Sunday, 5 September 2010

மலாய் குலோப்ஜாமூன்

மறுபடியும் சமையலறையில் நுழைந்து விட்டேன்.என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அடுத்த வாரம் வரவிருக்கும் ரமதான் பெருநாளிற்காக ஒரு இனிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தோன்றிற்று! தேர்ந்தெடுத்த இனிப்பு மலாய் குலோப்ஜாமூன்! சாதாரணமாகவே குலோப்ஜாமூன் எல்லோருக்கும் பிடித்ததுதான். இதில் பாலை சர்க்கரையுடன் திரட்டுப்பாலைப்ப்போல் காய்ச்சி, குலோப்ஜாமூன் செய்ததும் அதன் மேல் ஊற்றி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பரிமாற வேண்டும். இரண்டு மடங்கு இனிப்பாகவும் அருஞ்சுவையோடும் இருக்கும்!


30 வருடங்களுக்கு முன் இங்கு வந்த புதிதில் நான் கற்றுக்கொண்ட இனிப்பு இந்த குலோப்ஜாமூன்! அப்போது ஷார்ஜாவில் ஹாலிடே இன் என்ற நாலு நட்சத்திர ஹோட்டல் மட்டும்தான் இருந்தது. அதன் தலைமை சமையல்காரர் உபயோகித்த குறிப்பு இது. பின்னாளில் நானும் என் மகனும் சேர்ந்து இதை மலாய் குலோப்ஜாமூன் ஆக்கினோம்!! இதற்காக நான் உபயோகிப்பது ஹாலந்தில் தயாராகி வரும் ‘ நிடோ’ பால் பவுடர் தான். இந்தியாவில் ‘அமுல்’ அல்லது ‘ சாகர் ’ பால் பவுடர் சரியாக உள்ளது.



மலாய் குலோப்ஜாமூன்:

தேவையான பொருள்கள்:

குலோப்ஜாமூனுக்கு:

பால் பவுடர்- 8 மேசைக்கரண்டி
மைதா மாவு- 3 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர்- கால் ஸ்பூன்
சோடா பை கார்பனேட்- 2 சிட்டிகை
மிருதுவான வெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
தண்ணீர்- 2 to 3 மேசைக்கரண்டி
சீனி- 2 கப்
பாகு காய்ச்ச தண்ணீர்- 31/2 கப்
ஏலப்பொடி-அரை ஸ்பூன்
குங்குமப்பூ- 1 சிட்டிகை
பொறிப்பதற்குத் தேவையான எண்ணெய்
மெல்லிய பிஸ்தா சீவல்கள்-2 மேசைக்கரண்டி

மலாய் செய்ய:

தண்ணீர்-3 கப்
பால் பவுடர்- 15 ஸ்பூன்
சீனி- 12 ஸ்பூன்
ஏலப்பொடி- கால் ஸ்பூன்
குங்குமப்பூ- 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் மலாய் செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீரில் பால் பவுடரை நன்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
குழம்பு போல கெட்டியாகும்போது சீனி, ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து எல்லாம் கலந்து கொதித்து மறுபடியும் சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
குலோப்ஜான் செய்ய, முதலில் பால் பவுடர், பேக்கிங் பவுடர், சோடா உப்பு மூன்றையும் கலந்து இரண்டு தரம் சலிக்கவும்.
சலித்த கலவையில் வெண்ணெய் சேர்த்து முதலில் நன்கு விரல்களால் கலக்கவும்.
பின் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
மாவு அதிகம் கெட்டியாக இல்லாமல் மிருதுவாக, பளபளப்பாக இருக்க வேண்டும்.
சிறு அரை நெல்லியளவு உருண்டைகளாக உருட்டவும்.
போதுமான எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடுபடுத்தவும்.
சூடு மிகக்குறைவாக இருக்கவேண்டும்.
உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கச்வும்.
இப்போது உருண்டைகள் இன்னொரு மடங்காக பெரிதாகியிருக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரையைப் போட்டு காய்ச்சவும்.
கொதி வரும்போது, தீயை மிதமாக வைத்து, உருண்டைகளை அதில் போடவும்.
குங்குமப்பூவைத் தூவவும்.
20 நிமிடங்களில் உருண்டைகள் இன்னொரு மடங்கு பெரிதாகியிருக்கும்.
பாகும் சற்று கெட்டிப்பட்டிருக்கும்.
இதுதான் சரியான பதம்.
இறக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
சற்று ஆறியதும் காய்ச்சி வைத்திருக்கும் கெட்டிப்பாலை[மலாய்] பரவலாக அவற்றின்மேல் ஊற்றவும்.
பிஸ்தா சீவல்களைத் தூவவும்.
சுவையான மலாய் குலோப்ஜாமூன் தயார்!!

31 comments:

  1. ஒரு பொழுதும் இது சாப்பிட்டதில்லை அக்கா. உங்கள் குறிப்புப் பார்த்துத்தான் செய்து பார்க்க இருக்கிறேன்.

    ReplyDelete
  2. மனோ அக்கா ரசமலாய்+ குலோப் ஜாமுன் , நல்ல ஐடியா.
    ரொம்ப நல்ல இருக்கு , பெரிய பையன் வந்ததும் செய்து பார்க்கனும்

    ReplyDelete
  3. என் மகனுக்கு ரொம்ப ப்ரியம் குலோப்ஜாமுன்னா இதையும் செய்து கொடுத்துவிடுகிறேன்.

    படம்பார்த்ததும் நாவில் நீர் ஊறுது.சூப்பர்.

    ReplyDelete
  4. அம்மா....

    நல்லாத்தான் இருக்கு பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுது.
    என்ன செய்யட்டும்... ஊருக்குப் போறப்ப பார்க்கலாம்.

    ReplyDelete
  5. எல்லோருக்கும் பிடித்ததை இப்படி படம் போட்டு பசியை உண்டு பண்ணிட்டீங்களே.. அருமையான பகிர்வு.. எங்கள மாதிரி குடும்பமிருந்தும் 'பேச்சுரலாய்' வாழ்பவர்களுக்கு நிச்சயமாய் சாப்பிடனும் என்று தோன்றும்..

    ReplyDelete
  6. akka, super & mouth watering recipe.

    ReplyDelete
  7. புது முறையா இருக்கு; யாராவது செய்து தந்தா நல்லாருக்கும்!! :-)))))

    ReplyDelete
  8. //புது முறையா இருக்கு; யாராவது செய்து தந்தா நல்லாருக்கும்!! :-))))) //

    அட நம்ம கட்சி ...ஹா..ஹா... அப்படியே தந்தா நமக்கும் பார்ஸல்

    ReplyDelete
  9. ஹுசைனம்மா said..
    // புது முறையா இருக்கு; யாராவது செய்து தந்தா நல்லாருக்கும்!! :-))))) //

    ஜெய்லானி said
    // அட நம்ம கட்சி ...ஹா..ஹா... அப்படியே தந்தா நமக்கும் பார்ஸல் //

    கட்சி எல்லாம் ஆரம்பிக்கக் கூடாது பாஸ் அது தப்பு. ஆரம்பிச்சவங்களே முழி பிதுங்கி போய்க் கிடக்கிறாங்க. என்னமோ பார்ஸல் கீர்சல் ன்னு பேச்சு அடிபட்டதே. அப்படியே நமக்கும் ஒன்னு ஹி.. ஹி..

    ReplyDelete
  10. மலாய் ஜாமூனா??? ஆன்டி கொஞ்ச நாளாவது டயட்டில யாரும் இருக்கவே விடறதில்லை.. ஹும்ம்

    ReplyDelete
  11. அக்கா,வித்தியாசமாக செய்து அசத்திட்டீங்க.கண்டிப்பா செய்து பார்த்துவிடுகின்றேன்.

    ReplyDelete
  12. ஆஹா....

    மலாய் கொஃப்தா கேள்விப்பட்டு இருக்கிறேன்... குலோப் ஜாமூன் ஓகே..

    இங்கே அந்த இரண்டின் சங்கமமாய் ஒரு புதிய அட்டகாசமான டிஷ் - மலாய் குலோப்ஜாமூன்... ரொம்ப வித்தியாசமாய் இருக்கிறது...

    ஸோ, டேஸ்டும் கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும்...

    கலக்குங்க மனோ மேடம்....

    ReplyDelete
  13. சூப்பர் ஸ்வீட்! நல்ல ரிச்சா இருக்கும்னு தோணுது! :P:P:P

    ReplyDelete
  14. இது ரொம்பவும் ரிச்சான இனிப்பு இமா! அவசியம் செய்து பாருங்கள்!!

    ReplyDelete
  15. இதற்கும் ரசமலாய்க்கும் சம்பந்தம் இல்லை ஜலீலா! கெட்டியான பாலில் அதைக் காய்ச்சும்போது எடுத்த பாலாடையும் கலந்து உபயோகிக்கும்போது மலாய் என்று சொல்வார்கள் இதுவும் அதுதான். மலாய் செய்து குலோப்ஜாமூனில் கொட்டி அலங்கரிப்பதால் இது மலாய் குலோப்ஜாமூன்!! .

    ReplyDelete
  16. பாராட்டிற்கு அன்பு நன்றி மலிக்கா! அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள்!!

    ReplyDelete
  17. அன்புச் சகோதரர் குமார்!

    பாராட்டிற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  18. அன்புச் சகோதரர் இர்ஷாத்!

    பாராட்டிற்கு அன்பு நன்றி!
    ‘ ஈத்’ அன்று நிறைய இனிப்பு சாப்பிட்டு குறையைப் போக்கிக்கொண்டிருந்திருப்பீர்களென நம்புகிறேன்!!

    ReplyDelete
  19. இங்கே ஷார்விற்கு என் வீட்டுக்கு வாருங்கள் ஹுஸைனம்மா! அவசியம் செய்து தருகிறேன்!!

    ReplyDelete
  20. அன்புச் சகோதரர் ஜெய்லானி!
    பார்சல் எல்லாம் வேண்டாம்!
    ஹுசைனம்மாவிற்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்!!

    ReplyDelete
  21. அன்புச் சகோதரர் அப்துல் காதர்!

    வெகு தொலைவில் இருப்பதால் அவசியம் பார்சல் அனுப்புகிறேன்!

    ReplyDelete
  22. அன்பு இலா!

    இது மாதிரி இனிப்பும் சாப்பிடுங்கள்! அப்புறம் சில நாட்கள் டயட்டில் இருந்தால் போச்சு!!

    ReplyDelete
  23. அன்புப் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!
    அவசியம் செய்து பாருங்கள் இந்த இனிப்பை!

    ReplyDelete
  24. அன்புள்ள கோபி அவர்களுக்கு!

    இனிய பாராட்டிற்கு அன்பான நன்றி!!

    ReplyDelete
  25. அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!
    அவசியம் செய்து பாருங்கள் இந்த இனிப்பை!!

    ReplyDelete
  26. ரொம்பவும் ரிச்சான ஸ்வீட் இது மகி!
    பாராட்டுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  27. இப்பதிவை இண்ட்லியில் இணைத்து, ஓட்டும் போட்டு பிரபலமாக்கிய சகோதரர் ஜெய்லானிக்கு அன்பு நன்றி!! ஓட்டளித்த தோழமைகள் அபுதுல் காதர், வேதா, கோபி, பாலக், ராஜேஷ், நண்பன், சங்கர், tamilz, vivek, sramse, jntube, karthi, soundhar, ambuli, paavai, Gokula, MRVS, amalraj, asiya அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  28. அருமையான ரெசிப்பி.

    ReplyDelete
  29. ஹாய் ஆன்டி உங்க ரெசிப்பி நல்ல இருக்கு பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. இந்த வீகென்ட் ஒரு பார்ட்டி இருக்கு இதை நான் செய்யலாம்னு இருக்கேன் எனக்கு சில டவுட் இருக்கு இதை ரெடிமெட் குலாப் ஜாமுன் பவுடரில் செய்யலாம? 2.இங்க பால் பவுடர் சரியா கிடைக்காது அதற்க்கு பதில் ஹெவி கிரீம், லோ கிரீம் கிடைக்கும் அதில் மலாய் செய்யலாமா? 3.மீதி இருக்குற பாகையும் சேர்த்துகணுமா? 4.இந்த மலாய் ஊற்றியதும் கெட்டியாகிவிடுமா இல்ல செமி சாலிடா இருக்குமா நிறைய சந்தேகம் கேட்டு இருக்கேன் முடியும் போது பதில் சொல்லுங்க தேங்யூ

    ReplyDelete
  30. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
    இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete