Thursday 6 January 2011

ரசனையே வாழ்க்கையாய்!

பகுதி-1


ரசனையுணர்வு என்பது நம் வாழ்க்கையினூடேயே ஒன்றிப்போன ஒரு அருமையான விஷயம். பச்சிளங்குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பு, அருமையான, மெய்மறக்க வைக்கும் சங்கீதம், உணர்வுகளில் நல் எண்ணங்களைப் பதிவு செய்யும், ரசனையை மேன்மேலும் அதிகரிக்கும் சிறந்த புத்தகங்கள், மழைத்தூறல் சுமக்கும் பசுஞ்செடிகள், இவையெல்லாம் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களை, சுமைகளை அப்படியே குறைக்கக் கூடிய வலிமை பெற்றவை. நம் ரசனைக்கானத் தேடுதலில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் ஒளிந்திருக்கின்றது. சிலருக்கு தன்னை மறந்து நெக்குருகி பாடப்பிடிக்கும். சிலருக்கோ அதைக் கேட்டு விழி நீர் பெருக ரசிக்கப்பிடிக்கும். கலைகள் எல்லாமே அவை பாராட்டப்படும்போதுதான் அழகில் ஒளிர்கின்றன! நான் சமீபத்தில் ரசித்த சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ரசித்த முத்து-1

இது நான் சமீபத்தில் மறுபடியும் கேட்டு ரசித்த பழைய திரைப்படப்பாடல். பாடலை எழுதியவரின் பெயரும் படத்தின் பெயரும் மறந்து விட்டன. பாடியவர்கள் திருச்சி லோகநாதனும் எல்.ஆர்.ஈஸ்வரியும். காதல் வயப்பட்ட இருவர் முதலில் கேள்வி பதிலாக வேடிக்கையாக, விளையாட்டாகப்பாடி, இறுதியில் அன்பில் அடங்கும் வகையில் பாடல் அருமையாக அமைந்திருக்கும். அந்தப்பாடல் இதோ!

ஆண்: ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே

நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே!

பெண்: நல்ல பாம்பு வேடம் கொண்டு நடுச்சாமம் வந்தாயானால்

ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்!

ஆண்: ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்தாயானால்

செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்!

பெண்: செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்

பூமியைக்கீறியல்லோ புல்லாய் முளைத்திடுவேன்.

ஆண்: பூமியைக்கீறியல்லோ புல்லாய் முளைத்தாயானல்

காராம்பசு வேடம் கொண்டு கடித்திடுவேன் அந்தப்புல்லை!

பெண்: காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன்!

ஆரா மரத்தடியில் அரளிச் செடியாவேன்!

ஆண்: ஆரா மரமுறங்க அடி மரத்தில் வண்டுறங்க

உன் மடியில் நானுறங்க என்ன தவம் செய்தேனடி!!

ரசித்த முத்து-2

குழந்தையின் பூஞ்சிரிப்பையும் அதன் மழலையும் ரசிக்கத் தெரிந்தவன் தான் உலகத்தில் சிறந்த ரசனையாளன் என்பேன் நான்! சில சமயம் குழந்தைகளின் நேர்மையான கேள்விகள் நம்மை பதிலளிக்க முடியாதபடி திணற வைக்கும். சில மாதங்களுக்கு முன் ஒரு வார இதழில் அதன் ஆசிரியர் குழந்தையைப்பற்றி

‘ குழந்தைகள் விடியற்காலையில் பெய்யும் பரிசுத்தமான பனித்துளிகள் மாதிரி! அவை பூமியில் விழுந்த பிறகு தான் மனிதர்களின் அழுக்குகளுடன் கலந்து போகின்றன” என்று எழுதியிருந்த வரிகள் எத்தனை சத்தியமானவை! நான் ரசித்த ஒரு குழந்தையின் பேச்சு இதோ!

அப்பா, அம்மா, குழந்தை மூவரும் உறவினர் விட்டுக்குச் செல்லும் வழியில் பேருந்தில் பேசிக்கொண்டே வருகிறார்கள்.

அப்பா சொல்கிறார்:

நாம் போய் விட்டுத் திரும்பி வரும்போது இருட்டி விடும். பேசாமல் அங்கேயே தங்கி விடலாமா?”

அம்மா சொல்கிறார்:

“ தங்கலாம்தான். அவர்களும் தங்கத்தான் சொல்வார்கள். ஆனால் நாம் உடனேயே ஒப்புக்கொண்டால் இதற்காகவே காத்திருந்து விழுந்தடித்துக்கொண்டு ஒப்புக்கொண்ட மாதிரி ஆகி விடும் அவர்கள் இரண்டு தடவை சொல்லட்டும். அதன் பிறகு நாம் சரியென்று சொல்லுவோம்”

இவர்கள் நினைத்த மாதிரியே தான் நடந்தது. அவர்கள் கிளம்ப முற்பட்டபோது இரவு தங்கிச் செல்லுமாறு அவர்களும் வற்புறுத்த, இவர்களும் திரும்பத் திரும்ப ‘அதெல்லாம் பரவாயில்லை’ என்று மறுக்க, பார்த்துக்கொண்டேயிருந்த குழந்தை இடையில் புகுந்து பளீரெனக் கேட்டது.

“ ஏம்மா! நீதான் அப்பாவிடம் நாம் இரண்டு தடவை வேண்டாம் என்று சொல்லுவோம். அதன் பிறகு ஒத்துக்கொள்வோம் என்று சொன்னாயே! அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப வேண்டாம் என்று சொல்லுகிறாய்?”

பெற்றோர் முகத்தில் அசடு வழிந்ததைப்பற்றி சொல்லவா வேண்டும்?

ரசித்த முத்து-3

பெண் என்பவளின் இளமைக்காலம் முழுவதும் ஆட்டமும் பாட்டமும் சிரிப்புமாகக் கழிந்தாலும் பெற்றோர் வீடு என்றுமே அவளுக்கு நிரந்தரமில்லாது போகிறது. புதிய நாற்றாக அவள் புகுந்த வீட்டில் நடப்படுகிறாள். செழித்து வளருகிறாள். ஆலமரமாகிறாள். இதை சங்கத்தமிழ்ப் பாட்டில் அழகாக விளக்கியிருப்பதை சமீபத்தில் ஒரு கதையில் படித்து மிகவும் ரசித்தேன்.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?

நேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

இதன் அர்த்தம்:

நல்ல முத்து தண்ணீரில் பிறந்தாலும் அந்தத் தண்ணீருக்கு ஒரு பயனையும் செய்யாது. அதை அணிகின்ற மனிதருக்குத்தான் அழகு சேர்க்கும். பெண்ணும் அப்படித்தான். பெற்றவர்களுக்கு அவள் என்றும் சொந்தமில்லை. போய்ச்சேரும் இடத்திற்குத்தான் சொந்தம் ஆவாள். அதன் உலகமும் ஆவாள்!

எத்தனை அழகான உதாரணம்!!

39 comments:

GEETHA ACHAL said...

இரண்டாவது முத்து அருமை...குழந்தைகளிடம் பார்த்து தான் பேச வேண்டும்...அருமையான பகிர்வு...

Vidhya Chandrasekaran said...

அருமையான ரசனை:)

Chitra said...

எல்லா முத்துக்களையும் ரசித்தேன்.
பெண் குறித்த முத்து - புது அர்த்தம் தான்.
எனக்கு "மலரே, குறிஞ்சு மலரே...." பாடலில் வரும் வரிகள் மிகவும் பிடிக்கும். ரசித்து எழுதப்பட்ட பாடல் அது.

Jaleela Kamal said...

-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


ரசித்த முத்துக்கள் அனைத்தும் அழகனான எழுத்து நடை/

புவனேஸ்வரி ராமநாதன் said...

பிரமாதமான பாட்டு. பகிர்வுக்கு நன்றி மனோம்மா.

தினேஷ்குமார் said...

வணக்கம் அம்மா
புதுவருட வாழ்த்துக்கள் தங்களுக்கு மூன்று முத்துக்களும் அருமை அம்மா முதல் முத்து முத்தான பாடல் வரிகள் அம்மா

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரைப்படப் பாடல் முத்து,
மழலை முத்து,
சங்கத்தமிழ்ப் பாடல் முத்து
மூன்றுமே முத்தான முத்தல்லவோ!
பகிர்வுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

முத்துச்சிதறலில் வந்த முத்துக்கள் மூன்றும் நல்முத்து.. குழந்தைகள் இருக்கும்போது பார்த்து பேச வேண்டி இருக்கிறது. இல்லையெனில் பல்புதான்! பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் அருமை.

ADHI VENKAT said...

முத்துக்கள் மூன்றும் அருமை. பெண்ணானவள் நடப்படும் நாற்று தான்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

குழந்தைகளை வைத்துக் கொண்டு ஜாக்கிரதையாகத் தான் பேச வேண்டும். இல்லாவிட்டால், பெருச்சாளியை வைத்துக் கொண்டு கட்டுச் சோற்றை அவிழ்த்த கதை தான்!

Unknown said...

எல்லா முத்துக்களும் நல்ல முத்துக்களே!! சூப்பர்!!

ஹுஸைனம்மா said...

அந்த முதல்ப் பாட்டு ரொம்ப நல்லாருக்குக்கா.

ஆயிஷா said...

முத்துக்கள் அருமை.பகிர்வுக்கு நன்றி.

சிவகுமாரன் said...

\\\சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?///

இந்த சங்கத்தமிழ் பாடலைத்தான் ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். முழுதும் கிடைத்தால் வெளியிடுங்களேன்.
அருமையான முத்துக்கள்.

Asiya Omar said...

மூன்றும் முத்தான பகிர்வு.

இலா said...

மனோ ஆன்டி!
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புது வருஷத்தில முத்துக்கள் மூன்றும் அருமை! இரண்டாவது முத்து ரொம்பவே பிடிச்சது... இப்பல்லாம் ரொம்ப பாத்து பேசவேண்டி இருக்கு.. நண்பரின் மகனை ( 18 மாதம்) கையில் வைத்துக்கொண்டு என் தம்பியிடம் அலைபேசியில் "டோய்" என்றேன்.. கூடவே ஒரு குட்டி குரலும் "டோய்" என்றது ...

Kanchana Radhakrishnan said...

மூன்றும் அருமையான முத்துக்கள்.பகிர்வுக்கு நன்றி மனோ.

Krishnaveni said...

arumayaana muthukkal, superb

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் கீதா! குழந்தைகள் பல சமயங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தி விடுகிறார்கள்! கருத்துக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கு அன்பு நன்றி சித்ரா! ‘ நீங்கள் சொன்ன பாடலில் வரும் ‘தலைவன் சூட நீ மலர்ந்தாய்” என்ர வரிகளைத்தான் இந்த சங்ககாலப்பாடலும் சொல்கிறது!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தினேஷ்குமார்! உங்களுக்கும் எனது புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் திரு.வை.கோபாலகிருஷ்னன்!
தங்களின் பாராட்டிற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி அன்புச் சகோதரர் குமார்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோவை2தில்லி!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் ஆரன்யவாஸ் ராமமூர்த்தி!
இன்றைய குழந்தைகள் மிக மிக புத்திசாலிகள்! நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வைகறை!

மனோ சாமிநாதன் said...

பாட்டை ரசித்ததறிந்து மிகவும் மகிழ்வாயிருந்தது ஹுஸைனம்மா!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஆயிஷா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சிவகுமாரன்!
இந்த பாடலின் முழுப்பகுதியும் கீழே உள்ள லின்க்- ல் உள்ளது.
http://learnsangamtamil.wordpress.com/kalithokai/

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் விருதுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி காஞ்சனா!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice appreciation Krishnaveni!

ரிஷபன் said...

டாக்டர் என்ன சொன்னார் என்று எதிர் வீட்டு குழந்தையிடம் கேட்டோம். (ஜுரம் என்று கூட்டிப் போயிருந்தார்கள்.) ‘நான் அழகா இருக்கேனாம்’ குழந்தைகளிடம் எப்போதும் எதிர்பாராத சந்தோஷம்தான். ரசனையின் தொகுப்பு அருமை.

அனைவருக்கும் அன்பு  said...

//நல்ல முத்து தண்ணீரில் பிறந்தாலும் அந்தத் தண்ணீருக்கு ஒரு பயனையும் செய்யாது. அதை அணிகின்ற மனிதருக்குத்தான் அழகு சேர்க்கும். பெண்ணும் அப்படித்தான். பெற்றவர்களுக்கு அவள் என்றும் சொந்தமில்லை. போய்ச்சேரும் இடத்திற்குத்தான் சொந்தம் ஆவாள். அதன் உலகமும் ஆவாள்!

எத்தனை அழகான உதாரணம்!!//

உண்மை தோழி அருமையான படைப்பு