Monday 9 April 2012

மறுபடியும் வீட்டு வைத்தியம்!!


மறுபடியும் சின்னச் சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே கைவைத்தியம் செய்து கொள்வதைப்பற்றி எழுதுகிறேன். மருத்துவரிடம் செல்லாமல் செலவும் அதிகமில்லாமல் பலனளிக்கும் வைத்திய முறைகள் இவை.
1.சளியினால் தலை கனம் வரும்போது:

7,8 கிராம்பை சந்தனக்கல்லில் மையாக இழைத்து நெற்றி முழுவதும் பற்று போடவும்.


2. வாய்வு சேர்ந்து விட்டால் ஏப்பமும் அதிகமாக வரும். ஒரு பிடி கொத்தமல்லி விதைகளுடன் அதில் கால் பாகம் சோம்பு சேர்த்து இரண்டையும் பொன் வறுவலாக வறுத்துப் பொடித்து ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு ஸ்பூன் இந்த பவுடரைக் கலந்து குடித்தால் ஏப்பம் நிற்கும்.
3. நாய் கடித்து விட்டால் உடனே சிறிது வேப்பிலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்து கடிவாயில் மஞ்சளுடன் சேர்த்துக் கலந்து தடவி விட்டால் விஷம் ஏறாது.

4. பித்த மயக்கம் உள்ளவர்கள் தினமும் காலை வேப்பங்கொழுந்து சாப்பிட்டு வருவது பலனளிக்கும்.
5. மூச்சுத்திணறலுக்கு முதல் உதவி:
      சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படும்போது மூச்சுத்திணறல் உண்டாகும். இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 நிமிடங்களுக்குள் முதலுதவி செய்ய வேண்டியது மிக அவசியம். முதுகிலும் தலையிலும் தட்டுவது பயன் தராது. பாதிக்கப்பட்டவரின் பின்புறம் நின்று கொண்டுஅவரது வயிற்றைச் சுற்றி உங்கள் இரு கரங்களையும் கட்டிக்கொள்ளவும். அவரது வயிற்றில் தொப்புளுக்கு மேலே மேல் நோக்கி அழுத்தம் தர வேண்டும். பாதிக்கப்பட்டவரை கொஞ்சம் முன் பக்கமாக குனியச் சொல்லவும். அவருக்கு சுவாசப்பாதையில் அடைப்பு விடுபடும்வரை திரும்பத் திரும்ப அவரது வயிற்றில் அழுத்தம் தரவும்.

6. ரோஜா இதழ்களை அடிக்கடி தின்னும் பழக்கம் உள்ளவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வருவதில்லை.  நிழலில் நன்கு உலர்த்தப்பட்ட ரோஜா இதழ்களை தேநீர் தயாரிப்பது போல கஷாயம் செய்து பாலும் சீனியும் கலந்து குடித்தால் அஜீரணம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் சரியாகும். 10 ஆரஞ்சுப்பழங்களில் கிடைக்கும் விட்டமின் C சத்து ஒரு ரோஜாப்பூவின் இதழ்களில் கிடைக்கிறது.


7. வெந்தயம் அரை ஸ்பூனை துளி நெய்யில் வறுத்துப்பொடித்து ஒரு தம்ளர் மோரில் கலந்து குடித்தால் உஷ்ண பேதி சரியாகும்.

8. கொய்யாவில் வாழையை விட பொட்டாசியம் அதிகமாயும் ஆரஞ்சை விட விட்டமின் சி அதிகமாயும் இருக்கிறது. சர்க்கரை நோய், இதய பலவீனம், மலச்சிக்கலுக்கு நல்லதொரு பழம்.

9. 1 ஸ்பூன் தனியா, 1 ஸ்பூன் சீரகம் இரண்டையும் பொடித்து 200 மில்லி தண்ணீரில் ஊறப்போடவும்.இரவு முழுவதும் ஊறியதும் காலை எழுந்து குடிக்கவும். இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். 

10. 200 மி.லி தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெனிலா எசென்ஸைக் கலந்து உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவோ, ஈயோ உங்கள் பக்கம் நெருங்காது.







40 comments:

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள தகவல்கள்..... பகிர்வுக்கு நன்றி.

தலைவலிக்கு சுக்கினை பசும்பாலில் இழைத்துப் பத்துப் போட்டால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள எளிமையான வீட்டு வைத்தியங்களை சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். மனமார்ந்த நன்றிகள், மேடம்.

மகேந்திரன் said...

வணக்கம் அம்மா,
இன்றைய தலைமுறைகள் நம்முடைய
பொக்கிஷமான நாட்டு வைத்தியங்களை
மறந்துவிட்ட நிலையில் ...
இந்து போன்ற பதிவுகள் எல்லோருக்கும்
உதவியாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றிகள் அம்மா.

கீதமஞ்சரி said...

மிகவும் பயனுள்ள பகிர்வுகள். ரோஜா இதழின் மகிமையை இப்போதுதான் அறிந்தேன். கொய்யாவில் இத்தனை மகத்துவமா? வியக்கிறேன். மிகவும் நன்றி மனோ மேடம்.

நிலாமகள் said...

மிக‌வும் ப‌ய‌னுள்ள‌ குறிப்புக‌ள் ச‌கோத‌ரி. கொல‌ஸ்ட்ரால் பிர‌ச்சினைக்கு இப்ப‌டியொரு எளிய‌ வைத்திய‌மா! ந‌ம் முன்னோர்க‌ளின் வ‌ழிவ‌ந்த‌ ப‌ழ‌க்க‌ங்க‌ள் எவ்வ‌ள‌வு உப‌யோக‌மாயிருக்கின்ற‌ன‌!

raji said...

இளைய தலைமுறைகள் சிறிது சிறிதாக தவற விட்டுக் கொண்டிருக்கும் வீட்டு வைத்தியக் குறிப்புகளை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.பயனுள்ள குறிப்புகள்

ADHI VENKAT said...

அருமையான பயனுள்ள குறிப்புகள். எங்களுடன் இந்த குறிப்புகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

இருமலுக்காக என் மாமியார் என்னிடம் சொன்ன குறிப்புகள் - “மிளகையும், சர்க்கரையும் பொடித்துக் கொண்டு துளி நெய்யில் குழைத்து சாப்பிட இருமல் அடங்கும் என்று. செய்து பார்த்தேன். நிவாரணம் இருக்கிறது.

தலைவலிக்கு மிளகை பால் விட்டு உரைத்து பத்துப் போட சரியாகும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் அடுக்கப்பட்டுள்ள 9 கிராம்புகளையும் அசப்பில் பார்த்தால் ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ தலைதெறிக்க ஓடுவது போல எனக்குத் தெரிகிறது, மேடம்.

ஒருவேளை சளியினால் தலைகனம் வந்து கிராம்புகள் வாங்கவோ அல்லது வாங்கிவந்த கிராம்புகளை சந்தனக்கல்லில் மையாக இழைத்து நெற்றி முழுவதும் பற்று போடவோ ஓடுகிறாரோ? ;)))))

படத்தேர்வு மிக அருமை.
பாராட்டுக்கள்.

Anonymous said...

தெரிந்த வைத்தியங்களானாலும் மிக நல்ல வைத்தியங்கள்.மிக நன்றி பலர் பார்த்துப் பயனுறுவார்கள் அன்றோ. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

இமா க்றிஸ் said...

நானும் கராம்புகள் ஓடுவதைக் கவனித்தேன். ;) மோ.பைக் பிலியன் ரைடிங் என்று நினைத்தேன். ;))

பயனுள்ள குறிப்புகள் அக்கா. வனிலா பற்றிய தகவல்... புதிது. பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்புகள். நன்றி.

ஸ்ரீராம். said...

உபயோகமான குறிப்புகள்....ஒன்பதாவது எனக்கு உதவும்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் ஒரு புதிய மருத்துவக்குறிப்பிற்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! நீங்கள் எழுதிய பிற‌கு மறுபடியும் படத்தைப்பார்த்தால் எனக்கும் ஒரு மனிதன் ஓடுவது போலத்தான் தெரிந்தது!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி மகேந்திரன்!!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு ந‌ன்றி கீதா!

Mahi said...

Useful tips! Thanks for sharing Mano madam!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

THIS BLOG A DAY.....!!!!
KEEPS THE DOCTOR AWAY!!

Asiya Omar said...

நல்ல மருத்துவ குறிப்புக்கள் மனோ அக்கா.

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

அருமையான தகவல்கள்,

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அது உண்மையிலேயே, யானை பலம் தான்!
அப்படி இல்லாத இந்த நன்னாட்களில், இந்த மாதிரி பதிவுகளின் அருமை, பெருமைகளை வெறும் வார்த்தைகளால் அடக்கி விட முடியாது..அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் அதன் இன்றியமையாத தன்மை தெரியும்.

இராஜராஜேஸ்வரி said...

பயன் மிக்க பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

மிகவும் பயனுள்ள குறிப்புகள் மனோ அக்கா
வென்னிலா எசன்ஸ் புதுமையாக இருக்கு

ஜலீலா

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்! நம் முன்னோர்கள் கண்டு பிடித்து வைத்திருக்கும் கை வைத்தியக்குறிப்புகள் எல்லாமே மிக அருமையானவைதான்!!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜி!!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு இனிய நன்றி ஆதி! உங்கள் மாமியாரின் கை வைத்திய குறிப்பு அருமை! நானும் செய்து பார்க்கிறேன்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி வேதா!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்களுக்குப் பின்னான வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் அன்பான நன்றி இமா!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கு என் வைத்தியக்குறிப்புகளில் ஒன்று உதவவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது ஸ்ரீராம்!
கருத்துரைக்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ராமமூர்த்தி!

மனோ சாமிநாதன் said...

கருத்துப்பதிவிற்கு அன்பு நன்றி ஆசியா!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback Mahi!!

கீதமஞ்சரி said...

வணக்கம் மேடம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய பதிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
பார்க்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_19.html
நன்றி.

Kasthuri Rengan said...

நல்ல பயனுள்ள தொகுப்பு
கீதா மதிவாணன் அவர்களின் அறிமுகம் மூலம் அறிந்தேன்