Monday, 21 November 2011

மழலை உலகம் மகத்தானது [தொடர்பதிவு]



“ நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே!
அவன் கருனையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே!”


இது ஒரு பழைய திரைப்படப் பாடல். உண்மையும்கூட அது தான். குழந்தையின் சிரிப்பும் மழலைப்பேச்சும் நிர்மலமும் தெய்வீகமானது. வானத்திலிருந்து விழும் பரிசுத்தமான மழைத்துளி போன்றது தான் குழந்தை! அந்த பனித்துளி பூமியில் கலக்கும்போது அதன் பரிசுத்தம் மறைந்து பூமியின் அத்தனை அசுத்தங்களுடன் கலந்து மனிதர்களாகி விடுகிறது. அது பரிசுத்தமாக வந்து விழும் நேரத்தில் பூமியில் படாமல் தாங்கி, நாமும் அந்த பரிசுத்ததை உள்வாங்கிக் கொண்டால் மனது எத்தனை சுகமாகிறது! சின்னக் குழந்தைகளை ரசிக்கும்போது, அவர்களுடன் பேசும்போது, பழகும்போது மனசின் அத்தனை ரணங்களும், அது நாள் வரை தாங்கிய எத்தனையோ மரண அடிகளும் எங்கோ கரைந்து போய், காற்றாய் மனது இலேசாகிறது. ஒரு குழந்தையின் அருகாமையே இத்தனை அழகான தாக்கங்களை உண்டு பண்ணும்போது, நாமும் பதிலுக்கு, ஒரு நன்றிக்கடன்போல், நம் அன்பாலும் பொறுமையாலும் தியாகங்களாலும் இதையும் விட அழகான தாக்கங்களை குழந்தைகளிடம் உண்டு பண்ண வேண்டாமா?

சகோதரி லக்ஷ்மி சொல்லியிருந்தது போல, அந்தக் காலக் கூட்டுக்குடும்பங்களில் பெரியவர்களுக்கு பணிவிடை செய்வதற்கும் வீட்டு நிர்வாகம், சமையல், மற்ற பொறுப்புகளை கவனிப்பதற்குமே நேரம் போதாமல் இருக்கும். இதில் குழந்தைகளின் அருகிலிருந்து சாதம் கொடுக்கக்கூட இயலாது போய் விடும். இந்த நிலைமையில் குழந்தையின் வளர்ப்பு பற்றி யோசிக்கவோ, அதன் எதிர்காலம் பற்றி கனவு காணவோ நேரம் எங்கிருந்து கிடைக்கும்? வீட்டிலிருக்கும் குழந்தைகளோடு பத்தோடு பதினொன்றாக ஒவ்வொரு குழந்தையும் அதுவே வளரும். அதுவும் எப்படி? பெரியவர்களின் கண்டிப்பு, கட்டுப்பாடு இதெல்லாம் சகோதரத்துவத்தின் மகிமை, பகிரும் உணர்வு, பெரியவர்களிடம் மரியாதை என்று பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்.

என் புகுந்த வீட்டில் என் கணவருடன் சேர்த்து எட்டு குழந்தைகள். வசதியான குடும்பமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் மாடுகளை இவர்கள் தான் மேய்த்தாக வேண்டும். மாடு மேய்ப்பவர்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டு, மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும்போது, அப்படியே பாடப் புத்தகங்களையும் எடுத்துச் செல்லுமாறு என் மாமனார் சொல்வார்களாம். ‘ இந்தப் பயிற்சி தான் இந்த 65 வயது வரை என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது’ என்று என் கணவர் அடிக்கடி சொல்வார்கள். ஏதாவது தப்பு செய்தாலோ, அடுத்தவரைப்பற்றியோ, சகோதர்களைப் பற்றியோ புகார் சொன்னாலோ, உடனே அடிக்காமல் ஒருத்தர் தப்பு செய்தாலும் அத்தனை பேரையும் தோப்புக்கரணம் போடச்சொல்வார்களாம் என் மாமனார். அல்லது ‘கொக்குப்பிடி’ போடச் சொல்வார்களாம். அதாவது ஒரு கையால் ஒரு காலைப் பற்றிக்கொண்டு இடது காலை தூக்கி அதை இடது கையால் பிடித்துக் கொள்ள வேண்டுமாம். இந்த மாதிரி தண்டனைகளில் அடுத்தவரைப்பற்றிப் பேசக் கூடாது, சகோதரர்களுக்குள் சண்டை செய்தல் கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும் என்பது சின்ன வயதிலேயே மனதில் கல்லில் எழுத்தாய் பதிந்து போயிற்று என்பார்கள்.

இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் பெரும்பாலும் மறைந்து விட்டது. பெற்ற தாய்க்கும் தகப்பனுக்கும் சோறு போடுவதற்குக் கூட கணக்கு பார்க்கும் மனசு வந்து விட்டது. சுயநலங்களுக்கிடையே எதிர்காலக் குழந்தைகள் எப்படி வளரும் என்பதை நினைத்தாலே பகீரென்கிறது.

நிறைய பெற்றோருக்கு எதற்குமே நேரமிருப்பதில்லை. பொருளாதார மேம்பாட்டிற்காக பறப்பதிலும் தன் குழந்தைகள் பெரிய அளவு படிக்க வேண்டும் என்று கனவு காண்பதிலும் நிறைய நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது கூட நேரமில்லாது வாழ்க்கை யந்திரகதியாய் நிறைய பேருக்கு கழிந்து செல்கிறது. ஆடி ஓடி சிரிக்கின்ற வயதில் குழந்தைகள் உலகம் கணினியிலும் தொலைக்காட்சியிலும் சுருங்கி விட்டது. இயற்கைக்காற்றும் தோட்டங்களைச் சுற்றி விளையாடுதலும் நிலாவைப் பார்த்து ரசிப்பதும் பாடுவதும் இன்றைய குழந்தைகளுக்கு கிடைக்காத வரங்கள்.

அவர்களுக்கு இன்றைக்கு கிடைக்கிற வசதிகள் மட்டும் உலகமில்லை, கிடைக்காத எத்தனையோ நல்ல விஷயங்கள் எந்த் அளவிற்கு உன்னதமானவை என்பதைப் புரிய வைக்க வேண்டும். சிறிய குழந்தைகளை கையாள்வதில் ரொம்பவும் கவனம் தேவை. குழந்தைகள் அனிச்ச மலர் மாதிரி. சட்டென்று முகமும் மனசும் சுருங்கி விடும். அவர்கள் வயதிற்கு நாம் மனரீதியாகச் சென்றால்தான் அவர்களை அழகாக அணுக முடியும்.




சின்ன வயதிலிருந்தே குழந்தைகளை ஒவ்வொரு விஷயத்திற்கும் பழக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும். குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடுவதோ, சூடாக விவாதம் செய்வதோ குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கும். எந்தக் குழந்தையுடனும் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்த வேண்டும். அது குழந்தைகள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குவதுடன், பெற்றவர்கள் மீது ஒரு வெறுப்பையும் வளர்க்க ஆரம்பிக்கும். நாம் குடும்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் மரியாதையுடன் பேசுவதையும் நடத்துவதையும் செய்யும்போது, குழந்தையும் மற்றவர்களை மரியாதையுடன் பேசுவதையும் நடத்துவதையும் நிச்சயம் பின்பற்றும். மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை அதன் ஒவ்வொரு வயதிலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித்தர வேண்டும்.

படிப்பிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, எதிர்காலத்திலும் சரி, வெற்றிகள், தோல்விகள் எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது அவசியம் என்பதைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். சின்ன சின்ன விஷயத்திற்குக்கூட குழந்தைகளை மனந்திறந்து பாராட்டுவது அவர்களுக்கு எதிலுமே உற்சாகத்தையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் வரவழைக்கும். குழந்தைகள் பெரியவர்களானதும் வீட்டு வேலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக பழக்க வேண்டும். அவர்களையும் பெரிய ஆளாக மதித்து வீட்டு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதும், யோசனைகள் கேட்பதும் அவர்களை வீட்டின்மீது பொறுப்புணர்வு மிக்கவர்களாக மாற்றும்.

குழந்தை வளர்ப்பைப்பற்றி ரொம்பவும் சாதாரணமாக, எளிமையாக, அசத்தலாக எம்.ஜி.ஆர் ஒரு பாடலில் நான்கே வரிகளில் சொல்லியிருப்பார்.

‘ அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்!
  தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்!
  இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்!
  பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்!! ’

அன்பென்பதும் அறிவென்பதும் அவ்வளவு சாதாரணமானதில்லை. தன்னலமற்ற, அத்தனை உணர்வுகளுக்கும் மேலான, முழுமையான அன்பு. உலகின் அனைத்து நற்செயல்களையும் நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்க்கும் அறிவு. இத்தகைய அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்க்க்கப்படும் எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை.

மழலை உலகைப்பற்றி எழுத எனக்கு இந்த தொடர் பதிவு வாய்ப்பளித்த சகோதரி லக்ஷ்மிக்கும் அவரைத்தொடர்ந்து இந்த தொடர்பதிவிற்கு அழைத்த சகோதரி சந்திர கெளரிக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன் இங்கே!!!

இந்தத் தொடர்பதிவிற்கு நான் அன்புடன் அழைப்பது:

1. பேரன்களுடன் கொஞ்சி விளையாடும் திரு.வை.கோபாலகிருஷ்ணன்.


2. மகளே தாயாய் மாறி பணிவிடை செய்த பாக்கியம் கிடைக்கப்பெற்ற    திருமதி. ராஜி [கற்றலும் கேட்டலும்]


3. குழந்தைகளைப் பிரிந்து வாடும் ஒரு தந்தையின் ஏக்கத்தை அருமையாக வெளிப்படுத்திய திரு.நாஞ்சில் மனோ.



படங்கள் உதவி: கூகிள்









48 comments:

சாகம்பரி said...

//உயிரோடு இருப்பதற்கும் உயிர்ப்போடு இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டினை அழகாக பகிர்ந்ததற்கு நன்றி சார்.//நிறைய சமயங்களில் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான திருப்பங்களில் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது. மனிதத்துவத்தின் மேல் நம்பிக்கை வைக்க முடிகிறது.

அருமையான எழுத்துக்களை சேர்த்த அழகான பதிவிற்கு நன்றி மேடம்

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப அழகா விவரமா சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். படிக்கவே மிகவும் சுவார்சியமா இருக்கே.

தமிழ் உதயம் said...

மழலைகளின் உலகம் மகத்தானது - நமது ஆசாபாசங்களை அங்கே திணித்து அவர்களின் உலகத்தை மாசுப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா என்னையும் மாட்டி விட்டுட்டாங்களே....விரைவில் வருகிறேன்....

Asiya Omar said...

சுட்டிக்காட்டிய இரண்டு பாடலும்,கருத்துக்களும் அருமை.வீட்டில் பெரியவர்கள் இருந்து வழிநடத்தும் பொழுது தான் குழந்தைகளின் உலகம் மகத்தானதாக இருக்கும் என்பதே உண்மை.பெற்றோரின் கடமைகளை அழகாக ப்கிர்ந்துள்ளீர்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகளோடு அவர்கள் உலகத்தில் மாமும் போனால், நாமும் குழந்தைகள் ஆகிவிடுகிறோம் இல்லையா...

மகேந்திரன் said...

அன்புநிறை மனோ அம்மா,
மழலையின் உலகத்தை
சிறப்பாக சொல்லி தொடர்பதிவில் ஒரு
முத்தாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள்..
அருமை..

பால கணேஷ் said...

மழலை உலக தொடர் பதிவில் தனி முத்திரை பதித்திருக்கிறீர்கள். நீங்கள் மேற்கோள் காட்டிய எம்.ஜி.ஆர் பாடலும் எனக்கு மிகப் பிடித்தமானது. அருமை...

raji said...

//அன்பென்பதும் அறிவென்பதும் அவ்வளவு சாதாரணமானதில்லை. தன்னலமற்ற, அத்தனை உணர்வுகளுக்கும் மேலான, முழுமையான அன்பு. உலகின் அனைத்து நற்செயல்களையும் நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்க்கும் அறிவு. இத்தகைய அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்க்க்கப்படும் எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை.//

மிகச் சரியாகக் கூறி இருக்கிறீர்கள்.அன்பும் அறிவும் வளர்ந்தாலே பண்பும் பணிவும் தன்னாலேயே வாளர்ந்து விடாதா என்ன?நல்ல பகிர்வு

என்னையும் எழுதுமாறு ஊக்கமளித்தமைக்கு நன்றி.தொடர்கிறேன்.

கீதமஞ்சரி said...

//சின்னக் குழந்தைகளை ரசிக்கும்போது, அவர்களுடன் பேசும்போது, பழகும்போது மனசின் அத்தனை ரணங்களும், அது நாள் வரை தாங்கிய எத்தனையோ மரண அடிகளும் எங்கோ கரைந்து போய், காற்றாய் மனது இலேசாகிறது. ஒரு குழந்தையின் அருகாமையே இத்தனை அழகான தாக்கங்களை உண்டு பண்ணும்போது, நாமும் பதிலுக்கு, ஒரு நன்றிக்கடன்போல், நம் அன்பாலும் பொறுமையாலும் தியாகங்களாலும் இதையும் விட அழகான தாக்கங்களை குழந்தைகளிடம் உண்டு பண்ண வேண்டாமா?//

ஆழமான சிந்தனையின் அழகிய வெளிப்பாடு. குழந்தைகளோடு பழகும் ஒவ்வொருவருக்கும் நினைவிலிருக்கவேண்டிய செய்தி இது. நல்ல பதிவு. நன்றி மேடம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Respected Madam,

Very Good Post.
Congratulations.
Thanks for your kind Invitation.
I shall try to write & release today itself.

Yours affectionately,
vgk

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. நல்ல பல கருத்துக்களையும் , பாடலையும் சொல்லியிருக்கீங்க.

Jaleela Kamal said...

மிக அருமையாக எழுதி இருக்கீங்க மனோ அக்கா
பிறகு மீண்டும் வந்து படிக்க்றேன்
என்னையும் லஷ்மி அக்கா அழைத்து இருக்காங்க நேரமின்மையால் இன்னும் பத்ிவு போடல
நிறைய எழுத வேண்டி இருக்கு

Yaathoramani.blogspot.com said...

மனம் கவர்ந்த் அருமையான பதிவு
குழந்தைகள் வளர்ப்பு குறித்து அனறைய நிலையையும்
இன்றைய நிலையையும் ஒப்பிட்டுச் சென்றவிதம்
மிக மிக அருமை.வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

மனம் கவர்ந்த பகிர்வு.... அழகாய் சொல்லி இருக்கீங்க....

raji said...

தங்கள் அழைப்பிற்கிணங்கி என் வலையில் தொடர்பதிவு போட்டிருக்கிறேன்.வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

விச்சு said...

குழந்தைகள் அனிச்ச மலர் மாதிரி - உண்மைதான்.விசயங்கள் அருமை.

RAMA RAVI (RAMVI) said...

//இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் பெரும்பாலும் மறைந்து விட்டது. //

//நிறைய நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது கூட நேரமில்லாது வாழ்க்கை யந்திரகதியாய் நிறைய பேருக்கு கழிந்து செல்கிறது. //

இந்த விஷயங்கள்தான் மனதிற்கு வேதனையை தருகிறது.

மிகவும் அழகான பதிவு மேடம்.
நன்றி பகிர்வுக்கு.

ஸாதிகா said...

உங்களுக்கே உரிய பாணியில் மிக அழகாக சொல்லி இருக்கீங்க மனோஅக்கா.

Angel said...

உங்கள் பார்வையில் மழலைகள் உலகம் என் மனதை கொள்ளை கொண்டது .
மேற்கோள் காட்டிய பாடலும் அருமை .

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமையான பதிவு மனோ.

ரிஷபன் said...

எனக்குத் தெரிந்த ஒரு கூட்டுக் குடும்பத்தில் அந்தப் பெண்மணி 80 ப்ளஸ் உடல் நிலை சரியில்லாமல் போனாலும் இன்னமும் ஞாபகசக்தி குறையாமல் தம்மால் முடிந்த அளவு வேலை செய்து கொண்டிருக்கிறார். மற்றவரையும் அப்படியே பழக்கி வைத்திருக்கிறார். அவர்கள் வீட்டுக் குழந்தைகளையும். உங்களின் சிறப்பான பதிவு தன்னம்பிக்கை தருகிறது.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கு அன்பு நன்றி சாகம்பரி!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரி லக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

//மழலைகளின் உலகம் மகத்தானது - நமது ஆசாபாசங்களை அங்கே திணித்து அவர்களின் உலகத்தை மாசுப்படுத்தி கொண்டிருக்கிறோம்.//

அருமையாக கருத்துக்கு இனிய நன்றி ரமேஷ்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோத‌ர‌ர் ம‌னோ! விரைவில் உங்க‌ள் சிற‌ப்பான‌ ப‌திவை எதிர்பார்க்கிறேன்!!

மனோ சாமிநாதன் said...

விரிவான‌ க‌ருத்துக்கும் பாராட்டிற்கும் இத‌ய‌ங்கனிந்த‌ ந‌ன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு மனம் கனிந்த நன்றி மகேந்திரன்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் அழகான கருத்துரைக்கும் முதல் வருகைக்கும் இனிய நன்றி சகோதரர் கணேஷ்!!

மனோ சாமிநாதன் said...

அன்பான க‌ருத்துக்கு இனிய நன்றி ராஜி!!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நிறைந்த நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டுரைக்கு இனிய நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கும் கருத்துக்கும் முதல் வ‌ருகைக்கும் அன்பு நன்றி சகோதரர் விச்சு!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கும் கருத்துக்கும் இனிய நன்றி ரமா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!!

மனோ சாமிநாதன் said...

இனிமையான பாராட்டிற்கு அன்பு நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கும் நல்லதொரு தகவலுக்கும் அன்பு ந்ன்றி சகோதரர் ரிஷபன்!

ஹ ர ணி said...

நோபல் பரிசு பெற்ற தாகூர் ஒருமுறை அயல்நாடு சென்றிருந்தபோது அங்கு ஒரு வீட்டில் நடந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த ஒரு குழந்தை அவரை ஈர்த்தது. பேச்சை நிறுத்திவிட்டு ரசிக்க ஆரம்பித்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்திற்கு எரிச்சலாகிவிட்டதாம். உடனே தாகூர் சொன்னாராம் என்னால் இதுபோன்ற ஒரு கவிதையை எழுதமுடியவில்லையே என்று.

எனவே ஒரு கவிதை என்பது ஒரு குழந்தையைப் போலிருக்கவேண்டும் என்பதுதான் பொருள்.

அதாவது எளிமையாக, பாசாங்கு இல்லாமல், கள்ளங்கபடற்றதாக, அழகாய், எதைப்பற்றியும் கவலைப்படாம்ல், எதற்கும் பயப்படாமல், உள்ளது உள்ளபடியாக இப்படி குழந்தையைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம். குழந்தை இலக்கியம் பற்றிய கவனம் குறையும் காலத் தேவையில் உங்கள் பதிவு மிகமிகத் தேவையான ஒன்றாகும். அருமை.

Kanchana Radhakrishnan said...

அருமை.

இராஜராஜேஸ்வரி said...

அவர்களுக்கு இன்றைக்கு கிடைக்கிற வசதிகள் மட்டும் உலகமில்லை, கிடைக்காத எத்தனையோ நல்ல விஷயங்கள் எந்த் அளவிற்கு உன்னதமானவை என்பதைப் புரிய வைக்க வேண்டும். சிறிய குழந்தைகளை கையாள்வதில் ரொம்பவும் கவனம் தேவை. குழந்தைகள் அனிச்ச மலர் மாதிரி. சட்டென்று முகமும் மனசும் சுருங்கி விடும்/

எழிலான மழலையர் பற்றிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

மனோ சாமிநாதன் said...

குழந்தையை ஒரு அழகான கவிதை என்று மிக அழகாகச் சொல்லி அருமையான ஒரு சிறுகதையை உதாரணமாக விள‌க்கி, என் பதிவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் சகோதரர் ரமணி! என் பதிவைப்பாராட்டியதற்கும் தங்களின் முதல் வ‌ருகைக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி!!‌

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி காஞ்சனா!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!!