Sunday 20 January 2013

ஒரு அனுபவமும் சில முத்துக்களும்!!!

அனுபவம்:

பொதுவாக அவ்வப்போது என் சர்க்கரையின் அளவை இங்கேயே குளூக்கோமீட்டரில் பரிசோதனை செய்து கொள்வது எனக்கு வழக்கம். அதை முதல் முதலாக வாங்கிய போது, இங்குள்ள என் கணவரின் சகோதரர் அதை எப்படியெல்லாம் Hygienic ஆகக் கையாள வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள். முக்கியமாக ஊசியை விரலில் குத்துவதற்கு முன் ஆல்கஹால் தடவிய பஞ்சால் விரலைத் துடைத்து பின் ஊசியால் குத்த வேண்டும்



பின் இரத்தத்துளியை அதற்கான ஸ்ட்ரைப்பில் வைத்து குளுகோமீட்டரில் சொருக வேண்டும். அது ஒரு சில விநாடிகளில் நம் ரத்தத்தின் அப்போதைய‌ சர்க்கரை அளவைக் காட்டும். அதன் பிறகு குத்திய ஊசியையும் ஆல்கஹால் தடவிய பஞ்சால் துடைக்க வேண்டும். இது மாதிரியே கடைப்பிடித்து பழக்கப்பட்டிருந்த எனக்கு ஒரு கசப்பான நிகழ்வை எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

நாலைந்து மாதங்களுக்கு முன்பு ஊருக்குச் சென்றிருந்த போது, பிரபல சர்க்கரை நோய் நிபுணரை சந்திக்கச் சென்றிருந்தேன். 3 மணிக்கு வரச்சொல்லியிருந்ததால் நான் அங்கே இரண்டரைக்கே சென்று விட்டேன். டாக்டர் ஐந்தரை மணிக்குத்தான் வருவார் என்று அதன் பிறகு சொல்ல, ‘ ஏன் அப்புறம் 3 மணிக்கு வரச்சொன்னீர்க்ள்?’ என்று கேட்டால் பதிலில்லை. கையோடு எடுத்துப்போயிருந்த நாவல் தான் உதவியது. ஒரு வழியாக டாக்டர் ஐந்தரைக்குப்பிறகு வந்ததும் அவரை சந்தித்தேன். என்னிடம் பேசிய பின் ‘சர்க்கரையின் அளவை நன்றாகத்தானே வைத்திருக்கிறீர்கள்! இருந்தாலும் இப்போது ஒரு டெஸ்ட் பண்ணி விடுகிறேன் என்றார். ஒரு பெண்ணைக்கூப்பிட்டார். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் ஒரு குண்டூசியை எடுத்து வந்து என் விரலில் குத்தியது. சரியாகக் குத்தவில்லை. அவர் ‘ நன்றாக குத்தும்மா!’ என்கிறார். அப்புறம் ஒரு வழியாக அது குத்தியதும் பக்கத்திலுள்ள குளூக்கோமீட்டரில் ஸ்ட்ரைப்பில் இரத்தத்ததைத் தடவி டெஸ்ட் செய்தது. துடைத்துக்கொள்ள சிறிது பஞ்சையும் தந்தது.

நான் அப்படியே பேச்சிழந்து போனேன். ஒரு மருத்துவர், அதுவும் பிரபலமானவர் சிறிது கூட சுகாதார உணர்வின்றி குண்டூசியால் குத்துகிறார். குளுக்கோமீட்டரின் ஊசிகளை மிச்சம் பிடிக்கிறாரா என்று தெரியவில்லை. 200 ரூபாய் ஃபீஸ் என்று ஒவ்வொரு தடவையும் வாங்குகிறார். அவர் இப்படி சுகாதாரக் குறைவாக நடந்து கொண்டால் ஒரு PATIENTன் உடல் நிலை என்னாவது? கடைசி வரை அவரிடம் இதைக் கேட்டு விடத்தான் நினைத்தேன். கடந்து சென்ற மூன்று மணி நேர அவஸ்தை நினைவுக்கு வந்தது. அதோடு அவர் எங்கள் குடும்ப நண்பரின் நண்பர். எதுவும் பேச முடியமல் வெளியே வந்தேன் இனி அவரிடம் செல்வதில்லை என்ற முடிவுடன்!!

மருத்துவ முத்துக்கள்

ஊரில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு வேப்ப மரம் இருந்தது. அது மாடி ஜன்னலுக்கு மேலே கிளைகள் விரித்துப் பரந்திருந்தது. அதனால் அந்தக் கிளைகள் வழியாக அறைகளுக்குள் ஒரு தினுசான கறுப்பெறும்புகள் எப்போதும் வந்து விடும். கடித்து விட்டால் உடனேயே அந்த இடம் வீங்கிக் கொண்டு வலி சுருக் சுருக்கென்று குத்த தாங்க முடியாத வலியிருக்கும். எந்த மருந்து தடவினாலும் உடனேயே வலி போகாது.

சமீபத்தில் தான் அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது. ஒரு உறவினர் சொன்னது இது. மருந்துக்கடைகளில் BETNOVATE என்ற க்ரீம் கிடைக்கிறது. பொதுவாக தோல் சம்பந்தமான நோய்களுக்கு இந்த க்ரீமைத்தடவுவார்கள். இந்த க்ரீம் எடுத்து தடவினால் உடனேயே வலி நின்று வீங்குவதும் குறைந்து விடுகிறது. அனுபவப்பூர்வமாகவும் செய்து பார்த்து விட்டேன்.

தேனீக்கள் கொட்டி விட்டால் உடனே பற்பசையை எடுத்து கொட்டுவாயில் தடவினால் அடுத்த சில நொடிகளில் வலி பறந்து விடும்.

42 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதலில் சொன்ன அனுபவத்தில் எனக்கும் நிறைய பழக்கம் + அனுபவம் உள்ளது மேடம்.

அதற்கென்றே தனியான ஊசிகள் விற்கிறது மேடம். அதை ஒரு முறை மட்டுமே பயன்ப்டுத்தி தூக்கி எறிந்து விடுவது தான் என் வழ்க்கம்.

நாமே மட்டும் தான் உபயோகிக்கிறோம் என்றாலும் அதை திரும்ப மீண்டும் மீண்டும் பயன் படுத்துவது இல்லை.

ஒரு முறை குத்தி ரத்த சாம்பிள் எடுக்கும் அந்த ஊசி விலை நான்கு ரூபாய் இப்போது.

அது ஒரு இங்ச் உயரத்தில் பிளாச்டிக் கவரேஜ் செய்யப்பட்டு இருக்கும்.

அதன் தலையில் ப்ளாஸ்டிக் கொண்டை போல இருக்கும்.

ஊசியைப் பயன் படுத்துவதற்கு முன்பு அந்தக்கொண்டையின் கழுத்தைத்திருகினால் தனியாக அது வந்து விடும்.

உள்ளே ஊசியின் குத்தும் பகுதி சுகாதாரமாக இருக்கும்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த நான்கு ரூபாய் ஊசியை ஒரு சின்ன துப்பாக்கி போன்ற கருவியில் பொருத்தி விடுவேன்.

One Tough Ultra Soft என்ற சிறிய கைத்துப்பாக்கி போன்றது.

அதில் அந்த ஊசியைப் பொருத்திவிட்டு, அந்தப் ப்ளாஸ்டிக் கொண்டையைத் திருகி எடுத்து விடுவேன்.

பிறகு பால் பாய்ண்ட் பேனாபோன்ற அந்தக்கருவியை மூடிவிடுவேன்,

இப்போது பஞ்சில் ஸ்பிரிட் தோய்த்து குத்தும் விரலை நன்கு துடைத்து விட்டு, அந்த இடத்தை நோக்கி அந்த பேனா போன்ற் கருவியை வைத்து அதில் உள்ள ஒரு சிறிய பட்டனைத்தட்டினால் போதும், வலியில்லாமல் ஒரு சொட்டு ரத்தம் வந்துவிடும். அதை அழுத்தி எடுத்து,
ரெடியாக வேறு ஒரு கருவியில்
[ONE TOUCH HORIZON] வைத்துள்ள ஸ்ட்ரைப்பில் வைத்து விட்டால் போதும்.

துல்லியமாக நம் ரத்தத்தின் குளூகோஸ் சர்க்கரை அளவைக் காட்டிவிடும். அதை உடனே தேதி நேரம் Fasting or PP எனக் குறித்துக்கொள்ள ஒரு சின்ன நோட் + பேனா தயாராக இருக்கும்.

>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த நான்கு ரூபாய் போட்டு வாங்கிய சுகாதாரமான ஊசியையும் திரும்பப் பயன்படுத்தாமல் அதிலிருந்து கழட்டிய கொண்டையை லேசாக அந்த ஊசி நுனி பாகத்தில் சொருகி குப்பைத்தொட்டியில் போட்டு விடுவோம்,

குண்டூசியெல்லாம் போடவே கூடாது. துருப்பிடித்திருந்தாலும் போச்சு.

ஸ்ட்ரைப் விலை Good Quality Genuine company என்றால் ரூ 35 ஆகிறது. ஊசி விலை ரூ 4 ஆக மொத்தம் பஞ்சு ஸ்பிரிட் முதலியன சேர்த்து ஒரு முறை சோதிக்க ரூ. நாற்பது ஆகிறது. இது Recurring Expenditure.

இதைத்தவிர அந்த க்ளூகோமீட்டர் கருவி + அந்த ஊசியை பயன்படுத்த உதவும் பேனா அல்லது துப்பாக்கி போன்ற கருவி அது ஒரு மூலதனச் செலவு. Capital Expenditure. அது பலவிலைகளில் உள்ளது. நல்ல கம்பெனியின் தயாரிப்பு என்றால் ரூ. 2000 க்குக் குறையாது.

>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதுபோல இரண்டு வேளையும் என் வீட்டில் என் மனைவிக்கு இன்சுலின் நான் தான் போட்டு விடுகிறேன்.

அதிலும் பலவகையான விதிமுறைகளைப் ஒழுங்காக நாம் பின்பற்றி, மிகவும் சுகாதாரமான முறைகளைத்தான் கையாள வேண்டியுள்ளது.

தினமும் ஒவ்வொரு வேளையும் டிஸ்போசபுள் ஊசி. மிகவும் மெல்லியதாக, அளவுகள் குறிக்கப்பட்டதாக இருக்கும்.

அதையும் ஒவ்வொரு வேளையும் போட்டதும் தூக்கி எறிந்து விடுவேன்.

ஊசி குத்தும் இடத்தை நன்கு பஞ்சினால் ஸ்பிரிட்டில் தோய்த்து தேய்த்து விட்டு, குத்தவேண்டிய இடத்தை சற்றே உப்பலாக்கிக் கொண்டு, மெதுவாக மருந்தை செலுத்த வேண்டியுள்ளது.

அதுபோல அவர்களுக்கும் வலிக்காமல், மெதுவாக வெளியே எடுக்கணும்.

மிக மெல்லிய அந்த ஊசி உடைந்து உள்ளே மாட்டிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக மெதுவாக எடுக்கணும்.

அதுபோல ஊசி மருந்துகளின் பாட்டில் மூடிகளையும் ஸ்பிரிட் போட்டு பஞ்சால் ஒவ்வொரு முறையும் துடைத்து விட்டே, மருந்தை நாம் ஊசியில் ஏற்ற வேண்டும்.

இதுபோல பல விதிமுறைகளை கவனமாகக் கையாள வேண்டியுள்ளது.

தாங்கள் சொல்வது போல சில ஆஸ்பத்தரிகளிலேயே இதையெல்லாம், கவனமாகச் செய்வது இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது தான்.

பணம் வாங்கிக்கொண்டு வைத்தியம் செய்பவர்கள் இப்படியெல்லாம் பொறுப்பு இல்லாமல் இருந்தால் நாம் என்ன செய்வது?

இதில் பாதிப்பு நோயாளியாகச் செல்லும் நமக்குத்தானே!

>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

வேப்ப மரத்தில் உள்ள அவற்றின் பெயர் சுளுக்கி என்பது. கடித்தால் மிகவும் வலிக்கும். தேள்கடி போல இருக்கும்.

இந்த சுளுக்கி + தேனீக்கள் கடிக்கு பற்பசை வைத்தியம் பற்றிச் சொன்னது
மிகவும் பயனுள்ளது.

ப.கந்தசாமி said...

உபயோகமான பதிவு.

திரு.வை.கோ.அவர்களுக்கு, நீங்கள் பயன்படுத்தும் குளுகோமீட்டர் எந்தக் கம்பெனியினுடையது என்று தயவு செய்து சொல்லவும்.

நிலாமகள் said...

பெரும்பாலான மருத்துவர்கள் இயந்திர மனதுடன்... கட்டணத்தில் மட்டுமே குறி.

சிறு குழந்தைகளை எறும்பு கடித்து வீங்கினால் சிறிது விபூதியை தேய்த்துவிடுவது வழக்கம். இனி கைவசம் ஆயின்மெண்ட் வைத்துக் கொள்ளலாம்.

தேனீக்கு சுண்ணாம்பு. அதைவிட உடனடியாக எல்லோரிடமும் இருக்கும் பற்பசை சிலாக்கியம் தான்.

வெங்கட் நாகராஜ் said...

மருத்துவரே இப்படிச் செய்தால் என்ன சொல்வது....

தேள்கடிக்கு மருந்து நல்ல பயனுள்ளது....

கே. பி. ஜனா... said...

தங்கள் பதிவும் சரி, கோபால கிருஷ்ணன் பின்னூட்டமும் சரி, பயனுள்ளதாக...

arasan said...

தேனீக்கள் கடிக்கு மருத்துவமுறை புதியது .. பயன்படுத்தி பார்க்கிறேன்

RajalakshmiParamasivam said...

உங்கள் அனுபவம் பகிர்ந்து கொண்டு எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்திவிட்டீர்கள்.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .மருத்துவர்களே இப்படி செய்தால்....

ராஜி



Ahila said...

அவசியமான அறிவுரைகள்தான் இவை. பகிர்தலுக்கு நன்றி மனோ...

RAMA RAVI (RAMVI) said...

மிக்க நன்றி மனோ மேடம் எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த்ததற்கு.

2/3 தினங்களொரு சிறு ஆன்மீக பயணம் மேற்கொண்டதால் பதிவு பக்கம் வர முடியவில்லை. அதனால தாமதமாக பதிவுகளை பார்க்க முடிந்தது. மிக்க நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

மருத்துமனையில் சுகாதரக் குரைவு என்றால் மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

உபயோகமான BETNOVATE தகவலுக்கு, நன்றி மேடம்.

MANO நாஞ்சில் மனோ said...

டாக்டர்கள் பலவிதம் அதில் இவர்கள் ஒருவிதம் வேற என்னாத்தை சொல்ல...

தேனீ கடிக்கு சொன்ன மருத்துவம் புதிதும் பிரயோசனம் உள்ளதும்...எங்க அம்மாவுக்கு சொல்லனும் இந்த மருந்தை, எங்கவீட்டில் அடிக்கடி தேனீக்கள் கூடு கட்டுவதும், அம்மா தேன் எடுப்பதும் உண்டு.

இளமதி said...

வணக்கம் அக்கா.. அவசியமான அவசரமான நல்ல பதிவு.

மருத்துவமனைகள், மருத்துவரிடமே இப்படியான கவனக்குறைவு வருத்தத்தைத் தருகிறது.
ஆனால் கசப்பான உண்மைதான்...:(

தேனீக்கடிக்கு நல்ல உபயோகமான உடனடி நிவாரணம் நல்ல தகவல்.

பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா...

ADHI VENKAT said...

மருத்துவரே இப்படி செய்வது வருந்ததக்கது. யாரும் மனசாட்சியின் படி நடந்து கொளவ்து இல்லை...:(

நான் வியர்க்குருவுக்கும் பூச்சிக்கடிக்கும் CALADRYL LOTION தான் பயன்படுத்துவேன். இனி BETNOVATE பயன்படுத்துகிறேன். தகவலுக்கு நன்றிம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பழனி. கந்தசாமி said...
உபயோகமான பதிவு.

திரு.வை.கோ.அவர்களுக்கு, நீங்கள் பயன்படுத்தும் குளுகோமீட்டர் எந்தக் கம்பெனியினுடையது என்று தயவு செய்து சொல்லவும்.//

அன்புள்ள ஐயா, வணக்கம்.

என்னிடம் உள்ளது மிகவும் தரமானது. பயன்படுத்த சுலபமானது, அளவில் அது மிகச்சிறியது.

துபாயில் உள்ள என் பெரிய மகன் வாங்கி வந்தது. எனக்கு அதன் விலை மட்டும் தெரியாது.

ஆனால் நிச்சயமாக மிகத்தரமான விலை அதிகமான லேடஸ்டு டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே என் மகன் தேர்ந்தெடுத்து வாங்குவான்.

விலையைக்கேட்டால் எப்போதுமே சொல்ல மாட்டான். அவனுக்கே கூட அதுபற்றியெல்லாம் தெரியாது என்பேன்.

பிடித்த பொருளை உடனே வாங்குவான். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு. ஏ.டி.எம். கார்டு என எதையாவது கடையில் நீட்டுவான். அத்தோடு அவன் வேலை சரி.

கையில் காலணா இல்லாமல் உலகம் பூராவும் அடிக்கடி சுற்றிவரும், “உலகம் சுற்றும் வாலிபன்” அவன்.

நான் வைத்திருப்பது எல்லாமே பஞ்சு உள்பட மிகவும் ஒஸத்தியான, மிகவும் பாதுகாப்பான, சுகாதாரமான பொருட்கள் மட்டுமே.

முடிந்தால் அவற்றை போட்டோ பிடித்து தனிப்பதிவாகவோ அல்லது உங்களுக்கு மட்டும் மெயில் மூலமோ அனுப்பி வைக்கிறேன்.

BLOOD GLUCOSE METER MANUFACTURED BY "LIFESCAN" DIVISION OF M/S. JOHNSON & JOHNSON COMPANY ESPECIALLY MADE FOR CE, LIFESCAN INC. 1000, GIBRATOR DRIVE, MILPITAS, CA 95035, U.S.A.,


அன்புடன்
VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

கே. பி. ஜனா... said...
தங்கள் பதிவும் சரி, கோபால கிருஷ்ணன் பின்னூட்டமும் சரி, பயனுள்ளதாக...//

மிக்க நன்றி Mr K.B. ஜனா Sir.

நேரமின்மை + பொறுமையின்மை + சந்தர்ப்ப சூழ்நிலை சரியாக இல்லாமை போன்றவற்றால்

அவசர அவசரமாக ஏதோ எனக்குத் தோன்றியதை, ஒருசில எழுத்துப் பிழைகளுடன் பின்னூட்டமாகக் கொடுத்துள்ளேன்.

இதைப்பற்றியெல்லாம் என் அனுபவத்தில், ஏராளமாகவும், தாராளமாகவும் எழுத முடியும்.

அவ்வாறு நான் எழுதினால் என் சமீபத்திய “அடை”ப்பதிவினை விட, பெரிதாகவே, அழகாகவே, அற்புதமாகவே, பிறருக்குப் பயன் அளிக்கும் படியாகவே நிறைய பகுதிகள் என்னால் எழுத முடியும்.

நல்ல வரவேற்பும் கிடைக்கக்கூடும்.

பிராப்தம் இருந்தால் பார்ப்போம்.


நன்றியுடன் VGK

சமீரா said...

மருத்துவர்கள் பலர் இப்போது இப்படித்தான் இருக்கின்றனர்.. எனக்கு தெரிந்து சின்ன வயதில் எங்கள் குடும்ப மருத்துவரின் மனைவியும் ஒரு மருத்துவர் தான். அவரது வொயிட் கோட் எப்பொதும் மிக அழுக்காகவே இருக்கும்.. இதுவும் ஒருவகை சுகாதாரகேடு தான்..

தோல் ஆயின்மென்ட் - புதிய தகவல்.. நன்றி அம்மா!!

”தளிர் சுரேஷ்” said...

சில மருத்துவர்கள் இப்படித்தான்! மருத்துவ குறிப்புக்கள் பயனுள்ளவை பகிர்வுக்கு நன்றி!

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள் சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன்! என் மனங்கனிந்த நன்றி உங்களுக்கு!
குளுகோமீட்டரில் பயன் படுத்தப்படும் ஊசி ஒருத்தருக்கு மட்டும்தான் உபயோகிக்கப்படுகிறது என்றால் அந்த ஊசியை 10 தடவைகளாவது பயன்படுத்தலாம். அதில் தப்பெதுவுமில்லை. ஒவ்வொரு தடவையுக் குத்தியதும் ஆல்கஹால் த‌டவிய பஞ்சால் ஊசியை துடைக்க‌ வேன்டும். அது மட்டும்தான் முக்கியம்.

பொதுவாக இன்சுலின் போட்டுக்கொள்பவர்கள் அவர்களாகவே போட்டுக்கொள்ளுகிறார்கள். தினமும் தண்ணீர் குடிப்பது போல இது சர்வ சாதாரண‌மாகப் போய் விட்டது!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் கந்தசாமி!

ACCU CHECK என்ற‌ குளுகோமீட்டர் கிட் இந்தியாவிலும் கிடைக்கிறது. தரமானது.
OMRON என்ற பிராண்ட் ரொம்பவும் சிற‌ந்தது. நான் அதைத்தான் உபயோகிக்கிறேன். ஆனால் அதன் ஸ்ட்ரைப்ஸ் இந்தியாவில் கிடைப்பதில்லை.

Anonymous said...

தெரிந்தவர்களுக்கே இந்த கதி என்றால் ?
நீங்கள் எடுத்த முடிவே சரி !

Asiya Omar said...

Betnovate தகவலுக்கு நன்றி அக்கா,இங்கும் நீங்க சொன்ன கறுப்பு எறும்பு வந்து என்னை இரு தடவை கடிச்சிருக்கு,நீங்க சொன்ன மாதிரியே அனுபவம்..இனி வாங்கி வீட்டில் வச்சிட வேண்டியது தான்..

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் என் அன்பு நன்றி சகோதரர் ஜனா!

மனோ சாமிநாதன் said...

ப‌ய‌ன்ப‌டுத்திப்பாருங்க‌ள் அரசன்! வருகைக்கு மிக்க நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ராஜி! பொதுவாக மருத்துவர்களிடம் எனக்கொரு ராசி இருக்கிறது இந்த மாதிரி! இவரும் அதற்கு விதிவிலக்கல்ல!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி அகிலா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி ரமா!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பின் வருகை தந்திருக்கிறீர்கள் மனோ! மகிழ்வாக உள்ளது. அம்மாவிடம் சொல்லும்போது BETNOVATEஐயும் வாங்கி வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். இந்த ஆயின்மெண்டும் பயன்படலாம். ஏனெனில் எறும்புக்கடிக்கு இதை நானே உபயோகித்தேன். உடனேயே வீக்கம் குறைந்து ஒரு சில நொடிகளில் வலியும் நின்றது!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு மனம் கனிந்த நன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் க‌ருத்துரைக்கும் அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

நான் எடுத்த முடிவு சரி என்று சொன்னதற்கு நன்றி ஸ்ரவாணி! ஆனால் இன்னும் இப்படியே எத்தனை மருத்துவர்களிடம் தான் செல்வது?
மருத்துவர்களிடம் நம்பிக்கை வரவர குறைந்து கொண்டே வருகிறது!

மனோ சாமிநாதன் said...

அவசியம் உபயோகியுங்கள் ஆசியா! ஏதோ விள‌ம்பரத்தில் சொல்வது மாதிரி இருக்கிறதா?

கோமதி அரசு said...

நல்ல பயனுள்ள தகவல்.

பொறுபில்லா மருத்துவர்களின் செயல் வருந்தத்தக்கது.

கோவையில் என் அத்தை வீட்டில் சுளுக்கு எறும்பு கடித்த அனுபவம் இருக்கிறது என் அத்தை அமிர்தாஞ்சனம் தட்வ சொல்வார்கள்.
நீங்கள் குறிப்பிட்ட மருந்தை தடவி பார்க்கிறேன். நன்றி.

//இதைப்பற்றியெல்லாம் என் அனுபவத்தில், ஏராளமாகவும், தாராளமாகவும் எழுத முடியும்.

அவ்வாறு நான் எழுதினால் என் சமீபத்திய “அடை”ப்பதிவினை விட, பெரிதாகவே, அழகாகவே, அற்புதமாகவே, பிறருக்குப் பயன் அளிக்கும் படியாகவே நிறைய பகுதிகள் என்னால் எழுத முடியும்.

நல்ல வரவேற்பும் கிடைக்கக்கூடும்.//

எழுதுங்கள் வை. கோபாலகிருஷ்ணன் சார், எல்லோருக்கும் பயனுள்ளதாக் இருக்கும் அல்லவா!

ஸ்ரீராம். said...

பயனுள்ள தகவல்கள். பின்னூட்டத்தில் வைகோ சார் நல்லபல தகவல்கள் கொடுத்துள்ளார். மருத்துவர் செய்த காரியம் அதிர்ச்சியைத் தந்தது.

Menaga Sathia said...

தேள்கடி மருந்து நல்ல பயனுள்ளதாக இருக்கு...

Kanchana Radhakrishnan said...

பயனுள்ள தகவல்கள். பகிர்தலுக்கு நன்றி மனோ.

Anonymous said...

After 38 ...comments..
கருத்துரைகளின் பின் வருகிறேன் மிக நல்ல அனுபவங்கள் இரண்டும். படிப்பினை கூட.
சகோதரி 3 மாதத்திங்கு ஓரு தடவை நாமிருவரும் சீனி இரத்த அழுத்தம் செக் பண்ணப்போவோம்.
நமக்கு 60க்கும் மேலானதால் இப்படி.
ஓரு பெரிய தடித்த ஊசியால் குத்துவினம். சரியாக நோகும். முதல் அனுபவத்தின் பின் எனது ஊசியைக் கொண்டுபோய் நானே குத்தி எடுக்க விடுவேன்.
சகோதரி தங்கள் கண்ணாடிப் பெயின்டிங் பாவித்து ஓரு காதல் கவிதை போட்டுள்ளேன் எனது வலையில் நன்றி தங்களிற்கு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ரிஷபன் said...

அதோடு அவர் எங்கள் குடும்ப நண்பரின் நண்பர். எதுவும் பேச முடியமல் வெளியே வந்தேன் இனி அவரிடம் செல்வதில்லை என்ற முடிவுடன்!!

நல்ல முடிவு.

உங்க நண்பர்ட்ட சொன்னீங்களா.

Ranjani Narayanan said...

எனக்கும் இந்த மாதிரி ஒருமுறை மருத்துவரிடம் கசப்பு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.
நீங்கள் சொல்வது போல எத்தனை மருத்துவர் மாற்றுவது?
இப்போதெல்லாம் அவர் ஊசி என்றால் அவசரமாக நானே போய் வாங்கிவருகிறேன் என்று சொல்லி வெளியே வந்து வாங்கி வந்து கொடுத்துவிடுகிறேன்.

உங்களது கண்ணாடி ஓவியத்திற்கு திருமதி வேதா இலங்காதிலகம் உயிரோட்டமுள்ள கவிதை எழுதி இருக்கிறார் படித்தீர்களா?

இணைப்பு இதோ:http://wp.me/pYIP1-2KV