Tuesday, 3 March 2015

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை!!

கடந்த வாரம் உறவினர் மரணம் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு முன்னதாயும் அதற்குப்பின்னும் அலைச்சலகள், மனம் சரியின்மை என்று 25 நாட்கள் ஓடி விட்டன. கனமான எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி விட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவது போல எதையாவது எழுதலாமா என்று நினைத்ததும் மனதில் வந்து நின்றது இன்றைக்கு செய்த ஒரு பலகாரம் தான்!

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வடை, புளிக்குழம்பு, கூட்டு என்று செய்யலாம். ஆனால் அடை செய்வது எளிதானது மட்டுமல்ல, மிகவும் சுவையானதும் கூட!

முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கைப்பற்றி சில வார்த்தைகள்!

சர்க்கரை வள்ளிக் கிழங்கில்  மிகமிகக் குறைந்த அளவே கொழுப்பும் ஆனால் நிறைய அளவு நார்ச்சத்தும் உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.




எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது
.
கையில் எடுத்தால் கிழங்கு கனமாக, கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி  எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு என்று அர்த்தம்.  வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை கழுவ‌க் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால்  போதும். வாங்கியதுமே பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால்  காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.

இனி சமையல் குறிப்பு!!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை


தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி- 1 கப்
பச்சை மிளகாய்- 2
இஞ்சி -சிறு துண்டு
சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை வேகவைத்து , துருவியது -1 கப்
தேங்காய்த்துருவல்- கால் கப்
பொடியாக அரிந்த பெரிய வெங்காயம்- 1
பொடியாக அரிந்த கொத்தமல்- கால் கப்
கறிவேப்பிலை சிறிது
தேவையான உப்பு

செய்முறை:

இட்லி அரிசியை நான்கைந்து மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மையாக கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை தோலுடன் நன்கு கழுவி இரன்டு மூன்று துண்டுகளாய் வெட்டி தண்ணீர் சேர்க்காது ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் 2 விசிலுக்கு வேக வைக்கவும்.
சூடு குறைந்ததும் வள்ளிக்கிழங்குகளை எடுத்து, தோலுரித்து கிழங்குகளை துருவிக்கொள்ள‌வும். துருவிய கிழங்கு, வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தும் அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்துப் பிசைந்து சின்ன சின்ன அடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
திருப்பிப்போடும்போது சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ள‌வும்.
இலேசான தித்திப்புடன் மிகச் சுவையாக இருக்கும் பலகாரம் இது!






 

33 comments:

  1. ஆஹா சூப்பர் குறிப்பு,இதனை வேகவைத்து சாப்பிட்டதோடு சரி..நிச்சயம் செய்து பார்த்து சொல்கிறேன்மா..முடிந்தால் வடை ,புளிகுழம்பு,கூட்டு குறிப்புகளையும் எழுதுங்கள்..

    ReplyDelete
  2. கூடுதலாக பயனுள்ள விவரங்களுடன் - சர்க்கரை வல்லிக் கிழங்கு அடை பற்றிய பதிவு!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவித்துச் சாப்பிட்டிருக்கிறேன்... பொங்கலுக்கு அவரைக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு எல்லாம் போட்டு அம்மா பொரியல் போல் செய்வார்கள்.... அதுவும் நல்லா இருக்கும்...
    சக்கரை வள்ளிக் கிழங்கு அடை புதுமையாய் இருக்கு...

    ReplyDelete
  4. பருப்பு வகைகள் எதுவும் சேர்க்காமலேயே அடை! சர்க்கரை வள்ளிக் கிழங்கை இப்படி செய்து பார்த்தது இல்லை. சும்மா வேக வைத்துச் சாப்பிடுவதோடு சரி. சமையலில் சேர்த்தால் லேசான இனிப்புச் சுவை வருவதால் சேர்த்ததில்லை. அதன் மருத்துவக் குறிப்புகளைப் படித்தபோது 'அட' என்று வியக்க வைத்தன. வாங்கும்போது எப்படி இருக்கவேண்டும் என்ற குறிப்பும் பயனுள்ளது.

    ReplyDelete
  5. சர்க்கரையோடு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்வார்கள்...

    உங்களின் குறிப்பின்படி அடை செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
  6. வணக்கம்
    அம்மா.

    எங்கேயும் தேடி கிடைக்காத முத்துக்கள் தங்களின் பதிவு வழி அறிந்தேன்... செய்முறை விளக்கத்துடன் நல்ல அசத்தல்
    த.ம 1
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:                         

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை அருமையான பதிவு அக்கா. கண்டிப்பாக செய்வேன்.

    அக்கா வருகின்ற 6 ஆம் தேதி எனது பிளாக் 3rd anniversary! அன்றைய பதிவு அசோகா அல்வா! நீங்கள் கண்டிப்பாக எனது வலைப்பூவுக்கு வருகை தர வேண்டும். advance thanks akka.

    ReplyDelete
  8. சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தகவல்களுடன்,கேள்விப்படாத வித்தியாசமான அடை.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  9. சக்கரைவள்ளிக் கிழங்கு பற்றிய தகவல்கள் அருமை.
    பருப்புகள் இல்லாமல் செய்யக்கூடியதான அடை புதுமையாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  10. மரவள்ளிக்கிழங்கு அடை தெரியும்.
    சக்கரைவள்ளிக் கிழங்கு அடை புதுமையானதாக இருக்கிறது.
    நிச்சயம் செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  11. சக்கரைவள்ளிக் கிழங்கு அடை செய்முறையும், அதன் பயன்களும் அருமை.

    ReplyDelete
  12. சர்க்கரை வள்ளிக் கிழங்கு அடை சூப்பர்! இந்தக் கிழங்கை வைத்து நிறைய செய்திருக்கிறோம்....பராத்தா கூட செய்திருக்கின்றோம். இது புதிது செய்து பார்த்துட்டாப் போச்சு....துளசிதரன், கீதா

    ReplyDelete
  13. சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை நன்றாக உள்ளது.
    கிழங்கு பற்றிய தகவல்கள் அருமை.

    ReplyDelete
  14. இவ்வாறான அடைகூட உண்டா? அவித்துத்தான் சாப்பிட்டுள்ளோமே தவிர இவ்வாறு தெரிந்துகொள்வது இப்போதுதான்.

    ReplyDelete
  15. அவசியம் செய்து பாருங்கள் மேனகா! மிக சுவையான அடை இது. புளிக்குழம்பு எப்போதும் போல செய்வது தான். சிலர் தோலுடனேயே கூட அதில் கிழங்கைச் சேர்ப்பார்கள். வடை, கூட்டு பற்றிய குறிப்பு விரைவில் தருகிறேன்.

    ReplyDelete
  16. சர்க்கரை வள்ளிக் கிழங்கு
    தகவல்கள் அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  17. சர்க்கரை வள்ளிகிழங்கு அடை முதன்முதலாக கேள்விப்படுகிறேன்,தங்கள் பகிர்வுக்கு நன்றி...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  18. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    ReplyDelete
  19. நீங்கள் சொல்வது போல நானும் பொங்கல் குழம்பு செய்யும்போது சர்க்கரை வள்ளிக்கிழங்கு அவசியம் சேர்ப்பேன் குமார். மிகவும் சுவையாக இருக்கும். அது போல இந்த அடையும் மிகவும் ருசியாக இருக்கும்!

    ReplyDelete
  20. அருமையான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  21. கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்! அவசியம் இந்த அடையை செய்து பாருங்கள்!

    ReplyDelete
  22. வருகைக்கும் அக்ருத்துரைக்கும் அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  23. பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ரூபன்!

    ReplyDelete
  24. கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!

    ReplyDelete
  25. பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ராம்வி!

    ReplyDelete
  26. பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  27. அவசியம் இந்த அடையை செய்து பார்த்து சொல்லுங்கள் அனிதா சிவா! வருகைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  28. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி துளசிதரன், கீதா!

    ReplyDelete
  29. பாராட்டிற்கு அன்பு நன்றி ஷமீ!

    ReplyDelete
  30. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  31. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  32. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சரிதா!

    ReplyDelete
  33. இக் கிழங்கை இலங்கையில் வத்தாளங்கிழங்கு என்போம். அவித்து மாத்திரம் உண்ணும் பழக்கம் உண்டும்.
    இனிப்பு சுவை அதிகமுள்ளதால் இலங்கையில் சமைப்பதில்லை. அதனால் அதிகம் விளைவிப்பதுமில்லை.

    ReplyDelete