Tuesday, 8 June 2010

இதுவும் பெண்கள் கையில்தான் இருக்கின்றது!!


கொஞ்ச காலமாகவே எந்தப் பத்திரிக்கையைப் பிரித்தாலும் விவாகரத்து வழக்குகள், கோரிக்கைகள் அதிகமாகத் தென்படுகின்றன. காரணங்களைப் படிக்கும்போது சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் இல்லாததும் அவசர வாழ்க்கையும் தனி மனித ஈகோவும்தான் பெரும்பாலான வாழ்க்கையில் விளையாடி அருமையான பல எதிர்காலங்களை அழிக்கும் சக்திகளாய் இருக்கின்றன என்பது புரியும்போது மனது வேதனையுறுகிறது.


பல வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘பாலங்கள்’ என்ற நாவல் நினைவுக்கு வருகிறது. தன் தாத்தா பாட்டி காலத்து வாழ்க்கை முறைகள், தன் அப்பா-அம்மா காலத்து வாழ்க்கை முறைகள், அன்றைய காலத்து வாழ்க்கை முறைகள் என்று சுவைபட வித்தியாசங்களையும் மறந்து போன நல்ல விஷயங்களையும் எழுதியிருப்பார்.

எத்தனை நல்ல விஷயங்களை இப்போதைய தலைமுறை மறந்து போயிருக்கிறது, இழந்திருக்கிறது என்பதை கடந்து போன வருடங்களைத் திரும்பிப்பார்க்கையில் நன்றாகவே உணர முடிகிறது.

துள்ளி விளையாடும் குழந்தைப் பருவத்தை குழந்தைகள் இழந்து வருகிறார்கள். அவர்களுக்கு எங்கள் காலத்தில் அனுபவித்த நிலாச்சோறு, பாண்டி ஆட்டம், ஆற்றில் குதித்து நீச்சலில் புரண்ட சந்தோஷம், கொடுக்காபுளியும் புளியங்காயும் நண்பர் குழுவோடு போட்டி போட்டுக்கொண்டு பறித்து உண்ட திருப்தி-இப்படி எதுவுமே இன்றில்லை. இந்த மாதிரி விலையாட்டுக்களினாலும் நீச்சலினாலும் உடலளவில் ஏற்பட்ட பயிற்சி, தெம்பு இன்றைய குழந்தைகளிடம் இல்லை. கம்ப்யூட்டர் அவர்கள் உடலைக் கெடுப்பதுடன் எதிர்கால நோய்களுக்கு வழி வகுக்கிறது. கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டே பக்கத்தில் நொறுக்குத்தீனிகளையும் ஒரு கை பார்ப்பது இன்னும் மோசம். அவர்களின் அதிக புத்தகச்சுமைகளும் பாடங்களும் அவர்களை இப்போதிலிருந்தே ஒரு எந்திர வாழ்க்கைக்குத் தயாராக்கிக்கொண்டு வருகின்றன.

இப்படி வளரும் குழந்தைகளுக்கு படிப்பும் அதைச்சார்ந்த விஷயங்களும்தான் முன்னுக்குத் தெரியும். இவர்களே வளர்ந்து ஆளாகும்போது இந்தப்படிப்பைத்தவிர மற்ற நல்ல விஷயங்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. சொல்லித்தரப்படுவதில்லை.அதனால் ஏதாவது சொன்னாலும் அவர்கள் அறிவைப்பயன்படுத்தி விவாதங்கள் செய்து அவற்றைப் புறந்தள்ளுகிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையப்போவதில்லை.

சில வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ரயில் பயணத்தில் 15 வயது சிறுமி என் அருகில் அமர்ந்திருந்தாள். பேசும்போது அந்தப் பெண்ணின் அறிவு என்னை அசத்தியது. திகைக்க வைத்ததென்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் கல்கியின் சரித்திர நாவல்கள், திருக்குறள் பற்றிய அலசல்கள், மறு பக்கம் நான் வழக்கமாகப் படிக்கும் ஆங்கில நாவலாசிரியர்களைப் பற்றி ஆர்வமாகத் தெரிந்து கொண்டு தான் படிக்கும் நாவலாசிரியர்களை சிபாரிசு செய்த ஆர்வம், இன்றைய மாணவர்களின் ஒழுக்கக்கேடுகள், ஒழுங்கீனங்கள், ஊனமுற்றோருக்கான உதவி மையத்தில் உதவி செய்ய தான் இணைந்திருப்பது பற்றிய உற்சாகம்-இப்படிப்பட்ட அறிவுப்பூர்வமான அந்த பெண்ணின் உடைகளில் மட்டும் நேர்த்தி இல்லாததுடன் முகத்தையும் சுளிக்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிறர் கவனம் படாமல், கண்ணியமாக உடையணிய அவள் சொல்லித்தரப்படவில்லை. இப்படித்தான் இன்று நிறைய பெண் குழந்தைகள் வளர்கின்றார்கள். இவர்கள் இளம் பெண்களாக மாறும்போது பொறுமை, நிதானம், பணிவு-இவை தவிர்த்து இந்த அறிவுப்பூர்வமான விவாதங்கள் மட்டும் தீவிரமாகத் தொடர்கின்றது. பெற்றோரிடம் சண்ட மாருதமாக புயலாக தர்க்கிக்க வைக்கிறது.

ஒரு முறை என் மகனுக்கு பெண் தேடிக்கொண்டிருந்த சமயம்-ஒரு திருமணப் பதிவு மையத்திற்கு ஒரு பெண்ணும் அவளுடைய பெற்றோர்களும் வந்திருந்தார்கள். மாப்பிள்ளைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அவளுடைய பெற்றோர் சொல்ல முனைந்த போது அந்தப்பெண் இடை மறித்து, ‘ அதெல்லாம் நானே சொல்லி விடுகிறேன், இவர்களுக்கு அதெல்லாம் ஒழுங்காக சொல்லத் தெரியாது. என் கருத்துக்களைப்பற்றியும் புரியாது’ என்று முகத்தில் அடித்த மாதிரி பேச, ஒதுங்கிய பெற்றோரின் கண்களில் அத்தனை வேதனை!

இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் திருமணத்திற்குள் புகும் பெண்ணிடம் எப்படி விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் புரிந்து கொள்ள முயற்சித்தலும் இருக்கும்? எங்கோ பிறந்து திருமணத்தில் புதிதாக இணையும் இளைஞனிடம் எப்படி எதிர் வாதங்கள் இல்லாமல் இருக்கும்? இப்படித்தான் விவாகரத்துக்களும் அதற்கானக் காரணங்களும் சங்கிலித்தொடராய்த் தொடர்கின்றன. பெண் சுதந்திரம், ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்றெல்லாம் பேசி சாதாரணப்பிரச்சினைகளை சூறாவளியாக்கி திருமண வாழ்க்கை என்ற கடைசி வரைத் தொடரும் பந்தத்தை இன்று விவாகரத்து என்ற வடிவில் பாதியிலேயே அழிப்பதுதான் நடந்து வருகிறது.

நான் ஏன் பெண் குழந்தைகள் பற்றி குறிப்பாய் எழுதுகிறேன் என்றால் அவர்களைத்தான் நான் எதிர்காலக் குடும்பங்களின் தூண்களாய்க் கருதுகிறேன். ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தாண்டா வளர்ச்சி ‘ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவர் சொன்ன மாதிரி ஆளும் வளர்ந்தாலும் அறிவும் வளர்ந்தாலும் மனம் வளராமல் இருப்பதனால்தான் மன முறிவுகள் ஏற்படுகின்றன.

பெண் அன்பிலே கனிந்து போகிறவள். அதுவே அவளை பலமாக்குகிறது. அடிப்படை குணங்கள், பண்புகளுடன் வளர்க்கப்பட்ட, விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் புரிந்து கொள்ளுதலும் இருக்கும் பெண்களின் இல்லங்கள் என்றுமே சொர்க்கமாய்த் திகழ்கின்றன.

என்றுமே ஒரு ஆண் பொருளீட்டுவதன் பொருட்டு வெளியில் எங்காவது, அல்லது ஏதாவது ஒரு தேசத்திற்கு என்று காலம் காலமாகப் போக நேரிடுகிறது. பல இன்னல்கள்,இழப்புகள், காயங்களை அவன் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தனைக்கும் அவன் வடிகாலாய்த் தேடுவது தன் வீட்டைத்தான். தனது குடும்பத்தைத்தான். இளம் வயதில் இப்படி என்றால் தேகம் தளர்ந்து வேலையை விட்டு விலகி வெளிப்புற சகவாசங்கள் குறைந்து இல்லத்திலேயே இருக்கவேண்டிய நிலை வந்ததும் அவன் இன்னும் தன் குடும்பத்தைச் சார்ந்து தன் மனைவியைப் புதிதாகப் புரிந்து தவித்து நிற்கிறான். இப்படி எல்லா தருணங்களிலும் பெண் என்பவளை ஒரு ஆண் ஒரு வடிகாலாக சார்ந்து நிற்கிறான். பெண் ஒரு சக்தியாக, தோள் கொடுப்பவளாக, புரிந்து கொண்ட சினேகிதியாக நடக்க முயற்சித்தால் மெல்ல மெல்ல விவாகரத்துக்களும் இனி சாகாதோ?

சில மாதங்களுக்கு முன் ‘தேவதை’ இதழில் வந்த இந்த கவிதை என் மனதை அப்படியே பிரதிபலித்தது. என்னோடு நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

தலைமுறை தள்ளாட்டம்

"சரித்திரமே இல்லை தாத்தா பாட்டிக்கிடையில் சண்டை வந்ததாய்!

சண்டைகளும் சமாதாங்களும் அறைக்குள்ளேயே நடந்து முடிந்தன

அம்மா அப்பா வாழ்வில்!

எங்களுக்குள் புரிதலில் சேதமாகி விரிசலானபோது

பெரியவர்கள் புரிய வைத்ததில் இல்லாமல் போயிற்று எல்லா பிரச்சினைகளும்!

அறிவுரைகள் எடுபடாமல் விவாகரத்தே தீர்வாயிற்று என் மகள் விவாகரத்தில்.. ..

அன்பு, புரிதல், சகிப்புத்தன்மை, மனிதம் குறுகிப்போக,

கல்வி, சுயநலம், கர்வம், சம்பாத்தியம் பெருகியதைப்போலத்தான்

பெருகியிருக்கிறது விவாகரத்துக்கள்!"