Monday, 20 June 2011

அன்பென்பது யாதெனில்......

“ நமக்கு வரும் புகழெல்லாம் நமக்குச் சொந்தமல்ல. நம்மைப் பெற்றவர்களுக்கே சொந்தம். இதை உணர்ந்தவர்கள் வாழ்வில் உயர்ந்து நிற்கிறார்கள். உணராதவர்கள் தங்கள் நிலையில் தாழ்ந்து விடுகிறார்கள்!”

சமீபத்தில் இந்த வரிகளை ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது.

எத்தனை சத்தியமான வரிகள்!

இளம்பிராயத்தினர் யாராக இருந்தாலும் அவர்களின் சாதனைகளுக்காக, விருதுகளுக்காக வாழ்த்து சொல்ல நேரிடும்போது, முதலில் ‘ உன் பெற்றோரை கடைசி வரை நன்றாக கவனித்துக்கொள்’ என்று ஆரம்பித்து பிறகு தான் வாழ்த்து சொல்லி முடிப்பேன்.

பெற்றோரை கவனிப்பது என்று ஆரம்பித்ததுமே சில வருடங்களுக்கு முன் குமுதம் குழுமத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ஜங்ஷன் என்னும் மாத இதழில் வெளி வந்த ஒரு உண்மை நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

கிராமத்து வெள்ளந்தியான தம்பதியர் அவர்கள். ஒரே மகனுக்கு ஓரளவு படிக்க வைத்து, திருமணமும் செய்விக்கிறார்கள். வீட்டையும் மகனுக்கே எழுதி வைத்து பெரியவர் இறந்து விடுகிறார். அதன் பின் தான் அந்த அம்மாவிற்கு திண்டாட்டமாகிறது. நல்லது எது சொன்னாலும் விரோதமாகவே பார்க்கிறாள் மருமகள். கடைசியில் சாப்பாடு போடுவதும் பிடிக்காமல் அவள் மனம் கசந்து போக, தன் கணவனை உசுப்பேற்றுகிறாள். அவளின் தொல்லை தாங்காமல் அவனும் அம்மாவை ' டாக்டரிடம் செல்லலாம்' என்று சொல்லி சென்னக்கு அழைத்துச் செல்கிறான். நேரே கடற்கரைக்குச் சென்று அவளை அங்கே உட்கார வைத்து, பாத்ரூம் சென்று வருவதாகச் சொல்லி அவளை அப்படியே கை கழுவி விட்டு சென்று விடுகிறான். அந்த பேதைத் தாயும் அவன் வருவான், வருவான் என்று காத்திருந்து, இரவு நேரமானதும் அந்தத் தாயின் புலம்பலைக் கேட்டு சில நல்ல உள்ளம் படைத்த போலீஸ்காரர்கள் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அந்த முதியோர் இல்லத்தில் இதையெல்லாம் கேட்டு பதைபதைத்துப்போன இளம் ரிப்போர்ட்டர், அவர்களுக்கு மனம் நெகிழ்ந்து நன்றி கூறுகிறார். அப்போது அவர்கள் அந்த அம்மா அழுது கொன்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்பெண் அவரிடம் போய் கேட்கிறது, ' ஏம்மா! அது தான் இப்போது இங்கே பத்திரமாக வந்து சேர்ந்து விட்டீர்கள் அல்லவா? இன்னும் ஏன் அழுகிறீர்கள்?' என்று! அதற்கு அந்த அம்மா விழிகள் பளபளக்கச் சொல்கிறார், " இல்லைம்மா! என் மகன் ஒருவேளை அதற்கப்புறம் என்னைத் தேடி வந்திருந்தால் என்னைக் காணாமல் தவித்திருப்பானே அம்மா!"

அந்த பெண் வார்த்தைகள் வராமல் அசந்து போனாள். படித்து முடித்த நிலையில் நானும் தான்.

இது தான் தாய்மையின் மகத்தான சிறப்பு என்பதை தாயுள்ளம் கொண்ட யாராலுமே புரிந்து கொள்ள முடியும்.

எப்போது இதை நினைத்தாலும் மனதில் ஒரு சின்ன வலி ஏற்படும். துரோகங்கள் பல உண்டு. ஆனால் பெற்ற தாய்க்கு உணவோ, பொருளோ எதுவும் கொடுக்காமல், தன்னந்தனியாக யாரையுமே தெரியாத ஒரு ஊரில் அப்படியே தவிக்க விட்டுச் சென்ற துரோகத்திற்கும் குரூரத்திற்கும் என்ன பெயர் கொடுப்பது? எத்தனை நல்ல விஷயங்கள் அன்பு, பாசம், கருணை, நன்றியுணர்வு என்று உலகில் இருக்கின்றன! இதில் ஏதாவது ஒன்று கூடவா அந்த மகனுக்கு இல்லாமல் போய்விட்டது?

யோசித்துப்பார்க்கும்போது, அந்தத் தாயார் அவனை வளர்த்த விதம் சரியில்லையா அல்லது அவளின் அன்பை அவனுக்கு உணர்த்திய விதம் சரியில்லையா என்ற கேள்வி எழுகிறது.



குழந்தைகளைப் பொதுவாக எத்தனையோ கனவுகளுடன் தான் வளர்க்கிறோம். அவர்களுக்கு நல்ல படிப்பைத் தருகிறோம். நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லித் தருகிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை பெரும்பாலோனார் சொல்லித்தருவதில்லை.

நம் அன்பு எத்தகையது என்பதையும் நம் குழந்தைகளிடம் அவசியம் சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். ' உன் மீது நாங்கள் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறோம், உன் மீது எல்லையில்லாத பிரியம் வைத்திருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் அத்தனை நம்பிக்கைகளும் நீதான் ' என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லி சொல்லித்தான் வளர்க்க வேண்டும். தாய் தந்தையின் அன்பையும் நம்பிக்கையையும் முழுமையாகப் புரிந்து கொன்ட குழந்தை என்றுமே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது.

ஓரளவு வளர்ந்ததும் வீட்டிலிருக்கும் பிரச்சினைகளையும் சொல்லி வளர்க்க வேண்டும். நம் சிறகுகளுக்குள் பொத்தி பொத்தி வளர்த்த குழந்தைகளுக்கு, அதற்கான சமயம் வரும்போது சிறகுகளை விரித்துப் பறக்கவும் சொல்லித்தர வேன்டும். சிறகு முளைக்குமுன் பறக்க எத்தனிப்பது எத்தனை ஆபத்தானது என்பதையும் சொல்லித் தர வேன்டும். எத்தனை உயர உயர பறந்தாலும் வேர்கள் எங்கே இருக்கின்றன என்பதையும் உணர வைக்க வேண்டும். இப்படி வளர்க்கப்படும் குழந்தை என்றுமே அதன் பெற்றோர் பெருமைப்படும்படி தான் வளரும்.

மனதில் இருக்கும் அன்பை சிலர் வெளிப்படையாக காட்ட மாட்டார்கள். பிரச்சினைகள் நேரும்போது, 'என் மனசு முழுவதும் அன்பை வைத்திருந்தேனே, சொன்னால்தான் அன்பா? அதை உணர்ந்து கொள்ள முடியாதா?' என்று புலம்புவார்கள். எப்போதுமே அன்பை வெளிப்படுத்தினால்தான் அடுத்தவருக்கு அந்த அன்பின் ஆழம் புரியும். மலர்ந்தால்தான் பூவின் மணத்தை நுகர முடியும் ரு தடவை அரட்டை அரங்கத்தில் விசு சுவாரஸ்யமான ஒரு விஷயம் சொன்னார். அவருடைய டெளரி கல்யாணம் என்ற திரைப்படமும் டி.ராஜேந்தரின் ' தங்கைக்கோர் கீதம் என்ற திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானதாம். இரண்டுமே புகழ் பெற்றாலும் இவரது படம் 100 நாட்கள் மட்டுமே ஓடியதாம். ராஜேந்தரின் படமோ வெள்ளி விழா கொண்டாடியதாம். இவர் ஒரு நண்பரிடம் கேட்டாரம்' இரண்டு பேருமே அண்ணன் தங்கை பாசத்தை வைத்துத் தான் படம் எடுத்திருக்கிறோம். எப்படி அவருடைய படம் மட்டும் வெள்ளி விழா கொண்டாடியது? ஏன் என் படம் 100 நாட்களைத் தாண்டவில்லை?' என்று! அதற்கு அவருடைய நண்பர் ' நீ உன் தங்கையிடம் எதையும் சொல்லிச் சொல்லி வளர்க்கவில்லை. உன் கஷ்டங்கள்கூட அவளுக்குத் தெரியாதுதான் வளர்த்தாய். அவரோ படம் முழுவதும் தன் அன்பையும் கஷ்டங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். இது தான் இந்த வித்தியாசத்திற்குக் காரணம்' என்று பதிலளித்தாராம்.

அன்போ, பாசமோ, நன்றி உணர்வோ எதுவாயிருந்தாலும் அடுத்தவரிடம் அதை முழுமையாக வெளிப்படுத்தினால்தான் அந்த உறவு நீடித்து வாழும்.

35 comments:

ஹுஸைனம்மா said...

//ஓரளவு வளர்ந்ததும் வீட்டிலிருக்கும் பிரச்சினைகளையும் சொல்லி வளர்க்க வேண்டும்.//

இதில்தான் நிறைய பேர் விட்டுடுறாங்க. கஷ்டம் தெரியாம வளர்கணும் அல்லது நான் பட்ட கஷ்டம் படக்கூடாதுன்னு நினைக்கீறாங்க. அது தப்புனு இனும் அழுத்தமா சொல்லிட்டீங்க. விசுவின் நண்பர் சொன்னதும் அருமை.

தமிழ் உதயம் said...

மிக அருமையாக சொல்லி முடித்திருக்கிறிர்கள்.

RVS said...

கடற்கரையில் நான் இல்லை என்று என் மகன் தேடுவானே! என்று அந்த தாய் சொன்னபோது எனக்கு நெக்குருகிப்போயிற்று... ச்சே.. என்ன மனிதர்கள்..
திருவள்ளுவர் சொன்னது...

அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

நிலாமகள் said...

தாய் தந்தையின் அன்பையும் நம்பிக்கையையும் முழுமையாகப் புரிந்து கொன்ட குழந்தை என்றுமே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது.//

அன்போ, பாசமோ, நன்றி உணர்வோ எதுவாயிருந்தாலும் அடுத்தவரிடம் அதை முழுமையாக வெளிப்படுத்தினால்தான் அந்த உறவு நீடித்து வாழும்//

ப‌திவின் சார‌த்தை தெளிவாக அழ‌காக‌ காட்டி நிற்கின்ற‌ன‌ இவ்வ‌ரிக‌ள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் நல்லதொரு பதிவை அன்புடன் தந்திருக்கிறீர்கள்.

கடற்கரையில் தனியாக விட்டுவிட்டு வந்த அவனின் தாயை நினைத்து என் மனம் மிகவும் வருந்துகிறது. அப்பாவியான அவளின் சொல் நம்மை கண் கலங்கி அழவைக்கிறது.

ஹூஸைனம்மா அவர்கள், நான் சொல்லவந்த கருத்துக்களை மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள்.

நல்லதொரு பதிவு தந்துள்ளீர்கள். மிகவும் நன்றி.

Voted. 5 to 6 in INDLI

GEETHA ACHAL said...

உண்மை தான் வீட்டில் உள்ள கஷ்ட நஷ்டங்க கண்டிப்பாக அனைவருக்கும் தெரியவேண்டும்..

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியவேண்டாம்,படிக்கின்ற வயசு..பாவம் எதுக்கு அவங்களுக்கு கஷ்டம் என்று நினைத்தால்...படித்த பிறகு அவங்களுக்கு எதுவுமே தெரியாமல் போய்விடுக்கின்றது..படிப்பினை தவிர...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அறிவுரையோ புத்திமதியோ சொல்வதற்குப் பெரியவர்கள் இருப்பினும் பல இடங்களில் அவை எடுபடாமல் போய்விடுவதுதான் இத்தனை சோகத்துக்கும் காரணமோ?

தாயின் மனது கடற்கரையில் தனித்து விடப்பட்ட போதும் மகனையே சுற்றிவந்தது. விட்டுவந்த மகன் ஒரு நொடி அல்ல தன் எஞ்சி இருக்கும் வாழ்நாள் பூராவும் தேடினாலும் இனிக் கிடைக்காத பொக்கிஷம் தன் பெற்றோர் என்பதை உணரும்போது அவன் வாழ்வும் முடிந்திருக்கும்.

மேன்மையான பதிவு மனோ அக்கா.

Yaathoramani.blogspot.com said...

பெரியவர்கள் பொத்தி பொத்தி வளர்த்து
பிள்ளைகளுக்கு நம் கஷ்டம் தெரியக் கூடாது எனச்
செய்கிற இமாலயத் தவறினை மிக சரியாக
சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

என்னதான் குழந்தைகளுக்கு வீட்டு கஷ்ட நஷ்டங்கள் சொல்லி வளர்த்தாலும்
அவங்க தலையெடுக்கும்போது அவங்க
பிரச்சனைகள் தான் அவங்க கண்க ளுக்கு
தெரியுது. தாயோ தகப்பனோ பிள்ளையோ பெண்ணோ ஒருவரையும்
சார்ந்து வாழாமல் தன்னம்பிக்கயுடன்
தன் வாழ்வை தானே அமைத்துக்கொள்வதுதான் சரிவரும்.

ராமலக்ஷ்மி said...

//அன்போ, பாசமோ, நன்றி உணர்வோ எதுவாயிருந்தாலும் அடுத்தவரிடம் அதை முழுமையாக வெளிப்படுத்தினால்தான் அந்த உறவு நீடித்து வாழும்.//

முற்றிலும் உண்மை. விரிவாகப் பகிர்ந்து கொண்ட விதம் சிறப்பு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அந்த மகனின் செயல் வலித்தது. இது போல் கன்யாகுமாரி கடற்கரையில் மன நலம் குன்றியவர்களை கொண்டு வந்து விட்டுச் செல்வார்கள். அதன் அடிப்படையில் "உள்ளம்" என்றொரு மலையாள திரைப்படம் கூட வந்திருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

அர்த்தமுள்ள பகிர்வு... சொல்லி இருந்த விஷயங்கள் அனைத்தும் தேவையானவை.

ஸாதிகா said...

//
நம் அன்பு எத்தகையது என்பதையும் நம் குழந்தைகளிடம் அவசியம் சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். ' உன் மீது நாங்கள் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறோம், உன் மீது எல்லையில்லாத பிரியம் வைத்திருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் அத்தனை நம்பிக்கைகளும் நீதான் ' என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லி சொல்லித்தான் வளர்க்க வேண்டும். தாய் தந்தையின் அன்பையும் நம்பிக்கையையும் முழுமையாகப் புரிந்து கொன்ட குழந்தை என்றுமே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது.
// என்ன அருமையான வரிகளை தேர்ந்தெடுத்து பதிவிட்டு இருக்கின்றிர்கள் மனோ அக்கா.!!!!!!!!!!!!

A.R.ராஜகோபாலன் said...

/// " இல்லைம்மா! என் மகன் ஒருவேளை அதற்கப்புறம் என்னைத் தேடி வந்திருந்தால் என்னைக் காணாமல் தவித்திருப்பானே அம்மா!"///

ஐயோ என்ன அன்னையின் பாசம்
என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லையே
இப்படிப்பட்ட தாயிடமிருந்த அந்த நாய் குணம் கொண்ட மகம்
அருமையான பதிவு அம்மா

A.R.ராஜகோபாலன் said...

//நம் அன்பு எத்தகையது என்பதையும் நம் குழந்தைகளிடம் அவசியம் சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். ' உன் மீது நாங்கள் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறோம், உன் மீது எல்லையில்லாத பிரியம் வைத்திருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் அத்தனை நம்பிக்கைகளும் நீதான் ' என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லி சொல்லித்தான் வளர்க்க வேண்டும். தாய் தந்தையின் அன்பையும் நம்பிக்கையையும் முழுமையாகப் புரிந்து கொன்ட குழந்தை என்றுமே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது. //


குழந்தை வளர்ப்பின்
முக்கியத்தையும்
மகத்துவத்தையும்
சொன்ன வைர வரிகள்
ஒவ்வொரு பெற்றோரும் செய்யவேண்டியது இதுதான்

'பரிவை' சே.குமார் said...

//அன்போ, பாசமோ, நன்றி உணர்வோ எதுவாயிருந்தாலும் அடுத்தவரிடம் அதை முழுமையாக வெளிப்படுத்தினால்தான் அந்த உறவு நீடித்து வாழும். //


அம்மா, அர்த்தமுள்ள பகிர்வு... மிக அருமையாக சொல்லி முடித்திருக்கிறிர்கள்.

Kousalya Raj said...

மனதை பாதித்த ஒரு சம்பவத்தை வைத்து மிக அருமையாக அன்பை பற்றி விவரித்து இருக்கிறீர்கள் அக்கா. படிக்கும் போது என்னால் உணரமுடிகிறது.

பணம், பேர் புகழ் எல்லாம் இருந்தாலும் பரஸ்பர அன்பு என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்வின் இனிமை அர்த்தமற்று விடும்.

//அன்போ, பாசமோ, நன்றி உணர்வோ எதுவாயிருந்தாலும் அடுத்தவரிடம் அதை முழுமையாக வெளிப்படுத்தினால்தான் அந்த உறவு நீடித்து வாழும்.//

மிக உண்மை. மிக அவசியமான ஒரு பதிவு .பகிர்வுக்கு நன்றிகள் அக்கா

ADHI VENKAT said...

வீட்டு கஷ்டங்களை குழந்தைகளுக்கு சொல்லித் தான் வளர்க்க வேண்டும். நமது அன்பையும் புரிய வைக்க வேண்டும். நல்ல பகிர்வுமா.

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் ஹுஸைனம்மா! பெரும்பாலானோர் தங்கள் குழந்தைக்ளுக்கு தன் பிரச்சினைகள் எதுவும் தெரியக்கூடாதென்று தான் பொத்தி பொத்தி வளர்க்கின்றனர். அதுவே அதிகப்படியான பிரச்சினைகளுக்கும் காரணமாவதுடன் பெற்றோரின் அருமையும் குழந்தைகளுக்கும் தெரிவதில்லை!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி தமிழ் உதயம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் RVS!

மனோ சாமிநாதன் said...

அனுபவப்பூர்வமான வரிகளைத்தான் நான் எழுதியிருந்தேன் நிலாமக‌ள்! மனமார்ந்த பாராட்டிற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துப்பகிர்வுக்கு மனங்க‌னிந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் கீதா! படிப்பை முடித்த பின் அவர்களுக்கு பணத்தின் அருமையோ பெற்றோரின் அன்போ புரியாமல் சுயநலமாவது தான் பெரும்பாலும் நடக்கிறது! கருத்துக்கு இனிய நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

"விட்டுவந்த மகன் ஒரு நொடி அல்ல தன் எஞ்சி இருக்கும் வாழ்நாள் பூராவும் தேடினாலும் இனிக் கிடைக்காத பொக்கிஷம் தன் பெற்றோர் என்பதை உணரும்போது அவன் வாழ்வும் முடிந்திருக்கும்."

உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் சுந்தர்ஜி! எப்போதுமே இழந்த பிறகு தான் எதனுடைய அருமையும் புரியும்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்கும் விரிவான பாராட்டுரைக்கும் என் இதயங்கனிந்த நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

"என்னதான் குழந்தைகளுக்கு வீட்டு கஷ்ட நஷ்டங்கள் சொல்லி வளர்த்தாலும் அவங்க தலையெடுக்கும்போது அவங்க
பிரச்சனைகள் தான் அவங்க கண்க ளுக்கு தெரியுது."

க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ளுட‌ன் த‌ன் அன்பையும் முழுமையாக‌ சொல்லி வ‌ள‌ர்க்கும்போது நிச்ச‌ய‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் சுய‌ந‌ல‌ம் இருக்காது ல‌க்ஷ்மி! ' எந்த‌‌க்குழந்தையும் ந‌ல்ல‌க் குழந்தைதான் ம‌ண்ணில் வ‌ருகையிலே! அது ந‌ல்ல‌வ‌னாவ‌தும் தீய‌வ‌னாவ‌தும் அன்னை வ‌ள‌ர்ப்பினிலே!" என்று அழ‌கான‌ ஒரு பாட‌ல்கூட‌ இருக்கிற‌து!


"தாயோ தகப்பனோ பிள்ளையோ பெண்ணோ ஒருவரையும்
சார்ந்து வாழாமல் தன்னம்பிக்கயுடன்
தன் வாழ்வை தானே அமைத்துக்கொள்வதுதான் சரிவரும்."

ரொம்ப‌வும் ப்ராக்டிக்க‌லாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்! ய‌தார்த்த‌ வாழ்விற்கு இது ச‌ரியான‌து தான். அதிக‌ம் சார்ந்து வாழ்வதுவும் மன வலிகளுக்கு காரணமாகும்தான். ஆனால் ஓரளவாவது ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து வாழாமல் இந்த உலகம் இயங்குவதில்லை.

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி வித்யா!

அந்த 'உள்ளம்' என்ற படத்தை நான் எப்படி பார்க்கத் தவறினேன் என்று தெரியவில்லை! 2007லிருந்தே மலையாளத் திரைப்படங்கள் எல்லாவற்றையும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. ஒரு வேளை அப்போது இந்தப் படத்தைத் தவற விட்டிருப்பேன் போலிருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

கருத்துப்பகிர்வுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த பாராட்டுரைக்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி சகோதரர் ராஜகோபாலன்!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்கள் ஆயிற்று உங்களை இங்கே பார்த்து, சகோதரர் குமார்!

இத‌யந்திறந்த‌‌ பாராட்டுரைக்கு என் அன்பு ந‌ன்றி!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வருகை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது கெளசல்யா! உங்களின் கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துப்பகிர்வு மனதை சந்தோஷப்படுத்தியது ஆதி!