Tuesday 27 December 2011

பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள்- பகுதி-2

80 வயதைக் கடந்த பின்பும் இன்னும் தன் வீட்டிற்காகவும் தம் மக்களுக்காகவும் உழைக்க வேண்டியிருப்பது சிலரின் தலையெழுத்தாக மாறி விட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். தன் சொந்த மகள் இல்லத்திலேயே, மரணம் விரைவில் வராதா என்று வேண்டி காத்திருக்கும் என் சினேகிதியொருத்தரைப் பற்றி எழுதி என் மன பாரத்தை கொஞ்சம் இங்கே குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

இவர் சிறு வயதில் தந்தைக்கு மிகவும் செல்லப் பெண்ணாக வசதியாக

வளர்ந்தவர். திருமணம் என்ற ஒன்று ஆன பிறகு தான் இவரின் வாழ்க்கையே தடம் புரண்டு போனது. ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, தன் கணவரின் சந்தேகத்தீயில் அவ்வப்போது மனம் கருகிப் போனார் இவர்.

கணவருக்கு வெளி நாட்டில் நல்ல வேலையென்றாலும், தொட்டதெற்கெல்லாம் கோபித்துக் கொள்ளும் மனப்பான்மையால் வேலையை விட்டு விட்டு தமிழ்நாட்டின் முக்கிய நகரமொன்றில் தனக்குப் பிடித்த மாதிரியான தொழிலை ஆரம்பித்தார். நிர்வாகத்திறமையின்மையால் அதுவும் வீணாக அன்றைக்கு ஆரம்பித்தது தான் குடும்பத்தில் வறுமை. மகளுக்கு படிப்பில் இருந்த அளவு மகனுக்கு ஆர்வமில்லாததால் சாதாரன வேலைகளில் அவனும் கால் பதிக்க ஆரம்பித்தான். வாழ்க்கை கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்த நேரம்- 25 வயதில் அவனும் சாலை விபத்தில் அகால மரணமடைந்து போனான். மனம் சுக்கு நூறாக ஒடிந்து போக வாழ்க்கைப்பாதையில் நடக்க எந்த தெம்புமில்லாமல் கூடப்பிறந்தவர்களின் உதவியுடன் வேதனையுடன் நகர ஆரம்பித்தது வாழ்க்கை. ஒரு பக்கம் புத்திர சோகம். மறுபக்கம் வறுமையும் உடல் உபாதைகளும் பிணிகளும். கணவரும் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போக ஆரம்பித்தார். நன்றாக நடமாடிக்கொண்டிருந்த காலத்திலேயே, பக்கத்திலிருக்கும் மாத்திரைகளை அவராக எடுத்து சாப்பிட மாட்டார். மனைவி எங்கு போயிருந்தாலும் அவர் தான் வந்து மாத்திரைகளை எடுத்துத் தரவேண்டும். உடல்நிலை அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைய ஆரம்பிக்க, மனம் விரும்பாவிட்டாலும் வேறு வழியின்றி, தன் மகள் வற்புறுத்தலினால் அவரின் வீட்டிற்குச் சென்று என் சினேகிதி தங்க வேண்டியதாயிற்று. எத்தனை தான் உடல் சரியில்லாமலிருந்தாலும் மகளுக்கு பாரமில்லாத வகையில் தன் பங்கிற்கு வீட்டு வேலைகளைச் செய்வதும் உடல் நிலை சரியில்லாத கணவரை கவனித்துக்கொள்வதுமாக அவரின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சில சமயங்களில் அலுப்பிலோ, மற்ற அழுத்தங்கள் காரணமாகவோ மகள் சுருக்கென்று ஏதாவது பேசி விடும்போது துடித்துப் போய் விடுகிறார்.




சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அவரின் கணவருக்கு நினைவு தப்பி படுத்த படுக்கையில் இருப்பது தெரிந்த போது மனசு மிகவும் வேதனைப்பட்டது. மிகத் தொலைவில் இருப்பதால் உடனே சென்று பார்க்க முடியாமல் அவரிடம் தொலைபேசியில் பேசிய போது குரல் நடுங்க அவர் சொன்ன வார்த்தைகள் – “ இனிமேல் உயிருடன் வாழ்ந்து என்ன ஆகப்போகிறது? சீக்கிரம் எங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இரண்டு பேருக்குமே மரணம் தான் விடுதலை”

வாழ்க்கையில் எத்தனையோ பேருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறேன். ஆனால் இவருக்கு மட்டும் என்னால் என்றுமே ஆறுதல் சொல்ல முடிந்ததேயில்லை. ஒவ்வொருத்தருக்கும் எதிர்காலத்தில் எதேனுமொரு நம்பிக்கையென்ற பற்றுக்கோடு இருக்கும். வேதனைகளை மறக்க வல்ல ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பு காத்திருக்கும். அப்படி எதுவுமேயில்லாத இவரின் வாழ்க்கையில், மரணமே விடுதலையாக மானசீகமாகக் காத்திருக்கும் இவரை என்னவென்று சொல்லி ஆறுதல் படுத்துவது?

பழுத்த இலைகள் உதிர்வது என்பது காலத்தின் மாற்ற இயலாத கட்டாயம். அப்படி உதிரும் நேரத்திலாவது வயது முதிர்ந்தவர்களுக்கு ஒரு அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கை இருக்க வேண்டும். யாரையும் சார்ந்திருக்காத வாழ்க்கை அமைய வேண்டும். பொருளாதார ரீதியில் அவர்களுக்கென ஒரு சேமிப்பு முதுமையின் தாக்கங்களுக்கு பதில் சொல்ல இருக்க வேண்டும். முக்கியமாய் தனக்கென ஒரு வீடும் வாழ்நாள் முழுவதும் யாரையும் அண்டி இருக்க வேண்டாத அளவு பொருளாதார பலமும் அமைந்து விட்டால் அதுவே முதுமையின் தள்ளாமையையும் நோய்களையும் சமாளிக்க போதுமான பலத்தைத் தந்து விடுகிறது. முதுமைக்கான சேமிப்பை இதுவரை ஆரம்பித்திருக்காவிட்டாலும் இனியாவது அந்த சேமிப்பைத் தொடங்க ஆரம்பிப்போம்!!!



படம் உதவி: கூகிள்



19 comments:

Angel said...

//முதுமைக்கான சேமிப்பை இதுவரை ஆரம்பித்திருக்காவிட்டாலும் இனியாவது அந்த சேமிப்பைத் தொடங்க ஆரம்பிப்போம்!!! //


அந்த மூதாட்டியை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கு .எண்பது வயது தள்ளாமையிலும் அவரை வேலை வாங்குகிறார்களே ..இவர்களெல்லாம் மனித பிறவிகள்தானா??????
ஒவ்வொருவரும் தங்கள் பிற்காலத்திற்கு என்று கண்டிப்பாக ஒரு தொகையினை சேமித்து வைக்க வேண்டும் .எனக்கு தெரிந்த ஒரு பாட்டி தனது ஈமகிரியைகளுக்கு ஓவொரு மாதமும் சேமித்து வைத்தார். சமீபத்தில் நடிப்பால் எல்லாரையும் சிரிக்க வைத்த ஒரு நடிகர் ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டபடுகிறார் என்று படித்தேன் .மனித மனம் எப்போ மாறுமென்று சொல்ல முடியாது ..வருமுன் காப்போம்

கீதமஞ்சரி said...

மனம் நெகிழ்த்தும் நிகழ்வு. பிடிப்பற்ற வாழ்க்கையில் அந்தத் தோழிக்கு எவராலும் ஆறுதல் சொல்ல இயலாதுதான்.

இங்கே (ஆஸ்திரேலியாவில்) முதியவர்களுக்குப் பொருளாதார அடிப்படையில் அரசாங்கம் உதவுகிறது. ஆனாலும்,தனியாக வாழ்வதால் பல முதியவர்கள் தள்ளாடிக்கொண்டோ, தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டோ கடைகளுக்கு வந்து தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது மிகவும் பரிதாபமாக இருக்கும். சில முதியவர்களின் மரணம் வெளியிலேயே தெரியாமல் போய்விடுவது மிகப்பெரிய கொடுமை. ஒரு எண்பது வயதுப் பெண்மணி வீட்டுக்குள் இறந்துகிடந்தது எட்டு மாதங்களுக்குப் பிறகே வெளியில் தெரியவந்தது.

பணமிருந்தாலும் வயதான தாய்தந்தையரை தங்களோடு வைத்துப் பராமரிக்க எவருக்கும் மனமில்லை. அதனால்தான் பலர் தாங்களாகவே முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்ந்துவிடுகின்றனர்.

Yaathoramani.blogspot.com said...

மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
பலருக்கு புதிராக இருக்கும் வாழ்க்கை
சிலருக்கு மட்டும் எப்போதுமே இறுதிவரை
எதிரானதாகவே அமைந்துவிடுகிறது
பிரச்சனியை மிகத் தெளிவாக சொல்லிப் போவதுடன்
ஒரு வழிகாட்டலும் சொல்லிப் போனது அருமை
வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பழுத்த இலைகள் உதிர்வது என்பது காலத்தின் மாற்ற இயலாத கட்டாயம். அப்படி உதிரும் நேரத்திலாவது வயது முதிர்ந்தவர்களுக்கு ஒரு அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கை இருக்க வேண்டும். யாரையும் சார்ந்திருக்காத வாழ்க்கை அமைய வேண்டும். பொருளாதார ரீதியில் அவர்களுக்கென ஒரு சேமிப்பு முதுமையின் தாக்கங்களுக்கு பதில் சொல்ல இருக்க வேண்டும். முக்கியமாய் தனக்கென ஒரு வீடும் வாழ்நாள் முழுவதும் யாரையும் அண்டி இருக்க வேண்டாத அளவு பொருளாதார பலமும் அமைந்து விட்டால் அதுவே முதுமையின் தள்ளாமையையும் நோய்களையும் சமாளிக்க போதுமான பலத்தைத் தந்து விடுகிறது. //

மிகவும் சத்தியமான வார்த்தைகள், மேடம்.

ஆனால் சிலருக்கு இது புரிவது இல்லை. இளமையில் திட்டமிடத் தவறி விடுகிறார்கள்.

செல்வச்செழுப்பில் செல்லமாக வளர்ந்த ஒருசில பெண்களுக்கு, இதுபோல கொடுமைப்படுத்தும் கண்வன் அமைவதும் மிகவும் துரதிஷ்டமே. அது மிகவும் வருத்தமான விஷயமே! சரியில்லை என்றால் உடனடியாக மாற்றக்கூடிய ஒன்றா, இந்தத் திருமணம் என்பது?

மகன் மகளிடமெல்லாம் அதிக அளவில் அன்பு வைப்பதோ, ஏதோ பெரியதாக அவர்கள் நமக்கு பிற்காலத்தில் சாதிக்கப்போகிறார்கள் என எதிர்பார்ப்பதோ போன்ற ஒரு முட்டாள் தனம் வேறு எதுவுமே இருக்க முடியாது, என்பது என் அனுபவத்தில் பல இடங்களிலும் பார்த்து தெரிந்து கொண்டது.

ஏதோ அவர்கள் குழந்தையாக இருக்கும் போது நன்கு பாசத்துடன் வளர்த்து, படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வருவது மட்டுமே நம் வேலையும் கடமையுமாகும்.

ஓரளவு வளர்ந்த பிறகு, நாம் நம்மை அவர்களிடமிருந்து விலக்கிக்கொள்ள பழகுவதே நல்லது.

மிகச்சிறந்த பதிவை எழுதியுள்ளீர்கள்.
எல்லோருக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும். எல்லோரும் இதைப்படித்த பிறகாவது, தங்களை சுதாரித்துக்கொள்ளட்டும், என்று தான் நானும் இப்பட்டியொரு பின்னூட்டம், மிகவும் வேதனையுடன் எழுதியுள்ளேன்.

அன்புடன்
vgk

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

//மனித மனம் எப்போ மாறுமென்று சொல்ல முடியாது ..வருமுன் காப்போம்//

அச‌த்த‌லான‌ வ‌ரிக‌ள் ஏஞ்ச‌லின்!
என் 93 வ‌ய‌து அம்மாவே இத‌ற்கு ச‌ரியான‌ உதார‌ண‌ம். என் தந்தையின் பென்ஷன் பணம் இன்றும் வருவதால், இன்று என் சகோதரியின் வீட்டில் அவர்கள் இருந்தாலும், தன் மருத்துவச் செலவுக்கு மட்டுமல்ல, தன் மாதாந்திர செலவுக்கும் சேர்த்து கட்டாயப்படுத்தி பண‌ம் கொடுத்து வருகிறார்கள். மூன்று பெண்களான எங்களிடம் எதற்கும் சார்ந்து நிற்பதில்லை. உடல் நலம் சரியில்லையென்றால்கூட என் மூத்த சகோதரியை அதட்டி, அதிகாரமாகத்தான் வேலை வாங்குவார்கள். பணம் ஒருத்தருக்கு எத்தனை தன்னம்பிக்கை கொடுக்கும் என்பதை அவர்களிடம்தான் நான் நேரிலே இன்றும் காண்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்து கீதா!

பண வசதி இருந்தாலும் கூட, வயதான காலத்தில் அன்பும் அக்கறையும் ஆதூரமுமான ஒரு உற‌வாவது அருகில் இல்லாவிடில் அந்த வாழ்க்கை மிகவும் கொடுமை!

எல்லோருமே இலையுதிர்கால‌ம் ஒரு நாள் தனக்கும் வ‌ரும், தானும் ஒரு நாள் ப‌ச்சைக் குழந்தையாக மாறுவோம் என்பதை உணர்ந்து, தன் பெற்றோருக்கும் தன் வீட்டிலுள்ள முதியோருக்கும் கனிவையும் அனுசரணையும் தரவேண்டும்!!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரர் ரமணி!

நீங்க‌ள் சொல்வ‌து போல‌ சில‌ருக்கு ம‌ட்டும் வாழ்க்கைப் பாதையில் எப்போதுமே முட்க‌ள் ம‌ட்டுமே தென்ப‌டுகின்ற‌ன‌. முட்க‌ள் குத்திக் குத்தி இரண‌‌மாகிப்போன‌ இத‌ய‌ங்க‌ளை அமைதிப்ப‌டுத்தும் வ‌ழி வ‌கைக‌ள் தெரிவ‌தில்லை!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,

உங்க‌ளின் அருமையான‌ பின்னூட்ட‌ம் என்னை அச‌த்தி விட்ட‌து. எத்த‌னை ய‌தார்த்த‌மாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்!

//சரியில்லை என்றால் உடனடியாக மாற்றக்கூடிய ஒன்றா, இந்தத் திருமணம் என்பது?//

உண்மை தான்! அந்த‌க் கால‌த் திரும‌ண‌ம் இது. க‌ண‌வ‌ன் குண‌த்தில் ச‌ரியில்லாம‌ல் இருந்தாலும் ச‌ரி, கொடுமை செய்ப‌வ‌னாக‌ இருந்தாலும் ச‌ரி, அவ‌னை அனுச‌ரித்துப்போவ‌து தான் வாழ்க்கை என்ப‌து அன்றைய‌ நெறிமுறை. இன்றைய‌ கால‌த்தில் இப்ப‌டிப்ப‌ட்ட‌ பிர‌ச்சினைக‌ள் எல்லாம் இல்லை. சின்ன‌ச் சின்ன‌ப் பிர‌ச்சினைக‌ளுக்குக்கூட‌ விவாக‌ர‌த்து என்ப‌து முழுமையான‌ தீர்வாக‌ ஆகி விடுகிற‌து!!

//மகன் மகளிடமெல்லாம் அதிக அளவில் அன்பு வைப்பதோ, ஏதோ பெரியதாக அவர்கள் நமக்கு பிற்காலத்தில் சாதிக்கப்போகிறார்கள் என எதிர்பார்ப்பதோ போன்ற ஒரு முட்டாள் தனம் வேறு எதுவுமே இருக்க முடியாது, என்பது என் அனுபவத்தில் பல இடங்களிலும் பார்த்து தெரிந்து கொண்டது.

ஏதோ அவர்கள் குழந்தையாக இருக்கும் போது நன்கு பாசத்துடன் வளர்த்து, படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வருவது மட்டுமே நம் வேலையும் கடமையுமாகும்.//

மிக‌ அருமையாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள். என்னோடு சேர்ந்து தாங்க‌ளும் அனைவ‌ரிட‌மும் 'சுதாரிப்புட‌ன்' இருக்க‌ வேண்டிய‌து ம‌கிழ்வாக‌, நிறைவாக‌ உள்ள‌து!!

MANO நாஞ்சில் மனோ said...

மனது வலிக்கும் பதிவு, கண்ணில் கண்ணீர்....!!!

வெங்கட் நாகராஜ் said...

மனதுக்கு கஷ்டம் தரும் விஷயம் இது.... விடிவு தான் என்ன... என்று யோசிக்க வைக்கும் வாழ்வு இது போன்ற முதியவர்களுக்கு...

என்றும் இனியவன் said...

நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நொடியாய்ப் பிறந்து
மணித் துளியாய் மறைந்து
புது ஆண்டாய் மலர்ந்த
பொழுதே....
வறண்ட வாழ்வும்
தளர்ந்த கையும்
உன் வரவால்
நிமிர்ந்து எழுதே!

புது வருடம் பிறந்தால்
வாழ்வு மாறும்-என
ஏங்கித் தவிக்கும்
நெஞ்சம்..
உன் வரவே
நெஞ்சின் தஞ்சம்!
இறந்த காலக்
கவலை அதனை
மறந்து வாழ
பிறந்து வா வா
என் புதிய வாழ்வே
விரைந்து வா வா!

அழுதுவிட்டேன்
ஆண்டு முழுதும்
முயன்று பார்த்தேன்
விழுந்து விட்டேன்
அழுத நாளும் சேர்த்து
மகிழ்ந்து வாழ
எழுந்து நின்று
இமயம் வெல்ல
இனிய ஆண்டே
இன்றே வா வா
நன்றே வா வா!

அன்புடன் இனியவன்

Asiya Omar said...

//முக்கியமாய் தனக்கென ஒரு வீடும் வாழ்நாள் முழுவதும் யாரையும் அண்டி இருக்க வேண்டாத அளவு பொருளாதார பலமும் அமைந்து விட்டால் அதுவே முதுமையின் தள்ளாமையையும் நோய்களையும் சமாளிக்க போதுமான பலத்தைத் தந்து விடுகிறது. முதுமைக்கான சேமிப்பை இதுவரை ஆரம்பித்திருக்காவிட்டாலும் இனியாவது அந்த சேமிப்பைத் தொடங்க ஆரம்பிப்போம்!!! //

மனோ அக்கா பகிர்விற்கு நன்றி.வயது முதிர்ந்த அந்த தம்பதிகளின் நிலை பரிதாபத்திற்குரியது.அநேகர் இப்படி கஷ்டப்படுவதற்கு அவர்களின் இயலாமை தான் காரணம்.என்ன செய்ய,முதுமைக்கு திட்டமிடாதோர் ,பிள்ளைகள் கவனிக்காத முதியோர்களின் மனநிலை இப்படி தான் உள்ளது.

ரிஷபன் said...

நேசிப்பை மீட்டெடுப்போம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

பிரச்சனையையும் கூறி அதற்கான தீர்வையும் சொல்லியிருப்பது
நல்லா இருக்குது அம்மா.
பதிவை படித்து முடித்தும் மனம் ஏனோ கனத்துக்கொண்டே இருக்கிறது.

Angel said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பகிர்வு.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

ஹுஸைனம்மா said...

இந்தப் பதிவு கலவையான உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது. குழந்தைகளே இல்லாத தம்பதியர், இருந்தும் உடன்வைத்துப் பராமரிக்க விரும்பாத/இயலாத தம்பதியர் ஆகியோருடன் ஒப்பிடும்போது இத்தம்பதியர் தாம் பெற்ற மகளாலேயே பராமரிக்கப்படும் பாக்கியம் பெற்றிருக்கிறார்களே? பின் ஏன் இத்தனை வருத்தம்?

இன்னும் பலரும், மகன் வீட்டில் தமக்கு இருக்கும் உரிமை, மகள் வீட்டில் இல்லை என்று கருதுவது மிக வேதனை.

முதுமைக்கான சேமிப்பு என்பது மிக மிக அத்தியாவசியமே. பணம் சுதந்திரம் தரும். ஆனால், வெறும் பணம் மட்டுமே முதுமைக்கு மருந்தாகுமா?

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு