Monday 14 November 2011

மருத்துவ உலகின் மறுபக்கம்-பகுதி-2

டாக்டர் சேதுராமனின் கருத்துக்களை, ‘போஸ்ட்மார்ட்டம்’ என்ற புத்தகத்திலிருந்து மீண்டும் தொடர்கிறேன்.

 எந்த மருத்துவ சிகிச்சைக்குமே, முக்கியமாக அறுவை சிகிச்சைகளுக்கு SECOND OPINION அவசியம் தேவை.

தற்போதெல்லாம் கர்ப்பப்பையை நீக்குவதென்பது சர்வ சாதாரணமாகி விட்டது. கர்ப்பப்பையையும் சில சமயங்களில் சினைப்பையையும் கூட நீக்குவதால் ஹார்மோன்கள் சுரப்பது தாறுமாறாகக் குறையும். இதனால் சில பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், தொடர் தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம், முதலியவை வருகின்றன. இதன் மோசமான பின் விளைவுகள் மிக நீளமானவை.

இதே போலத்தான் சிசேரியன் அறுவை சிகிச்சையும். பிரசவ நேரத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பு அபாய அளவில் இருந்தாலோ, குழந்தை சரியான POSITIONல் இல்லாமலிருந்தாலோ, கர்ப்பப்பை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தாலோதான் சிசேரியன் செய்ய வேண்டும். இந்த பரிசோதனைக்கு PARTOGRAM என்று பெயர். நிறைய மருத்துவர்கள் இந்த டெஸ்ட் செய்வதில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.


உங்கள் வீட்டில் யாரையாவது பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்க்கும்போது, அந்த மருத்துவ மனையின் சுகப்பிரசவ விகிதம் என்ன, சிசேரியன் விகிதம் என்ன என்று விசாரியுங்கள். எங்கு சுகப்பிரசவ விகிதம் அதிகமாக இருக்கிறதோ, அது மட்டுமே பாதுகாப்பான மருத்துவ மனை என்பதை முடிவு செய்யுங்கள். சில மருத்துவ மனைகளில் சிசேரியன் சிகிச்சைக்கு தூண்டும் விதத்தில் பேசி அந்த முடிவை நோயாளி எடுக்கும்வகையில் செய்வதற்கு செவிலித்தாய்களுக்கு கமிஷன் தரப்படுகிறது என்பது அதிர்ச்சியான நிஜம்!!

மருத்துவக் கண்ணோட்டத்தில் மரணம் இரு வகைகளாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன. உடல் சாவு முதல் வகை. இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புக்கள் தங்கள் வேலையை நிறுத்திக்கொள்ள, உடலின் ஒட்டு மொத்த செயல்பாடும் நின்று விடும். இது தான் உடல் சாவு. மூளை செயல்பட, இரத்தத்திலிருந்து அதற்குத் தேவையான பிராணவாயுவும் சர்க்கரையும் கிடைக்கிறது. இரத்த ஓட்டம் தடைப்பட்டால் மற்ற உறுப்புக்கள் 45 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும். மூளையோ நான்கே நிமிடங்களில் செயலிழந்து விடும். இது தான் மூளைச் சாவு. மூளைச்சாவு நிலையிலிருக்கும் நோயாளிக்கு செயற்கைக் கருவிகள் மூலம் இதயம், நுரையீரல், சிறுநீரகம் எல்லாவற்றையும் செயல்பட வைக்க முடியுமென்றாலும் அதிக பட்சம் 6 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ வைக்க முடியும். மூளைச்சாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக நாட்கள் உயிர்வாழ முடியாது என்ற உண்மையை மறைத்து, அந்த நிலையிலேயே அவர்கள் முழுமையாக மரணம் எய்தும்வரை வைத்து பணம் பறிக்கின்றன சில மருத்துவ மனைகள். இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை வசூலிக்கிறார்கள்.

மருத்துவப்படிப்பிற்கு செலவான தொகையை மட்டுமல்ல, மருத்துவமனை கட்டியதற்கான செலவையும் மீட்டு கடன் தொல்லைகளிலிருந்து விடுபடவும் லட்சக்கணக்கான வட்டி கட்டுவதிலிருந்து மீளவும்கூட இன்றைக்கு சில தனியார் மருத்துவமனிகளில் சாதாரண பிரசவம் சிசேரியனாகவும், சாதாரண நெஞ்சு வலி தீவிர சிகிச்சைப்பிரிவிலும் மாற்றப்படுகின்றன!!



எந்த மருத்துவர் சரியானவரில்லை?

1. சாதாரண தலைவலியைக் கூட உயிரைக்கொல்லும் வியாதி என்று
    வர்ணித்து ஏகப்பட்ட மாத்திரைகள், ஊசிகள் என்று சிகிச்சைகள்
   தருபவர்கள்.

2. எல்லாம் தனக்கு மட்டும் தெரியும் என்பவர்.

3. தங்கள் சிகிச்சை வலி இல்லாதது, பக்க விளைவுகள் இல்லாதது, துரித
    நிவாரணம் தருவது என்று சொல்பவர்கள்.

4. நீங்கள் சொல்லும் எதையும் காதில் வாங்காத மருத்துவர்..

5. உடலின் எந்தப்பகுதியில் உங்களுக்கு உபத்திரவம் என்று
    சொல்கிறீர்களோ, அந்தப் பகுதியைத் தொட்டுக்கூட பார்க்காதவர்..

6. அதிகப்பட்ச நம்பிக்கை வாக்குறுதிகளைத் தருபவர்கள்.

7. ‘உங்கள் நோய் தீர இது தான் வழி’ என்று, என்று ஒரு காஸ்ட்லியான
     சிகிச்சையை, அதைத் தவிரவும் குறைந்த செலவில் வேறு சிறப்பான
     சிகிச்சைகள் முறைகள் இருந்தும் சொல்பவர்.

உங்களின் நோயை குணப்படுத்த நீங்கள் சந்திக்கும் மருத்துவரிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்:


1. எனக்கு என்ன நோய் என்பதை விளக்கமாகச் சொல்லுங்கள்.

2. எந்த அளவு இது சீரியஸானது இது?

3. இதற்கு சிகிச்சை பெறாமல் அப்படியே விட்டால் என்ன ஆகும்?

4. எனக்கு என்ன சிகிச்சை தரப்போகிறீர்கள்?

5. இதில் என்னென்ன அபாயங்கள், பக்க விளைவுகள் இருக்கின்றன?

6. இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமையும் வாய்ப்பு எத்தனை சதவிகிதம்?

7. இந்த சிகிச்சைக்கான முழு செலவு எவ்வளவு ஆகும்?

8. சிகிச்சைக்குப் பிறகு தொடர் பராமரிப்பிற்கு எவ்வளவு செலவாகும்?

டாக்டர் சேதுராமன் எழுதிய புத்தகத்திலிருந்து, அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு சில விஷயங்களை மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். .அவர் வலியுறுத்திக் கூறும் முக்கியமான விஷயம், ஒரு சாதாரண நோய்க்கு உடனே ஒரு மருத்துவமனையை நோக்கி ஓடி விட வேண்டாமென்பது. ஒவ்வொருத்தரும் தனக்கென, சாதாரண வியாதிகளான ஜுரம், உடம்பு வலிகள், வயிற்று வலி இவற்றுக்கெல்லாம் நன்கு பழகக்கூடிய ஒரு குடும்ப டாக்டரை வைத்துக்கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறார். தீவிர நோய்களுக்கு அவரே ஒரு நல்ல, அந்தந்த துறைக்கான மருத்துவரிடம் அனுப்பி வைப்பது தான் சிறந்த விஷயம் என்பதுடன் மருத்துவ மனைக்குச் செல்ல அலுப்பு பட்டுக்கொண்டோ, அவசரத்தேவைக்கோ, நாமாகவே மருந்துக்கடைகளுக்குச் சென்று மருந்துகள் கேட்டு வாங்குவது எந்த அளவு அபாயகரமானது என்பதையும் சொல்கிறார் விரிவாக!

நானும் எப்போதும் என் குடும்ப டாக்டரைத்தான் மற்ற பிரச்சினைகளுக்கு கலந்தாலோசிக்கிறேன்.

எது நமக்கு நல்லது என்பதை நாம் தான் நன்கு யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

படங்களுக்கு நன்றி: கூகிள்




37 comments:

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் தேவையான பகிர்வு.. பெரும்பாலான மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருப்பது தான் கஷ்டம்....

Asiya Omar said...

உபயோகமான பகிர்வு அக்கா.இந்த காலத்தில் ரொம்ப உஷாராக இருக்கனும், நம்பிக்கையான குடும்ப டாக்டராகவும் அமைய வேண்டும்.

தமிழ் உதயம் said...

பல நல்ல தகவல்கள். மருத்துவ உலகின் மறுபக்கம் - நிச்சயம் கொடூரமானது, ஆசைகள் நிரம்பியது, ஈவிரக்கமற்றது.

Unknown said...

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பகிர்வு அக்கா... பகிர்வுக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வைத் தரும் தெளிவான பகிர்வு. மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வு பகிர்வு.

RAMA RAVI (RAMVI) said...

நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி மேடம்.குடும்ப டாக்டர் வைத்துக்கொள்வது நல்லது.
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Indli: 2

மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு தான். ஆனாலும் டாக்டர்களிடம் கேள்வி கேட்கவே நமக்குத் தயக்கமாக உள்ளது. அப்படியே கேட்டாலும் அவர்கள் எப்போதும் மிகவும் Busy யாக இருப்பதாலும், கூட்டம் சேர்வதாலும், நம் கேள்விகளுக்கு பதில் எங்கே சரியாகச் சொல்கிறார்கள். ஏதேதோ டெஸ்ட் செய்யச்சொல்லி, உடனே ஏதேதோ மருந்து மாத்திரை எழுதித் தந்து, அடுத்த நோயாளியை அழைக்க பஸ்ஸரை அழுத்தி விடுகிறார்கள்.

திருப்பதி போய் நீண்ட க்யூ வரிசையில் 10 மணி நேரங்கள் கால் கடுக்க நின்று, பிறகு பெருமாளை நெருங்கும் போது 10 செகண்ட்களில் “ஜருகண்டி” என்று சொல்லி துரத்தி விடுவார்கள். அதுபோலத் தான் சில டாக்டர்களை சந்திக்கும் போதும் நடக்கிறது.



பெரும்பாலான இடங்களில் இப்படித் தான் நடக்கிறது, மேடம்.

ஒரு சிலர் மருத்துவர்கள் நல்லவர்களாக இருப்பதும் உண்டு.
அவர்கள் நம்மிடம் ஆறுதலாகப் பேசி, நாம் சொல்வதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டாலே பாதி வியாதி பறந்து போய்விடும் என்பது தான் உண்மை.

நல்ல பதிவு. நன்றி. vgk

MANO நாஞ்சில் மனோ said...

மக்களுக்கு உபயோகமான பதிவு இது மிக்க நன்றி...!!!

CS. Mohan Kumar said...

மிக உபயோகமான தகவல்கள். நம் மருத்துவரிடம் நாம் தான் கேள்விகள் கேட்டு பதிலை பெற வேண்டும். அவருக்கு இருக்கும் அவசரத்தில் அவர் விளக்கமாய் பேச மாட்டார்

Yaathoramani.blogspot.com said...

அருமையான அனைவருக்கும்
அதிகம் பயன்படும்படியான பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு நனறி

ஸாதிகா said...

அநேக இடங்களில் இப்படித்தான் நடக்கின்றது அக்கா!நல்லதொரு எச்சரிக்கைப்பகிர்வு.

கீதமஞ்சரி said...

நல்லதொரு பதிவு. பல மருத்துவர்கள் நம் கேள்விகளுக்குப் பொறுப்பான பதில்களைத் தர முன்வருவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. சில சமயங்களில் நோயாளிக்கு என்ன வியாதி என்பதைக்கூட கடைசிவரை அவரிடம் தெரியப்படுத்துவதே இல்லை.

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் ஒருதொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன் நேரம் கிடைக்கும்போது தொடரவும்

கே. பி. ஜனா... said...

இதெல்லாம் நல்ல உபயோகமுள்ள தகவல்கள்! பாராட்டுக்கள்!

ரிஷபன் said...

சில நேரங்களில் டாக்டராலும் சரியாகச் சொல்ல முடிவதில்லை..
உங்கள் பதிவு சொல்கிற விவரங்கள் புரிதலைத் தருகினறன..

ஸ்ரீராம். said...

உஷார் படுத்தும் பதிவு. இத்தனை கேள்விகளை நிச்சயம் மருத்துவரிடம் கேட்க முடியாது. பதில் சொல்ல மாட்டார்கள்.

குறையொன்றுமில்லை. said...

விழிப்புணர்வு பதிவு.பலருக்கும் பயன்படும் விதத்தில் சொல்லி இருக்கீங்க. உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன் நேரம் கிடைக்கும் போது தொடருங்க.

kowsy said...

சீனுவாசன்.கு அவர்கள் அழைப்பின் பெயரில் மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடரை நானும் எழுதினேன். இத்தொடர் இடுகைக்காய் நானும் உங்களை அழைக்கின்றேன். மழலைகள் உலகு அழகுபெற நீங்களும் நால்வரை அழையுங்கள்.

மனோ சாமிநாதன் said...

அன்பான பின்னூட்டத்திற்கு மனங்கனிந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது உண்மைதான் ஆசியா! நமக்கு மிகவும் நம்பிக்கையான குடும்ப டாக்டர் அமைவதில்தான் எல்லாமே இருக்கிறது!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரமேஷ்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு உள‌மார்ந்த நன்றி சினேகிதி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்திற்கு மனங்கனிந்த நன்றி ராம்வி!

மனோ சாமிநாதன் said...

மருத்துவர்களைப்பற்றிய உங்கள் கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்திற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் நாஞ்சில் மனோ!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி சகோதரர் மோகன்குமார்!
மருத்துவர்களுக்கு ஆயிரம் அவசர‌ங்கள், வேலைகள் எப்போதுமிருக்கும். நாம் தான் நமக்குத் தேவையான தகவல்களை கேட்டுப்பெற வேன்டும்.
க‌ருத்துக்கு அன்பு ந‌ன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

இந்த மாதிரி கசப்பான நிகழ்ச்சிகள் நிறைய மருத்துவர்களிடம் அனுபவங்களாக பெற்றிருக்கிறேன் கீதா! நாம்தான் எச்சரிக்கையாக, நிறைய தகவல்களைக் கேட்டு வாங்கி, பிறகு சிகிச்சை எடுத்துக்கொள்ள‌ வேண்டும்.
கருத்துக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி சகோதரி லக்ஷ்மி!
என்னைத் தொடர்பதிவிற்கு அழைத்ததற்கு அன்பு நன்றி!
விரைவில் தொடர்பதிவை தொடர்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

சில மருத்துவர்கள் நாம் கேட்பதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்கிறார்கள். நம் சந்தேகங்களுக்கு விளக்கமும் சொல்கிறார்கள். அப்படியும்கூட சில சமயங்களில் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன!!

மனோ சாமிநாதன் said...

மழலைகள் பற்றிய தொடர்பதிவிற்கு அழைத்ததற்கு இனிய நன்றி சந்திரகெள‌ரி! சகோதரி லக்ஷ்மியும் இதே தொடர்பதிவிற்கு அழைத்துள்ளார்கள். விரைவில் தொடர்கிறேன்.