Sunday 29 April 2012

விபத்துக்கள்- ஒரு பார்வை!


விபத்துக்கள் மனித வாழ்வில் எந்தெந்த ரூபங்களில் வருகின்றன என்பதை யாரும் அறிவதில்லை. சில விபத்துக்கள் ஒரு நொடியில் எந்தக் காரணமுமில்லாமல் நடக்கின்றன! சில விபத்துக்களோ, நம் கவனக்குறைவால் நடந்து நம்மை பாதிப்பதுடன் பிறரையும் பாதிக்கின்றன! தவறு என்று நன்கு தெரிந்திருந்தும் சில கோடுகளை நாம் கடக்க முயலும்போது, விபத்துக்கள் ஏற்பட்டு நம் தலையெழுத்தையே மாற்றுகின்றன!
சென்ற வாரம் உறவினர் ஒருவர் விபத்துக்குள்ளான செய்தி வந்தது. அவரின் மகளிடம் ஆறுதல் கூற அழைத்துப் பேசிய போது விபத்து எப்படி நடந்தது என்ற விபரம் தெரிந்தது. 60 வயதான் இவர் சாலையில் பைக்கில் போய்க்கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மெதுவாகப் போய்க்கொண்டிருந்ததால் அதை முந்திச் செல்ல பக்கவாட்டில் இறங்கிச்செல்ல, அங்கே நின்று கொண்டிருந்த காரின் கதவு உள்ளேயிருந்து அப்போது தான் திறக்கப்பட, இவரின் பைக், காரின் கதவில் மோதி, கதவு அப்படியே காற்றில் பறக்க, இவரது காலில் தொடைவரை கிழிய அவசர சிகிச்சைப் பிரிவில் இவர் சேர்க்கப்பட்டு, தையல்கள் போடப்பட்டு அதன் பின் பல மணி நேரங்கள் கழித்துத்தான் ஆபத்தில்லை என்று அறிவிப்பு வந்தது. முன்னால் செல்லும் வாகனம் மிக மெதுவாகப் போனால் அதை பக்கவாட்டில் சென்று கடப்பது எப்போதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அப்படி கடக்கும்போது, எந்த அளவு கவனமும் வேகக்குறைவும் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விபத்து ஒரு உதாரணம்!! அவரின் மகள் அழுத அழுகை இன்னும் நினைவிலேயே நிற்கிறது!


இந்த அளவு மோதியும் அவர் உயிருடன் தப்பிப்பிழைத்து விட்டார் என்பது ஒரு மகிழ்வு கலந்த ஆச்சரியம்!! சமீபத்தில் ஒரு நண்பர் குடும்பத்தில், அவர் தந்தை சிறிது மது அருந்தி விட்டு சைக்கிளில் வெளியே போயிருக்கிரார். அந்த சமயம் சாலையில் இரு கார்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வர, ஒன்று அவரை இலேசாக இடித்து விட, அதிக காயங்கள் இன்றி, அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்..
பல வருடங்களுக்கு முன் ஒரு நண்பருக்கு நடந்த விபத்து ஞாபகம் வருகிறது. இவருக்கு அதிகாலையில் பேப்பர் போடும் வேலை இங்கு. சைக்கிளில் போய்க்கொண்டிருந்த போது எதிரே அதி வேகமாய் வந்த ஒரு சிறு லாரி இவரை மோத, அப்படியே தூக்கி எறியப்பட்ட அவர் மயங்கிப்போனார். மனசாட்சிக்குப் பயந்து போன அந்த சூடான் நாட்டு குடிமகன், அவரை அப்படியே அள்ளி எடுத்து தன் காரில் போட்டு, மருத்துவ மனையில் கொண்டு போய்ச் சேர்த்தார். கால் எலும்புகள் தூள் தூளாகிப்போன நிலையில், அந்த எலும்புகளெல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது இங்கே. கால் சற்றே விந்தி விந்தி நடப்பதைத் தவிர வேறெந்தக் குறையுமின்றி உயிர் தப்பிப் பிழைத்தார் அவர்!
என் மகனின் பள்ளிப்பருவத்தில், ஒரு நாள், மணி அடித்ததும் பள்ளிக்கு வெளியிலிருந்து உள்ளே ஓடி வந்த போது, வழியில் இருந்த ஒரு பெஞ்சில் மோதிக் கீழே விழுந்ததில் நாக்கு முக்கால்வாசி துண்டிக்கப்பட்டு, இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்க, என் கணவர் மகனைத் தூக்கிக்கொண்டு ஓட, இங்கே எந்த மருத்துவமனையிலும் சேர்க்க மறுக்க, இறுதியில் அரசாங்க மருத்துவ மனையில் நாக்கை இழுத்துப்பிடித்துத் தைத்தார்கள். நாக்கு ஒன்றாய்ச் சேரும்வரை நாங்கள் பட்ட பாடு....!
சமீபத்தில் படித்த செய்தி இது. மனதை மிகவும் பாதித்தது.
ஒரு வீட்டில், நெயில் பாலீஷ் ரிமூவர் உபயோகித்து விட்டு வீட்டுப் பெண்கள் அதை கவனக்குறைவாய்  கீழே வைத்து விட்டு வேறு வேலையைப்பார்க்கச் சென்று விட்டார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து விழுங்கிய குழந்தை தொண்டை எரிய கத்தியதைத் தொடர்ந்து அதை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் என்று 5 நாட்கள் சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஒன்றுமில்லை என்று வீட்டுக்கு வந்த குழந்தையால் பசி வந்த போது உணவை விழுங்க முடியாமல் கதறி அழுதிருக்கிறது. மறுபடியும் மும்பையிலுள்ள பிரபல மருத்துவ மனை சென்று பார்த்தபோது தான்  குழந்தையின் உணவுக்குழல் மூன்றில் 2 மடங்கு எரிந்து போயிருப்பது தெரிந்திருக்கிறது. உடனே குழந்தையின் அடிவயிற்றில் ஒரு குழாயைச் செருகி அதன் மூலம் உணவைச் செலுத்தியிருக்கிறார்கள். இப்படியே 5 வருடங்கள் ஒரு நரகமாக சோர்வும் வேதனையுமாக குழந்தைக்குக் கழிய, உனவின் ருசி எப்படியிருக்கும் என்பதே குழந்தைக்கு மறந்து விட்டது. கடைசி முயற்சியாக அதற்கு மருத்துவர்கள் ஒரு அறுவை சிக்கிச்சை செய்தார்கள். எரிந்து போயிருந்த உணவுக்குழாயின் பகுதிகளை நீக்கி விட்டு மீதம் இருக்கும் பகுதிகளை இனைத்து விட்டார்கள். ஐந்து வருடங்களுக்குப்பிறகு அந்தக்குழந்தை இப்போது தான் ரசித்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறது!! யாரோ செய்த தப்பினால் அந்தக்குழந்தை ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறது!
தானாக வரும் விபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது! ஆனால் விபத்துக்கள் ஏற்பட நாம் காரணமாக வேண்டாம்!
கார் ஓட்டும்போது மேக் கப் போடுவது, முன்னால் போகும் காரை முந்தப்பார்ப்பது, சாலையைக்கடக்கும்போது கூட மொபைலில் பேசுவது- இதெல்லாம் வேண்டாமே!
எங்கு பயணித்தாலும், உங்கள் விலாசம், நீங்கள் சாப்பிடும் மாத்திரை விபரங்கள், உங்களின் மெடிகல் ஹிஸ்டரி, உங்களின் இரத்தத்தின் குரூப் வகை போன்ற விபரங்கள் அடங்கிய குறிப்பை உங்களுடன் எப்போதும் எடுத்துச் செல்லுங்கள். விபத்துக்களில் சிக்க நேரும்போது, இந்த விபரங்கள் உங்களுக்கான சிகிச்சையை துரிதப்படுத்தும்!!

33 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக மிக பயனுள்ள பதிவு.

விபத்துக்கள் எந்த ரூபத்தில் எப்போது யாருக்கு ஏற்படும் என்றே இப்போதெல்லாம் சொல்ல முடிவதில்லை.

மிகமிக கவனமாகத்தான் இருக்க வேண்டியுள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் மகனின் பள்ளிப்பருவத்தில், ஒரு நாள், மணி அடித்ததும் பள்ளிக்கு வெளியிலிருந்து உள்ளே ஓடி வந்த போது, வழியில் இருந்த ஒரு பெஞ்சில் மோதிக் கீழே விழுந்ததில் நாக்கு முக்கால்வாசி துண்டிக்கப்பட்டு//

அடடா, கேட்கவே மிகவும் மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.

நல்லவேளை பிறகு ஒருவழியாகத் தையல் போட்டு சரியானது கேட்க நிம்மதியாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு வீட்டில், நெயில் பாலீஷ் ரிமூவர் உபயோகித்து விட்டு வீட்டுப் பெண்கள் அதை கவனக்குறைவாய் கீழே வைத்து விட்டு வேறு வேலையைப்பார்க்கச் சென்று விட்டார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து விழுங்கிய குழந்தை தொண்டை எரிய கத்தியதைத் தொடர்ந்து அதை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் என்று 5 நாட்கள் சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஒன்றுமில்லை என்று வீட்டுக்கு வந்த குழந்தையால் பசி வந்த போது உணவை விழுங்க முடியாமல் கதறி அழுதிருக்கிறது. மறுபடியும் மும்பையிலுள்ள பிரபல மருத்துவ மனை சென்று பார்த்தபோது தான் குழந்தையின் உணவுக்குழல் மூன்றில் 2 மடங்கு எரிந்து போயிருப்பது தெரிந்திருக்கிறது. உடனே குழந்தையின் அடிவயிற்றில் ஒரு குழாயைச் செருகி அதன் மூலம் உணவைச் செலுத்தியிருக்கிறார்கள். இப்படியே 5 வருடங்கள் ஒரு நரகமாக சோர்வும் வேதனையுமாக குழந்தைக்குக் கழிய, உனவின் ருசி எப்படியிருக்கும் என்பதே குழந்தைக்கு மறந்து விட்டது. கடைசி முயற்சியாக அதற்கு மருத்துவர்கள் ஒரு அறுவை சிக்கிச்சை செய்தார்கள். எரிந்து போயிருந்த உணவுக்குழாயின் பகுதிகளை நீக்கி விட்டு மீதம் இருக்கும் பகுதிகளை இனைத்து விட்டார்கள். ஐந்து வருடங்களுக்குப்பிறகு அந்தக்குழந்தை இப்போது தான் ரசித்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறது!! யாரோ செய்த தப்பினால் அந்தக்குழந்தை ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறது!//

மிகவும் கொடுமை தான் இது.
பாவம் அந்தக்குழந்தை, ஐந்து வருடங்களாக என்னபாடு பட்டிருக்கும்? நினைத்தாலே மிகவும் மனதுக்குக் கஷ்டமாக உள்ளதே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தானாக வரும் விபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது! ஆனால் விபத்துக்கள் ஏற்பட நாம் காரணமாக வேண்டாம்! கார் ஓட்டும்போது மேக் கப் போடுவது, முன்னால் போகும் காரை முந்தப்பார்ப்பது, சாலையைக்கடக்கும்போது கூட மொபைலில் பேசுவது- இதெல்லாம் வேண்டாமே! எங்கு பயணித்தாலும், உங்கள் விலாசம், நீங்கள் சாப்பிடும் மாத்திரை விபரங்கள், உங்களின் மெடிகல் ஹிஸ்டரி, உங்களின் இரத்தத்தின் குரூப் வகை போன்ற விபரங்கள் அடங்கிய குறிப்பை உங்களுடன் எப்போதும் எடுத்துச் செல்லுங்கள். விபத்துக்களில் சிக்க நேரும்போது, இந்த விபரங்கள் உங்களுக்கான சிகிச்சையை துரிதப்படுத்தும்!!//

மிகவும் பயனுள்ள விஷயங்கள்.
நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.
நன்றிகள். அன்புடன் vgk

வெங்கட் நாகராஜ் said...

மொபைலில் பேசிக்கொண்டே சாலையை, இரயில் பாதைகளை கடப்பது அதிகமாகிக் கொண்டு வருகிறது. சமீபத்தில் தில்லியில் இரண்டு - மூன்று இளைஞர்கள், இப்படித்தான் தனது குடும்பத்தினரைத் தவிக்க விட்டுச் சென்றனர்.

கடைசியில் சொன்ன விஷயம் எல்லோரும் நினைவில் வைத்திருக்கவேண்டியது.....

கீதமஞ்சரி said...

மிக மிக அத்தியாவசிமான பதிவு. விழிப்புணர்வூட்டும் பதிவும் கூட. சாலைகளில் நாம் எத்தனைக் கவனமாக இருந்தாலும் எதிரில் வருபவர்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் எப்போதுமே மிகவும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

குழந்தைகள் விஷயத்தில் சர்வமும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அதிலும் எதிர்பாராமல் தங்கள் மகனுக்கு ஏற்பட்டதுபோல் விபத்து ஏற்படும் சமயத்தில் அவசர சிகிச்சை எவ்வளவு முக்கியம்? அந்த நேரத்தில் மருத்துவமனைகளில் அனுமதி மறுத்தால் என்னதான் செய்யமுடியும்? மனம் கனத்துப் போகிறது.

இராஜராஜேஸ்வரி said...

தானாக வரும் விபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது! ஆனால் விபத்துக்கள் ஏற்பட நாம் காரணமாக வேண்டாம்!

அனுபவ முத்துகள் சிந்திக்கவைக்கின்றன்..

CS. Mohan Kumar said...

மிக அவசியமான பதிவு. குறிப்பாக கடைசி பாரா. இதில் சிலவற்றை நானும் செய்கிறேன். சில இனி செய்ய முயல வேண்டும்

ராமலக்ஷ்மி said...

எல்லா பகிர்வுகளுமே பகீர்பகீரென்றிருக்கு. ரொம்ப அவசியமான பதிவு.

/ காரின் கதவு உள்ளேயிருந்து அப்போது தான் திறக்கப்பட, /

நேரிலேயே 2,3 முறை இது போன்ற சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன், பெரிய பாதிப்புகள் நிகழாவிட்டாலும். காரில் இருந்து இறங்கும் முன் யாராவது சாலையில் வருகிறார்களா எனப் பார்த்து விட்டுத் திறக்க வேண்டுமென்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

குறையொன்றுமில்லை. said...

திடீரென ஏற்படும் விபத்துகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் படிக்கும்போதே மனசு கலங்குது. எல்லாருமே எல்லா விஷயங்களிலுமே கவனமாக இருக்கனும்

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

என் மகனுக்கு நாக்கு துண்டிக்கப்பட்டு, ஒரு நூலிழையில் தான் ஒட்டிக்கொண்டிருந்தது. நாக்கைத் தைத்தபோது கூட, நாக்கு வழுக்கும் என்பதால் மருத்துவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் சிகிச்சை தந்தார்கள். என் கணவரும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மறுத்து விட்டதோடு, அறுவை சிகிச்சை முடியும்வரை அறுந்த நாக்கைப் பற்றிச் சொல்லவேயில்லை!! நாக்கு ஒட்டும்வ‌ரை, சரியாக சாப்பிட‌ முடியாம‌ல் என் ம‌க‌ன் த‌வித்த அந்த‌‌ நாட்க‌ள் மிக‌வும் கொடுமையான‌வை!!

சின்ன‌ குழந்தைக‌ளுக்கு ஏற்ப‌டும் விப‌த்து மற்றதை விட‌ ந‌ம்மை அதிக‌மாக‌வே பாதிக்கும். அந்த‌‌ மாதிரி தான் நெயில் பாலீஷ் ரிமூவரை விழுங்கிய அந்தக் குழந்தை பட்ட துயரம் மிகவும் பாதித்தது!

பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

நீங்கள் சொல்வது போல சாலைக்கடக்கும்போது, அதுவும் முக்கியமான சிக்னல்களில்கூட மொபைலில் பேசியவாறே சாலையைக் கடப்பது அதிகமாக ஆகி விட்டது! மொபைல் என்பது நம் வசதிக்காக என்றிருந்தது போய் ஒரு drug addict போல‌ ஆகி விட்டது!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பார்ந்த நன்றி கீதமஞ்சரி!

இன்றைக்கு சரளமான ஆங்கிலத்தில் தன் மேலதிகாரிகளுடனும் தன் clients-உடனும் என் மகன் பேசுவதைப் பார்க்கையில் சில சமயங்களில் இந்த விபத்து ஒரு நிமிடம் மனதில் வந்து போகும்! எத்தனை கஷ்டம்! எவ்வளவு இரத்தம்!! எத்தனை தவிப்பு!

இங்கே சட்டென்று எல்லா மருத்துவ மனைகளிலும் பெரிய விபத்தென்றால் அட்மிட் செய்ய மாட்டார்கள். அவர்களின் சட்ட திட்டம் அப்படி! இதனால் ஏற்படும் கால‌ விரயமும் இரத்த விரயமும் அவர்களுக்குப் புரிவதில்லை!

இப்படித்தான் எங்கள் உண‌வகத்தில் ஒருத்தர் வ‌ந்து இட்லியை சாப்பிட ஆரம்பிக்கையில் அப்படியே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மயங்கி விழுந்து விட்டார். உடனேயே மேலே உள்ள கிளினிக்கிற்கு ஃபோன் செய்து, அவர்கள் உடனேயே வந்து அவரை தூக்கிச் சென்றார்கள். ஆனால் அவர் அப்போதே இற‌ந்து விட்டது பின்னால் தெரிந்தது. ஆனால் உடனேயே அவரை எடுத்துச் சென்று சிகிச்சை கொடுக்க முயன்ற அந்த கிளினிக்கை காவல் அதிகாரிகள் துளைத்து எடுத்து, அலைக்கழித்து விட்டார்கள்.

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி மோகன்குமார்!

இது வ‌ரை செய்ய மற‌ந்த‌‌வற்றை அவ‌சிய‌ம் இனி செய்யுங்க‌ள்!

ADHI VENKAT said...

விழிப்புணர்வூட்டும் பதிவும்மா. விபத்து என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். முடிந்தவரை நாம் கவனமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். தங்கள் மகனுக்கு ஏற்பட்ட விபத்து....அப்பப்பா! எத்தனை துடித்திருப்பீர்கள்.
அந்த குழந்தையை பற்றி நினைக்கும் போது மனம் கலங்குகிறது. பாவம் எத்தனை வேதனை....

என் தம்பி காலேஜ் படித்துக் கொண்டிருந்த போது ஃப்ரெண்டுடன் டூ வீலரில் பின்னாடி அமர்ந்து சென்று வண்டி காரில் மோதியதில் பின்னாலிருந்த தம்பி தூக்கி எறியப்பட்டு கார் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே விழ, உடம்பு முழுவதும் கண்ணாடி, நினைவு தப்பி போய், காலில் ஒரு சிறு ஆப்ரேஷன் செய்து வெகு நாட்களுக்கு பின் மீண்டு வந்தான். இன்று நினைத்தாலும் பயமாக தான் இருக்கு.

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் தேவையான விழிப்புணர்வு பதிவு மேடம்.

//தானாக வரும் விபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது! ஆனால் விபத்துக்கள் ஏற்பட நாம் காரணமாக வேண்டாம்!//

உண்மைதான். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

Menaga Sathia said...

மிகவும் அவசியமான பதிவு அம்மா!!

'பரிவை' சே.குமார் said...

மிக மிக பயனுள்ள பதிவு.

Angel said...

மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு அக்கா .
நக பாலிஷ் விஷயத்தில் பாவம் அந்த சிறு குழந்தை நெஞ்சம் பதறுகிறது .
எந்நேரமும் விழிப்புடன் இருக்கணும் .
இங்கே ரிவேர்ஸ் பார்க் செய்யும்போது பின்னே வந்த ஒரு கார் மோதியதில் ஒரு பெண்மணிக்கு கழுத்தில் அடி பட்டு ஐந்து வருடமாக பாரலிசிஸ் இல் இருக்கார் ,சற்றே கவனக்குறைவு அவர்களின்3 மாத கைக்குழந்தைக்கு ஒன்றுமில்லை ஆனா தாயால் தூக்கவோ பிள்ளையை சீராட்டவோ இயலாது .
//தானாக வரும் விபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது! ஆனால் விபத்துக்கள் ஏற்பட நாம் காரணமாக வேண்டாம்!//

சரியாக சொன்னீர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்

புவனேஸ்வரி ராமநாதன் said...

//எங்கு பயணித்தாலும், உங்கள் விலாசம், நீங்கள் சாப்பிடும் மாத்திரை விபரங்கள், உங்களின் மெடிகல் ஹிஸ்டரி, உங்களின் இரத்தத்தின் குரூப் வகை போன்ற விபரங்கள் அடங்கிய குறிப்பை உங்களுடன் எப்போதும் எடுத்துச் செல்லுங்கள். விபத்துக்களில் சிக்க நேரும்போது, இந்த விபரங்கள் உங்களுக்கான சிகிச்சையை துரிதப்படுத்தும்!!//

மிகச் சரியான ஆலோசனையைத் தந்துள்ளீர்கள் மனோம்மா. உங்களது இந்தப் பதிவின் ஒவ்வொரு வரியைப் படிக்கும் போதும் மனம் பதை பதைத்தது
மனோம்மா.

ஸ்ரீராம். said...

கடைசியில் சொல்லியிருப்பது நல்ல யோசனை. இந்த மாதிரி விவரங்களையும், என்ன நோய், எதெது அலெர்ஜி, இன்ன பிற விவரங்களையும் ஒரு சின்னச் சிப்பில் பொதிந்து உடம்பில் பொதிந்து விடும் வழக்கம் வந்து கொண்டிருக்கிறது என்று ரொம்ப நாள் முன்னாடி படித்தேன். இப்போ என்ன நிலையோ...!

Anonymous said...

//விபத்துக்கள் ஏற்பட நாம் காரணமாக வேண்டாம்!// உண்மையான செய்தி அம்மா. ஏனோ தெரியவில்லை மனதை கனக்க வைத்த பதிவு. ஆனால் அன்றாட வாழ்வுக்கு தேவையான பதிவு

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி லக்ஷ்மிம்மா!

மனோ சாமிநாதன் said...

உங்கள் தம்பி அவருக்கு நடந்த விபத்தில் உயிருடன் தப்பிப்பிழைத்ததே ஆச்சரியம் ஆதி! நாமே மிக கவனமாக சென்றாலும்கூட விபத்துக்கள் தானாக வந்து சேருகின்றன.
கருத்துரைக்கு அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ரமா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வருகைக்கும் அன்பு நன்றி சகோதரர் குமார்!!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பின்னூட்டத்திற்கு மகிழ்வான நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் எழுதியுள்ள செய்தி ஆச்சரியமானது, கேள்விப்படாதது ஸ்ரீராம்!
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அனுபவ அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சீனுகுரு!!