Tuesday, 30 November 2010

தொடரும் அனுபவங்கள்!!

இரண்டு அனுபவங்கள். வாழ்க்கை முழுவதும் சில சமயம் திகைக்கக்கூடிய அனுபவங்கள் சில ஏற்படும். சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும் அனுபவங்கள் நிகழும். சில அனுபவங்களோ இதயத்தை ரணமாக்கும். எதிர்பாராத மகிழ்வைக் கொடுக்கும் அனுபவங்களோ மனதை சுகமாக வருடிக்கொடுக்கும். ஆனால் இந்த இரண்டுமே என்னை மிகவும் யோசிக்க வைத்த அனுபவங்கள்.

முதலாவது!

1970 பிற்பகுதியில் எனக்கு வலது காதில் அடைப்பு இருந்தது. அலோபதியில் நிறைய பின் விளைவுகள் அடிக்கடி ஏற்படுவதால் வேறு யாரைப்பார்க்கலாம் என்று யோசித்த போது கோவை சாமிகிரி சித்தரை நெருங்கிய நண்பரொருவர் பரிந்துரைத்தார்.. தினத்தந்தி படிப்பவர்கள் இவரைப் பற்றிய விளம்பரத்தைப் படித்திருக்கலாம். அவரைச் சென்று சந்தித்தேன். பேசிக்கொன்டிருக்கும்போதே சடாரென்று மூக்கில் பொடியைத் தூவினார். நான் என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் அடுக்கடுக்காக தும்மல்கள்! அப்புறம் சொன்னார், " சாதாரண அடைப்பாக இருந்தால் இந்தத் தும்மல்களிலேயே அது சரியாகி விடும், அதனால்தான் இந்தப்பொடியைத் தூவினேன்" என்று! எனக்கு திகைப்பாக இருந்தது. அப்புறம் காதில் ஒரு எண்ணையை விட்டு சிறிது நேரம் படுத்திருக்கச் சொன்னார். அதன் பின் அங்கு வந்திருந்த அனைவரையும் ஒரு ஹாலில் ஒன்று கூடச்சொல்லி சிறிது நேரம் பேசினார். பேச்சு முழுவதும் சிரிப்பு எப்படி வாழ்க்கைக்கு நல்லது என்பதைப்பற்றி இருந்தது. கூடவே சினிமாவிலிருந்தும் சில உதாரணங்கள் சொல்ல கூட்டத்தினரிடையே ஆங்காங்கு சிரிப்பு அலைகள் எழுந்தன. அதெல்லாம் ரொம்பவும் சாதாரணமாக இருந்ததால் எனக்கு சிரிப்பு வரவேயில்லை. பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். கடைசியில் மருந்துகள் கொடுக்க அவர் ஒவ்வொருத்தராய் அழைத்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றதும் என்னிடம் '" உங்களுக்கு எதையும் வாய்விட்டு சிரித்து ரசிக்கத் தெரியவில்லை. உங்களுக்கு மருந்து கொடுத்து என்னால் குணப்படுத்த முடியாது" என்று சொல்லி விட்டார். எனக்கு ஆச்சரியத்தில் பேச்சே வரவில்லை. வெளியே வந்ததும் வந்தது பாருங்கள் ஒரு சிரிப்பு! கணவர் கேட்கக் கேட்க விபரம் எதுவும் சொல்லாமல் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டேயிருந்தேன்.

யாருக்குக் காதில் பிரச்சினை வந்தாலும் இந்த நினைப்பு வரும். சிரிப்புடன் இந்த நிகழ்வைச் சொல்லிக்கொண்டிருப்பேன்.

சென்ற மாதம் அவர் மறைந்து விட்டதாகச் செய்தி அறிந்தேன். ஆனால் 70 வயதிற்கும் மேலான அவர் மறைந்த விதம் திகைப்பாயும் யோசிக்க வைப்பதாயும் இருந்தது. 11 பிள்ளைகளைப் பெற்றவர். இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போன அவரது மனைவியின் இழப்பைத் தாங்க முடியாமல் நாளுக்கு நாள் தளர்ந்து போன அவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருக்கிறார். இறப்பதற்கு முன்னர் ' இனியும் தொடர்ந்து வாழ்ந்து நோயுற்று தன் அன்பான குழந்தைகளைத் துன்பப்படுத்த விரும்பவில்லை என்றும் மனைவியின் இழப்பைத்தாங்க முடியாமல் தனது முடிவைத் தானே தேடிக்கொள்வதாயும் தனது உடலைப்புதைக்கும்போது தன் மனைவியின் புகைப்படத்தை அதன்மீது வைத்து புதைக்க வேண்டுமென்றும் தனது இறுதிச் செலவுகளுக்காக பணத்தைத் தனியே எடுத்து வைத்திருப்பதாகவும்' குறித்து வைத்து விட்டு மரணமடைந்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனை முகங்கள்! சிரிப்புதான் வாழ்க்கையில் எல்லாமும் என்று சொன்னவர் அவர். ஆனால் இந்த 70 வயதிலும் வாழ்க்கையில் அனுபவ அறிவை கூடை கூடையாக சம்பாதித்த பின்னரும்கூட, வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து தன் மனைவியைத் தேடி பயணித்து விட்ட இந்த முடிவில் எத்தனை சோகம் இருக்கிறது!!

இரண்டாவது!

ஒவ்வொரு வருடமும் ஊருக்குச் சென்று தங்கியிருந்து விட்டு திரும்பி வரும்போதெல்லாம் ஒரு பெரிய process எப்போதும் நடக்கும். சமையலறையிலுள்ள பாத்திரங்கள், மளிகை சாமான்கள் வைக்கும் டப்பாக்கள் எல்லாவற்றையும் கழுவித் துடைத்து பீரோவில் வைத்து அடுக்குவது, ப்ஃரிட்ஜ், டிவி, டிவிடி, மியூசிக் ப்ளேயர், ஏ.சி இப்படி எல்லா மின் சாதனங்களையும் ப்ளக்கை விலக்கி வைப்பது, காஸ் ஒயரையும் அதுபோல செய்வது, சோஃபா, கட்டில்கள், நாற்காலிகள், டைனிங் டேபிள், குளிர்சாதனப்பெட்டியின் மேற்புறம், டிவி மேல்-இப்படி எல்லாவற்றிலும் கனமான துணிகளால் மூடுவது, இப்படி எல்லா விஷயங்களையும் செய்து முடித்த பிறகுதான் ஏர்போர்ட் செல்ல காரில் ஏறுவோம். அதேபோல் இங்கிருந்து கிளம்பும்போது ஃபோன் செய்து விட்டால் எங்கள் மேலாளரும் வாட்ச்மேனும் ஆள் வைத்து எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்து வீட்டை கழுவி விடுவது வழக்கம்.

[குளிர்சாதனப்பெட்டியில் மட்டும் மின் இணைப்பை விலக்குவதில்லை. ஒரு முறை சுத்தம் செய்த ஆள் யாரோ மின் இணைப்பைத் துன்டித்து விட்டார்கள். நாலைந்து மாதம் கழித்து நாங்கள் சென்ற போது ஃப்ரிட்ஜ் முழுவதும் பூஞ்சைக்காளான் பூத்து, கறுத்து அதைச் சுத்தம் செய்ய 2 நாட்கள் ஆனது.]

இந்த வழக்கம் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. இந்த வருடம் பிப்ரவரி மாதமும் இதுபோல எல்லாம் செய்து விட்டு இங்கு திரும்பி வந்தேன். மறுபடியும் ஜூலையில் திரும்பவும் ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியம் வந்தது. வழக்கம்போல ஃபோன் செய்து சுத்தம் செய்யச் சொன்னோம்.

மறு நாள் அந்த திகில் செய்தி வந்தது. சுத்தம் செய்யப் போன ஆட்கள் கதவைத் திறந்ததும் வீடெங்கும் புகை படிந்த நிலை. பற்றி எரிந்த வாசனை. ஹாலுக்கும் சமையலறைக்கும் இடையேயுள்ள கதவைத் திறந்ததும் Dining Room, சமையலறை, அதன் சுவர்களுக்கு மறுபக்கமிருக்கும் குளியலறை, டாய்லட் எல்லாம் கறுப்பாக ஆகியிருக்கிறது. சமையலறையில் இருந்த குளிர்சாதனப்பெட்டி தீப்பிடித்து எரிந்து கீழே சாய்ந்து விழுந்திருக்கிறது. அது விழுந்த இடம் காஸ் சிலிண்டருக்கு அருகே!! இன்னும் கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் காஸ் சிலிண்டர்கள் வெடித்து வீடே பற்றி எரிந்திருக்கும்!! மிகப் பெரிய ஆபத்திலிருந்து என்ன காரணத்தினாலோ அன்று வீடு தப்பித்திருக்கிறது. இது நான்கு நாட்களுக்குள்தான் நடந்திருக்க முடியுமென்று பார்த்த எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் முதல் மாடியில் குடியிருப்பதாலும் கீழ் வீட்டில் குடியிருந்தவர்கள் அப்போதுதான் காலி செய்திருந்ததாலும் ஜன்னல்கள் மூடி வைக்கப்பட்டிருந்ததாலும் உள்ளேயே நடந்த இந்த விபத்து வெளியே தெரியவில்லை போலிருக்கிறது. புகைகூட வெளியே செல்லவில்லையா என்று தெரியவில்லை. சென்றிருந்தால் பக்கத்து வீட்டில் பார்த்திருக்க முடியும். நாங்கள் மறு நாள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டோம். கிராமத்திலிருந்து நாலந்து ஆட்கள் வந்து கழுவி சுத்தம் செய்து, பின்னர் பெயிண்டர் வந்து எல்லா சுவர்களையும் சரி பார்க்க ஒரு வாரமானது. ஷார்ட் சர்க்யூட் தான் காரணமாயிருக்கலாம் என்று பலர் சொன்னார்கள். குளிர்சாதனப்பெட்டி மேல் துணியாலோ, வேறு எதனாலுமோ மூட வேன்டாம், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதும் தீப்பிடிக்க அதுதான் காரணமாயிருந்திருக்கிறது என்றார்கள் சிலர்.

ஊருக்குத் திரும்பும்போது சிலிண்டர்கள் இரண்டையும் இணைப்பை நீக்கி, வீட்டு முகப்புக்கதவிற்கு வெளியே வைத்து அதற்கு அப்பாலுள்ள க்ரில் கேட்டை பூட்டி வந்தோம். இது ஒரு பாடமாக அமைந்தது. கனடாவிலுள்ள என் சினேகிதி குளிர்சாதனப்பெட்டியின் இணைப்பை நீக்கி முழுவதுமாக மூடாமல் ஏதேனும் முட்டுக்கொடுத்து ஓரளவு மட்டும் திறந்து வைத்திருந்தால் பூஞ்சைக்காளான் பிடிக்காது என்று நல்ல ஒரு தகவலை சென்ற மாதம் சொன்னார்.

அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் பாடங்களை கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அதிர்ச்சி அனுபவத்தால் எனக்குக் கிடைத்த பாடமும் அதன் பின் கிடைத்த யோசனைகளும் மற்றவர்களுக்கும் உதவ வேன்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த அனுபவத்தையும் இங்கே எழுதியிருக்கிறேன்.


அன்பு ஆசியா!





உங்களின் அன்பு விருதுகளுக்கு என் இதயங்கனிந்த நன்றி!
விருதுகளை நல் முத்துக்களாய் என் முத்துக்குவியல்களிடையே பதித்து விட்டேன்.
இந்த அழகிய விருதுகளை சகோதரிகள் புவனேஸ்வரி [மரகதம்],  ராமலக்ஷ்மி[முத்துச்சரம்], ஹுஸைனம்மா, சகோதரர்கள் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி, கோபி ராமமூர்த்தி,  தினேஷ்குமார் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கிறேன்!!

66 comments:

  1. முதல் செய்தி வருத்தம். இரண்டாம் செய்தி திகில். விருது பெற்றமைக்கு உங்களுக்கும் தாங்கள் விருதளிதொருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இரண்டாவது அனுபவம் உண்மையிலேயே பயமுறுத்துகிறது. முதலாவது, பொதுவாக மனைவி முதலில் இறந்து விட்டால் , கணவன் மனதளவில் தளர்ந்து விடுவான்.

    ReplyDelete
  3. தங்களது அனுபவங்களை பிறருக்கு பயன்படும் விதத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மனோம்மா. தங்களிடம் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வித்தியாசமான மருத்துவம் தந்திருக்கிறார் சித்தர். அவரது முடிவு எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸின் முடிவை நினைவுறுத்துவதாக உள்ளது.

    விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரண்டாவது பகிர்வு உபயோகமான ஒன்று.

    விருதுகளில் மகிழ்ச்சி. மிக்க நன்றி. கொடுத்த உங்களுக்கும் கிடைத்த மற்றவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள், அக்கா.

    ReplyDelete
  6. அன்புள்ள அம்மா..

    அனுபவங்கள் அருமை.

    ReplyDelete
  7. இரண்டு செய்திகளுமே - நிறைய யோசிக்க வைத்தது. பெரிய விபத்தில் இருந்து உங்கள் வீட்டை காத்த இறைவனுக்கு நன்றி.


    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. முதல் அனுபவம் வருத்தம் தருகிறது.

    இரண்டாவது அனுபவம் எனக்கு நல்ல பாடம். நானும் எப்போதும் ஃப்ரிட்ஜை ஆன் செய்து விட்டுத்தான் ஊருக்குப் போவேன். இம்முறை அணைத்து விட வேண்டியதுதான்

    ReplyDelete
  9. அம்மா...
    அனுபவங்கள்தான் வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தருகின்றன என்பது முற்றிலும் உண்மை.

    முதல் அனுபவம் சிரிப்புடன் ஆரம்பித்தாலும் 70 வயதில் அந்த மனிதரிடமிருந்த முதிர்ச்சி, மனைவி பால் கொண்ட அன்பு, தன் முடிவை தானே தேடிக்கொண்ட சோகம் என விரிகிறது.

    இரண்டாவது அனுபவம் ... பாதிப்பின்றி நடந்ததால் அப்பாடா என்று சொல்ல வைத்தது.

    விருதுகள் பெற்றதற்கும்... மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்ததற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. முதல் அனுபவம்,மனதை சங்கடப்படுத்தியது,ஊருக்கு உபதேசம் செய்தவர் தன் வாழ்க்கையை இப்படி முடித்து கொண்டதை என்னவென்று சொல்வது.

    இரண்டாம் அனுபவம் அனைவருக்கும் ஒரு பாடம்.அக்கா நாங்களும் ஊர் போகும் சமயம் அத்தை மாமா வீட்டில் தான் இருப்பதுண்டு,ஏழு வருடமாய் ஊர் போகும் சமயம் இரவு ஓய்வெடுக்க மட்டும் நாங்கள் கட்டிய வீட்டிற்கு செல்வோம்,அங்கு எல்லா சாமானையும் இழுத்து போட்டு திரும்ப ஒதுங்க வைத்து வருவது எப்பொழுதும் பெரிய வேலை தான்,ஆனாலும் வாட்ச்மேன் இருப்பதாலும்,அவர் வீட்டினுள் ஹாலில் படுத்து கொள்வதால் பாதுகாப்பாகவே இருக்கு.
    அக்கா அப்ப அப்ப யாரையாவது திறந்து பார்த்து சுத்தம் செய்ய சொல்வது நல்லது.

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. காது வலிக்கு தும்பினால் சரியாகும் என்பது தெரியாத செய்தி தெரிந்து கொண்டேன்.

    இரண்டவது, ரொம்ப பயங்கரமா இருக்கு,
    நான் இப்போது ஆன் செய்து விட்டு தான் போகிறேன்,
    முன்பு முடிவைத்து விட்டு போய் பூஞ்சை பிடித்து விட்டது, ரொம்ப நாள் என்றால் இனைப்பை துண்டித்துவிட்டு கழுவி துடைத்து லேசாகதிறந்து வைத்து விட்டு போவேன், ஒன்றும் ஆகாது.

    ReplyDelete
  12. முதல் செய்தி கேட்க வருத்தமாக இருக்கு..

    ReplyDelete
  13. இரண்டாவது அனுபவம் நீங்கள் எழுதியதன் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு தரும் பதிவு.

    விருது பெற்ற் உங்களுக்க்கும், அதை கொடுத்த ஆசியாவிற்கும்.
    இங்கு விருது பெற்ற புவனேஸ்வரி [மரகதம்], ராமலக்ஷ்மி, ஹுஸைனம்மா, சகோதரர்கள் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி, கோபி ராமமூர்த்தி, தினேஷ்குமார். அனவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. விருதுக்கு வாழ்த்துக்கள். தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  15. அக்கா, விருதுக்கு மிக நன்றி.

    சித்த வைத்தியரின் அனுபவமும், அறிவும் அவருக்கு முதுமையில் உதவவில்லை என்பது வருத்தமே என்றாலும், முதுமையின் தனிமை எத்துணை கொடுமையானது என்று காட்டுகிறது.

    ஊருக்குப் போகும்போதும், வரும்போதும் இந்த ‘சுத்தப்படுத்துதல்’ வேலைகள் பெரிய சிரமம். அயர்ச்சியைத் தரும்!!

    ஃபிரிட்ஜை நானும் காலி செய்து, பிளக்கைக் கழட்டிவிட்டுத்தான் போவேன் அக்கா. இரண்டு நாள் முன்னேயே முழுமையாகக் காலிசெய்து, ஆஃப் செய்து, ஃப்ரிட்ஜ் கதவைத் திறந்து போட்டுவிட வேண்டும். முழுமையாக ஈரம் காய்ந்ததும், கதவை மூடவேண்டும். இப்படிச் செய்தால் பூஞ்சைக் காளான் வராது.

    ReplyDelete
  16. இரண்டு அனுபவங்களுமே அருமை..

    ReplyDelete
  17. அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் பாடங்களை கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றன.//

    ஆமாம் மேடம். நாம் தினம்தோறும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.

    //இந்த அதிர்ச்சி அனுபவத்தால் எனக்குக் கிடைத்த பாடமும் அதன் பின் கிடைத்த யோசனைகளும் மற்றவர்களுக்கும் உதவ வேன்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த அனுபவத்தையும் இங்கே எழுதியிருக்கிறேன்.//

    மகிழ்ச்சி மேடம். நாம் கால் தவறி கீழே விழுந்துவிட்டால் முதலில் மற்றவர்கள் நம்மை பார்க்கிறார்களா என்றுதான் பார்ப்போம். நாம் விழுந்ததை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதுதான் இயல்பு. ஆனால், தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் தங்களுக்கு மற்றவர்கள் மீது உள்ள அக்கறை புரிகிறது.

    நன்றி மேடம்.

    ReplyDelete
  18. அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !!

    ReplyDelete
  19. அனுபவப் பகிர்வுக்கு நன்றி :-))

    ReplyDelete
  20. சம்சாரம் போனா சகலமும் போச்சு அப்படிங்கறது சத்தியமான வார்த்தை. இதை வெச்சு நான் ஒரு சிறுகதை எழுதலாம்னு கூடத் தோணுது. பாப்போம்.

    அடுத்த விஷயம் ரொம்பவே கஷ்டமா இருந்தது. நானும் அடிக்கடி ஊருக்குப் போகிறவன். நீங்கள் சொன்ன தகவல்கள் உபயோகமாக இருக்கும்.

    விருதுகள் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றன. வலைப்பூ ஆரம்பித்து ஏதோ மனம் போன போக்கில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். எழுதும் நல்ல பதிவுகள் யாவும் கடவுளின் கிருபையால். மற்ற பதிவுகள் என் அவசர குணத்தால் நன்றாக இல்லாமல் போய் விடுகின்றன.

    நீங்கள் கொடுக்கும் விருதை ஏற்றுக் கொள்ள நான் தகுதி உள்ளவனா என்று தெரியவில்லை. ஆனாலும் வாங்கிக் கொள்கிறேன்.

    வலையுலகில் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இது. கடைசி வரை மறக்க மாட்டேன்.
    எப்போதும் போல எனக்குப் பின்னூட்டமிட்டுக் குறை நிறைகளை சுட்டிக் காட்டவும்.

    விருது வாங்கிய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. சாமிகிரி சித்தரின் செயல் மெய் சிலிர்க்க வைக்கின்றது அம்மா அவர் தன் மனைவியின் எவ்வளவு அன்பு வைத்திருந்திருக்கிறார் உண்மையிலே என்ன சொல்லனும்னு எனக்கு தெரியலமா...........

    அனுபவம் எல்லாருக்குமே ஓர் பாடம் தான் அம்மா

    தங்களுக்கு கிடைத்த விருதை எங்களுக்கு பகிர்ந்தளிந்தளித்தமைக்கு நன்றி அம்மா

    முதல் விருது தங்கள் கைகளால் வாங்குவது மிகவும் பெருமையாக இருக்கு அம்மா .........

    அம்மாவின் கையால் வாங்குவது எப்படி இருக்கும்
    அவ்வளவு ஆனந்தம் அம்மா

    அன்பு வணக்கங்களுடன்

    தினேஷ்குமார்

    ReplyDelete
  22. முதல் அனுபவம்
    அது அவரவர் மனம் சார்ந்தது. ஆனால் தற்கொலை ஒரு தீர்வு இல்லை.

    இரண்டாவது அனுபவம்

    நீண்ட விடுப்பில் போகும் போது கிச்சன் ,பாத்ரூம் எக்ஸாஸ்ட் பேன் பேக் கவரை பெரும்பாலும் மூடக்கூடாது , பூச்சிக்கள் உள்ளே வரும்ன்னு நினைத்தால் அதில் வலை ஒன்னு பேப் செய்து விட்டுப்போகலாம் .இதனால கற்றோட்டம் இருக்கும் கதவை திறந்தால் பேட் ஸ்மெல் இருக்காது
    ஃபிரிட்ஜ் ரெண்டு நாளைக்கு முன்னமே காலி செய்துட்டு சுத்தமா கழுவி துடைத்து காய விட்டு விட்டு லேசாதிறந்து விட்டு போனால் இந்த பிரச்சனை இருக்காது .
    சிலிண்டரை கிச்சனில் வெக்காம பால்கணியில வைக்கலாம் ((சிலிண்டரை விட கேஸ் கனைக்‌ஷன் லாபம்தான் ஷார்ஜாவில))

    எலெக்டிரிக் மெயின் ஸ்விஞ்ச ஆஃப் செய்துட்டு போகலாம்..தேவையில்லாத லீக்கேஜ் , ஷார்ட் சர்க்கியூட் இருக்காது.

    மீன் தொட்டி , கிளி , லவ்பேர்ட்ஸ் மாதிரி இருந்தால் யாராவது ஒரு வரை 2 நாளைக்கு ஒருதடவை கவனிக்க சொல்லலாம் . :-))

    ReplyDelete
  23. thanks for sharing 2 different experiences. the second one is really an useful tip to all

    ReplyDelete
  24. நல்லதோர் பகிர்வு. அனுபவங்கள் தானே நமக்கு ஒரு பெரிய ஆசான். விருது பெற்ற உங்களுக்கும், மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. முதல் அனுபவம் வியப்பாக இருந்தது அக்கா.தொடருங்கள்.படிக்க ஆவலாக உள்ளோம்.

    ReplyDelete
  26. இரண்டு அனுபவங்களுமே வித்தியாசமானவை. விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. தங்களுக்கு கிடைத்த விருதுக்கு மனபூர்வமான பாராட்டுக்கள்!
    எனக்கு தாங்கள் கொடுத்த விருதுக்கு ஒரு ஸ்ல்யூட்!

    ReplyDelete
  28. ///அனுபவங்கள்தான் வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தருகின்றன.////

    உண்மை.

    ReplyDelete
  29. முதல் அனுபவத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதி உள்ளேன். http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post.html

    தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. முடிவை சுபமாக முடித்துள்ளேன்

    ReplyDelete
  30. கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் மோகன் குமார்!

    ReplyDelete
  31. உண்மைதான் சகோதரர் எல்.கே!
    மனைவி மறைந்து விட்டால் எந்த ஒரு ஆணும் மனதளவில் தளர்ந்து விடுவது இயற்கை!
    என் நெருங்கிய உறவினர் ஒருத்தர், மனைவியும் மறைந்து, குழந்தைகளும் சுயநலமாக ஒதுங்கி விட்ட நிலையில் வீட்டுக்கு எதிரேயுள்ள‌ 'மெஸ்'ஸில்தான் தினமும் சாப்பிடுகிறார். அவருடைய தனிமை எப்போது பார்த்தாலும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்!!

    ReplyDelete
  32. அன்பான கருத்திற்கு மனமார்ந்த நன்றி புவனேஸ்வரி!!

    ReplyDelete
  33. உண்மைதான் ராமலக்ஷ்மி! ஸ்டெல்லா ப்ரூஸ் ஞாபகம்தான் வருகிறது! சில முக்கியமான வித்தியாசங்கள்‍. அவருக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு 11 குழந்தைகள்‍ பாசமான குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் வெறும் நாவலாசிரியர்தான். இவரோ மருத்துவராகவும், மக்களுக்கு சேவை செய்பவராகவும் இருந்திருக்கிறார்.

    சில‌ ச‌ம‌ய‌ம் ம‌ன‌தில் ரண‌‌மாகிப் போன‌ சோக‌த்துக்கு முன்னால் அனுபவ முதிர்ச்சியும் அறிவும் ஒன்றுமில்லாததாய் ஆகி விடுகின்றன!

    க‌ருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பு ந‌ன்றி!!

    ReplyDelete
  34. பாராட்டிற்கு அன்பு ந‌ன்றி வான‌தி!

    ReplyDelete
  35. அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் தேவா!

    ReplyDelete
  36. எனக்காக இறைவனுக்கு நன்றி சொன்னது மனதை நெகிழ வைத்தது சித்ரா! அன்பான நன்றி உங்களுக்கு!!

    ReplyDelete
  37. என் அனுபவம் உங்கள் விஷயத்தில் பயனுள்ள‌தாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது கவிசிவா! கருத்துரைக்கு அன்பு நன்றி !

    ReplyDelete
  38. விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  39. நீண்ட கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா!
    இப்போதெல்லாம் அவ்வப்போது வீட்டைத் திறந்து பார்க்கச் சொல்லியுள்ளோம் ஆசியா!

    ReplyDelete
  40. அனைத்துக்கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஜலீலா!
    பொதுவாக காதில் பிரச்சினை உள்ள‌வர்கள் காதில் அடைப்பு ஏற்பட்டால் வாயால் blow up செய்யக்கூடாது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை! இது எதிர்பாராத வைத்தியம் என்பதால் அடுக்கடுக்கான தும்மல்களில் காது அடைப்பு சாதாரணமாக இருந்தால் சரியாகி விடும் என்பது சரியான கருத்துத்தான்!

    ReplyDelete
  41. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி அமுதா!

    ReplyDelete
  42. கருத்துக்களுக்கும் குளிர்சாதனப்பெட்டிக்கான குறிப்பிற்கும் அன்பு நன்றி ஹுஸைனம்மா!

    ReplyDelete
  43. பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!

    ReplyDelete
  44. தங்களின் உள‌மார்ந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் அமைதி அப்பா!

    ReplyDelete
  45. அன்பான கருத்துக்கு நன்றி மேனகா!‌

    ReplyDelete
  46. முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் இனிய நன்றி ஆனந்தி!

    ReplyDelete
  47. பின்னூட்டம்கூட மிக அழகாக எழுதி விட்டீர்கள் சகோதரர் கோபி ராமமூர்த்தி!
    தங்கள் சிறுகதை அருமையாக இருந்தது. தங்கள் வலைப்பூவில் பின்னூட்டமும் இட்டு விட்டேன்.
    அருமையான எழுத்தாளர்கள் இப்படித்தான், ஒரு பொறி கிடைத்தால் போதும், தீப்பிழம்பையே உருவாக்கி விடுவார்கள்! மேலும் உங்கள் திறமை விருட்சமாய் வளர என் அன்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  48. தங்களின் கருத்துக்கும் விருதுக்கான சந்தோஷத்தைத் தெரிவித்த அன்பிற்கும் இனிய நன்றி தினேஷ்குமார்!!

    ReplyDelete
  49. பயனுள்ள அனுபவங்கள்.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  50. குறிப்பாக இரண்டாவது அனுபவம் மிகவும் பயனுள்ள ஒன்று. வெளிநாட்டிலும், வெளியூரிலும் வாழும் என் இரு மகன்களுக்கும், மருமகள்களுக்கும் உடனடியாக அனுப்பி விட்டேன். எதிலுமே மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியதாக உள்ளது. பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  51. உண்மைதான் சகோதரர் ஜெய்லானி! எல்லா துன்பங்களுக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல!
    ஆனால் துன்பங்களின் ரண‌ங்களுக்கு முன் சிலருக்கு அறிவு முதிர்ச்சியும் அனுபவங்களும் ஒன்றுமேயில்லாததாகி விடுகின்றன!

    தங்களின் 'வீட்டுப்பாதுகாப்பிற்கான' குறிப்புகள் எல்லாமே பயனுள்ள‌வை. தங்களுக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  52. Thanks a lot for the nice appreciation krishnaveni!

    ReplyDelete
  53. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் முதல் வருகைக்கும் இதயங்கனிந்த நன்றி சகோதரர் வெங்கட நாகராஜ்!!

    ReplyDelete
  54. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  55. கருத்துரைக்கும் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கினிய நன்றி கோவை2தில்லி!

    ReplyDelete
  56. பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி!

    ReplyDelete
  57. பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி!

    ReplyDelete
  58. கருத்துரைக்கு அன்பு நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  59. அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    தங்களின் பின்னூட்டம், இன்னும் இது போன்ற உபயோகமான பதிவுகள் மேலும் மேலும் தரவேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது.

    ReplyDelete
  60. முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் இனிய நன்றி ராஜி!

    ReplyDelete
  61. ஒரு சிறிய திருத்தம் மேடம்.... நான் ‘ ஆரண்யவாஸ்
    ராமமூர்த்தி’ அல்ல!
    ‘ ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி ’
    கஷ்டமாக இருந்தால், ஆர்.ஆர்.ஆர். என்று எழுதுங்களேன்.
    பி.கு.: முந்திரிகொட்டை தனமான அறைகூவலுக்கு
    மன்னிக்கவும்.வைக்கம் முகமது பஷீர்,தோப்பில் முகமது மீரான்,தகழி சிவசங்கரப் பிள்ளை போன்று எழுத வராவிட்டாலும்,அந்த ‘பெரிய’ எழுத்தாளர்கள் போல் பெயரையாவது பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ’பேராசை’யின் விளைவு தான் இது!

    ReplyDelete
  62. இது போல் அனுபவம் எங்கள் வீட்டிலும் நடந்தது. ஷர்ட் சர்கியுட்டில் மாடி ஹால் முழுக்க வாஷிங் மெஷின் மின் விசிறி உட்பட அத்தனை பிளாஸ்டிக் பொருட்களும் எரிந்து கருகிப போயிருக்க, அங்கே எரியாத ஒன்றும் இருந்தது. உள்ளங்கை அகலத்தில் லாமினேட் செய்யப்பட்ட அண்ணாமலையார் படம்.
    நெருப்பை நெருப்பால் தொட இயலவில்லை.

    ReplyDelete
  63. அன்புள்ள ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்களுக்கு!

    தங்கள் பெயரை தவறுதலாக எழுதியதற்கு மன்னிக்கவும். 'ஆரண்ய நிவாஸ்' என்பதற்கு நீங்கள் முன்பு எழுதிய விளக்கம் மிக நன்றக இருந்தது. அதை அவசியம் வந்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  64. அன்புள்ள வித்யா!

    உங்களின் வீட்டிலும் இதுபோல நிகழ்வு‍ இன்னும் மோசமாக நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியாக இருந்தது. நீங்களும் வீட்டில் இல்லாதபோது இப்படி நடந்ததா? ஒரு முறை டிவி பார்த்துக் கொன்டிருக்கும்போதே அப்படியே பற்றி எரிய ஆரம்பித்தது. பதறி எழுந்து அணைப்பதற்குள் பாதி எரிந்து விட்டது. ஷார்ட் சர்க்க்யூட்டால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன!

    ReplyDelete
  65. இப்பதிவை இண்ட்லியில் ஓட்டளித்து,இணைத்து பிரபலமாக்கிய அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!! இணைந்து ஓட்டளித்த தோழமைகள்
    Dev, KarthikVK,Chithrax, kavippakkam, Shruvish, Maragatham, RDX, Ananthi, Jemdinesh, Jailani,Ashok,Arasu, Jollyjegan, Kiruban, Jntube, Inbathurai, Vedha, Hihi12, Sudhir, karthi, Jampo, sriramandhaguruji, venkatnagraj, siromi, yuvaraj, Kousalya, Rishaban, prasannaa
    அனைவருக்கும் மனங்கனிந்த நன்றிகள் பல!!‌

    ReplyDelete
  66. தங்கள் அனுபவங்கள் எங்களுக்கும் பாடம் .
    பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete