Monday 25 March 2013

அன்பென்பது....!!!



சகோதரர் வெங்கட் நாகராஜ் இந்த ஓவியத்தை வெளியிட்டு, இதற்குப்பொருந்துமாய் கவிதை புனையச்சொல்லி அனைத்துப்பதிவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த ஓவியத்தைப்பார்த்ததும் சொக்கிப்போனேன். நிறைய சிந்தனைகளை, பழைய நினைவலைகளை, இளம் வயதில் படித்தவற்றை அந்த ஓவியம் கிளறி விட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

சங்க இலக்கியங்களில் காதலர்க்கு இடையில் இந்த அன்னம் மட்டுமல்ல, தும்பியும் குயிலும் வண்டும் மயிலும் பறவைகளும் தூதுவர்களாய் புனையப்பட்டார்கள்.

நளவெண்பாவில் நளன் அனுப்பிய அன்னம் தமயந்தியிடம் தூது வந்ததை ரவிவர்மாவின் ஓவியம் பிரபலமாக்கியது.



'நாராய் நாராய் செங்கல் நாராய்' என்று நாரைகள் கூட தலைவனுக்கு தூதாய் அனுப்ப தலைவிக்கு பயன்பட்டன!
 
சுவை மிக்க சங்க காலப்பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது! நாயகி மதுரை சொக்கநாதர் பால் மையல் கொண்டவள். அந்த இறைவனிடம் தூதாய்ச் செல்ல யாரை அனுப்புவது என்று யோசிக்கிறாள். அன்னம் என்றால் முன்னதாக நான்முகன் அன்னமாக வந்து பொய்யுரைத்த கதை நினைவுக்கு வந்து விட்டதாம். தும்பி என்றால், பாண்டியன் அவையில் நக்கீரனாரிடம் சென்ற இறைவன் எழுதிய பாடலில் 'தும்பியே, உண்மையைச் சொல் என்று அதட்டி கவி பாடியது நினைவுக்கு வரவே தயக்கம் வந்து விட்டதாம். மானை அனுப்பலாமென்றால், இறைவனின் உடலில் இருக்கும் புலித்தோலைப்பார்த்து மான் மருண்டோடி விட்டால் என்ன செய்வது என்று தலைவிக்கு குழப்பமாகி விட்டதாம். அப்புறம் தான் ஒரு யோசனை வந்ததாம். தமிழையே தூது அனுப்பினால் என்ன, தமிழ் பால் என்றுமே மனம் வசப்பட்டிருக்கும் இறைவனுக்கு தமிழை விட வேறு பொருத்தமான தூதுவர் இருக்க முடியுமா என்ன' என்று அந்த தலைவிக்கு முடிவேற்பட்டதாம். இப்ப்டி கடவுளுக்கு தமிழையே தூது அனுப்பிய கதையும் நம் சங்க காலப் பாடலில் இருக்கிறது.

தூது சொல்லுவோருக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டுமென்று திருவள்ளுவரும் அழகாய்
'அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.' என்ற குறளில் சொல்லுகிறார்.

அதற்கப்புறம் புறாக்கள் சாமானியர்களுக்குத் தூதாய் வந்தன. அரசர்களுக்கிடையில், காதலர்க்கிடையில் தூதாய் வந்தன.

காலம் செல்லச் செல்ல ஓலைச்சுவடிகள் மாறி, கடிதங்களும் தபால்காரரும் தூதுவர்களாய் பயன்பட்டார்கள். தபால்காரரின் வருகையை வழி மேல் விழி வைத்துக்காத்திருந்த உள்ளங்கள் எத்தனையோ! தூது செல்லும் முறைகள் மாறினலும் கவிஞர் கண்ணதாசனும் மற்ற கவிஞர்களும் சங்க காலப் புலவர்களுக்கு இணையாக மறுபடியும் பறவைகளையும் நிலவையும் மலர்களையும் தூது செல்லச் சொல்லி மறக்க முடியாத பல கவிதை மழையில் நனைந்தார்கள்.

'படகோட்டி' திரைப்படத்தில்
‘ பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?
துள்ளி வரும் மெல்லலையே, நீ போய் தூது சொல்ல மாட்டாயோ?’ என்று அலைகளைத் தூதாக மக்கள் திலகம் அனுப்பினார்.

‘ பச்சை விளக்கில்’ ‘ தூது செல்ல ஒரு தோழி இல்லையென்று துயர் கொண்டாயோ?’ என்று தலைவியிடம் தோழி பாடுகிறாள்.

திரைப்படப்பாடல்களில் இப்படி தூது சொல்லப்போய் நம் மனதைக் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன!

காதல் மட்டுமல்ல, மனம் நிறைந்த அன்பை, அக்கறையை, கவலையைப் பகிர்ந்து கொள்ள கடிதங்கள் மட்டுமே அன்று பெருமளவு உற்ற துணையாய் இருந்தன. என் மாமியார் உயிருடனிருந்த வரை அவரின் கடிதங்கள் எப்போதுமே பல பக்கங்களுடன் வரும். நலம் விசாரித்தல் மட்டுமே முழுசாய் ஒரு பக்கம் இருக்கும். என் தாய் வழிப்பாட்டியின் தகப்பனார் அவர் பெண் திருமணமாகி புகுந்த வீடு செல்லும்போது பல காகிதங்களில் தன் புத்திமதிகள் எல்லாவற்றையும் பொக்கிஷமாக எழுதிக்கொடுத்தார்.

இப்படி காதலையும் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்திய விதம் அன்று அருமையாக இருந்தன.

இன்றோ! கடிதங்களுக்கு பதிலாக தொலைபேசி வந்து, அதன் பின்னால் கைபேசியும் வந்து விட்டது. ஆனால் எதையும் வெளிப்படுத்த இன்றைக்கு நேரம் தான் இல்லை! ஈமெயிலும் குறுகி எஸ்.எம்.எஸ் இன்னும் மிகச்சுருக்கமாகச் சொல்ல வைக்கிறது! ஆழ்ந்த உணர்வுகள்தான் அவற்றில் இல்லை!! முழுமையாகப் புரிதலும் பகிர்தலும் செயல்க‌ளிலும் சிந்தனைகளிலும் ஒருமித்து உணர்தலுமே அன்பு! அது இன்று முழுமையாக, நிறைவாக எத்தனை பேரிடம் இருக்கிறது?

35 comments:

Yaathoramani.blogspot.com said...

Arumaiyaana aalamaana thoothu kurithta alasalukku manamaarndha nal vaazhththukkal

வெங்கட் நாகராஜ் said...

அட, எனது பகிர்வு உங்களது நினைவலைகளைத் தூண்டி ஒரு பகிர்வினை எழுதத் தூண்டியதே.... அதில் எனக்கும் மகிழ்ச்சி.

குறுஞ்செய்திகளில் எல்லாம் குறுகிவிட்டதே! வார்த்தைகளில் கூட சுருக்கம்!

தூது பற்றிய விவரங்களும் படங்களும் நன்று.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த அவசர உலகில் (முடிவில் உள்ளதுபடி) முழுமையாக நிறைவாக உள்ளது என்று பொய் சொல்ல விரும்பவில்லை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பல்வேறு நினைவலைகளை வெகு அழகாகத் தொகுத்து, பொருத்தமான படங்களுடன் வெளியிட்டுள்ளது, படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தூது சம்பந்தமான திரைப்படப்பாடல்கள் அனைத்தும் அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

Asiya Omar said...

நல்ல பகிர்வு.. அந்தக் காலம் அமைதி,இந்தக்காலம் அவசரம் ,இனி வரும் காலம் ! படங்களும் பகிர்வும் அருமை அக்கா.

பூ விழி said...

ஆம் நான்கு எழுத்து வார்த்தையும் இன்று ஒரு எழுத்தாய் மாறி சுருங்கிதான் விட்டது வாழ்க்கை நியாபக பதிவு நியாபகங்களை தூண்டியது

பூந்தளிர் said...

இப்பல்லாம் மெயிலும் எஸ் எம் எஸ்சும் தானே ஆட்சி செய்யுது. அருமையான பகிர்வு. கால்த்துக்கு தகுந்தப்போல மாறிக்க வேண்டி இருக்கே.

Anonymous said...

சிறந்த தகவல்கள் கொண்ட முத்தான கட்டுரை .
அருமை. வாழ்த்துக்கள் !

Ananya Mahadevan said...

//
இன்றோ! கடிதங்களுக்கு பதிலாக தொலைபேசி வந்து, அதன் பின்னால் கைபேசியும் வந்து விட்டது.// இப்போதெல்லாம் குறுஞ்செய்தியும் கிடையாது.. மிஸ்டு கால் மட்டும் தான்!அருமையான பகிர்வு!

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் மனோம்மா.

உஷா அன்பரசு said...

//இன்றோ! கடிதங்களுக்கு பதிலாக தொலைபேசி வந்து, அதன் பின்னால் கைபேசியும் வந்து விட்டது. ஆனால் எதையும் வெளிப்படுத்த இன்றைக்கு நேரம் தான் இல்லை! ஈமெயிலும் குறுகி எஸ்.எம்.எஸ் இன்னும் மிகச்சுருக்கமாகச் சொல்ல வைக்கிறது! ஆழ்ந்த உணர்வுகள்தான் அவற்றில் இல்லை!// - நிஜம்தான்....

கே. பி. ஜனா... said...

மகிழ வைத்தூது உங்கள் விவரமான கட்டுரை!

இளமதி said...

மனோ அக்கா... மனதை தொடும் பகிர்வு.

கிட்டத்தட்ட என் உணர்வும் உங்களதே... அருமையாகத்தொகுத்துத் தந்துள்ளீர்கள்.

உணர்வுக்கும் உறவுக்கும் இப்பெல்லாம் இடைவெளி மிக அதிகம் அக்கா.
எல்லாவற்றையும்....

நொடியில் இயக்கி
நொடியில் அனுபவித்து
நொடியில் முடிக்கின்றனர்
நொடித்துப்போகின்ற வாழ்வுடன்...:)

கோமதி அரசு said...

முன்பு அன்பை தாங்கி வரும் கடிதங்களை மறுபடியும் மறுபடியும் படிக்க ஆசையாக இருக்கும்.
இப்போது காதலர்களும் கடிதம் எழுதுவது இல்லை எல்லாம் அலைபேசியில் தான்.

உங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

அன்று நேரம் இருந்தது. வசதி (டெக்னாலஜி) இல்லை. இன்று வசதி இருக்கிறது. நேரம் இல்லை. நேரம் என்பதை மனம் என்ற வார்த்தையாலும் மாற்றலாம்.

ஒரு சிறு ஆய்வு போல அழகாக எழுதி எங்கள் மனதையும் கொஞ்ச நேரம் இது குறித்து யோசிக்க வைத்து விட்டீர்கள்.

kowsy said...

அன்றிலிருந்து இன்றுவரை தூது சென்ற வகைகளை அழகாக எடுத்து வந்திருக்கின்றீர்கள் உண்மை . இறுதி வரிகள் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள் . தூது செல்ல ஒரு தோழி இல்லை எனத் துயர் கொண்டாயோ தலைவி . என அன்னம் கேட்பது போல் இருக்கின்றது இந்தப் படம்

சிவகுமாரன் said...

அருமை.
அந்த சங்கப் பாடலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

க‌ருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் ஆசியா! அவசரம் தான் இப்போது உள்ள‌ காலமும் இனி வரும் காலமும்! கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துப்பகிர்வுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி பூவிழி!

மனோ சாமிநாதன் said...

காலத்துக்குத் தகுந்தாற்போல நாம் மாற வேன்டித்தானிருக்கிறது பூந்தளிர்! காலத்தோடு நல்ல விஷயங்களும் மாறிப்போவது தான் வருத்தத்தை அளிக்கிறது!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ஸ்ரவாணி!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு வருகை தந்திருக்கிறீர்கள் அனன்யா! மகிழ்வாக உள்ளது! ஆமாம், இந்த ' மிஸ்ட் காலை' மறந்தே விட்டேன் குறிப்பிட்டு எழுத!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வருகைக்கும் இனிய நன்றி சாந்தி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி உஷா!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி சகோதரர் ஜனா! உங்களின் வலைப்பக்கம் வரமுடியவில்லை! உங்கள் தளம் மின்னி மின்னி மறைகிறது!

மனோ சாமிநாதன் said...

//எல்லாவற்றையும்....

நொடியில் இயக்கி
நொடியில் அனுபவித்து
நொடியில் முடிக்கின்றனர்
நொடித்துப்போகின்ற வாழ்வுடன்...:)//
அருமை, அருமை இள‌மதி!! நான் விரிவாகச் சொன்னதை நீங்கள் சுருக்கமாக அழகாகச் சொல்லி விட்டீர்கள்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வருகைக்கும் ம‌னமார்ந்த நன்றி கோமதி அரசு!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது தான் சரி சகோதரர் ஸ்ரீராம்!!! நேரம் இல்லை என்பதை விட மனமில்லை என்பது தான் சரி! பாராட்டிற்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சந்திரகெளரி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு உள‌மார்ந்த நன்றி சிவகுமாரன்!!

Ranjani Narayanan said...

உங்கள் இந்தப் பகிர்விற்கு மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வதுபோல கடிதம் எழுதுவது இப்போது குறைந்து விட்டது கொஞ்சம் வருத்தமாக விஷயம்தான்.
என் அம்மா 'எப்போதும் கடிதம் எழுது; என்ன தொலைபேசி...' என்பாள்.
அதனால் அம்மாவிற்கு மட்டும் கடிதம் எழுதிவிடுவேன்.

தூது போவதிலிருந்து ஆரம்பித்து இன்றைய நிலை வரை வெகு அருமையாக விவரித்திருக்கிறீர்கள்.