பகுதி-1
சமீபத்தில் ஊருக்குச்
சென்றிருந்தபோது, என் நெருங்கிய சினேகிதி பல மாதங்கள் இடைவெளிக்குப்பிறகு என் வீடு
வந்து சில வாரங்கள் தங்குவதாக இருந்தது. இருவருமே மறுபடியும் ஏற்படப்போகும் அந்த சந்திப்பை
மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு
முன்பு, என் சினேகிதி ஃபோன் செய்து, நெஞ்சில் அதிக கனமும் அழுத்தமும் அடிக்கடி
ஏற்படுவதாகவும் வலது கையில் வலி அவ்வப்போது ஏற்படுவதாகவும் சொன்னார். நான் உடனேயே
அவரின் குடும்ப டாக்டரிடம் சென்று வரச்சொன்னேன். கிலம்புவதற்கு முன் அந்த
வேலையையும் முடித்து விட்டால் நிம்மதியாக வரலாம் என்ற எண்ணத்தில் என் சினேகிதியும்
அவரின் குடும்ப மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பல பரிசோதனைகள் செய்து,
முடிவில் ECGயில் ஒரு சிறு வித்தியாசம் தென்படுவதாகச் சொல்லி, ஒரு இதய
மருத்துவரிடம் செல்லச் சொல்ல, அன்று முழுவதும் என் சினேகிதி திட்டமிட்டவாறு வர
இயலவில்லையே என்று அழுது தீர்த்தார். அவரை சமாதானப்படுத்தி, இதய மருத்துவரிடம்
உடனேயே போகச் சொன்னேன். அங்கும் எல்லா சோதனைகளை மேற்கொண்ட பிறகு, stress Test [ Treadmill] -ல் ஒரு சிறு வித்தியாசம்
தெரிவதாகச் சொல்லி ஆஞ்சியோகிராம் செய்யச் சொல்லி ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார்கள்.
அதைப்பற்றிச் சொன்னதும் எனக்கும் மிகக் கவலையாகப் போனது.
என் சினேகிதி அதிக
மனக்கஷ்டங்களுக்காளானவர். அதோடு, பொருளாதார ரீதியில் அடித்தட்டில் இருப்பவர்.
இன்றைய நிலவரப்படி, இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளுக்கு மாற்றுப்பாதை [
by pass surgery] அமைக்க சில லட்சங்கள் செலவாகின்றன. அதை உறுதிப்படுத்தும்
ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய 8000 ரூபாயிலிருந்து 20000 ரூபாய் வரை மருத்துவ
மனைகள் நிர்ணயிக்கின்றன. அதிக செலவில்லாமல் இதய அறுவை சிகிச்சை செய்ய ஏதாவது
வழிகள் இருக்கின்றனவா என்று நண்பர்கள், மருத்துவர்களுடன் ஆராய்ந்ததில் சில
உயிர்காக்கும் மருத்துவ முறைகள் பற்றி அறிய நேரிட்டது. நோயால் அவதிப்படுபவர்கள்
உடல் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு நான் அறிந்து கொண்ட இந்த மருத்துவ முறைகளை
இந்தப்பதிவு மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
இதய அறுவை சிகிச்சை இன்றி
இரத்தக்குழாய்களின் அடைப்புகளள நீக்குதல்:
நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவ
மனையில் மருந்துகள் மூலம் மட்டுமே இரத்தக்குழாய்களிலுள்ள அடைப்புக்களை
நீக்குகிறார்கள். இதய அறுவை சிகிச்சையின்றி அங்கே மருத்துவ சிகிச்சை எடுத்து குணம்
அடைந்த நண்பரின் தகவல் இது. ஆனால் இதய அறுவை சிகிச்சையை விட சற்று கூட செலவாகும்
என்பதும் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது அதன் வீரியம் அதிகமாயிருக்குமென்றும்
சொல்கிறார்கள்.
விபரங்களுக்கு கீழ்க்கண்ட LINK-ஐப் பார்க்கவும்.
செலவின்றி இதய அறுவை சிகிச்சை
செய்ய:
பொருளாதார நிலையில்
மிகத்தாழ்ந்திருப்பவர்களுக்கு பெங்களூரிலுள்ள SATHYA SAI MEDICAL INSTITUTE-ல்
இலவசமாக இதய அறுவை சிகிச்சை உள்பட அனைத்து மருத்துவ சிகிச்சைகள் செய்கிறார்கள்.
அதன் LINK இதோ!
இரத்தத்தின் சர்க்கரை அளவைத்
துல்லியமாகக்கண்டறிய:
சர்க்கரை நோயாளிகளின்
எண்ணிக்கையில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும்
60 லட்சத்துக்கு மேலானோர் இந்த சர்க்கரை நோயின் பாதிப்பில் உள்ளார்கள். இந்த
நோயின் தாக்கத்தை, இரத்தத்தில் அதன் வீரியத்தைக் கண்டுபிடிக்க பல மருத்துவக் கண்டு
பிடிப்புகள் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் ‘ ஐ ப்ரோ 2 சிஜி எம்’
என்ற பதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த நேரத்தில் ஒரு நோயாளிக்கு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்படி எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்தக்
கருவி உதவி செய்கிறது.:
சர்க்கரை நோயாளிகளின்
வயிற்றுப்பகுதியில் இந்தக் கருவி 72 மணி நேரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஐந்து
நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தக் கருவி உடலின் சர்க்கரை அளவைப் பதிவு செய்யும். ஒரு
நாளைக்கு சுமார் 288 முறைகள் அது போல பதிவு செய்யும். இதன் மூலம் ஒரு நோயாளியின்
உடலில் எந்தெந்த நேரத்தில் சர்க்கரையின் அளவு கூடுகிறது, எந்தெந்த நேரத்தில்
சர்க்கரையின் அளவு சரியாக உள்ளது என்பதை ஆய்வு செய்ய முடியும். அதற்கேற்ப ஒரு
மருத்துவரால் சரியான மருத்துவம் அளிக்க முடிகிறது. 72 மணி நேரங்கள் கழித்து அந்தக்
கருவியை அகற்றி அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை கணினியில் ஏற்றி,
பின் பேப்பரில் ப்ரிண்ட் செய்து அந்த அறிக்கையை மருத்துவரிடம் காண்பித்து நாமே
ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் லகுவான இந்தக் கருவியைப் பொருத்தியிருப்பதே
ஒரு நோயாளிக்கு சுமையாகத் தெரியாது என்பது இந்தக்கருவியின் சிறப்பு.
இதைப்பொருத்திக்கொண்டே நம்து வழக்கமான எல்லா வேலைகளையும் நாம் செய்து கொள்ள
முடியும். இதை உடலில் பொருத்துவது மட்டும் ஒரு மருத்துவர்தான் செய்ய வேண்டும்.
தொடரும்:

