Saturday 10 July 2010

பாலைவன வாழ்க்கை-அதன் லாபங்களும் நஷ்டங்களும்!!

பகுதி-2

எழுபதுகளில் கொச்சியிலிருந்தும் மும்பையிலிருந்தும் காய்கறிகளையும் சரக்குகளையும் கொண்டு வரும் படகுகளிடமும் இந்தத் தொழிலைச் செய்வதற்கென்றே இருந்த சில தனியார் நடத்திய படகுப்பயணங்களுக்கும் பணம் கொடுத்து, பாஸ்போர்ட், விசா போன்ற எதுவுமேயில்லாமல் ஒரு வார காலம் தினமும் அந்த கள்ளத்தோணியினர் ஒரே ஒரு முறை கொடுக்கும் பிரெட் துண்டுகளையும் தண்ணீரையும் உணவாக ஏற்று கடற்பயணம் செய்து திருட்டுத்தனமாக சட்ட விரோதமாக பலர் இங்கு நுழைந்தார்கள். கடற்பயணம் முடிவதற்குள் தரைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் இறக்கி விடப்படுவார்கள். சொற்ப உடைமைப்பொருள்களுடன் இங்கு நுழைந்து கிடைத்த இடைத்தில் கூலி வேலை செய்து அல்லது டாக்ஸி ஓட்டி பிழைத்து வந்த எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். எழுபதுகளின் பிற்பகுதியில் இரு அரசாங்கங்களும் எடுத்த முடிவில் பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு பொது மன்னிப்பும், ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்து இருப்பவர் ஒருவர் கையெழுத்திட்டு காரண்டி கொடுத்தால் இல்லாத ஒருவருக்கு பாஸ்போர்ட்டும் பின் அதில் விசாவும் அடித்துத் தரப்பட்டது.


அதற்குப்பிறகு கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஓடி விட்டன. சட்ட திட்டங்கள் இன்று கடுமையாக்கப்பட்டு விட்டன. வானளாவிய கட்டடங்களும் செயற்கைப் புல்வெளிகளும் உலகின் பல அதிசயங்களும் இன்றைக்கு எத்தனையோ மாறுதல்களை ஐக்கிய அரபுக்குடியரசில் உண்டாக்கி விட்டன. ஆனால் இன்றைக்கும் பாஸ்போர்ட், விசா என்பதன் அர்த்தமே தெரியாமல் நிலங்களையோ வீட்டையோ அடகு வைத்து காசை ஏதாவது ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து எப்படியாவது இங்கு வந்து நாலு காசைப் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டும்தான் நிறையபேர் வருகிறார்கள். இதில் படிக்காதவர்களுக்கும் படித்தவர்களுக்கும் எதுவும் அதிக வித்தியாசமில்லை.

சில வருடங்களுக்கு முன் இது போல வந்த ஒரு இளைஞர்-அவ்வளவாக படிப்பறிவு இல்லாதவர்-ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் அவரை சந்திக்க வந்த ஏஜண்ட் அவர் கையிலிருந்த பாஸ்போர்ட், அனைத்து பேப்பர்களை வாங்கிக்கொண்டு துபாயிலிருந்து இங்கே ஷார்ஜாவிற்கு அழைத்து வந்து, காரை விட்டு இறக்கி “ இங்கேயே நின்று கொண்டிரு, இதோ வந்து விடுகிறேன் ” என்று சொல்லி போனவர்தான். திரும்ப வரவேயில்லை. இரவு நெடுநேரம் வரை அங்கேயே நின்று காத்திருந்து விட்டு அவர் ஒரு வங்கி வாசலில் படுத்துத் தூங்கி விட்டார். காலையில் கூட்டுவதற்கு அங்கு வந்த ஒரு துப்புறவுத் தொழிலாளி பேசிப்பார்த்து விட்டு தமிழர் என்பதால் என் கணவரிடம் கொண்டு வந்து சேர்ப்பித்தார். அவருக்கு இரு வாரங்கள் உணவு, உறைவிடமெல்லாம் கொடுத்து ‘அவுட் பாஸ்’ [ இந்த மாதிரி பாஸ்போர்ட் இல்லாது அல்லது களவு கொடுத்து திண்டாடுபவர்களுக்காக அவர்கள் இந்தியா செல்ல இந்த அரசாங்கம் கொடுக்கும் அனுமதிச் சீட்டு] வாங்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் தெரிந்த நண்பர் ஒருவர் அவருக்கு தன் அலுவலகத்தில் தினம் நம் இந்திய மதிப்பில் 400 ரூபாயுடன் வேலை கொடுப்பதாகச் சொன்னார். முடிவை அவரிடமே விட்டு விட, கொஞ்ச நாளாவது அந்த வேலையில் இருந்தால் ஊரில் பட்டிருக்கும் கடனையாவது தீர்க்கலாம் என்று சொல்லி பல நன்றிகளைத் தெரிவித்து அந்த கம்பெனிக்குப் போனார் அந்த இளைஞர்.

இது ஒரு விதம் என்றால், சமீபத்தில் எங்களுக்குத் தெரிந்தவர்-ஃபோன் செய்து ஷார்ஜாவில் வேலை கிடைத்திருக்கிறது என்றும்
விசா ரெடியாகி விட்டது என்றும் இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப உள்ளதாகவும் சொன்னார். நான் கம்பெனியின் பெயரைக்கேட்டதும் தனக்கு அதெல்லாம் தெரியாது என்றும் க்ரூப் விசாவில் வருவதாகவும் புறப்படும்போதுதான் விசா கொடுப்பார்களென்றும் சொன்னார். அதன் பின் தன் பாஸ்போர்ட் expiry ஆகி விட்டதாயும் அதை renewalக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுத்தால் உடனேயே கிடைக்குமா என்று கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. “ பாஸ்போர்ட் expiry ஆகியிருந்தால் எப்படி உங்களுக்கு விசா கொடுத்திருக்க முடியும் ” என்று கேட்டதற்கு அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ‘ இதில் ஏதோ தப்பு நடந்திருக்கிறது. பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். நன்கு விசாரியுங்கள்’ என்றேன். இவர் படித்தவர். ஊரில் நல்ல வியாபாரம் செய்பவர். இவருமே இப்படி அடிப்படை விபரமே தெரியாமல் இருக்கிறார் என்றால் என்ன செய்வது?

சென்ற வாரம் இப்படித்தான் செளத் ஆப்பிரிக்காவில் வேலை என்று 15 பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏஜெண்ட் சென்னையில் விமானத்தில் ஏற்றி விட்டாயிற்று. இங்கே ஷார்ஜாவைச் சேர்ந்த அவர்களின் ஆள் இங்கு கொண்டு வந்து இறக்கி ஒரு வாடகை வீட்டில் அனைவரையும் வைத்து, ‘செளத் ஆப்பிரிக்காவில் பிரச்சினை. அங்கே நுழைய முடியவில்லை’ என்று சொல்லி இரண்டிரண்டு பேராக திருப்ப ஊருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறான். முன் பின் தெரியாத நாட்டில் வந்து மாட்டிக்கொண்டு அவர்கள் படும் அவஸ்தைகளைக் கேட்கும்போது சகிக்கவில்லை. அதில் ஒருத்தர் சொல்கிறார்- ‘ ஊருக்குப் போய் அந்த ஏஜெண்டைக் கொலை செய்து விட்டுத்தான் மறுவேலை’ என்று!

இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகிறார்கள். திரும்பத் திரும்ப அரசாங்கம், ‘ முறைப்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனக்கள் மூலம் வெளி நாட்டு வேலைக்கு முயற்சி செய்யுங்கள்’ என்று எச்சரித்தாலும் முன் பின் தெரியாதவர்களின் வார்த்தை ஜாலங்களில் மயங்கி ஏமாறுவதும் இங்கே வந்து ஏமாறித் திணறுவதும்தான் ஆயிரக்கனக்கானவர்களின் நடைமுறைத் துன்பங்களாக இன்றிருக்கின்றன.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சேமித்து நட்புகளுக்கும் உறவுகளுக்கும் உதவுவதிலேயே நிறைய பேரின் ஆயுள் விரயமாகி விடுகிறது. இதில் எத்தனையோ நம்பிக்கை துரோகங்கள்! ஏமாற்றங்கள்!! ஊரிலும் இங்குமாக மனதில் அடி வாங்கி தொலைந்து போன வாழ்க்கையைப் மீட்டுக்கொள்ளக் கஷ்டப்படுபவர்களும் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள்.

இங்கு வியாபாரத்தைப் பொறுத்தவரை, அனைத்துச் சட்டங்களையும் ஒழுங்காக நூல் பிடித்தாற்போலத் தொடர்ந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. முன்போல இன்று வியாபாரத்தில் ஈடுபடுவது சுலபமில்லை. கடுமையான சட்ட திட்டங்களுக்கு ஈடு கொடுத்து, விஷம் போல ஏறும் வாடகையையும் சமாளித்து வியாபாரம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அனைத்து வியாபாரிகளுக்கும் இருக்கின்றன.

இதிலேயே காலம் முழுதும் பழகி விட்டு, நம் ஊரில் பிற்காலத்துக்கு என்று ஏதாவது தொழில் தொடங்க வேண்டுமென்று இங்குள்ளவர்கள் அங்கு போய் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யும்போது மிகவும் திணறிப்போகிறார்கள் என்பதும் உண்மை! அவர்களால் முதலில் எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்துக்கூட சமாளிக்க முடியாமல் துவண்டு போய் விடுகிறார்கள். பிறகு அந்த சொத்துக்களை காபந்து செய்வதில் ஒரு வழியாகி விடுகிறார்கள். தனது சொந்த வீட்டைக்கூட பத்திரமாக பாதுகாக்க யாருமில்லாதவர்கள்தான் இன்று அதிகம்!

பொருளாதார வளர்ச்சியும் அதனால் கிடைக்கும் மதிப்பும் வசதிகளும் லாபங்கள் என்றால்-இவற்றுக்காகக் கொடுக்கும் விலையோ மிக அதிகம்!

வெளி நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வாழும் பூமியும் சொந்தமில்லை. பிறந்து வளர்ந்த பூமியும் அந்நியப்பட்டுக்கிடக்கின்றது!

36 comments:

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு,

படிக்காதவர்களுக்கு ஒரு வித கொடுமை, படித்தவர்களுக்கு வேறு ஒரு வித கொடுமை. அதிக சம்பளம் , நல்ல வேலை பார்க்கும் சூழல் என்று கூறி நிறைய கம்பனிகள் ஏமாற்றி உள்ளனா. எனக்கு தெரிந்து பல பொறியாளர்கள் தமிழ்நாட்டில் நல வேலை, குடும்பம் வாழ்க்கை என்று இருந்தார்கள். அதிக சம்பளம், அதிக சேமிப்பு என்ற பேராசைக்கு ஆசைப் பட்டு வாழ்வை தொலைத்த பல இளைனர்களை நான் அறிவேன்.

பதிவுலகத்தில் உங்களைப் போன்ற வெளி நாட்டில் இருக்கும் பதிவர்கள் அரபு நாடுகளில் வாடகை, உணவு செலவு, போக்குவரர்த்து செலவு, குறிப்பிட படிப்பு, பனி அனுபவம் உள்ள நபர்கள் இந்த அளவு குறைந்த பட்ச ஊதியம் கேட்க வேண்டும் என்பது போன்ற விபரங்களை எழுதினால் இன்னும் பயனுள்ள தாக இருக்கும்.

பலர் சொல்வது அரபியர்களின் நிறுவனங்களை விட, இந்தியர்களான சிந்தி, குஜராத்தி நடத்தும் நிறுவனங்களில் தான் ஊழியர்களை கொடுமை செய்வது அதிகம் என்று. அது பஆற்றியும் எழுதுங்கள்.

ஹைஷ்126 said...

மிக அருமையான பதிவு. ஒரு சிலருக்காவது வெளிச்சம் காட்டும் என நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

தமிழ் உதயம் said...

வெளி நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வாழும் பூமியும் சொந்தமில்லை. பிறந்து வளர்ந்த பூமியும் அந்நியப்பட்டுக்கிடக்கின்றது!

அருமையாக சொல்லிவிட்டீர்கள். எவ்வளவு படித்தும் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்.

athira said...

மனோ அக்கா, நிறைய அனுபவங்களைத் தொகுத்துத் தந்துவிட்டீங்கள்.

எரிகிற வீட்டிலே பிடுங்கிய விறகு மிச்சம் என்பதுபோல, நிறையப்பேர் வெளிநாட்டிலே இருந்து உழைக்கிறார்கள். அதாவது, ஊரிலே எவ்வளவோ கடன்பட்டு, தாலியைக்கூட விற்றும் சிலர் ரிக்கெட் எடுத்து வந்திருக்கிறார்கள், அப்படியானவர்களையே ஏமாற்றிப் பிழைக்கும் நம்மவர்களை என்னவென்று சொல்வது.

ஆனால் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார், இப்படித் துரோகம் செய்பவர்களெல்லாம் இன்று நல்லாயிருப்பதுபோல தெரியும், ஆனால் நிட்சயம், சாகமுன் அனுபவிப்பார்கள் என்று.

Thenammai Lakshmanan said...

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சேமித்து நட்புகளுக்கும் உறவுகளுக்கும் உதவுவதிலேயே நிறைய பேரின் ஆயுள் விரயமாகி விடுகிறது. இதில் எத்தனையோ நம்பிக்கை துரோகங்கள்! ஏமாற்றங்கள்!! //

உண்மைதான் மனோ

அன்புடன் மலிக்கா said...

தெளிவான விளக்கவுரையும் மிக அருமையாக எழுதியிருக்கீங்க மேடம்.

ஏமாற்றுபவர்களை இறைவன் நிச்சயம் தண்டிப்பான்.

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையான பதிவு. ஒரு சிலருக்காவது வெளிச்சம் காட்டும் என நம்புகிறேன்.

ஜெய்லானி said...

//வெளி நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வாழும் பூமியும் சொந்தமில்லை. பிறந்து வளர்ந்த பூமியும் //

இந்த வரியே போதும் எல்லாவற்றையும் சொல்லவும் , புரிந்துக்கொள்ளவும்..


தமிழிஷில் இனைத்து விட்டேன்.

எல் கே said...

koncham periya post ... vanthu padikaren

Menaga Sathia said...

மிக அருமையான பதிவு!!

Krishnaveni said...

interesting and informative post Madam, must read one....thanks for sharing

தூயவனின் அடிமை said...

நல்ல பகிர்வு. எல்லாரையும் சிந்திக்க வைத்துவிட்டிர்கள். ஆசை யாரை விட்டது. நிச்சயம் வளரும் தலைமுறை இதற்கு முற்று புள்ளி வைப்பார்கள்.

சாந்தி மாரியப்பன் said...

//நிலங்களையோ வீட்டையோ அடகு வைத்து காசை ஏதாவது ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து எப்படியாவது இங்கு வந்து நாலு காசைப் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டும்தான் நிறையபேர் வருகிறார்கள். இதில் படிக்காதவர்களுக்கும் படித்தவர்களுக்கும் எதுவும் அதிக வித்தியாசமில்லை. //

இருப்பதை விட்டுட்டு பறப்பதை பிடிக்கிறார்கள் என்றுதான் தோணுது.. இருக்கிற சொத்தை வெச்சுக்கிட்டு இந்தியாவுலயே பிழைக்காம, கடன்பட்டு வெளிநாடு வந்து, அப்றம் அந்த கடனைத்தீர்க்க ஆயுசை தொலைத்து... கஷ்டம்தான்..

athira said...

//நிலங்களையோ வீட்டையோ அடகு வைத்து காசை ஏதாவது ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து எப்படியாவது இங்கு வந்து நாலு காசைப் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டும்தான் நிறையபேர் வருகிறார்கள். இதில் படிக்காதவர்களுக்கும் படித்தவர்களுக்கும் எதுவும் அதிக வித்தியாசமில்லை. //

இப்படிச் சொல்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நம்மைப்போல தானே ஏனைய மனிதர்களும், எமக்கிருக்கும் விருப்பங்கள், ஆசைகள்தானே எல்லோருக்கும் இருக்கும்.

நாம் இதை, நம் நாட்டிலிருந்து சொல்லலாம், ஆனால் வெளிநாட்டிலிருந்து சொல்வது தவறு. ஏன் எம்மால், நம் நாட்டிலே இருந்திருக்க முடியாதா? நம் நாட்டில் மக்களே இல்லையோ?. அதனால் வெளி நாட்டுக்கு வருபவர்களை நான் குறைகூறமாட்டேன். ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் ஒவ்வொருவரும் வெளிநாட்டுக்கு வருகிறார்கள். நாட்டிலே பயமில்லை, சகல வசதியும் கிடைக்கிறதென்றால் ஏன் வேறு நாட்டுக்கு வரப்போகிறோம். எல்லா நாடுகளில் இருப்பவர்களும்(மேற்கத்தைய நாடுகள்), வெளிநாட்டைத்தேடி ஓடுகிறார்களோ? இல்லையே.அவர்களுக்கு எல்லாம் தம் நாட்டில் கிடைக்கிறது.

மனோ அக்கா, மனதில் எழுவதை, எழுதுவதில் தப்பில்லைத்தானே, குறை நினைத்திடாதீங்கோ.

மனோ சாமிநாதன் said...

//நிலங்களையோ வீட்டையோ அடகு வைத்து காசை ஏதாவது ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து எப்படியாவது இங்கு வந்து நாலு காசைப் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டும்தான் நிறையபேர் வருகிறார்கள். இதில் படிக்காதவர்களுக்கும் படித்தவர்களுக்கும் எதுவும் அதிக வித்தியாசமில்லை. //

அதிரா! உங்கள் கருத்தை சரியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்! அதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் இந்த வரிகள் மூலம் நான் சொல்ல வந்ததைத்தான் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

காசு சம்பாதிக்க வேண்டும், பொருளாதார ரீதியில் உயர வேண்டும் என்பதுதான் நான் உள்பட இங்கு வந்திருப்பவர்களின் அனைவரது நோக்கமும்! நான் இங்கு வந்த காலத்தில் ஒரு திரஹமிற்கு 2 ரூபாய் என்ற கணக்கில் இருந்த இந்திய ரூபாய் இன்றைக்கு ஒரு திரஹமிற்கு கிட்டத்தட்ட 12.5 ரூபாய் என்ற நிலையில் இருக்கிறது. இங்கு சம்பாதிப்பதால்தான் நாமும் பொருளாதார ரீதியில் உயர முடிவதுடன் அடுத்தவருக்கும் உதவ முடிகிறது. அதில் எந்தவித மாறுபாடான கருத்துக்கும் இடமில்லை. ஆனால் எப்படியாவது காசு சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தகுந்தவர்களின் யோசனைகளைக் கேட்காமலும் எந்த விபரமுமே தெரிந்து கொள்ளாமலும் அறிவின்மையாலும் நிறைய பேர் சொத்துக்களை விற்று பணம் கொடுத்து மோசமான ஏஜெண்டுகளால் அங்கேயே ஏமாற்றப்படுகிறார்கள், அல்லது இங்கு வந்து ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது எங்காவது அரேபியரின் வீடுகளில் காரைக் கழுவவும் ஒட்டகம் மேய்க்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதில் பெண்களும் சரியான விகிதத்தில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை! எனது ஆதங்கமெல்லாம் ‘எப்படியாவது சம்பாதிக்க வேண்டுமென்ற’ நோக்கத்தில் புதை குழியில் விழுந்து நிறைய பேர் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதுதான்! சரியாக எதைப்பற்றியும் அறிந்து கொள்ளாமல் நிறைய பேர் வந்து எத்தனைக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை விளக்கி எழுதியிருந்தேனே?

படித்தவர்-தெரிந்தவர் என்று ஒருத்தரைபற்றி எழுதியிருந்தேனல்லவா, அவர் என் வீட்டின் கீழ்த்தளத்தில்தான் குடியிருந்தார். சுற்றிலும் என் கொழுந்தனார்கள், சகோதரி மருமகள் - இங்கு பல வருடங்கள் இருந்து சென்றவர்கள்- இருக்கிறார்கள். எங்களிடம் கேட்டிருக்கலாம், அல்லது இவர்கள் யாரிடமாவது விபரம் கேட்டிருக்கலாம். இப்படி யாரிடமுமே கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இப்படி பணம் கொடுத்து ஏமாறுபவரை நினைத்தால் கோபம்தான் மிஞ்சுகிறது!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ராம்ஜி அவர்களுக்கு!

விரிவான தங்களின் கருத்துரைகளுக்கு அன்பு நன்றி!

நீங்கள் சொல்வது உண்மைதான். அரசு வேலையிலிருக்கும் பொறியாளர்கள்கூட, நீண்ட கால விடுப்பில் அல்லது ராஜினாமா செய்த நிலையில் இங்கு வந்து அதிக சம்பளத்துடன் வேலை செய்கிறார்கள். ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப்பெற வேண்டுமென்பது வாழ்வின் பொது விதி. அதிக சம்பளம் என்னும்போது மற்ற சந்தோஷங்களைத் தொலைக்க வேண்டியிருக்கிறது!

தாங்கள் கேட்டிருந்தவைகளை விரைவில் எழுதுகிறேன். தங்களின் ஆலோசனைகளுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

தமிழ் உதயம் அவர்களுக்கு!

தங்களின் கருத்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பார்ந்த நன்றி தேனம்மை!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி மலிக்கா!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார் அவர்களுக்கு!
கருத்திற்கும் வருகைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!

தமிழிஷில் என் பதிவை இணைத்ததற்கு என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எந்த வரிகளை ‘ இன்றைய பாலைவன வாழ் இந்திய மக்களின்’ நிதர்சன வாழ்க்கை என்று நினைத்தேனோ அவற்றையேதான் நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்!
பதிவிற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

படித்துப்பாருங்கள் LK! அப்புறம் தங்களது கருத்துக்களைச் சொல்லுங்கள்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பதிவிற்கு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

very much delighted to have your nice comments here, Krishnaveni! And thanks a lot for that!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் தூயவன் அவர்களுக்கு!

தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!!

athira said...

பார்த்தீங்களோ மனோ அக்கா, என்னில் ஒரு பழக்கம், மனதில் ஏதும் எழுந்தால், அதைக் நேரடியாகக் கேட்டுத் தெளிவடைந்துவிடுவேன். இதனால் என்மீது கோபம்கூட ஏற்படலாம் சிலருக்கு. இப்போ நீங்கள் விளக்கமாக பதிலளித்ததும்தான், புரிந்தது.

விளக்கமாகப் பதிலளித்தமைக்கு மிகவும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

//வெளி நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வாழும் பூமியும் சொந்தமில்லை. பிறந்து வளர்ந்த பூமியும் அந்நியப்பட்டுக்கிடக்கின்றது//

வருத்தமான உண்மை.

மங்குனி அமைச்சர் said...

இதில் என்ன கொடுமை என்றால் , நல்ல படித்தவர்களும் ஏமாறுகிறார்கள்

ஸாதிகா said...

படிக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது அக்கா.உங்களது 35 வருட அமீரக வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை உங்கள் எழுத்து நடையில் அழகுற கூறி இருக்கின்றீர்கள்.நான் அறிந்ததில் கத்தாரில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு இந்தியருக்கு 1 1/2 லட்சத்திற்கும் மேல் சம்பளமாம்.நான் சொல்வது கத்தார் ரியாலில் .இப்படி வாழ்க்கையில் முன்னேறியவர்களைப்பற்றியும் அறியத்தாருங்களேன்.

Vijiskitchencreations said...

அக்கா நல்ல பதிவு. நீண்ட நாட்களுக்கு பின் இப்ப தான் வந்திருக்கேன். பிள்ளைகளுக்கு எல்லாம் வெக்கேஷன். ஒரே பிஸியா இருக்கு. இந்த பதிவை படித்ததும் பதில் எழுத முடியாமல் போக முடியல்லை.
எங்க ஊரில் கேரளாவில் எத்தனையோ குடும்பங்கள் இந்த மாதிரி தவித்து இருக்கிறார்கள். மனைவி, குழந்தை, குடும்பம், தொழில், பணம், இடம் , நகை எல்லாம் அடமானம்,தொலைத்து விட்டு புலம்பியிருப்பதை நான் கேட்டிருக்கேன். மிக சங்கடமாக இருக்கும். எல்லாம் பணம் மோகம். வேறேன்ன சொல்வது.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

மங்குனி அமைச்சரி அவர்களுக்கு!

உண்மைதான். படித்தவர்களும் ஏமாறும்போதுதான் கோபம் வருகிறது!
தங்கள் கருத்துக்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் ஸாதிகா! இங்கு மிகவும் அடித்தட்டில் எப்படி கஷ்டப்படும் இந்தியர்கள் இருக்கிறார்களோ அதேபோல் வாழ்க்கையின் உயர் மட்டத்தில் மிக அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப்பற்றி, வியாபரம் செய்வதில் உள்ள சிக்கல்கள் பற்றி, இன்னும் நிறைய நிறைய எழுத இருக்கின்றன. பின்னர் மறுபடியும் இந்த கருத்துக்களைத் தொடர்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

வேலைகளுக்கிடையில் வந்து பதிவு போட்டதற்கு அன்பு நன்றி விஜி!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. கேரளாவிலும் ஹைதராபாத்திலும் இது போல நிறைய விஷயங்களில் இழப்புக்கள் தொடர்ந்து நடக்கின்றன! அரசாங்கம் இதில் தீவிர கவனம் செலுத்தினாலொழிய இழப்புகளைக் குறைக்க முடியாது.

kavisiva said...

அன்பு மனோ மேடம் அங்கு இங்கு சுற்றி இன்றுதான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்

//வெளி நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வாழும் பூமியும் சொந்தமில்லை. பிறந்து வளர்ந்த பூமியும் அந்நியப்பட்டுக்கிடக்கின்றது!//
இந்த வரிகளைப் படித்ததும் கண்களில் ஏனோ நீர் துளிர்க்கிறது.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஒரு மலையாள சேனலில் உறவுகளை அரபு நாடுகளுக்கு அனுப்பிய பின் அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லாமல் வருடக்கணக்கில் தவிக்கும் குடும்பங்களைக் காட்டுகிறார்கள். பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. இவர்களுக்கு உதவ ஏதேனும் வழி இருக்கிறதா?