Sunday, 3 March 2013

பயணங்கள்...!!!




இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து திருச்சிக்கு மலைக்கோட்டை விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. நானும் என் கணவரும் பத்தரைக்கு கிளம்ப வேண்டிய ரயிலில் ஏற ஒன்பதரைக்கே ரயில்வே ஸ்டேஷன் சென்று விட்டோம். பத்தரை ஆனதும் தான் தெரிந்தது வண்டி 2 மணி நேரம் தாமதம் என்று! குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட பயணிகள் அறையில் கட்டணம் செலுத்தி ஒரு மணி நேரத்தைப்போக்கினோம். ரயில் உடனே வருகிறது என்று யாரோ சொன்னதை நம்பி அந்த இருக்கையைக் காலி செய்து வந்து விட்டதில் பின்னர் அதிலும் இடம் கிடைக்க வில்லை. பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து  பிளாட்பாரத்தில் படுக்க ஆரம்பித்தார்கள். சிலர் அரட்டை! சிலர் லாப்டாப்பில்! ஒரு வழியாக ரயில் 12.30க்கு வந்து பதினைந்து நிமிடங்களில் கிளம்பியது. டிக்கெட் பரிசோதகர் ' 2 மணி நேர தாமதம் என்பதால் ஐந்தரைக்குப்போக வேண்டிய வண்டி 7 மணிக்கு முன்னால் நிச்சயம் போய்ச்சேராது’  என்றார். அப்படி கொஞ்சம் முன்னால் போய்ச்சேர்ந்து விட்டால் அனைவரையும் எழுப்புகிறேன் என்றார்.

காலை ஐந்தரைக்கு யதேச்சையாக எழுந்து உட்கார்ந்தோம். பாத்ரூம் சென்ற என் கணவர் அவசரமாகத் திரும்பி வந்து ' திருச்சி டவுன் கடந்து சென்று விட்டதாம். சில நிமிடங்களில் திருச்சி ஜங்ஷன் வருகிறதாம்' என்றார்கள்! திருச்சிக்கு அடிக்கடி வருகிற பயணிகள் நிறைய பேர் ஷாக் ஆகி விட்டார்கள்! ' அது எப்படிங்க அதற்குள் திருச்சி வரும்?' என்று பரபரப்புடன் இங்கும் அங்கும் ஓட, அந்த இடம் ஒரே களேபரமானது! எழுப்பி விடுகிறேன் என்று சொன்ன டிக்கெட் பரிசோதகரை அந்த எல்லையிலேயே காணோம்! தூங்கிக் கொண்டிருந்தவர்கள் திணறலுடன் அவசரம் அவசரமாக  பெட்டிகளை மேலிருந்து இறக்க, ' நல்லா தெரியுமாங்க?' என்று ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக்கொள்ள, ' ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் எப்படிங்க இத்தனை வேகமாய் வந்தது? நம்ம ராக்ஃபோர்ட்டா?' என்று சரமாரியாய் கேள்விகள் புறப்பட்டதில் நிறைய முகங்களில் புன்னகை!    

பயணங்கள் வாழ்க்கை முழுவதும் நம்மைப் பல அனுபவங்களுக்கு அழைத்துச் சென்று கொன்டே இருக்கின்றன. சில பயணங்கள் நமக்கு மறக்க முடியாத அனுபவங்களை அள்ளித் தருகின்றன என்றால் சில பயணங்களோ ஆழ்ந்த படிப்பினைகளை வழங்குகின்றன. எதிர்பாராத நட்பு, இறுதி வரை கூடவே பயணம் செய்யக்கூடிய இனிமையான உறவு, மறக்க விரும்பும் பிரிவுகள்- இப்படி இதய உணர்வுகளின் பல வித ராகங்கள் பயணங்களுடன் பின்னிப்பிணைந்து கொண்டே செல்கின்றன.

சின்ன வயது பயண‌ங்கள் இனிமையை மட்டுமே தந்திருக்கின்றன. பஸ்ஸில் ஜன்னலோரம் அமர்ந்து கொள்ள‌ எத்தனை போட்டி அப்போதெல்லாம்! நெடுக கூடவே பயணித்து வரும் மரங்கள், செடி கொடிகள், பசும் வயல்கள்!! புலர்ந்தும் புலராத விடியற்காலைப் பொழுதின் அழகை அப்படியே மனம் உள் வாங்க, பனித்துளிகள் ஈர மணத்தை காற்றோடு சேர்த்து நாசி உள் வாங்க, மலர்களும் ஓடைகளும் சலசல‌த்துச் செல்லும் ஆறுகளும் நெற்பயிர்களும் அள்ளித்தெளிக்கும் அழகுகளை அப்படியே விழிகள் உள் வாங்க‍ அது ஒரு மறக்க முடியாத பிஞ்சுப்பருவம்!

வயது ஏற ஏறத்தான் அனுபவங்களின் ஆழங்கள் இதயம் உணரும் அழகுகளை புறத்தே தள்ளி விடுகின்றன!



பொதுவாய் ரயில் பயணங்களில் தான் வேடிக்கையான அனுபவங்கள் கிடைக்கும்! ஒரு முறை என் அக்காவும் அவர் கணவரும் தங்கள் மகனை விட்டு விட்டு ரயிலில் ஏறி எல்லோருக்கும் டாடா காண்பித்து, கடைசி நிமிடத்தில் தான் மகனைக் கீழேயே விட்டு விட்டு ஏறியது நினைவில் வந்து அவசரம் அவசரமாக பிள்ளையை உள்ளே வாங்கினார்கள்.

இன்னொரு சமயம், என் சினேகிதியின் இளம் வயதில் நடந்த ஒரு அனுபவம் இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கும். அவர் கணவர் அவரையும் குழந்தையையும் சென்னைக்கு ரயிலில் ஏற்றி விட்டு அது சென்ற பிறகு தான் அவருக்கு தன் மனைவி கையில் அவர்களின் டிக்கெட்டுகளைக் கொடுக்காதது நினைவுக்கு வந்திருக்கிறது. என் சினேகிதி அவ்வளவாகப் படிக்காதவர் மட்டுமல்லாது பயந்த சுபாவமானவரும் கூட!! தன் கையில் பயணச்சீட்டுக்ளே இல்லையென்றால் பதறி அழுது விடுவார். கணவருக்கு பதட்டம் அதிகமாகி ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஃபோன் செய்து செய்தியைச் சொல்லி ஒரு வழியாக ரயில் சென்னை சென்றடைந்ததும் நண்பர்கள் உதவியுடன் வெளியே வந்தார்.

அப்போதெல்லாம் கிரெடிட் கார்டுகள் எல்லாம் தோன்றாத காலம். எனக்கு அப்போது ஒரு பயணத்தின் போது சோதனை ஏற்பட்டது. பொதுவாய் சென்னை, திருவனந்தபுரம், திருச்சியிலிருந்தெல்லாம் துபாய்க்கு நேரடி விமானச் சேவை இருப்பதால் 4 மணி நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்பதால் கையில் அதிகம் பணம் எடுத்துச் செல்வதில்லை. அதுவும் அந்தக் காலத்தில் அதிக பணம் எடுத்துச் செல்ல அனுமதியுமில்லை. என் கணவரும் 'எந்த செலவுமே இல்லாத போது ஐந்நூறே அதிகம்' என்பது வழக்கம். ஒரு சமயம் நானும் என் மகனும் தனியே திருவனந்தபுரத்திலிருந்து துபாய்க்கு பயணிக்க நேரிட்டது. என் மகனுக்கு அப்போது 10 வயது தான்.  விமானம் வானில் பறந்து கொன்டிருந்த போது தான் சில இயந்திரக்கோளாறுகள் காரணமாக விமானம் மும்பையில் இற‌ங்கி 8 மணி நேரங்கழித்து வேறொரு விமானத்தில் துபாய் செல்லவிருக்கிறோம் என்று தெரிந்தது. விமானம் மும்பையில் இறங்கிய பிறகு துபாய் விமானத்திற்குக் காத்திருந்த போது தான் ஆரம்பித்தது சோதனை. மதிய உணவு என்ற பேரில் சிறிதளவு சாப்பாடே விமான நிர்வாகம் தந்தது. ஒரு காப்பி அப்போதே 30 ரூபாய் என்றிருந்தது. நேரம் செல்ல செல்ல, என் மகனுக்கு, டிபன், பிரட், ஜூஸ் என்று பணம் குறையக் குறைய என் மனது நிம்மதியில்லாமல் அலைபாய ஆரம்பித்தது. கையில் கடைசியாக 25 ரூபாய் தான் மிச்சம். மகனுக்கு வேண்டுமே என்று நான் பட்டினி கிடந்ததில் சோர்வும் பசியுமாக துறுதுறுப்புடன் இருந்த மகனை கவனித்துக்கொண்டிருந்ததில் அதிக தளர்ச்சியும் பதற்ற‌முமாய் நேரம் கழிய, ஒரு வழியாய் விமானம் ஏற அறிவிப்பு வந்த போது அப்படியொரு நிம்மதி! அன்றிலிருந்து எப்போதும் 5000 ரூபாய்க்குக் குறைந்து பணம் எடுத்துச் செல்வதில்லை. கிரெடிட் கார்டுகள் இருந்தாலும் இந்தப் பணமும் கூடவே எப்போதும் பயணிக்கும்!!

பயணங்கள் தொடரும்!!

படங்கள்: கூகிளுக்கு நன்றி!          

51 comments:

  1. பயணம் செய்யும்போதுமட்டும் கவனமாக இருக்கவேண்டும்.அதுவும் கூட்ட இரைச்சலில் என்ன தகவல் சொல்வதுகூட கேட்காது.தொடர்பயனத்தை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ரயில் , விமான பயணங்களில் உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம் !

    ReplyDelete
  3. --------
    நெடுக கூடவே பயணித்து வரும் மரங்கள், செடி கொடிகள், பசும் வயல்கள்!! புலர்ந்தும் புலராத விடியற்காலைப் பொழுதின் அழகை அப்படியே மனம் உள் வாங்க, பனித்துளிகள் ஈர மணத்தை காற்றோடு சேர்த்து நாசி உள் வாங்க, மலர்களும் ஓடைகளும் சலசல‌த்துச் செல்லும் ஆறுகளும் நெற்பயிர்களும் அள்ளித்தெளிக்கும் அழகுகளை அப்படியே விழிகள் உள் வாங்க‍
    -------
    அப்படியே பல்லவன் பயணத்திற்குப் பொருந்தும். திருச்சி தொடங்கி அரியலூர் வரை.

    சுவாரஸ்யமான பதிவு

    ReplyDelete
  4. சுவராஸ்யமான அனுபவங்கள்....தொடருங்கள்!!

    ReplyDelete
  5. // ' ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் எப்படிங்க இத்தனை வேகமாய் வந்தது? நம்ம ராக்ஃபோர்ட்டா?' //

    திருச்சி பதிவர் வை கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் சொல்லாமல், எங்க மலைக்கோட்டை பக்கம் வந்துவிட்டு சென்று விட்டீர்கள். பயணங்கள் முடிவதில்லை!

    ReplyDelete
  6. ரயில் பயணங்கள் என்றும் இனிமை... பல வருடங்கள் முன்பு சந்தித்தவர்கள் கூட, இன்று வரை கைபேசியில் தொடர்பு உண்டு...

    ReplyDelete
  7. //பயணங்கள் வாழ்க்கை முழுவதும் நம்மைப் பல அனுபவங்களுக்கு அழைத்துச் சென்று கொன்டே இருக்கின்றன. //

    ஆமாம் அக்கா பயணங்கள் மற்றும் அதன் நினைவுகள் முடிவதுமில்லை ,அலுப்பதுமில்லை ஒவ்வோர் முறையும் ஒரு புதிய அனுபவம் ...

    ReplyDelete
  8. பயணங்களில் உங்களுடன் பயணித்தேன். நல்ல சுவாரஸ்யமான நிகழ்வுகள்.

    பயணத்தில் மிகுந்த அக்கறை அவதானம் இருக்காவிட்டால் மோசமான அவலங்களும் அவதிகளும் நிச்சயம் ஏற்படும்தான்.
    பொதுவாகவே வாழ்க்கையில் அவதானமில்லாவிட்டால் அவ்வளவுதான்...
    நல்ல பகிர்வு. மிக்க நன்றி!

    ReplyDelete
  9. ரயில் பயண அனுபவம் எப்போதும் மிக அருமையானது பலவித அனுபவங்களை ரசிக்க முடியும்...


    என்ன இப்போது 5000 ரூபாய்க்கு குறைவு இல்லாமல் எடுத்து செல்கிறீர்களா...அப்ப அடுத்த முறை பயணம் செய்யும் போது சொல்லுங்கள்...ஆளை அனுப்புகிறேன்....ஹீஹீ

    ReplyDelete
  10. பயண அனுபவம் சுவை.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. சமீபத்தில் நான் பெங்களூரிலிருந்து கோவை வந்தபோதும் இதே மாதிரி ரயில் இரண்டு மணிநேரம் தாமதமாகத்தான் புறப்பட்டது. ஆனால் சரியான நேரத்திற்கு கோவை வந்து சேர்ந்து விட்டது.

    ReplyDelete
  12. பயண அனுபவுங்கள் வெகு சுவாரஸ்யம். நிறைய மனிதர்களை சந்திக்க முடிகிற ரயில் பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆனால் அமைவது என்னவோ பஸ் பயணங்கள்தான்! என் செய்ய? (அதுசரி... ட்ரெயி்ன் ரெண்டு மணி நேரம் லேட்டு, ஸ்டேஷன்ல சும்மா இருந்தீங்கன்னா.. எனக்கு தொலை பேசியிருந்தா வந்து கண்டுகிட்டிருப்பேனே...)

    ReplyDelete
  13. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் கவியாழி கண்ண‌தாசன்! நீங்கள் சொல்வது மிக மிகச் சரியானது! பிரயாண‌ங்களில் அதிக கவனம் தேவை தான்! கூட்ட இரைச்சலினால் மட்டுமல்ல, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பிரயாணிகளுக்கான தங்குமிடத்திலும் கூட அறிவிப்புகள் சரி வர புரிவதில்லை! காரணம் அங்குள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அளவுக்கு மீறிய சப்தம்!

    ReplyDelete
  14. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஸ்ரவாணி!

    ReplyDelete
  15. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி பாண்டியன்! சிறு வயதில் திருச்சி அரியலூர் பிரயாணம் செய்திருக்கிறேன். அதனால் அதன் அழகுகள் அவ்வளவாக நினைவிலில்லை!

    ReplyDelete
  16. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  17. கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!
    ஷார்ஜாவிலிருந்து தஞ்சை வந்து சேர்ந்த பிறகு சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் பேசி விட்டேன்.
    ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்ஸில் தஞ்சை வரை டிக்கெட் வாங்கியிருந்த நாங்கள் திடீரெனக்கிளம்பிய ஒரு அவசர வேலை காரணமாக திருச்சியில் இறங்க வேன்டியதாகி விட்டது. அதனால்தான் நண்பர்கள் யாரையும் சந்திக்க இயலவில்லை!

    ReplyDelete
  18. உண்மை தான் தனபாலன், பயணங்கள் என்றுமே இனிமையானவை தான்! மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய ரயில் பயணங்களில் தான் கிடைக்கும்!!கருத்துரைக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  19. பயணங்கள் எப்போதும் இனிமையானது.. உங்கள் பயண அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக துபாய் பயணத்தின் போது எப்படி சமாளித்திருபீர்களோ என்ற பதைபதைப்புடன் படித்தேன்.

    ReplyDelete
  20. அடுத்த முறை பயணம் செய்யும்போது அவசியம் சொல்கிறேன் அவர்கள் உண்மைகள்!

    கருத்துப்பகிர்விற்கு இனிமையான நன்றி!

    ReplyDelete
  21. பாராட்டிற்கும் வருகைக்கும் அன்பு நன்றி வேதா!

    ReplyDelete
  22. இப்போதெல்லாம் ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டாலும் அது போகுமிடத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைந்து விடுகின்றன போலும்! நீங்கள் சொல்வதிலிருந்தும் அப்படித்தான் தெரிகிறது சகோதரர் பழனி கந்தசாமி! டிக்கெட் பரிசோதகருக்குத்தான் அது தெரியவில்லை போலிருக்கிறது! கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  23. சுவாரஸ்யமான கருத்துப்பகிர்விற்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் பால கணேஷ்!

    என் கணவருக்கு திடீரென்று ஒரு சிகிச்சை செய்ய வேண்டி அவசரமாக புறப்பட்டு வந்ததால் சென்னையில் நான் யாரையுமே அந்த மாதிரி சூழ்நிலையில் சந்திக்க முடியவில்லை. தஞ்சை வந்தாவது ஃபோன் செய்யலாமென்று பார்த்தால் உங்கள் தொலைபேசி எண் உள்பட பல முக்கிய எண்கள் பதிந்து வைத்திருந்த என் மொபைல் பிரச்சினைக்குள்ளாகிப்போனது. அது சரியாகி வந்ததும் நான் உங்களை அழைத்துப்பேசத்தான் எண்ணியிருந்தேன்! விரைவில் அழைப்பேன்!!

    ReplyDelete
  24. பயணங்களைப்போலத்தான் வாழ்க்கையும் என்பதை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் இளமதி! இனிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி!!

    ReplyDelete
  25. ஒவ்வொரு பயணத்தின்போதும் ஒரு புதிய அனுபவம் நமக்காகக் காத்திருப்பது உண்மை தான் ஏஞ்சலின்! கருத்துப்பகிர்விற்கு உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  26. சின்ன வயது பயண‌ங்கள் இனிமையை மட்டுமே தந்திருக்கின்றன. பஸ்ஸில் ஜன்னலோரம் அமர்ந்து கொள்ள‌ எத்தனை போட்டி அப்போதெல்லாம்! நெடுக கூடவே பயணித்து வரும் மரங்கள், செடி கொடிகள், பசும் வயல்கள்!! புலர்ந்தும் புலராத விடியற்காலைப் பொழுதின் அழகை அப்படியே மனம் உள் வாங்க, பனித்துளிகள் ஈர மணத்தை காற்றோடு சேர்த்து நாசி உள் வாங்க, மலர்களும் ஓடைகளும் சலசல‌த்துச் செல்லும் ஆறுகளும் நெற்பயிர்களும் அள்ளித்தெளிக்கும் அழகுகளை அப்படியே விழிகள் உள் வாங்க‍ அது ஒரு மறக்க முடியாத பிஞ்சுப்பருவம்!

    வயது ஏற ஏறத்தான் அனுபவங்களின் ஆழங்கள் இதயம் உணரும் அழகுகளை புறத்தே தள்ளி விடுகின்றன!//

    உண்மை உண்மை!
    உங்கள் பயண அனுபவங்கள் எல்லாமே நல்லா சொல்லி இருக்கிறீர்கள். அதில் குறிப்பாக சின்ன வயது பயண அனுபவம் இனிமை நிறைந்தது என்பதை மறுக்கவே முடியாது. கவலை இன்றி இயற்கையை ரசித்துக் கொண்டு, தாய் தந்தையரிடம் விரும்பியதை வாங்கி சாப்பிட்டுவிட்டு பொறுப்பு, கடமை எதுவும் இல்லாமல் பயணிப்பது அருமை.

    ரயிலில் ஜன்னலில் கை வைத்துக் கொண்டு மகிழவாய் வேடிக்கைப் பார்க்கும் குழந்தையிடம் என்னைப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  27. உங்கள் பயண அனுபவஙக்ள் மூலம் பெற்ற படிப்பினை இதை படிபப்வர்கள் அனைவருக்கும் பயன் படும்.

    சரியாக சொன்னீர்கள். கையில் எப்போதும் பணம் எடுத்து செல்வது பற்றி.
    எனக்கு டிரெயின் அனுபவம் அவ்வ்வளாக இல்லை/

    இப்ப பையன் காலேஜில் சேர்த்ததில் இருந்து , அலகாபாத் செல்ல டெல்லி ஆக்ரா, ஜெய்பூர், அலகா பாத் என்று போனதில்
    இரண்டு முறை போனதில் இரண்டாவது முறை அலகா பாத் ட்ரெயின் ஸ்டேஷனில் நீங்க சொல்வது போல் தான் எல்லா பயணிகளுடனும் 1 மணி நேரம் காத்திருந்தோம், டிரெயின் வந்து விட்டது என்றார்கள் உடனே அந்த இடத்தை காலி பண்ணி விட்டு டிரெயின் வரும் இடத்தில் சென்று எல்லா லக்கேஜையும் வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தோம், ஆனால் ட்ரெயின் லேட் மாலை 7 மணி க்கு செல்ல வேண்டிய டிரெயின் இரவு 2 மணிக்கு வந்த்து..
    அது வரை ப்ளாட்பாமிலேயே தான் காத்திருந்தோம்..

    ReplyDelete
  28. ரயில் பிரயாணங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை தன் தந்திருக்கின்றது....

    சிறு வயது தான் கவலை, பொறுப்புகள், சுமைகள் இல்லாத பருவம். அப்போது அனுபவித்து ரசித்திருப்போம்.

    ஸ்ரீரங்கத்தில் தற்போது நானும் இருக்கிறேன்மா. வந்தால் தெரியப்படுத்துங்கள்.

    ReplyDelete
  29. சுவாரசியமான அனுபவங்கள் மேடம்.

    //வயது ஏற ஏறத்தான் அனுபவங்களின் ஆழங்கள் இதயம் உணரும் அழகுகளை புறத்தே தள்ளி விடுகின்றன!//

    மிக அழகாக சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  30. ரயில் பய.ணங்களில் பின்னோக்கி நகரும் மரமு, மனிதர்களும், பசுமையும் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை.

    ரயில் பயணம் சிறியவர், பெரியவர் என்று எல்லோருக்குமே பெரும்பாலும் பிடிக்கும்.

    நன்றி

    ReplyDelete
  31. பயணங்கள் அலுப்பதில்லை!

    ReplyDelete
  32. இரயில் பயணங்கள்
    பலவிதமான அனுபவங்களின்
    பெட்டகம் தான் அம்மா..

    ReplyDelete
  33. அப்பப்பா... அனுபவங்கள் தான் எத்தனை தினுசாய் நம் அன்றாடங்களில்...! திடுக்கிடும் திருப்பங்கள் தான் வாழ்வை சுவை கூட்டுகின்றன.

    ReplyDelete
  34. ரொம்பவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் கோமதி! உண்மை தான்! கவலைகளும் பொறுப்புகளும் இல்லாத இளம்பருவம் எத்தனை இனிமையானது!

    ' அந்த நாள் ஞாபகம்' பாடல் தான் நினைவில் எழுகிறது!
    அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  35. வாருங்கள் ஜலீலா!
    உங்கள் பயண அனுபவம் இன்னும் மோசமாக இருக்கிறது! சில சமயம் இந்த காத்திருத்தல் இனிமையாக இருந்தாலும் பல சமயம் கொடுமையாகத்தான் இருக்கிறது!

    இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  36. ஆமாம் ஆதி, சிறு வயதில் ரசித்த மாதிரி இனிய உணர்வுகளுடன் இப்போதெல்லாம் பயணங்களை ரசிக்க முடிவதில்லை.
    இனிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி!

    ReplyDelete
  37. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ரமா!

    ReplyDelete
  38. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜலக்ஷ்மி!

    ReplyDelete
  39. ஆமாம், பயணங்கள் என்றுமே அலுப்பதில்லை ஜனா!

    ReplyDelete
  40. இனிமையான கருத்துரை மகேந்திரன்! அன்பு நன்றி!!

    ReplyDelete
  41. எத்தனை முறை பயணம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவம் பயணங்களில் கிடைக்கும்.
    பயணங்கள் சலிப்பதில்லை.

    ReplyDelete
  42. என் பயண அனுபவங்களையும் கிளறி விட்டது பதிவு.

    ReplyDelete
  43. ரயில் பயணம் எப்போதுமே பல நிகழ்வுகளை கொண்டு வந்து விடும் உங்கள் பயணமும் விவரமும் அருமை

    ReplyDelete
  44. பயணங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவ‌ம் தான் முரளிதரன்! வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!

    ReplyDelete
  45. மகளிர் தின வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் இளங்கோ!

    ReplyDelete
  46. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலா!

    ReplyDelete
  47. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி
    SRIRAM!

    ReplyDelete
  48. வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் இனிய நன்றி மலர் பாலன்!!

    ReplyDelete
  49. விழிப்புணர்வு தரும் அருமையான கட்டுரை. இன்று இப்போது தான் படிக்க முடிந்தது.

    //அன்றிலிருந்து எப்போதும் 5000 ரூபாய்க்குக் குறைந்து பணம் எடுத்துச் செல்வதில்லை. கிரெடிட் கார்டுகள் இருந்தாலும் இந்தப் பணமும் கூடவே எப்போதும் பயணிக்கும்!!//

    அவசியமாக ரொக்கமாகப்பணம் தேவை தான் மேடம்.

    Credit Card ATM Card எல்லாம், எல்லா இடங்களிலும் உதவும் எனச் சொல்ல முடியாது.

    நான் வீட்டை விட்டு லோக்கல் காய்கறி மார்கெட்டுக்குச் சென்றாலே, ரிசர்வ் கேஷ் ஆக ரூ. 1000 எப்போதும் தனியாக வைத்துக்கொள்வேன்.

    நாடு விட்டு நாடு, அதுவும் ப்ளேன் எங்கெங்கோ அனாவஸ்யமாக சுற்றுகிறது என்றால் மிகவும் கஷ்டம் தான். மனது தவியாய்த் தவிக்கத்தான் செய்யும்.

    எதிலும் நாம் மிகவும் உஷாராகவே இருக்க வேண்டித்தான் உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  50. அனுபவங்கள் அருமையான பகிர்வு..தொடருங்க அக்கா.

    ReplyDelete