Wednesday, 8 June 2011

நலன் தரும் நல்லதொரு சிகிச்சை- தொடர்ச்சி


ஏக பாத சலபாசனம்:-




கால்களை நீட்டிக்கொண்டு கவிழ்ந்து படுத்து நெற்றி அல்லது மோவாயைத் தரையில் பதிக்க வேண்டும். இரண்டு கைகளையும் உடம்பை ஒட்டிப் பக்கத்தில் நீட்டிக்கொண்டு கைகளை இறுக்கமாக முஷ்டிபிடித்துக் கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து உள்ளே அடக்கிக்கொண்டு கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு இரண்டு கால்களையும் நீட்டிய நிலையில் வலது காலை மெதுவாக மேலே உயர்த்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். காலை கீழே இறக்கி மீண்டும் இடது காலை இம்மாதிரியே செய்யவேண்டும். இப்படி நான்கு முறைகள் செய்தால் போதும்.

ஏக பாத சலபாசனம் நரம்பு மண்டலம் முழுவதையும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

சர்ப்பாசனம்:-

சர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள். இவ்வாசனம் பாம்பு நமிர்ந்து படம் எடுப்பது போன்ற தோற்றத்தைத் தருவதால் இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயர் வந்தது. இதையே புஜங்காசனம் என்றும் சொல்வதுண்டு.

செய்முறை:-

விரிப்பின்மேல் கவிழ்ந்து படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் கவிழ்த்து இரண்டு காதுகளுக்கும் பக்கம் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஒருமுறை ஆழ்ந்து இழுத்து, இழுத்த மூச்சு முழுவதையும் வெளியே விட்டுவிடவேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வசமாக ஊன்றிக்கொண்டு மார்பு, கழுத்து, வயிறு இவற்றை மேலே நிமிர்த்த வேண்டும் இடுப்பும் அதன் கீழ்ப்பகுதிகளும் நன்கு தரையில் படிந்திருக்கவேண்டும். பாதங்கள் தரையில் படியும்படியாக கால்கள் இரண்டும் நீட்டிய நிலையில் இருக்கவேண்டும். அதேசமயம் கால்கள், கைகள் இவற்றை விறைத்து நீட்டிக் கொள்ளக்கூடாது. எவ்வளவுக்கு அண்ணாந்து மேலே பார்க்கமுடியுமோ அவ்வளவிற்கு அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். மூச்சில்லாத இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். இந்தப்பத்து நொடிநேரம் சுவாசம் இல்லாமல் வெற்று நுரையீரலோடு இருக்க முடியாதவர்கள் இலேசாக சுவாசித்துக் கொள்ளலாம். பழகப்பழக இந்தநிலை சரியாக வந்துவிடும்.

இப்பயிற்சியால் நுரையீரல் வளம்பெறுகிறது. இதயம் வலிமைப்பட்டு இதயத்துடிப்பு சமப்படுத்தப்படுகிறது. இதயபலவீனத்தைப் போக்குகிறது. இதயத்தின் வால்வுகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. இடுப்பு வலிகள் அகலுகின்றன. தீர்வே இல்லாத கழுத்துவலித் துன்பம் நீங்குவது மட்டுமன்றிக் கழுத்துப்பட்டை போட்டுக்கொள்ளும் அவசியமும் அகலுகின்றது. முதுகெலும்பை மிக இலகுவாக வளைத்துப் பயிற்சி கொடுப்பதில் சீரிய ஆசனம் இது. தோள் எலும்புகள்இ தோள்மூட்டுக்கள், கைஎலும்புகள் ஆகியவை பலம்பெறுகின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய் போன்ற உறுப்புக்கள் இதனால் வளம்பெறுகின்றன. பெண்களுக்குப் பிரசவத்தின் பின்னால் உண்டாகும் வயிற்றுச் சரிவைத் தடுக்கிறது. கருப்பை, ஓவரி, மார்பகங்கள் ஆகிய பகுதிகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செயயக்கூடாது.

தனுராசனம்



குப்புறப் படுத்துக் கைகளால் காலை(கரண்டைக்கால்) பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை வில்போல் வளைத்து நிற்கவும்.

முதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. தொந்தி கரையும். அஜீரணம், வயிற்று வலி, தொந்தி, வயிற்றுக் கொழுப்பு, ஊளைச் சதை நீங்கும்., நீரிழிவு நோய் நீங்கும், பெண்களின் மாதாந்திர நோய்கள் நீங்கும்.

யோகமுத்ரா



பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். மூச்சை மெதுவாக வெளியே விட்டவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தை பயிலலாம்.

முதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் , நீரழிவு நோய் நீங்கும், தொந்தி கறையும். முதுகெலும்பு நேராகும்.

வச்சிராசனம்



கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமர்த்தி உட்காரவும் நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும் 2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம்.

வச்சிரம் போன்று திட மனது ஏற்படும்.

நின்ற பாத ஆசனம்



வலது காலில் நின்று கொண்டு இடது காலை மடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக் கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். பலன்கள்:

இவ்வாசனம் பார்வைக்கு மிக இலகுவாகத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம். தியானம், மன ஒருமைப்பாடு, திடசிந்தனை இவைகளுக்கு சிறந்த ஆசனம். திடமனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும். மன அமைதி பெறும். சஞ்சலங்கள் ஏற்படாது.

பத்மாசனம்



இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் வைக்க வேண்டும்.. முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் படத்தில் காட்டியபடி வைத்துக் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும். ஆரம்பக் கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடன் ஆசனத்தைக் கலைத்துவிட வேண்டும். நாள் செல்ல வலி வராது.. 3 நிமிடம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.

அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். வாதநோய் தீரும்.

இப்பதிவில் எழுதியிருப்பதெல்லாம் சுலமான பயிற்சிகள்தான் என்றாலும் ஒரு ஆசிரியரிடம் பயிற்சி எடுத்துக்கொள்வது மிக நல்லது. முடியாதவர்கள் மெதுவாக செய்ய ஆரம்பிக்கலாம். எப்போது வலி வந்தாலும் உடனேயே அந்த பயிர்சியை நிறுத்தி விட வேன்டும்.

பல விதமான நோய்கள், உடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாவதால் இன்த மாதிரி சுலபமான பயிற்சிகள் செய்ய தினமும் இந்த இயந்திர உலகில் சில நிமிடங்களை ஒதுக்குவது மனதிற்கும் உடலுக்கும் பலவித நன்மைகள் தரும்!!!

படங்களுக்கான உதவியும் நன்றியும்: கூகிள்












25 comments:

இராஜராஜேஸ்வரி said...

"நலன் தரும் நல்லதொரு சிகிச்சை- முத்துச்சிதறலாய் அருமையாய் எளிமையாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு பயனுள்ள பதிவு மீண்டும் தொடர்கிறது.


’தனுராசனம்’ என்னும் பெயருக்குத்தகுந்தாற்போலவே உடம்பை வில்லாக வளைப்பது அருமையாகப் படம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

விளக்கங்கள் யாவும் அருமை.

இவையெல்லாம் செய்து பார்க்க மிகவும் Slim ஆன உடல்வாகுடன் அடுத்த பிறவியொன்று எடுக்க ஆசைப்படுகிறேன்.

அன்புடன் vgk

பத்மநாபன் said...

யோகசனங்கள் செய்யும் முறையும், பயன்களும் பற்றி எழுதியவிதம் பயிற்சி செய்வதற்கு தூண்டுகிறது... தொடர்ந்து எழுதுங்கள்

A.R.ராஜகோபாலன் said...

மிக உபயோகமான பதிவு அம்மா
இயந்திர உலகத்தில் நாம் தான் நம் நலனில் அக்கறை கொள்ளவேண்டும் என்பதை வலிமையாய் விளக்கும் பதிவு நன்றி

எல் கே said...

நன்றி மேடம்

ஸாதிகா said...

படத்துடன் கூடிய விளக்கம் அருமை அக்கா.

ADHI VENKAT said...

நல்ல உபயோகமான தகவல்கள் அம்மா. சில வருடங்களுக்கு முன் இந்த ஆசனங்களையெல்லாம் செய்து கொண்டிருந்தேன். பிரசவத்துக்கு பின் செய்ய முடியவில்லை. இப்போது மீண்டும் தொடரலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் உங்கள் பதிவு. ஆரம்பித்து விடுகிறேன்.

நிலாமகள் said...

அனைவ‌ருக்கும் உப‌யோக‌மான‌ ப‌திவுக்கு ந‌ன்றி! @வை.கோ.சார்... முறையான‌ தொட‌ர்ந்த‌ ப‌யிற்சியால் அனைவ‌ருக்கும் சாத்திய‌மாகும் இவை. அனுப‌வ‌த்தில் சொல்கிறேன். ந‌ல்ல‌தொரு யோகா ப‌யிற்சியாள‌ரைத் தேடிப் பிடிங்க.

CS. Mohan Kumar said...

நிறைய நேரம் எடுத்து படங்களுடன் கூறுகிறீர்கள் மேடம் நன்றியும் வாழ்த்துக்களும்

Kanchana Radhakrishnan said...

உப‌யோக‌மான‌ ப‌திவு.

ஹுஸைனம்மா said...

இந்த பயிற்சிகளால், உங்கள் இதயத் துடிப்பு முழுமையாகச் சீராகிவிட்டதா? முன்பு, மருத்துவர்கள் என்ன காரணம் கூறினார்கள்? சீரற்ற இதயத் துடிப்பினால் என்ன விளைவுகள் இருந்தன அக்கா? நேரம் கிடைக்கும்போது விளக்கமான பதில் கூறுங்களேன்.

மனோ சாமிநாதன் said...

இனிதான பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்திற்கு இனிய நன்றி சகோதரர் பத்மநாபன்!

மனோ சாமிநாதன் said...

கருத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ராஜகோபாலன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்திற்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு இனிய நன்றி எல்.கே!

மனோ சாமிநாதன் said...

ஆசனங்ளை முன்பே செய்திருப்பதால் நிச்சயம் இதன் பலன்களையும் உணர்ந்திருப்பீர்கள் ஆதி! மீண்டும் விரைவில் தொடருங்கள்! கருத்திற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்திற்கு அன்பு நன்றி மோகன்குமார்! அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற நினைப்பில்தான் இந்த கட்டுரை பல சிரமங்களுக்கிடையில் எழுதினேன்.

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்திற்கு நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

கருத்திற்கு அன்பு நன்றி காஞ்சனா!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

நான் ஆரம்பத்திலேயே எழுதியிருக்கிற மாதிரி இந்தப் பயிற்சிகளாலும் சீரான டயட் உணவு முறையினாலும் இந்த பிரச்சினை முழுமையாக சீராகி விட்டது ஹுஸைனம்மா! மருத்துவர்கள் Harmonal imbalance என்று தான் கூறினார்கள். அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை அதிகமாக ஏற்படுத்தின. பல்ஸ் நிறைய இறங்கி விடும். அதிகமான இதய துடிப்புடன் வேலைகளை கூட செய்ய முடியும். ஆனால் பல்ஸ் குறைந்து விட்டால் படுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதிக துடிப்பினால் நெஞ்சமெல்லாம் உடனேயே களைப்பு தோன்றி விடும். அடுத்த நாள் முழுவதும் உடம்பு அடித்துப் போட்ட மாதிரி இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

இப்பதிவிற்கு இன்ட்லியில் அடையாளம் கொடுத்த அன்பு நெஞ்சங்கள் RVSM, Sriramanadhaguruji, Ravimadhu, aathi
அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!