Sunday, 8 March 2015

பெண்ணே நீ வாழ்க!

ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்ததிலிருந்து இரவு வரை பெண் என்பவள் உழைக்கிறாள். அது 20 வயது இளம் பெண்ணாக இருந்தாலும் சரி, நடுத்தர வயது பெண்மணியாக இருந்தாலும் சரி அல்லது 70 வயது முதிர்ந்த பெண்மணியாக இருந்தாலும் சரி, அவள் ஏதாவது ஒரு விதத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறாள்! தன் பெற்றோருக்காகவும் தன் கணவன், குடும்பத்திற்காகவும் அவள் உழைக்க என்றுமே தயங்குவதில்லை. இது காலம் காலமாக இயந்திர கதியில் நடப்பது தான் என்றாலும் இந்த உழைப்பிற்குப் பின்னால்  உறுதியான மனமும் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கின்ற துணிவும் ஒரு பெண்ணுக்கு தன்னாலேயே வந்து விடுகிறது. அதன் உந்து சக்தி அவள் மிகவும் நேசிக்கும் அவளின் குடும்பம் தான். ரிக் வேதத்தில், பெண்ணை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் முன் காலத்தில் முழுமையான அர்ப்பணிப்பு இருந்தது. தன்னலம் கருதாத மேன்மை இருந்தது. இப்போது அப்படியில்லை. காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படத்துவங்கி விட்டன. உழைப்பதில் சுயநலம் வந்து விட்டது. ஏன் பிறருக்காக உழைக்க வேண்டும் என்ற கேள்விகள் தோன்றி விட்டன.
பெண் மனதளவில் காருண்யம் நிறைந்தவளாக‌ இருந்தாள். இப்போது அந்தக் காருண்யத்தில் கணக்கு வழக்குகள் தோன்றி விட்டன.

கேள்விகள் தோன்றாத அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் நிறைந்த காலத்தில் ஆண் மகன் குடும்பத்திற்குத் தலைவனாக இருந்தாலும் பெண் என்பவள் அவனுக்கும் அவன் குடும்பத்தார்க்கும் அடங்கியே இருந்திருந்தாலும் பெண்கள் மத்தியில் தன் குணத்தாலும் தன் உழைப்பாலும் அன்பாலும் அவள் கம்பீரமாகவே இருந்தாள்.




இப்போது சுய சம்பாத்தியமும் சுதந்திரமும் பெண்களுக்கு நிறையவே இருக்கின்றன. அனைத்து வேலைகளையும் கணவனும் பகிர்ந்து செய்கிறான். மனைவி சமைத்தால் கணவன் பாத்திரங்கள் கழுவுவது, மனைவி துணிகள் துவைத்தால் கணவன் துணிகளைக் காயப்போடுவது என்று இன்றைய இளந்தலைமுறைகளின் இல்லங்கள் பலவற்றில் நடக்கிறது. ஆனால் அன்றைய வாழ்க்கையின் அமைதியும் சிரிப்பும் புரிதலும் இன்று இருக்கிறதா என்றால் நிறைய இல்லங்களில் அவை இல்லவே இல்லை என்பது தான் விடையாகக் கிடைக்கிறது.  என் மகனுடன் படித்தவர்களில் பதினோரு இளைஞர்கள் திருமணமாகி ஒரு வருடத்திலேயே மணவிலக்கு பெற்று விட்டார்கள் என்று நான் அறிந்தபோது அதிர்ந்து போனேன்.

 என் பாட்டியின் தகப்பனார் தன் மகள் புகுந்த வீட்டிற்குச் சென்ற போது ' நான் உனக்கு அணிவிக்கும் நகைகள் என் கெளரவத்திற்காக போடுவது. ஆனால் அவை யாவும் உன் கணவனுக்குச் சொந்தமானது. உன் கணவன் கேட்டால் நீ புன்னகையுடன் அவற்றைக் கழற்றித்தர வேண்டும்' என்று சொன்னாராம்! இப்போது நகைகளுக்காகவே எத்தனை சண்டைகள், பிரிவினைகள் நடக்கின்றன!

அன்பு என்பது இப்போது வியாபாரமாகி விட்டது. காருண்யம் என்பது அனாதை இல்லங்கள், மறு வாழ்வு மையங்கள் மட்டும் என்றாகி விட்டது. எல்லா அளவு கோல்களையும் பணம் ஒன்றே தீர்மானிக்கிறது. முழுமையான அன்பும் கருணையும் அக்கறையும் ஆதரவும் இல்லாமல் இல்லங்கள் இயந்திர கதியில் இயங்குகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

பெண்ணே, அது உன் கையில் தான் இருக்கிறது! நீ பூரண‌மானவள். உன்னதமானவள்!  சக்தியின் இருப்பிடமாகிய நீ அன்பு காட்டுவதில் பாரபட்சம் இனி வேண்டாம்! மூத்தோரிடம் கருணை காட்டு. உன்னால் ஆதரவற்றோர் இல்லம் பெருக வேண்டாம்! இல்லறத்தில் பிரச்சினைகளும் வாக்கு வாதங்களும் சகஜம். அதில் விட்டுக்கொடுத்தல், பொறுமை என்ற மந்திரங்களை எப்போதும் உச்சரித்தால் அதன் பின் ஜெயிப்பதென்னவோ நீ தான்!

பெண்ணே நீ வாழ்க!

41 comments:

  1. எப்போதும் வெற்றியடைவது பெண்மைதான்!..

    பெண்ணே நீ வாழ்க!..

    ReplyDelete

  2. பெண்ணினம் போற்றும் அருமையான பதிவு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    ஞாபகம் இருக்கிறதா ? எனது கோரிக்கை.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு.....

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நம்மால் பெண்ணாக வாழத்தான் முடியாது.
    வாழ்த்தக்கூடவா முடியாது.
    வாழ்த்துவோம்.

    ReplyDelete
  5. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றி கில்லர்ஜி! உங்களுக்கு வரைந்து தர வேண்டிய ஓவியம் பற்றி ஞாபகமிருக்கிறது. நாளை தான் வீடு மாறுகிறோம். விரைவில் வரைந்து தர முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  7. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அன்பே சிவம்!

    ReplyDelete
  9. எல்லாமே உண்மைதான். ஆனால், நல்ல மாற்றங்களுக்கும் காரணங்கள் உள்ளது போலவே, மற்றவைகளுக்கும் சில காரண காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சீக்கிரமே இவையும் நல்லதாக மாற்றம் பெற வேண்டும்.

    ReplyDelete
  10. சிந்திக்க வேண்டிய நாளில்
    சிந்திக்க வைக்கும் பதிவுகள்

    ReplyDelete
  11. பெண்ணின் நிலையுணர்ந்து, அலசி ஆராய்ந்து அளித்திட்ட
    திறனாய்வு பதிவாய் ஜொலிக்கின்றது முத்துச் சிதரலில்.
    "என் மகனுடன் படித்தவர்களில் பதினோரு இளைஞர்கள் திருமணமாகி ஒரு வருடத்திலேயே மணவிலக்கு பெற்று விட்டார்கள் என்று நான் அறிந்தபோது அதிர்ந்து போனேன்"
    புரிதல் என்னும் புதிர் கணக்கை கோட்டை விடுபவர்களுக்கு ஏற்படும் நிலை அல்லவா
    அன்னையே!
    .
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  12. அருமையான பதிவு அக்கா.மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. மக்களின் மனோபாவங்கள் மாறி வருகின்றன. சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனோபாவம், கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்கிற கொள்கைகளை இப்போது யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதனால் ஏற்படும் விபரீதங்கள்தான் இவை.

    ReplyDelete
  14. என்றும் வெற்றி அவர்களுக்கே... அப்படித்தான் இருக்கவும் வேண்டும்...

    நல்ல பகிர்வு அம்மா... இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
  15. பெண்ணியம் போற்றும் பதிவு
    மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  16. கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

    ReplyDelete
  17. விரிவான பின்னூட்டம் அளித்ததற்கு இனிய நன்றி வேலு!

    ReplyDelete
  18. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி உமையாள் காயத்ரி!

    ReplyDelete
  19. நீங்கள் சொல்வது தான் உண்மை சகோதரர் பழனி கந்தசாமி! மனோபாவங்களும் சுய‌நலங்களும் பெருகப் பெருக நல்ல விஷயங்கள் காற்றில் பறக்க ஆரம்பித்து விட்டன!

    ReplyDelete
  20. உண்மை தான் தனபாலன்! பெண்மை வாழ்க என்று கூத்தாடுவோம் என்றார் பாரதியார்! பெண்மையின் சிற‌ப்பில் தான் உலகம் சிறப்பாக இயங்கும்! அழகான கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  21. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  22. வணக்கம்

    பெண் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும்.. ஒரு பாடலில் சொல்வார்கள்
    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அந்த மதுரையும் எரிந்தது கற்புகரசி கண்ணகியாள் என்று
    பெண்தான் உலகின் தோற்ற சக்தி... வெகு சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் இன்றை காலத்துக்கு ஏற்ப. த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  23. வணக்கம்
    மகளிர் தின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. //என் மகனுடன் படித்தவர்களில் பதினோரு இளைஞர்கள் திருமணமாகி ஒரு வருடத்திலேயே மணவிலக்கு பெற்று விட்டார்கள் என்று நான் அறிந்தபோது அதிர்ந்து போனேன். //

    கேட்கவே மிகவும் அதிர்ச்சியான விஷயமாகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  25. //பெண்ணே, அது உன் கையில் தான் இருக்கிறது! நீ பூரண‌மானவள். உன்னதமானவள்! சக்தியின் இருப்பிடமாகிய நீ அன்பு காட்டுவதில் பாரபட்சம் இனி வேண்டாம்! மூத்தோரிடம் கருணை காட்டு. உன்னால் ஆதரவற்றோர் இல்லம் பெருக வேண்டாம்! இல்லறத்தில் பிரச்சினைகளும் வாக்கு வாதங்களும் சகஜம். அதில் விட்டுக்கொடுத்தல், பொறுமை என்ற மந்திரங்களை எப்போதும் உச்சரித்தால் அதன் பின் ஜெயிப்பதென்னவோ நீ தான்!

    பெண்ணே நீ வாழ்க!//

    மிகவும் பதமாக, இதமாக, இனிமையாக, நியாயமாக, அனுபவம் மிக்கவராக, ஓர் தாயுள்ளத்துடன் தயவாகச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

    இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. நல்ல பகிர்வு அம்மா..
    பெண்மை போற்றுவோம்.

    ReplyDelete
  27. சற்றொப்ப இதே பொருண்மையுடைய உங்களுடைய பதிவினை முன்னர் படித்த நினைவு. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  28. இந்த பதிவின் கருத்தை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொண்டால்,இல்லம் சொர்க்கமாகவே மாறிவிடும்,சும்மாவா சொன்னங்க ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே-னு

    நல்லதொரு கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  29. நல்லதொரு பகிர்வு...

    ReplyDelete
  30. மகளிர் தினத்துக்கு பெண்மையை போற்றும் வகையில் அருமையான பதிவாக கொடுத்திருக்கீங்க அக்கா.

    ReplyDelete
  31. நலம் தானே மேடம்? பல கேள்விகளை என்னுள் எழுப்புகிறது இந்தப் பதிவு. நம் பாரம்பரியம் பெண்ணை உயர்ந்த இடத்தில் தான் வைத்திருந்திருக்கிறது...இனியும் பெண்ணை இழிவு செய்வது பொறுத்துக் கொள்ளப் படாது நேற்று பாராளுமன்றத்தில் தென்னிந்தியப் பெண்களைப் பற்றி ஒருபுத்திசாலி வாய்க்கு வந்ததைப் பேசி மீடியாக்களில் கிழிபடுவது, இனியும் ஆணாதிக்க மனோபாவம் செல்லாது என்றே உணர்த்துகிறது.

    ReplyDelete
  32. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  33. வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பிற்கினிய நன்றி ரூபன்!

    ReplyDelete
  34. அருமையான கருத்துரைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  35. வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி குமார்!

    ReplyDelete
  36. உண்மை தான் சகோதரர் ஜம்புலிங்கம், நான் கிட்டத்தட்ட இதே கருத்துக்களை எழுதி முதுமைக்கு மரியாதையும் பாசத்தையும் தரச்சொல்லி இன்றைய இளம் பெண்களுக்கு சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவெழுதியுள்ளேன்!

    அதை நினைவுபடுத்தியதற்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  37. இனிமையான பின்னூட்டம் தந்திருப்பத‌ற்கு மனம் நிறைந்த நன்றி சரிதா!

    ReplyDelete
  38. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி துள‌சிதரன்!

    ReplyDelete
  39. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  40. வாருங்கள் மோகன்ஜி! வெகு நாட்களாயிற்று உங்கள் எழுத்து கண்டு!
    அழகிய கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  41. வருகைக்கும் இனிய அறிவிப்பிற்கும் அஃன்பு நன்றி வேலு!

    ReplyDelete