Sunday, 12 May 2013

காலங்கள் வரைந்த கோலங்கள்!-பகுதி-2

அன்றைய காலத்தில், பெண் பார்க்க மாப்பிள்ளைகள் வரும்போது, அவர்கள் வந்து விட்டுச் சென்றதும் வீட்டில் பெற்றோர்கள் கேட்பார்கள், ‘மாப்பிள்ளையைப்பிடித்திருக்கிறதா’ என்று! அதற்கு பதிலே வராது. அப்படி பதில் வந்தாலும் ‘ உங்களுக்குப்பிடித்திருந்தால் சரி !’ என்ற பதில் தான் வரும்.
இன்றைக்கோ இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி மாறி விட்டன! ‘ எனக்கேற்ற மாப்பிள்ளையை சரியாக கணித்துப்பார்க்க என் பெற்றோருக்குத் தெரியவில்லை’ என்று தொலைக்காட்சி  விவாதங்களில்கூட பெண்கள் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் சொல்கிறார்கள். இது நல்ல மாற்றம் தானா?

வீட்டில் அம்மாக்கள் அன்றைக்கு ‘ நீ ஒன்றுமே தெரியாமலிருந்தால் உன் மாமியார் என்னைத்தான் வறுத்தெடுப்பார்கள்’ என்று புலம்பிக்கொண்டே வேலைகளைப் பழக்கி விடுவார்கள். கூடவே திட்டுக்களும் விழுந்து கொண்டே இருக்கும்!
இன்றைக்கு அம்மாக்கள் பெண்களை வேலைகள் செய்யப் பழக்குவதில்லை.
 ‘ போகும் இடத்தில் தான் கஷ்டப்பட்டாக வேண்டும். கல்யாணமாகிப்போகும் வரையாவது என் பெண் இங்கே சுகமாக இருக்கட்டுமே!’ என்கிறார்கள்.

.திருமணமாகி பெண் புகுந்த வீட்டிற்குப்போகும்போது, ‘ எங்கள் பெயரை நீ காப்பாற்ற வேண்டும். அந்த வீட்டு செய்தி எதுவும் இங்கு வரக்கூடாது’ என்று சொல்லியனுப்புவார்கள். இன்றைக்கு அந்த மாதிரி புத்திமதிகள் எதுவுமே இல்லை! ‘ உனக்கு அங்கே ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையென்றால் ஒரு ஃபோன் பண்ணு போதும், நான் உடனேயே வந்து அழைத்துப்போகிறேன்’ என்று ஒரு தகப்பனார் தன் பெண்ணிடம் சொன்னதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

அன்றைக்கு தாய்மையடைந்த பெண்ணை பிரசவத்துக்குப்போகும்வரை குனிந்து நிமிர்ந்து வேலை செய்யச் சொல்லி புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் நன்றாகப் பழக்குவார்கள். ஏழாம் மாதத்தில் குனிந்து வாசலில் கோலம் போட வேண்டும். நன்றாக எப்போதும் போல நடந்து, அடுப்படி வேலைகள், அம்மி அரைப்பது என்று சகலமும் செய்ய வேண்டும்.  குழந்தையும் எந்த வித அறுவை சிகிச்சையுமில்லாமல் சுகப்பிரசவத்தில் பிறந்தது. இன்றைக்கோ, முதலில் சில பெண் மருத்துவர்களே,
 ‘ தளர்ச்சியாக இருந்தால் பெட் ரெஸ்ட் எடு. மூன்று மாதம் வேலை செய்யாதே’ என்கிறார்கள்! அப்புறம் மாமியார் எந்த விதத்தில் புத்திமதி சொல்லி பயத்தை போக்க முடியும்? இன்னும் சில மருத்துவர்களோ ‘ நல்ல நாளாகப் பார்த்து அறுவை சிகிச்சையை ஃபிக்ஸ் பண்ணி விடுங்கள்’ என்று சொல்கிறார்கள்! 

திருமணங்களில் விவாகரத்து சதவிகிதம் இன்று கணிசமாக உயர்ந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதுவும் தமிழ் நாட்டில் அதிகமாம்! என் மகனுடன் திருமணமான அவரது நண்பர்களில் இதுவரை பதினோரு பேர்களுக்கு விவாகரத்து நடந்திருக்கின்றன!
பெண்கள், திருமண வாழ்வு-இவற்றில் வந்த மாற்றங்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!
 
35 வருடங்களுக்கு முன்பு, இங்கே திருமணமான புதிதில் நான் வந்தபோது எங்கேயுமே வானுயர்ந்த கட்டிடங்களோ, வளம் மிக்க காட்சிகளோ கிடையாது. ஒரு மகப்பேறு மருத்துவர்கூட‌ கிடையாது. சாப்பிடுவதற்கு ஏதேனும் ஓரிரண்டு கடைகள் இருக்கும். எப்படியாவது பொருளீட்டி தாய்நாட்டிலிருக்கும் குடும்பம் வாழ வேண்டுமென்று, முறையான விசா கிடைக்காமல் ‘லான்ச்’ எனப்படும் கள்ளத்தோணியில் வந்திறங்கி கிடைக்கிற வேலையில் இறங்கியவர்கள் எத்தனையோ பேர்! கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, இந்தப் பாலையின் சூட்டிலும் குளிரிலும் வதங்கி அன்று தன் குடும்பத்தை காப்பாற்றினார்கள்.

எங்கள் உணவகத்திலேயே 25 வருடங்களாக வேலை செய்து வரும் சமையல்காரர்கள், சப்ளையர்கள் எல்லோரும் இன்று தன் பிள்ளைகளை, பெண்களை மேற்படிப்பு படிக்க வைத்து, ஊரில் நிலங்களும் வீடுகளும் வாங்கி நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு வேலையில் அமரும் சிறு வயது பிள்ளைகளுக்கோ எந்த விதப்பொறுப்பும் இல்லை. ‘ நிறைய சம்பாதிக்க வேண்டும், ஆனால் வேலைகள் அதிகம் இருக்கக்கூடாது’ என்ற நினைப்புடன் இருப்பவர்கள் அதிகம் பேர்!!

சென்ற வருடம் எங்கள் உணவகத்திற்கு சமையல் செய்ய ஒரு இளைஞனை தேர்ந்தெடுத்தோம். ஊரில் அப்பா இல்லாமல் அம்மா வேலை செய்து மகனை ஓரளவு படிக்க வைத்திருந்தார்கள். அந்த பையனும் நன்கு சமைத்துக்காட்டியதால் செலவெல்லாம் செய்து அந்தப்பையனை இங்கு வரவழைத்தோம். ஒரு வாரம் வேலை செய்தான். அதற்கப்புறம் மருத்துவ சோதனைகள் எல்லாம் அவனுக்கு செய்து பாஸ்போர்ட்டில் விசா அடிக்க வேண்டும். என் கணவர் மருத்துவ சோதனைக்கு அவனைத் தயாராக இருக்கச் சொன்ன போது, அவன் சொன்னான், ‘ சார் நான் ஊருக்குத்  திரும்ப‌ப் போகிறேன்!’

அதிர்ச்சியடைந்த என் கணவர் காரணம் கேட்டபோது, அந்த 28 வயது பையன், அம்மாவை உட்கார வைத்து காப்பாற்ற வேண்டியவன்  ‘ எனக்கு என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!’ என்று சொன்னான்! எத்தனையோ சொல்லிப்பார்த்தும் உபதேசங்கள் செய்தும் அவன் தலையில் ஒன்றும் ஏற‌வேயில்லை! இந்த விபரத்தை அவன் அம்மாவிடம் சொன்னால் பாவம், ‘ என் மகனுக்கு எப்போது தான் பொறுப்பு வரப்போகுதோ தெரியவில்லை!’ என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்கள் தொலைபேசியில்! வேறு வழியில்லாமல் அவனைத் திருப்பி அனுப்பினோம். அதுவரை செலவு செய்த தொகையையெல்லாம் தானே தந்து விடுவதாக அவன் அம்மா சொன்னதோடு, நாங்கள் ஊருக்குப்போன போது அந்த மகனிடமேயே அனுப்பி வைத்தார்கள்! பெற்றோர்கள் நெருப்பில் வாழ்ந்தாலும் எத்தனையோ மகன்கள் இன்றைக்கு இப்படித்தான் குளிர் காய்கிறார்கள்!!

கடைசி கடைசியாக இன்றைய வயதானவர்களின் வாழ்க்கையையும் சொல்ல வேண்டும். அன்றைக்கு, ஓரளவு ஐம்பது வயதைத் தாண்டி விட்டாலே பெண்களுக்கு வீட்டில் ஓரளவு ஓய்வு கிடைத்தது. மருமகள் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் செய்வதும் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சுவதுமாக அமைதியாக அவர்களின் பொழுது கழிந்தது. ஆண்களுக்கும் வேலையிலிருந்து பணி ஓய்வு கிடைத்ததும் ரிட்டைய்ர்ட் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடிந்தது. இன்றைக்கோ அவர்களுக்கு 50 வயதைத்தாண்டிய பிறகு தான் பொறுப்புக்கள் அதிகமாயிருக்கின்றன! உடலும் மனமும் ஓய்வைத்தேடித்தேடி கெஞ்சுகின்றன! நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளின் அல்லது பெண்களின் குழ்ந்தைகளை சமாளிக்கவும் சமைத்துப்போடவும் அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளுக்கு அடிக்கடி செல்வது இன்றைக்கு சர்வ சாதாரணமாக இருக்கிறது!, அவர்களின் குழந்தைகள் தங்களின் குழந்தைகளை இவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு சந்தோஷமாக அங்கே பொருள் ஈட்டுகிறார்கள்! இன்னும் சில பெற்றோர்கள் வேறு மாதிரி! பெற்றோர்கள் வேறு எங்காவது உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ பணியில் இருக்க, நம் ஊரிலேயே தாத்தாவும் பாட்டியும் பேரக்குழந்தைகளை படாத பாடு பட்டு வளர்க்கிறார்கள்! காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் உழைத்துச் சோர்ந்து போயிருக்கும் வயதானவர்களில் அநேகம் பேருக்கு இன்னுமே ஓய்வு என்பதே கிடைக்கவில்லை என்பது தான் இன்றைய நிஜம்!

காலங்கள் வரைந்தவை அன்று அழகிய கோலங்கள்! இன்று வரைந்திருப்பதோ நிறைய சமயங்களில் கிறுக்கல்கள்தான்!