Monday 23 April 2012

ஒரு நிமிடம் ரசிக்க!!


வாழ்க்கை முழுதும் சின்னச் சின்ன ரசனைகள்தான் வாழ்க்கையை சுவாரசியமாக ஆக்குவதுடன் அர்த்தமுள்ளதாகவும் உயிர்ப்புள்ளதாயும் மாற்றுகின்றன. சில சமயங்களில் படித்த சில வரிகள் அல்லது மிகச்சிறிய நிகழ்வுகள்கூட மிகப்பெரிய அர்த்தங்களையும் அனுபவங்களையும் கொடுக்கின்றன. வழக்கம்போல ரசித்த சில முத்துக்கள் இங்கே......

ரசித்த வாசகம்:
இந்த வாசகத்தை நான் மிகவும் ரசித்தேன். நல்வாழ்க்கை என்பது எது என்பதை மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது!
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்.
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்.
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.
ரசித்த ஒரு சமையல் குறிப்பு:



பொதுவாக, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி அல்லது பூண்டுப்பொடி என்பது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். என்ன தான் மணக்க மணக்க சாம்பார் இருந்தாலும், நாக்கு ருசிக்க சட்னி இருந்தாலும் இந்தப் பொடிகள் இல்லாவிட்டால் சிலருக்கு இட்லியும் சரி, தோசையும் சரி ருசிக்கவே ருசிக்காது. அதுவும் தஞ்சை மாவட்டத்தில் இது ரொம்பவும் முக்கியமான ஒன்று. வீட்டுக்கு வீடு செய்யும் முறை மாறுபட்டிருக்கும். அதில் இந்த பூண்டுப்பொடி மிளகாய் வற்றலும் பூண்டும் உபயோகித்து செய்வது. அதில் நல்லெண்னையை ஊற்றிக்குழப்பி இட்லிக்குத் தொட்டுக்கொள்ள வேண்டும். என் சினேகிதியின் பெண் அவரின் அத்தை வீட்டில் செய்யும் பூண்டுப்பொடி பற்றி சொன்னதும் அசந்து விட்டேன். ஒரு கப் மிளகாய் வற்றலுக்கு 30 பல் பூண்டுகள் சேர்த்து துளி புளி சேர்த்து காரசாரமாக பூண்டுப்பொடி செய்வது மட்டுமல்லாமல் சாப்பிட உட்காரும்போது சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து அந்த பூண்டுப்பொடியில் குழைத்து இட்லிக்கு தொட்டுக்கொள்ளுவார்களாம்! பாருங்கள், இட்லிக்கு எத்தனை சுவையான, வக்கணையான, காரசாரமான பூண்டுப்பொடியென்று!
ரசித்த சிறுகதை!
தீய பழக்கங்களிலிருந்து தன் மகனை விடுவிக்க வேண்டுமென்று ஒரு தந்தை ஒரு ஞானியிடம் கேட்டுக்கொண்டார்.
அவனை ஞானி காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு புல்லைக் காண்பித்து ‘ இதை பிடுங்கி எறி’ என்றார். பையனும் இரு விரல்களால் புல்லைப் பிடுங்கி எறிந்தான்.
ஒரு சின்னச் செடியைக் காட்டி இதை அகற்று என்றார் ஞானி. கையால் அதை இழுத்துப் பிடுங்கி எறிந்தான் அந்தப்பையன்.
கொஞ்சம் பெரிய செடியைக்காட்டி அதையும் அகற்றச் சொன்னார் ஞானி. கொஞ்சம் போராடி, செடியை இரு கைகளலும் பிடுங்கி எறிந்தான் அவன்.
ஒரு மரத்தைக் காட்டி இதை அகற்று என்றார் ஞானி. சிறுவன் ‘அதை எப்படி அகற்ற முடியும்?” என்றான்.
ஞானி அமைதியாக, ‘ தீய பழக்கங்களும் அப்படித்தான். சிறியவையாக இருக்கும்போதே அவற்றை அகற்றாவிட்டால் அவை மரமாக வேறோடிப்போகும். அப்புறம் அவற்றை யாராலும் நீக்க முடியாது’ என்றார்.
சிறுவன் உணர்ந்து மனம் தெளிந்தான்.
 ரசித்த சிறு கவிதை:
ஒவ்வொரு நவீன வசதியும் வரும்போது ஒரு நல்ல பழக்கமோ அல்லது உழைப்போ சாகடிக்கப்பட்டு விடுகிறது! அது போன்ற நவீன வசதியை நினைத்து ஆதங்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு புதுக்கவிதை! ஒரு மாத இதழில் படித்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!!

மீந்து போன குழம்பு வேலைக்காரிக்கு..
பக்கத்துத் தெரு அத்தையுடன் பகிர்ந்து சாப்பிட நெய்ப் பணியாரங்கள்...
வீடு தேடி வரும் தோழிக்குத் தரும் அரைத்த மருதாணி....இப்போது எதுவுமே இல்லை!
பகுத்துக்கொடுக்கும் பழக்கத்தையே பாழாக்கி விட்டது குளிர்சாதனப்பெட்டி!


32 comments:

தளிகா said...

எவ்வளவு அழகாக பேரை தேர்ந்தெடுத்தீர்கள்"முத்துச் சிதறல்கள்" ரொம்ப சரி ஒவ்வொரு பதிவும் முத்து முத்தாய்...என் சிறு வயது என் பாட்டி பின்னாலேயே முந்தானையை பிடித்துக் கொண்டு நடந்ததால் எனக்கு நிறைய பழங்கால அடுக்களை முறைகளையும் கற்றுத் தந்து விட்டு போனார்.அதனால் இன்று போகிற போக்கை பார்க்க எனக்கே பயம் .குளிர்சாதனப்பெட்டி பற்றியது முழுக்க உண்மை

குறையொன்றுமில்லை. said...

வாழ்க்கை முழுதும் சின்னச் சின்ன ரசனைகள்தான் வாழ்க்கையை சுவாரசியமாக ஆக்குவதுடன் அர்த்தமுள்ளதாகவும் உயிர்ப்புள்ளதாயும் மாற்றுகின்றன. சில சமயங்களில் படித்த சில வரிகள் அல்லது மிகச்சிறிய நிகழ்வுகள்கூட மிகப்பெரிய அர்த்தங்களையும் அனுபவங்களையும் கொடுக்கின்றன

சரியாகச்சொன்னீங்க.

Jaleela Kamal said...

முன்றுமே வித்தியாசமாக ரசித்த முத்துக்கள்/.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு மரத்தைக் காட்டி இதை அகற்று என்றார் ஞானி. சிறுவன் ‘அதை எப்படி அகற்ற முடியும்?” என்றான்./

முத்துச்சிதறலகள் சிறப்பு..

'பரிவை' சே.குமார் said...

ரசனையான முத்துக்கள்...
அருமையான முத்துக்கள்...
வாழ்த்துக்கள் அம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமையாகவே உள்ளன.

முதல் வாசகம் ரஸிக்கும்படியாக உள்ளது.

இரண்டாவது மிளகாய்ப்பொடி காரசாரமாக ஜோர் ஜோர்!

சிறுகதையில் நல்லதொரு நீதி உள்ளது.

//ஒவ்வொரு நவீன வசதியும் வரும்போது ஒரு நல்ல பழக்கமோ அல்லது உழைப்போ சாகடிக்கப்பட்டு விடுகிறது! //

கவிதையில் உண்மை உள்ளது.

பாராட்டுக்கள். முத்துக்களை நன்கு சிதறவிட்டு சிந்திக்க வைத்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

//ஒரு கப் மிளகாய் வற்றலுக்கு 30 பல் பூண்டுகள் சேர்த்து துளி புளி சேர்த்து காரசாரமாக பூண்டுப்பொடி செய்வது மட்டுமல்லாமல் சாப்பிட உட்காரும் போது சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து அந்த பூண்டுப் பொடியில் குழைத்து இட்லிக்கு தொட்டுக்கொள்ளுவார்களாம்! பாருங்கள், இட்லிக்கு எத்தனை சுவையான, வக்கணையான, காரசாரமான பூண்டு பொடியென்று//!


நீங்கள் ரசித்து ரசித்து எழுதிய பதிவினை நானும் மிகவும் ரசித்து ரசித்துப் படித்தேன். அதுவும் ரசித்த
சமையல் குறிப்பு அருமையிலும் அருமை. நன்றி மனோம்மா.

ஹுஸைனம்மா said...

நல்ல பகிர்வுகள்.

பூண்டுப்பொடி - மிளகாய் அளவைக் கேட்கும்போதே கண்ணில் நீர் வருகிறது!!

குளிர்சாதனப்பெட்டி: ஆனாலும், பகிர்ந்துண்ணல் என்பது, உணவு தயாரிக்கும்போதே பகிர்வதற்கும் தேவையான அளவு சேர்த்து சமைப்பதல்லவா? தனக்குப் போக மிஞ்சியதைக் கொடுப்பதல்லவே? :-)))))

ஸாதிகா said...

நீங்கள் ரசித்த முத்துகக்ள் எங்களையும் ரொம்பவுமே ரசிக்க வைத்தன அக்கா

வெங்கட் நாகராஜ் said...

சொன்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் நல்முத்துகள்.

குளிர்சாதனப் பெட்டி - நான் அதை பழேத்த்துப் பொட்டி என தான் அழைப்பது! பல வீடுகளில் டேட் வாரியாக சமைத்த பதார்த்தங்களைப் பார்க்கும்போது கஷ்டமாகத் தான் இருக்கும்.....

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மூன்று முத்துக்களுமே அருமை மனோ.

Priya said...

ரசனையான முத்துக்கள்... மிகவும் ரசித்தேன்!!!

ADHI VENKAT said...

ஒவ்வொரு முத்துமே அபாரமாக இருந்தது.

சுடச்சுட இட்லி - பூண்டுப் பொடி - தூள் தான்.

Asiya Omar said...

நல்ல ரசனை.பகிர்விற்கு நன்றி. பூண்டு பொடி இது வரை செய்ததில்லை.காரம் கம்மியாக போட்டு செய்து பார்க்கணும்.

Anonymous said...

ஓவொன்றும் ஒவ்வொரு விதமாய் அழகை அருமையை இருந்தது. குளிர்சாதனப் பெட்டி பற்றிய கவிதையும் ஞானி பற்றிய கதையும் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று

மனோ சாமிநாதன் said...

தாளிகா! ரொம்ப நாட்களுக்குப்பின் வந்து அழகாய் கருத்துக்களும் பாராட்டும் தெரிவித்திருக்கிறீர்கள்! அன்பு நன்றி உங்களுக்கு!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரி லக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

பின்னூட்டத்திற்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் குமார்!!

மனோ சாமிநாதன் said...

ஒவ்வொன்றையும் ரசித்து பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களும் அன்பான கருத்துரைகளும் தெரிவித்த தங்களுக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

உங்களின் ரசனையான பின்னூட்டத்திற்கு மகிழ்வான நன்றி புவனேஸ்வரி! இந்த பூண்டுப்பொடி செய்பவர் மயிலாடுதுறையில்தான் இருக்கிறார்!!

மனோ சாமிநாதன் said...

தனக்குப்போக மிஞ்சியதைக்கொடுப்பது தான் தற்போதைய நாகரீகமான பகிர்ந்துண்ண‌லாக இருக்கிற‌து ஹுஸைனம்மா!
அந்த மிள‌காய்ப்பொடி மிகவும் காரம் என்று தான் நானும் கேள்விப்பட்டேன்! ஆனால் சீக்கிரம் இந்த குறிப்பை செய்து பார்த்து விட ஆசை!- காரத்தை குறைத்து!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது மிகச் சரியான உண்மை தான் சகோதரர் வெங்கட் நாகராஜ்!
தற்போதெல்லாம் குளிர் சாதனப்பெட்டியில் எதை எதையெல்லாம் வைப்பது என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை! நீங்கள் சொல்வது மாதிரி பழைய உணவுப்பொருள்களால் தான் குளிர்சாதனப்பெட்டி பல இல்லங்களில் நிரம்பியிருக்கிறது!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி வித்யா!!

மனோ சாமிநாதன் said...

ரசித்து பின்னூட்டம் எழுதியதற்கு இனிய நன்றி ப்ரியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கு அன்பு நன்றி ஆசியா! பூண்டுப்பொடி அவசியம் செய்து பாருங்கள்! என் பக்குவத்தை நான் விரைவில் பதிவிடுகிறேன்!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் அன்பான பாராட்டுதலுடன் கூடிய கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் சீனுகுரு!!

mohamedali jinnah said...

அருமையான முத்துச் சரங்கள் தந்தமைக்கு வாழ்த்துகள். "மயூரம் போன்ற உள்பகுதிகளில் ஒரு நாளில் 10 மணி நேரம் பவர் கட்.." இது உங்கள் வரிகள் ஸாதிகாவலைப்பூவில் பார்த்தேன்.நீங்கள் மயூரம் சார்ந்தவரா?

http://www.mayyam.com/hub/viewtopic.php?t=5637&start=1485&sid=eb551a470dde20348c765bf25297fc2b
இதனைப் பார்த்து அசந்து விட்டேன்,அருமை

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள நீடூர் அலி அவர்களுக்கு!
உங்களின் பாராட்டுதல்களுக்கும் கருத்துரைக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி!
‘ மையம்’ வலைத்தளத்தில் 2003-லிருந்து 2007 வரை உற்சகமாக குறிப்புகள் தந்தவை தான் அவை. அதன் பின்னர் நிறைய இடைவெளியில் கொஞ்சமாகத்தான் குறிப்புகள் கொடுத்து வருகிறேன்.
நான் தஞ்சையைச் சேர்ந்தவள். என் சம்பந்தி ஊர் மயிலாடுதுறை.