவாக இருக்கிறது ... செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் எப்படி இருக்கிறதென்று...பதிவுக்கு நன்றி

ADHI VENKAT said...

இனிப்பு பிரியையான எனக்கு இந்த பால் கொழுக்கட்டை மிகவும் பிடித்தது தான்...

என் அம்மா உருட்டி தான் செய்வார்கள். தேங்காய்ப்பால் சேர்ப்பார். மாமியார் வீட்டில் இதுவரை செய்ததில்லை...

நிலாமகள் said...

ஹைய்யோ...! பார்த்ததும் பழைய ஞாபகங்கள்! அம்மா வீட்டில் அடிக்கடி சாப்பிட்டது. இப்போது குடும்பத்தினரின் விருப்பமின்மையால் எப்போதாவது தான் செய்வது. என் வாக்கிங் சிநேகிதி செய்யும் போதெல்லாம் எங்க வீட்டுக்கும் பங்கு வந்திடும் பங்குக்கு ஆளின்றி அப்ப்...படியே சாப்பிடுவேன்:))

இந்த வெண்ணை புட்டு என்று ஒன்று செய்வார்களே... தெரிந்தால் சொல்லவும்.

கீதமஞ்சரி said...

குழந்தைகளுக்குப் பல் முளைக்கும்போது மட்டும் செய்வது. வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தாலும் ஏனோ மற்ற நாட்களில் நினைவுக்கே வருவதில்லை. உங்கள் செய்முறைக் குறிப்பு பார்த்து இன்றே செய்யும் ஆவல் மிகுந்துவிட்டது. செய்துவிடுவேன். பகிர்வுக்கு நன்றி மேடம்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இளமதி said...
This comment has been removed by a blog administrator.
மனோ சாமிநாதன் said...

நானும் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும்போது பால் கொழுக்கட்டை செய்வார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன் மேனகா! அவசியம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!

மனோ சாமிநாதன் said...

வீட்டில் செய்த பின் ருசித்துப்பார்த்து விட்டுச் சொல்லுங்கள் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் ஷார்ஜா வரும்போது இந்த பால் கொழுக்கட்டை செய்து தருகிறேன் ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

மாமியார் ஆசையாக செய்து கொடுக்க ஆசையாய் சாப்பிடக் கொடுத்து வைக்க வேன்டும் விஜி! இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அவ‌சிய‌ம் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்க‌ள் ஆசியா! மிக‌வும் சுல‌ப‌மாக‌ச் செய்ய‌க்கூடிய‌ இனிப்பு இது!

மனோ சாமிநாதன் said...

ஷார்ஜா வந்தால், இந்த‌ப் பால் கொழுக்க‌ட்டை ம‌ட்டும‌ல்ல‌, ஒரு பெரிய‌ விருந்தே செய்து போடுகிறேன் குமார்! அவ‌சிய‌ம் விரைவில் வாருங்க‌ள்!!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து விட்டு சொல்லுங்க‌ள் எழில்!

மனோ சாமிநாதன் said...

நான் முன்பே சொன்ன‌ மாதிரி சில‌ வீட்டில் அவ‌சிய‌ம் தேங்காய்ப்பால் சேர்ப்பார்க‌ள் தேங்காய்த்துருவ‌லுக்குப் ப‌திலாக‌! பின்னூட்ட‌த்திற்கு அன்பு ந‌ன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

அடுத்த‌ முறை நீங்க‌ள் வீட்டுக்கு வ‌ரும்போது ஒரு நாள் இர‌வு த‌ங்குகிற‌ மாதிரி வாருங்க‌ள் நிலா! அவ‌சிய‌ம் பால் கொழுக்க‌ட்டை செய்து த‌ருகிறேன்!!

வெண்ணெய் புட்டு கேள்விப்பட்டதில்லை. தெரிந்தால் அவசியம் எழுதுகிறேன்!!

Jaleela Kamal said...

மிக அருமையான வெல்லம் முத்து கொழுக்கட்டை.
இது அரைத்து முறுக்கு அச்சில் பிழிந்து செய்வதில்லை.
இது அப்படியே வறுத்த் மாவை குழைத்து கையில் உருட்டி செய்வோம்.
இதை எங்க் மாமியார் செய்யும் போது எல்லா குட்டீஸும் சுற்றி உட்கார்ந்து கொண்டு போட்டி போட்டு கொண்டு உருட்டுவார்கள்.உருட்டி நாங்க செய்வ்தேஅதி ருசியாக இருக்கும்.


அதை விட நீங்க ஆட்டி முறுக்கு அச்சில் பிழிந்து செய்வது இன்னும் சுவை கூட்டும் என்பது நிச்சயம்...