வெளியே சென்று திரும்பிய என் கணவரின் கைகளில் இரண்டு திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. ' தபால் பெட்டியில் கிடந்தன. எடுத்து வந்தேன்' என்றார்கள். யாரென்று கவனித்ததில் இரண்டுமே தூரத்து உறவினர்களின் பெண்களின் திருமணச் செய்தியைத் தாங்கி வந்திருந்தன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்தத் தகவலுமில்லை. எந்தக் கடிதமோ, அழைப்போ எதுவுமேயில்லை. உலகம் தான் எத்தனை சுருங்கி விட்டது!
அந்தக் காலத்தின் திருமணங்கள் நினைவுக்கு வந்தன. எத்தனை குதூகலம்! இரன்டு நாட்களுக்கு முன்னரேயே விருந்தினர்கள் வருகையாலும் வீடெங்கும் புன்னகைக்கும் மாக்கோலத்தாலும் உற்சாகம் ஆரம்பமாகி விடும். பலகாரங்களின் சுவையும் வெல்லப்பாகின் மணமும் குழந்தைகளின் கூக்குரலும் விளையாட்டுமாக கல்யாண வீடே களை கட்டும். மாமன் பத்திரிக்கை எப்படி வைப்பது, அழைப்பிதழுடன் என்னென்ன வரிசைப்பொருள்கள் வைத்து அழைப்பது என்று பார்த்துப் பார்த்து செய்வார்கள். இப்போதோ, கோலம் போடக்கூட காண்ட்ராக்ட் வந்து விட்டது. உறவினர்களெல்லோரும் கூடி மகிழும் விசேடமாக இல்லாமல் மொய் எழுதி கணக்குப்பார்க்கும் சம்பவமாகவே மாறி விட்டது இன்றைய திருமணங்கள். அதுவும் அவை ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, போகக்கூடிய குறைந்த அளவு தூரமாக இருந்தால் மட்டுமே குடும்பத்தோடு போவது இன்றைய வழக்கமாகி விட்டது. அழைப்பிதழ் கவரின் மேலே பெயர் கூட எழுதாது கொண்டு வந்து கொடுத்து விட்டு, ‘ இந்த அழைப்பிதழுக்கு மட்டும் எத்தனை செலவு செய்திருக்கிறேன் ’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளுபவர்கள் தான் இன்று அதிகம்! ' இது என் வீட்டு கல்யாணம். நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவது எனக்கு மிகவும் நிறைவையளிக்கும் விஷயம்' என்று சொல்வது இன்றைக்கு மிகவும் அரிதாகி விட்டது.
சமீபத்தில் படித்த வாசகங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.
‘ஒரு காக்கை இறந்து விட்டால்கூட மற்ற காக்கைகள் கத்தியபடி கூட்டமாய் வட்டமிடும். பறவையைக் கண்டு விமானம் கண்டு பிடித்த நம்மால் பறவைக்கு இருக்கும் உணர்வை. பின்பற்றக்கூட தோன்றுவதில்லையே!
’
கூட்டுக்குடும்பங்களில் பிரச்சினைகள் இல்லாமலில்லை. பெரியவர்களிடையே அவ்வப்போது நீரு பூத்த நெருப்பாய் பிரச்சினைகளும் கோபதாபங்களும் வந்து போய்க்கொண்டு தானிருக்கும். ஆனால் குழந்தைகள் பகிர்ந்துண்ணவும் மரியாதை கொடுத்து வளரவும் பணிவையும் அன்பையும் புரிந்தும் தெரிந்தும் வளர்ந்தார்கள் அன்று!
துக்கத்திலும் சந்தோஷங்களிலும் மனப்பூர்வமான உணர்வுகள் அன்றைக்கு இருந்தன! நிலாவையும் காக்கை குருவியையும் காண்பித்து சோறு ஊட்டும்போது, உணவோடு உணர்வுக்கும் சேர்த்து பல நல்ல செய்திகள் கதைகள் வழியாக புகட்டப்பட்டது. இன்றோ குழந்தைகள் லாப்டாப்பில் விளையாடிக்கொண்டும் தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டும் சாப்பிடுகின்றன. என் புகுந்த வீட்டில் யார் வந்தாலும் என் மாமியார், கொழுந்தனார்கள் உடனேயே வெளி வந்து வாருங்கள் என்று வரவேற்று முடிந்ததும் வீட்டுக்குள்ளிருக்கும் பெண்கள் அனைவரும் வெளீயே வந்து ' வாருங்கள்' என்று வரவேற்போம். நாங்கள் முடிப்பதற்குள்ளேயே குழந்தைகள் எல்லோரும் வந்து வரவேற்பார்கள். இப்படி பழகி, எங்களையறியாமலேயே குடும்பத்திற்கு நல்ல பெயரை வாங்கித்தருகிறோம் என்பது வெளியில் மற்றவர் இல்லங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் பாராட்டுக்களில்தான் புரிந்தது. ஒரு நாள் தெரிந்தவர் இல்லத்திற்குச் என்றிருந்தேன். அந்த வீட்டுக்குழந்தைகள் டிவி பார்த்த வண்ணம் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. என்னைப்பார்த்ததும் ஒன்று ' யார் நீ' என்றது. இன்னொன்று ' அம்மா இங்கே வா, யாரோ வந்து நிற்கிறார்கள்' என்றது. குழந்தைகளை நான் என்றுமே தப்பு சொல்வதில்லை. பிரபல பாடல் சொல்வது போல ' எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!' என்ற வரிகள் தான் நிதர்சனமான உண்மை!
என் மகன் பிறந்த போது, இங்கிருந்த என் கணவருக்கு செய்தி தெரிவிக்க தந்தி கொடுத்தார்கள் வீட்டில். அது என் கணவருக்கு கிடைக்க 10 நாட்களாயின. ஆனால் இன்றைக்கு என் மருமகளுக்கு குழந்தை பிறந்த போது, உணர்வு வந்ததுமே மொபைல் ஃபோனிலிருந்து மகனும் மருமகளும் பேசிக்கொள்ள முடிந்தது! மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள் முடிந்தது.
மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கையில்லை! வாழ்வியலுக்கு சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் விஞ்ஞான வடிவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தானிருக்கின்றன. ஆனால் எந்த மாற்றங்களால் நல்லவைகள் தடம் மாறுகின்றனவோ, கலாச்சாரம் அழிகின்றதோ, அவை நல்ல மாற்றங்கள் நிச்சயமாக இல்லை!
தொடரும்!
படங்களுக்கு நன்றி: கூகிள்