Sunday 16 December 2012

ஒரு நாள் நீங்களும் மூப்படைவீர்கள்!!

ஒரு பதிவு எனக்கு ஈமெயிலில் வந்தது. ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் ஓரளவு அழகாக சொல்ல முயன்றிருக்கிறேன். இது ஒரு மருத்துவர் தன் பார்வையில் சொல்வதாக அமைந்திருக்கிறது. படித்து முடிந்ததும் உணர்வுகள் நெகிழ்ந்து மனம் கனமானது! அந்த மருத்துவர் சொல்வது போலவே எழுதியிருக்கிறேன். படிக்கும் நீங்களும் நிச்சயம் நெகிழ்ந்து தான் போவீர்கள்!

மூப்பு என்பது சாதாரண விஷயமல்ல! அது வரை மின்வேகத்துடன் நம் கட்டளைக்குப் பணிந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புகள் மெல்ல மெல்லத் தளர்வடைய ஆரம்பிக்கும். அது வரை அனுபவித்திராத வியாதிகள் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து வந்து தாக்கும். அந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் உடலோடு சேர்ந்து மனமும் தளர ஆரம்பிக்கும். உற்சாகம் இழக்கும். அந்த இரண்டு தாக்குதல்களும் ஒன்றுமேயில்லை என்று நினைக்கும்படி செய்ய ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே சக்தி உண்டு.

பாரதி ‘ துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி!’ என்று அன்றே எழுதியிருப்பது போல அன்பை விட சிறந்த மருத்துவம் வேறெதுவுமில்லை.

பெண் குழந்தையானாலும் ஆண் குழந்தையானாலும் அவரவர் உலகத்தில் வாழ வேண்டியவர்கள். அவர்கள் சிறகுகள் முளைத்து உயரே உயரே பறக்கப் பறக்க, அவர்களின் அன்பு கிளைகள் விட்டு பரந்து விரிகிறது. கடைசி வரை இந்த அன்பை நெஞ்சில் சுமந்து கருணையும் அக்கறையுமாய் கணவனும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் அமைந்து விட்டால் அதை விட வேறு சொர்க்கம் தேவையில்லை.



அப்படி அமைந்த ஒரு கணவனின் உணர்வுகள் இவை!!!

இனி மருத்துவர் பேசுகிறார்.. ..

“ அன்று காலை எனக்கு சிறிதும் ஓய்வில்லை. சுமார் எட்டரை மணி அளவில் அந்த வயோதிகர் வந்தார். 80 வயதான அந்தப் பெரியவர் தன் கட்டை விரலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு ட்ரெஸ்ஸிங் செய்ய வந்திருந்தார். அவர் முகத்தில் பரபரப்பும் அவசரமும் தெரிந்தன. 9 மணி அளவில் தனக்கு ஒரு முக்கியமான காரியம் உள்ளதாகவும் சீக்கிரம் தன்னை கவனித்து அனுப்பி விட முடியுமா என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

நானே அவரை கவனித்து, காயத்திற்கு மருந்து போட்டு முடிக்கையில் ‘ எதனால் இந்த பரபரப்பு, வேறு யாராவது மருத்துவரிடம் செல்ல வேண்டுமா ’ என்று கேட்டேன். அவர் அதை மறுத்து விட்டு, தான் ஒரு மருத்துவமனைக்குச் சென்று தன் மனைவியுடன் அங்கே சாப்பிட வேண்டும் என்றும் தான் இன்னும் காலையுணவு அருந்தவில்லையென்றும் தெரிவித்தார்.



அவர் மனைவிக்கு என்ன ஆனது என்று கேட்டதும் தன் ம‌னைவிக்கு ‘அல்ஜீமர் [ALZHEIMER’S] நோய் பாதித்திருப்பதாகச் சொன்னார். கடந்த கால நினைவுகள், உறவுகள் எல்லாம் மெல்ல மெல்ல மறந்து போகும் கொடிய நோய் அது! மேலும் பேசிய போது ‘ சிறிது நேரம் தாமதமானால் அவர்கள் மனது பாதிப்படையுமா ’ என்று நான் கேட்டதற்கு, அவர் ‘ தன் மனைவிக்கு இப்போது தன்னை யாரென்றே தெரியாது என்றும் கடந்த 5 வருடங்களாக தன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை’ என்றும் சொன்னார். நான் அப்படியே அதிர்ந்து போனேன். ‘ உங்களை இப்படி அவர்கள் மறந்திருந்தும் நீங்கள் தினமும் காலை எப்படி இது போலச் செல்கிறீர்கள்?’ என்றேன். அவர் சிரித்தவாறே என் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘அவளுக்குத்தான் என்னை யாரென்று தெரியாதே தவிர, எனக்கு அவளை யாரென்று தெரியுமல்லவா?’ என்று கேட்டு மறுபடியும் புன்னகை செய்தார்!!



திரண்டு வந்த கண்ணீர்த்துளிகளை நான் மிகுந்த சிரமப்பட்டுத்தான் அடக்கினேன்.

அன்பு என்பது உடல் சார்ந்ததோ, காதல் சார்ந்ததோ இல்லை. எது எப்படி இருக்கிறதோ, அல்லது எது இனிமேல் எப்படி இருக்குமோ, அல்லது எது எப்படி இருந்ததோ அத்தனையையும் அன்பிற்குரியவர்களுடன் அப்படியே ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம்!

மிக மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, எல்லாமே சிறந்ததாக அமைந்திருக்கும் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ, அதை மிக சிறப்பானதாக செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்! வாழ்க்கை என்பது  எப்படி புயலை சமாளிக்க வேண்டும் என்பதல்ல. எப்படி அடர்ந்த மழையிலும் மகிழ்வுடன் நடனமிட முயல வேண்டும் என்பது தான்!


 

38 comments:

இளமதி said...

அக்கா...இப்பதிவு பார்த்ததும் மனது மிக கனக்கிறது... பேச வார்த்தை இல்லை...

100/100 வீதம் உண்மை. வயதான காலத்தில் பொதுவாகவே ஆதரவின்றி வாழ்வது கொடுமை. அதிலும் உற்ற உறவான அன்பான.. கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் இப்படி ஏதாகிலும் நோய்வாய்ப்படுவதோ அல்லது இல்லாமலே போய்விடுவதோ மிகமிகக் கொடுமை+ கொடூரம்..

//வாழ்க்கை என்பது எப்படி புயலை சமாளிக்க வேண்டும் என்பதல்ல. எப்படி அடர்ந்த மழையிலும் மகிழ்வுடன் நடனமிட முயல வேண்டும் என்பது தான்! //

எத்தனை யதார்த்தமானது....மனது சம்பந்தப்பட்டது. முயலவேண்டும்...

இங்கே எனக்குத்தெரிந்த ஒரு தம்பதியினர்(வயது இதில் கூறப்பட்டவரிலிருந்து ஏறத்தாழ 20 வயது குறைந்தவர்கள்) கணவனுக்கு சுய உணர்வில்லை..மனைவிதான் இதே நிலையில் பாடுபடுகிறார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மாட்டார் எனத்தெரியும். ஆனாலும் கடந்த வாழ்ந்த வாழ்க்கை மனதில் நிழலாட இப்பவும் அதே அன்பு மாறாமல், நீங்கள் கூறியதுபோல 100வீதம் கொட்டும் மழையில் மகிழ்வுடன் ஆட முடியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் ஆடுகிறார். இந்தப் பதிவை நிச்சயம் அவருக்கு நான் கூறி 100வீதமாக மாற்ற முயலுகிறேன்...

அருமையான பதிவு அக்கா. பகிர்வுக்கு மிக்க நன்றி...

Yaathoramani.blogspot.com said...

மனம் நெகிழச் செய்யும் அருமையான கவிதை
அழகாக உணர்வுப் பூர்வமாக பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி.தொடர வாழ்த்துக்கள்

நிலாமகள் said...

அன்பின் வசீகரத்தை இதை விட நெகிழ்வாக சொல்ல முடியாது. அம்முதியவரின் பதிலில் நானும் கலங்கித் தான் போனேன். முடிப்பாக நீங்க எழுதிய இரு பத்திகளும் தோள் தட்டி ஆசுவாசப் படுத்தின. எல்லாமே இதனுள் அடங்கி விட்டதே!!

நிலாமகள் said...

அன்பின் வசீகரத்தை இதை விட நெகிழ்வாக சொல்ல முடியாது. அம்முதியவரின் பதிலில் நானும் கலங்கித் தான் போனேன். முடிப்பாக நீங்க எழுதிய இரு பத்திகளும் தோள் தட்டி ஆசுவாசப் படுத்தின. எல்லாமே இதனுள் அடங்கி விட்டதே!!

ஸ்ரீராம். said...

தாம்பத்யம் ஒரு சங்கீதம். பாசத்தினால் பின்னப் பட்டு பரிவு ராகத்தில் அமைந்த இனிமையான பாடல்.

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட பகிர்வு. கொடுத்திருந்த படங்களும் அற்புதம்....

துளசி கோபால் said...

அருமை.

பகிர்வுக்கு நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

அன்பு என்பது உடல் சார்ந்ததோ, காதல் சார்ந்ததோ இல்லை. எது எப்படி இருக்கிறதோ, அல்லது எது இனிமேல் எப்படி இருக்குமோ, அல்லது எது எப்படி இருந்ததோ அத்தனையையும் அன்பிற்குரியவர்களுடன் அப்படியே ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம்!

உண்மையிலும் உண்மைதான்

ஹுஸைனம்மா said...

ஒவ்வொருவரும் - மூப்பு அடைந்தவர்களும், மூப்பை நோக்கிப் பயணிப்பவர்களும் - அடைய விரும்பும் நிலை. இறைவன் எல்லாரையும் காக்கட்டும்.

RajalakshmiParamasivam said...

படித்து முடிக்கும் போது கணத்த மனதோடு தான் முடித்தேன்.கண்ணில் நீர் வரவழைத்தது அந்த கதை.ஆனால் நிஜத்தில் நம் ஊர்களிலேயே இந்த நோய்
நிரம்ப கேள்வி பட ஆரம்பித்திருக்கிறோம்.

நல்ல தம்பதிகளின் புரிதல் இப்படிதான் இருக்கும் என்றுசொல்லியது உங்கள் பகிர்வு.

பகிர்வுக்கு நன்றி.

ராஜி

Asiya Omar said...

//‘அவளுக்குத்தான் என்னை யாரென்று தெரியாதே தவிர, எனக்கு அவளை யாரென்று தெரியுமல்லவா?’ என்று கேட்டு மறுபடியும் புன்னகை செய்தார்!! //

ரொம்ப டச்சிங்கான வரிகள்.அக்கா இளம்வயதில் அப்படி இப்படி இருப்பவர்கள் கூட மூப்பில் இணைபிரியா தம்பதிகளாய் இருப்பது தான் மூப்பின் மகத்துவம்.
நல்ல பகிர்வு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


Really super.....Old age is gold age when Elders are bold enough to tackle!

ஹுஸைனம்மா said...

இந்த (நிஜ??)கதைப் படித்துப் பாருங்க அக்கா:
http://moonramsuzhi.blogspot.com/2012/12/blog-post.html

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு பகிர்வு.

'பரிவை' சே.குமார் said...

அம்மா...

அருமையான பகிர்வைத் தந்திருக்கிறீர்கள்...

அதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்...

இராஜராஜேஸ்வரி said...

மிக மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, எல்லாமே சிறந்ததாக அமைந்திருக்கும் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ, அதை மிக சிறப்பானதாக செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்!

அருமையான அன்பின் பகிர்வு..

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் இளமதி! நீங்கள் சொல்வது போல, பிள்ளைகளின் அன்பும் இல்லாமல், கணவனும் இறந்து போய் தனிமைத்தீயில் தினமும் கருகும் என் சினேகிதியை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். எந்த உறவின் அன்பும் இல்லாமல் பிடிமானமும் இல்லாமல் பலப்பல வியாதிகளுடன் வாழ்க்கையின் இறுதிப்பகுதியைக் கழிக்க நேருவது கொடுமையிலும் கொடுமை! எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பினை இருக்க வேண்டும்.
க‌ண‌வ‌ரோ, ம‌னைவியோ உண‌ர்வில்லாம‌ல் போவ‌து அத‌னினும் கொடுமை! ந‌ம் இணைய‌ ச‌கோத‌ரி ல‌க்ஷ்மியும் தன் உணர்வில்லாத கணவரை 14 வருடங்கள் அருமையாகப் பார்த்துள்ளாரகள் !

அருமையான‌ பின்னூட்ட‌ம் தந்திருக்கும் உங்க‌ளுக்கு என் அன்பு ந‌ன்றி!!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டம் தந்ததற்கு இனிய நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் நிலாமகள்! அன்பின் வசீகரம் க‌டைசி வரை வசீகரமாக இருப்பதில்தான் வாழ்க்கையின் எல்லா அர்த்தங்களும் அடங்கியிருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

அழகான வரி SRIRAM! மிகவும் ரசித்தேன் நீங்கள் எழுதியதை!

மனோ சாமிநாதன் said...

பாராட்டு மனதிற்கும் இதமாக இருந்தது துளசி! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

Anonymous said...

மனம் மிகப் பாரமாக இருந்தது. எனக்கும் 65வயது முடிந்து விட்டது.
முதுமை பொல்லாதது தான் உடற்பயிற்சி நல்ல உணவு அன்பான வாழ்வு அமைதி தரும்.
நல்ல பதிவு.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Jaleela Kamal said...

mika arumaiyaana pathivu mano akkaa

Ranjani Narayanan said...

இளமைக் காலத்தை விட, முதுமையில் தான் கணவன் மனைவி இருவருக்குள்ளும் நல்ல புரிதல் வேண்டும்.

ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், துக்கங்களில் தோள் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும்.

நல்லதொரு பகிர்வு மனோ!

மனோ சாமிநாதன் said...

லக்ஷ்மிம்மா! இது உங்களுடைய கதை! பார்க்கப்போனால் இந்தப் பதிவை நான் உங்களுக்குத்தான் சமர்ப்பித்திருக்க வேண்டும்!
வருகைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா! நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவை இது வரை படிக்க இயலவில்லை. விரைவில் படிக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டத்திற்கு இனிய நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி குமார்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்கள் வேதா! நீங்கள் சொன்னது அருமையான கருத்து! அன்பு நன்றி உங்களுக்கு!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் சகோதரி ரஞ்சனி! 25 வயதில் தொடங்கும் புரிதல் தான் 60க்குப்பின்னால் தெம்போடு வாழவைக்கிறது!

உஷா அன்பரசு said...

வணக்கம்! நாளைய வலைச்சரத்தில் தங்கள் பதிவுகளை பகிர்ந்துள்ளேன். வருகை புரிந்து கருத்திடுங்கள்.
http://blogintamil.blogspot.in/

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புச்சகோதரிக்கு வணக்கங்கள்.

இந்தப்பதிவினை நான் எப்படி ஏற்கனவே படிக்காமல் தவற விட்டுள்ளேன் என எனக்கே தெரியவில்லை. இன்று வலைச்சரத்தின் மூலம் வருகை தரும் பாக்யம் பெற்று மகிழ்கிறேன்.

//அன்பு என்பது உடல் சார்ந்ததோ, காதல் சார்ந்ததோ இல்லை. எது எப்படி இருக்கிறதோ, அல்லது எது இனிமேல் எப்படி இருக்குமோ, அல்லது எது எப்படி இருந்ததோ அத்தனையையும் அன்பிற்குரியவர்களுடன் அப்படியே ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம்! //

உண்மை. உண்மை. உண்மை. வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நான் மிகவும் இதனை ரஸித்து மகிழ்ந்தேன். இந்த உண்மையான அன்பினைப்பெற ஓர் மனப்பக்குவம் வேண்டும். ;)


//மிக மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, எல்லாமே சிறந்ததாக அமைந்திருக்கும் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ, அதை மிக சிறப்பானதாக செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்! வாழ்க்கை என்பது எப்படி புயலை சமாளிக்க வேண்டும் என்பதல்ல. எப்படி அடர்ந்த மழையிலும் மகிழ்வுடன் நடனமிட முயல வேண்டும் என்பது தான்! //

இதை எழுதிய தங்களின் பொற்கரங்களை மானஸீகமாக என் கண்களில் ஒற்றி மகிழ்கிறேன்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

அன்புடன்
VGK 26.12.2012

cheena (சீனா) said...

அன்பின் மனோ சாமிநாதன்

// மிக மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, எல்லாமே சிறந்ததாக அமைந்திருக்கும் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ, அதை மிக சிறப்பானதாக செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்!

வாழ்க்கை என்பது எப்படி புயலை சமாளிக்க வேண்டும் என்பதல்ல. எப்படி அடர்ந்த மழையிலும் மகிழ்வுடன் நடனமிட முயல வேண்டும் என்பது தான்! //

வாழ்க்கையின் பொருளை - வாழ்க்க என்றால் என்ன என்பதனை அழகாக விளக்கும் வரிகள் - அருமை அருமை.

முதிய தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே வாழ்க்கை.

மெதுவாக படித்தேன் - மனம் மகிழ்ந்தது - நெகிழ்ந்தது - நன்று நன்று

வலைச்சரம் மூலமாக இங்கு வந்தேன் .

நல்வாழ்த்துகள் மனோ சாமிநாதன்
நட்புடன் சீனா