Monday, 30 August 2010

இன்றைய மருத்துவத்தில் நமக்கான விழிப்புணர்வு!

சமீபகாலமாக ஒரு சிறிய வியாதிக்குக்கூட ஸ்கான்கள் எடுக்கும் கலாசாரம் பெருகி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் இரத்த பரிசோதனைகள் செய்திருந்தாலும்கூட, வேறொரு மருத்துவரிடம் போக நேர்ந்தால் மறுபடியும் இரத்தப்பரிசோதனைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் பொது மக்களின் பொருளாதார சூழ்நிலையில் ஒரு வழி பண்ணி விடுகிறது.



எங்கள் ஊரில், அருகிலுள்ள புதிதாகத் திறக்கப்பட்ட சர்க்கரை ஆராய்ச்சி மருத்துவமனை ஒன்றிற்கு நானும் என் கனவரும் இரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள விடியற்காலை சென்று இரத்தம் கொடுத்தோம். என் முறை வந்து அந்தப் பெண் இரத்தம் எடுத்த பிறகு, அதை உரிய இடத்தில் வைத்தபின் எதையோ அவசர அவசரமாகத் தேடியது. பின் கூட்டுகிற பெண்ணை அழைத்து “ இங்கே ஒரு சிரிஞ்ச் வைத்திருந்தேனே பார்த்தாயா?” என்று கேட்டது. [எனக்கு முன்னால் சென்றவரின் இரத்தம்! ]அதற்கு அந்த வேலைக்காரப்பெண் சொன்ன பதில் என்னைத்தூக்கிவாரிப் போட வைத்தது.


“ அது பழசு என்று நினைத்து குப்பைக்கூடையில் போட்டு விட்டேனே!”


உடனே இந்தப்பெண் ‘ ஓடு, போய் குப்பைக்கூடையிலிருந்து அதை எடுத்து வா” என்றது. அப்போதே முடிவு செய்து கொண்டேன் நமக்கு எல்லாமே மிக அதிகமாக இருக்கப்போகிறது என்று!!
 அதுபோலவே எங்கள் இருவருக்கும் 600க்கு மேல் கொலஸ்ட்ரால் முதல் எல்லா நிலைகளையும் ரிப்போர்ட் காட்டியது!!  இந்த மாதிரி அடிப்படை சுகாதாரம் இல்லாமல் இரத்தப்பரிசோதனைகள் நடப்பதும் அனுபவமற்ற-சரியான பயிற்சிகள் இல்லாதவர்களை வேலைக்கு வைப்பதும் அதிகமாகப் பெருகி வருகின்றன!

இங்கே எனக்குப் பழக்கமான சினேகிதி-அவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அப்போதுதான் ஆரம்பமாகியிருந்ததால் சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு பரிசோதனை செய்து கொள்ளப் போனார். காலையில் முதல் நபராக நுழைந்த அவர் அந்த மருத்துவ மனையை விட்டு வெளியே வரும்போது மாலை 5 மணி! காலையில் நுழைந்ததும் இளம் மருத்துவர்கள் அவரிடம் அவருடைய கடந்த கால நோய்கள், பிரச்சினைகள், பெற்றோர்களின் சரித்திரம் பற்றி கேள்விகள் கேட்டு குறித்துக்கொண்டனர். அதன் பின் தொடர்ச்சியாக கண், இதயம், மூளை என்று பல்வேறு பரிசோதனைகள். மொத்தம் 5000 போல செலவாகியது. இறுதியில் தலைமை மருத்துவர் எல்லாவற்றையும் பார்த்து, ஆலோசனைகள் சொல்லி மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்.

என் சினேகிதி, அதை சாப்பிட ஆரம்பித்த இரண்டாம் நாளிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் ஆகி விட்டார். சாப்பிட்ட 2-ம் நாளிலிருந்து கை கால்கள் துவண்டு, உடல் சில்லிட மயக்கம் வர ஆரம்பித்து விட்டது. அப்புறம் இனிப்பான பழச்சாறு, இனிப்புகள் எடுத்ததும் நடமாட முடிந்தது. இதே நிலை தொடர ஆரம்பித்தது. சர்க்கரைக்கு மருந்தெடுத்து விட்டு அப்புறம் இந்த மாதிரி பாதிப்புகள் வந்ததும் சர்க்கரை கலந்த இனிப்புகளை சாப்பிடுவதில் என்ன பலன் இருக்கும்? ரொம்பவும் முடியாமல்போய் அவர்களின் டாக்டர் இங்கிருப்பவரைத் தொடர்பு கொண்டு கேட்டதும் அந்த மாத்திரைகளில் உள்ள ‘ content ’-ஐப் படிக்கச் சொல்லிக் கேட்டு  ‘ ஒரே content

உள்ள மாத்திரைகள் மூன்று விதமாக உங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அதனால்தான் இந்த பாதிப்பு. அதில் நான் சொல்லுகிற ஒரு மாத்திரை மட்டும் சாப்பிடுங்கள். “ என்று சொல்ல, அது மாதிரியே அவர் சாப்பிட்டதும் பிரச்சினை சரியாகியது. அப்புறம் அவர் இங்கு வந்து சேர்ந்ததும் அவரின் மருத்துவர் எல்லா ரிப்போர்ட்டுகளையும் பார்த்த போதுதான் கிளைமாக்ஸ் வந்தது!  சென்னை இளம் டாக்டர்கள் எடுத்த குறிப்பில் இவருக்கு கடந்த 9 மாதங்களாக சர்க்கரையின் பாதிப்புகள் என்று சொன்னதை அவர்கள் 9 வருடங்கள் என்று எழுதிவிட்டிருந்தனர்! அதனால்தான் அதிக அளவிற்கு அவருக்கு மாத்திரைகள் தரப்பட்டிருக்கின்றன!! இது எவ்வளவு பெரிய விபரீதம்! என் சினேகிதியும் தன் உடல்நலக்குறைவினால் தனது ரிப்போர்ட்டை திரும்ப எடுத்து பார்க்கவில்லை! நல்ல வேளையாக இங்குள்ள மருத்துவரால் அது சரி செய்யப்பட்டு விட்டது. இந்த மாதிரிதான் நிறைய மருத்துவ மனைகளின் தரம் இன்றிருக்கின்றன.

ஒரு முறை முதுகுவலியால் மிகவும் அவதியுற்ற நேரம்-

அலோபதி மருத்துவம் நிறைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதால், தெரிந்த ஒருத்தர் மிகவும் சிபாரிசு செய்த ஒரு அக்குப்ரெஷர் மருத்துவ டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்காக சென்னைக்கு என் தோழியுடன் வந்தேன். அப்போதெல்லாம் ஹோட்டலில் தனியாகத் தங்கி பழக்கமில்லை. உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள் இதிலெல்லாம் பல அனுபவங்கள் என்பதால் மிகவும் தேடி ஒரு நல்ல பெண்கள் விடுதியில் இடம் பிடித்த பின் அந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறச் சென்றேன். அவர் சிகிச்சை கொடுக்கும் நேரமோ மிகவும் வித்தியாசமானது. மதியம் ஒன்றிலிருந்து மாலை 4 வரை! அவர் வயதானவர். சிகிச்சை பெற வந்தவர்களின் கூட்டம் நிறைய இருந்தது. முதல் நாள் முதுகில் அக்குப்ரெஷர் சிகிச்சை கொடுத்தவர், நான் அதற்கு முன் எடுத்த மாத்திரைகளின் லிஸ்டைப் பார்த்தார். அதில் ஒன்றை காண்பித்து இதை மட்டும் தொடர்ந்து எடுங்கள் என்றார். நான் ‘ அதை எடுத்ததுமே எனக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைந்து விடும். காலை நீட்டிப் படுப்பதை விட வேறு எதுவும் செய்ய இயலாது. அதனால்தான் அதை நிறுத்தி விட்டேன்’ என்றேன். அவர் ரொம்பவும் அலட்சியமாக ‘இது ரொம்பவும் நல்ல மாத்திரை. அதனால்தான் சொன்னேன். ரொம்பவும் இரத்த அழுத்தம் குறைந்தால் பக்கத்திலுள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆகிக் கொள்ளுங்கள்’ என்றார்! ‘இதென்ன பைத்தியக்காரத்தனம் ‘ என்று மனதில் நினைத்துக்கொண்டே வெறுமனே தலையாட்டி வைத்தேன். பயத்தில் புலம்பிய சினேகிதியிடம் ‘அந்த மாத்திரையை சாப்பிடப்போவதில்லை. பயப்படாதே. 300 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்து கஷ்டப்பட்டு இடம் பிடித்து தங்கியிருக்கிறோம். இன்னும் 3 நாள் சிகிச்சை எடுத்து பார்ப்போம்’ என்றேன். மூன்றாம் நாள் சிகிச்சையின்போது சென்னனயிலிருந்த ஒரு சினேகிதியும் உடனிருந்தார். அந்த மருத்துவர் முதுகில் விரல்களை அழுத்தி ப்ரெஷர் கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவரின் விரல்கள் தொய்ந்து கீழே நழுவியது புரிந்தது. எதிரே அமர்ந்திருந்த என் சினேகிதிகளைப் பார்த்தேன். அவர்கள் சிரிப்பை சிரமப்பட்டு  அடக்கிக் கொண்டிருந்தார்கள். உடனே புரிந்து கொண்டேன்-பின்னால் அமர்ந்திருந்த டாக்டர் தூங்கி விழுகிறார் என்று!! அன்று மாலையே ஊருக்குக் கிளம்பி விட்டேன். இதற்காக எத்தனை மனக்கஷ்டங்கள், அலைச்சல்கள், பண விரயம்!! அத்தனையும் வீணாகிப்போனது!


மொத்தமாக இதுவரைப் பட்ட அனுபவங்களினால் சில சட்ட திட்டங்களை நாங்கள் எப்போதும் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை.


நமக்கென்று ஒரு குடும்ப மருத்துவர் மிகவும் அவசியம். ஜுரம், வயிற்று வலி போன்ற சிறு பிரச்சினைகளை அவரே சரி செய்து விட முடியும். பெரிய பிரச்சினைகளுக்கு அவர் சுட்டிக்காண்பிக்கும் மருத்துவர்களிடம் செல்வது நமக்கு பெருமளவு நம்பிக்கையையும் பலனையும் தரும்.


எந்த மருத்துவரிடம் சென்றாலும் சரி- அவர் கொடுக்கும் அத்தனை மாத்திரை, மருந்துகளையும் வாங்காமல் இரு நாட்களுக்கு மட்டும் வாங்கிக் கொண்டு, அவை உடலுக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே மேற்கொண்டு வாங்க வேண்டும்.


கண்டிப்பாக மருத்துவர் குறிப்பிட்ட அத்தனை நாட்களுக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பாதியிலேயே நிறுத்தக்கூடாது. ஒத்துக்கொள்ளாத மாத்திரைகளைப்பற்றிச் சொல்லி மருத்துவரிடம் வேறு மாத்திரை எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.


நாமாக மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கி உட்கொள்ளுவது மிகப்பெரிய தவறு.


மருத்துவரிடம் செல்லும்போது கையோடு அதற்கு முன் எடுத்த மருந்துகளின் விபரம், சிகிச்சை விபரம் இவற்றை ஒரு குறிப்பாக டைப் செய்து எடுத்துச் செல்வது மிகவும் நல்லது. இத்தோடு நாம் தற்சமயம் எடுக்கும் மாத்திரை விபரங்கள், நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் மருந்துகளின் விபரங்கள், இரத்தப்பிரிவு விபரம் இவை அனைத்தும் அந்தக் குறிப்பில் இருக்க வேண்டும். இதனால் மருத்துவருக்கும் சிகிச்சை செய்ய வசதி. அவருக்கும் நம் உடல்நிலைப்பிரச்சினைகளை சீக்கிரமாகப் புரிந்து கொள்ள முடியும். சில மருத்துவர்கள் ‘ சீக்கிரம் சொல்லுங்கள்’ என்று பறப்பார்கள். நமக்கு அப்போது பார்த்து அனைத்தும் மறந்து போகும் பதட்டத்தில்! இந்த குறிப்புதான் அப்போது உதவி செய்யும். அதை மிகச் சிறிதாக ப்ரிண்ட் எடுத்து பர்ஸிலோ கைப்பையிலோ வைத்துக்கொண்டால் அவசரகால சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டால், பக்கத்தில் யாரும் இல்லாத நிலையிலும்கூட மருத்துவர்கள் இதைப்படித்துப் பார்த்து உங்களுக்கு உடனேயே சிகிச்சை எடுக்க முடியும்.


ஒரு மிகப் பெரிய மருத்துவர் இதைப் படித்து விட்டு என்னிடம்


‘இதை நான் இங்கு சிகிச்சை எடுக்க வரும் எல்லோரிடமும் காண்பித்து இதைப்போல செய்யுங்கள் என்று சொல்லப் போகிறேன். இதனால் எங்களுக்கு சிகிச்சை செய்ய எவ்வளவு வசதியாக இருக்கிறது’ என்றார். இன்னொரு சிறந்த மருத்துவர் என்னைப்பாராட்டி விட்டு ‘ இதில் ஒரு சின்ன திருத்தம் செய்து கொள்ளுங்கள். இதில் நிறைய வருடங்களின் சரித்திரம் இருக்கிறது. எல்லா டாக்டர்களுக்கும் இதைப்படிக்க பொறுமை இருக்காது. அதனால் ஒரு 10 வருடங்களுக்கான முக்கிய பிரச்சினனகளை மட்டும் தனியாக ப்ரிண்ட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவர்களுக்கு அது வசதியாக இருக்கும். அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு ஹிஸ்டரியையும்கொடுக்கலாம்’ என்றார். நானும் அதையே கடை பிடிக்கிறேன். ஏகப்பட்ட பிரச்சினைகள் கொண்ட நம் உடலுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள்,குறைபாடுகள் உள்ள இன்றைய மருத்துவத்துறைக்கும் இடையே இந்த மாதிரி விழிப்புணர்வுடன் நாம் கடைப்பிடிக்கும் சில விஷயங்கள் நம்முடைய கஷ்டங்களைப் பெருமளவில் குறைக்கும்!!







30 comments:

  1. Keeping record of the medical history is a very good idea. It is a very useful post. :-)

    ReplyDelete
  2. முடிவில் நல்ல அட்வைஸ் சொல்லி இருக்கிறீர்கள் அக்கா.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு அக்கா!தொடருங்கள்!

    ReplyDelete
  5. நம் ஊர் மருத்துவமனைகள் அடிக்கும் கொட்டம் இருக்கிறதே... இந்த பதிவையும் படிச்சுப் பாருங்க மனோம்மா!http://kavippakam.blogspot.com/2010/08/blog-post_28.html

    மிக நல்ல ஆலோசனை. நானும் என் மெடிகல் ஹிஸ்டரி ஃபைல் இல்லாமல் ஊருக்கு செல்வதில்லை. நீங்கள் சொன்ன மாதிரி சுருக்கமாக ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வெண்டும்.

    ReplyDelete
  6. நல்ல விஷயங்களதான் எப்பவும் நம்ம உடம்பின் மேல் நமக்குதான் அக்கரை இருக்கனும் . கூடுமானவரை மருத்துவரிடம் போகாமல் இருப்பது நல்லது..(( நான் சொன்னது எதுக்கெடுத்தாலும் சின்ன தலைவலி வந்தால் கூட டாக்டரிடம் போகும் குணம் ))

    ReplyDelete
  7. nice post madam, must read one, keep posting

    ReplyDelete
  8. நல்ல பதிவு. சிறப்பான அட்வைஸ் அக்கா.

    ReplyDelete
  9. எல்லோரும் பின்பற்ற வேண்டிய பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  10. நல்ல தகவல் சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு.

    அம்மா...
    இது போல் நிறைய நிகழ்வுகள் இருக்கு. பணம் பார்க்கத்துடிக்கும் மருத்துவர்கள் மத்தியில் நல்ல மனங்களும் இருக்கிறார்கள் இல்லையாம்மா.

    ReplyDelete
  12. விழிப்புணர்வு தரும் மிகச் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  13. மனோ மேடம்....

    என்ன வரிசையா ஹாஸ்பிடல், டாக்டர்ஸ்னு போட்டு கிழி கிழின்னு கிழிக்கறீங்க....

    நான் முந்தைய பதிவில் சொன்னது போலவே, அவர்களுக்குள் பணப்பேய் புகுந்து கொண்டு நெடு நாட்களாகிறது.... அதனாலேயே மனிதம் செத்து போய் விடுகிறது....

    அடுத்தவர்கள் தானே... சிரமப்பட்டால் நமக்கு என்ன என்ற குறுகிய, கேவலமான மனப்பான்மையுடன் செயல்படுவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது...

    இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்....

    ReplyDelete
  14. பாராட்டுக்கு அன்பு நன்றி இமா!

    ReplyDelete
  15. பதிவுக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!!

    ReplyDelete
  16. அன்பு நன்றி ஸாதிகா1

    ReplyDelete
  17. உங்கள் வலைத்தளத்திற்குச் சென்று பார்த்தேன் கவி! பதிவிட்டும் வந்தேன்! நீங்களும் நானும் கிட்டத்தட்ட ஒரே கோட்டில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம்!

    நாங்கள் எப்போதுமே மற்றவர்களிடம் முக்கியமான உடல் நலப்பிரச்சினைகளில் இன்னொரு டாக்டரிடம் சென்று second opinion வாங்குவது நல்லது என்று சொல்லுவோம். போகிற போக்கைப் பார்த்தால் third opinionம் தேவைப்படும் போலிருக்கிறது

    ReplyDelete
  18. அன்புச் சகோதரர் ஜெய்லானி!

    நீங்கள் சொல்வதைத்தான் நான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன். தொட்டதற்கெல்லாம் டாக்டரிடம் ஓடாமல், மருந்துக்கடைக்குச் சென்று கேட்காமல் கை வைத்தியம் வீட்டிலேயே செய்து கொள்வதுதான் எப்போதும் நல்லது. நம் வீட்டு சமையலறையிலேயே அதற்குத் தேவையான மருந்துப்பொருள்கள் இருக்கின்றனவே!!

    இந்த பதிவை ‘இண்ட்லியில்’ இணைத்ததற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  19. அன்பு நன்றி ஹுஸைனம்மா!!

    ReplyDelete
  20. அன்புள்ள நூருல் அமீன் அவர்களுக்கு!

    முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  21. அன்புச் சகோதரர் வேலன்!

    வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  22. அன்புச் சகோதரர் குமார்!

    நீங்கள் சொல்வது போல மனித நேயமிக்க பண்பிற்சிறந்த மருத்துவர்கள் எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள் நம் ‘தேவம் மாயம்’ போல!!
    அன்பான பதிவிற்கு நன்றி!!

    ReplyDelete
  23. அன்புள்ள கோபி அவர்களுக்கு!

    இந்த மாதிரி நிகழ்வுகள் எப்போதும் நடந்து கொண்டேதானிருக்கிறது! பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்த்துப்போராட ஒன்று நேரமிருப்பதில்லை, அல்லது உடல் தெம்பும் மனத்தெம்பும் இருப்பதில்லை. போதாததற்கு அரசியல் குறுக்கீடுகளால் நியாயங்கள் செத்துப்போகின்றன! அதனால்தான் இந்த மாதிரி அநியாயங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன!

    ReplyDelete
  24. அன்பான கருத்துக்கு இதயங்கனிந்த நன்றி ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  25. இந்தப் பதிவை ஓட்டளித்து பிரபலமாக்கிய தோழமைகள் ஜெய்லானி, கங்கா, இன்பதுரை, அப்துல்காதர், பரணி, ஆசியா, யுவராஜ், பூபதி, சுட்டியார், கிருபன், விவேக், பவன், அஷோக், இடுகைமான், தமில்ஸ், அரசு, விளம்பி, குமார், சுதிர், வேதா, கார்த்திக், மால்குடி, செளந்தர், விக்கி, மேனகா, வேலன், சுக்கு மாணிக்கம், ராமலக்ஷ்மி, பாலாஜிசரவனா, ஜெயந்தி அனைவருக்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  26. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete