Sunday, 5 August 2012

வாழ்க்கையென்னும் விசித்திரம்!!


வாழ்க்கை பல ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் தன்னகத்தே கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை தான்! ஆனால் நம்பவே முடியாத சில நிகழ்வுகள் பற்றி கேள்வியுறும்போது, நம்மையும் அறியாமல் மனம் ஆச்சரியத்தில் அமிழ்ந்து விடுகின்றது. சில கேள்விகளுக்கு பதில்களும் கடைசி வரை கிடைப்பதில்லை. சில சமயங்களில் எதை விட்டு விலகுகிறோமோ, அது தான் விரும்பி வந்தடைகிறது! விரும்பிப்போகும்போது ஒரேயடியாக விலகிப்போகின்றது!
சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, என் சினேகிதி சொன்ன உண்மைக்கதை மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. ஒரு விதத்தில் இதுவும் விரும்பிப்போகும்போது விலகுவதும் விலகிப்போன பின் விரும்பி வருவதுமான கதை தான்!
30 வருடங்களுக்கு முன்பு:
தஞ்சையிலிருந்த கண்ணையன் குடும்பமும் கோவையிலிருந்து சிவப்பிரகாசத்தின் குடும்பமும் முன் பின் அறிமுகம் ஆனவர்களில்லை. தெரிந்தவர்கள் வாயிலாக கண்னையன் குடும்பத்தைப்பற்றிய விபரங்கள் சிவப்பிரகாசத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. தன் மூத்த மகனுக்கு கண்ணையனின் ஒரே பெண்ணைத் திருமணம் செய்யலாம் என்ற ஆசையுடன் கண்ணையனின் வீட்டுக்கு உறவினர்களுடன் சென்று பெண்ணைப் பார்த்தார். பெண்ணைப் பிடித்து விடவே பேச்சு வார்த்தை ஆரம்பமானது. நிச்சயம் மட்டும் சீக்கிரமே நடத்தி விடலாமென்றும் திருமணத்தை நான்கு மாதங்கள் கழித்து நடத்தலாமென்றும் கண்ணையன் அபிப்பிராயப்பட்டார். அதை சிவப்பிரகாசம் ஒத்துக்கொள்ள நிச்சயம் சிறப்பாக நடந்தேறியது.
திருமணத்திற்கு 2 மாதங்கள் இருக்கையில் தன் எதிர்கால மருமகள் கோவையிலேயே ஒரு நல்ல வேலையில் சேர்ந்திருப்பதை யார் வாயிலாகவோ அறிந்த சிவப்பிரகாசம்  அதிர்ந்து போனார். கண்ணையனை அழைத்து ‘ இந்த விபரத்தை எப்படி என்னிடம் மறைத்து வைத்தீர்கள் ’ என்று கோபத்துடன் கேட்க, அப்போது பதிலேதும் சொல்லாத கன்னையன் இரண்டு நாட்களிலேயே வீட்டுக்கு வந்து, நிச்சயம் செய்தபோது அணிவித்த நகைகள், புடவை எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்து, ‘இப்படி கேள்வி கேட்கும் குடும்பம் தன் பெண்ணுக்கு வேண்டியதில்லை. இந்த நிச்சயதார்த்தம் இத்துடன் முறிந்து விட்டது’ என்று சொல்லிப்போனார்.

சிவப்பிரகாசம் மன வேதனையை ஒதுக்கி வைத்து வேறு ஒரு பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அந்தக் கதையை அத்துடன் மறந்து போனார். கண்ணையனும் சென்னையில் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். அந்தப் பெண் தாய்மை அடைந்ததும் வளைகாப்பும் சிறப்பாக செய்வித்தார். ஆனால் பேறு காலம் நெருங்கும் சமயத்தில் அந்தப் பெண்ணுக்கு மன நிலை பிறழத் துவங்கியது. அந்தப்பெண்ணின் பாட்டிக்கு பேறுகாலத்தில் அந்த மாதிரி பிரச்சினை இருந்திருக்கிறது. பிரசவம் முடிந்ததும் சில மாதங்களில் மன நிலை சீரடைந்திருக்கிறது. அதே போல பேத்திக்கும் நடந்து, குழந்தைக்கு 2 மாதங்கள் ஆன போது மன நிலை சீராகியிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவர் நல்ல மனதுடன் அதைப்பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார். ஆனால் மறுபடியும் அந்தப் பெண்ணுக்குத் தாய்மை ஏற்பட்டு, மறுபடியும் அதே நிலை ஏற்பட்டதும் மனம் தளர்ந்திருக்கிறார். இரண்டாவது குழந்தை பிறந்ததும் தானே குழந்தைகளை இனிமேல் வளர்த்துக்கொள்வதாகச் சொல்லி, மனைவியைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட்டார். அந்தப் பெண்ணும் மனநிலை சரியாகாமலேயே இறந்து போனது.
30 வருடங்களுக்குப்பிறகு:
கண்ணையன் நடுவே இறந்து விட்டார். சிவப்பிரகாசத்தின் இரண்டாவது மகன் தன் மகனுக்கு பெண் தேடியிருக்கிறார். கண்ணையனின் மாப்பிள்ளையைப்பற்றியும் அவரின் பெண் பற்றியும் தெரிந்தவர்கள் சொல்ல, சென்னை சென்று பேசி திருமணமும் முடிவானது. நிச்சயம் நடந்து கொண்டிருக்கும்போது தான், பழைய விஷயம் தெரிந்த ஒரு உறவினருக்கு, அங்கு நிச்சய வேலைகளில் கலந்து கொண்டிருக்கும் பெண்ணின் உறவுகள் சிலரைப் பார்த்ததும் சந்தேகம் வந்திருக்கிறது. பெண்ணின் அம்மா, தாத்தா பற்றி விசாரித்து, விபரம் தெரிந்ததும் அவருக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஒரு நிச்சயம் நம்மால் முறிய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்துடன் பேசாமலிருந்து விட்டார்.
ஆனால் நிச்சயம் முடிந்த பிறகு, சிவப்பிரகாசத்தின் உறவினர்கள் மூலம் இந்த விஷயம் சிவப்பிரகாசத்திற்குத் தெரிந்து விட்டது. இந்தத் திருமணம் இனி நடத்த வேண்டாம் என்று கோபமாகச் சொல்லியும் வாக்குவாதம் செய்தும் அவரது மனைவியும் அவரின் மகனும் அதற்கு ஒப்புதல் தர மறுத்து விட்டார்கள். ‘ அது என்றோ நடந்த விஷயம். 30 வருடங்களுக்குப்பின்னும் அதை நினைத்துக்கொண்டிருக்க வேண்டாம்.’ என்று மணமகனும் சொல்லி விட்டார்.
திருமணமும் இனிதே நடந்தேறி, சிவப்பிரகாசத்தின் பேரனின் மனைவி தாய்மையடைந்து விட்டார். எல்லோருக்கும் புறத்தே மகிழ்வாக இருந்தாலும், அந்தப் பெண் தன் தாயைக்கொண்டு விடுமோ பிரசவ நேரத்தில் என்ற மெலிதான பயம் மட்டிலும் சிவப்பிரகாசத்தின் மனைவிக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது..!!!

41 comments:

  1. ஆச்சரியமான கதை தான். உலகில் எத்தனை எல்லாம் நடக்கிறது. விதியின் விளையாட்டை யாரறிவார். மிக்க நன்றி சகோதரி ஒரு அனுபவ முத்திற்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. படிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது .இறைவனின் செயல்கள் சில நேரம் விந்தையாய் இருக்கிறது .மணமகன் மற்றும் அவரின் தாயாரின் நற்குனங்களுக்காகவே
    அந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது .

    ReplyDelete
  3. உலகம் ரொம்ப சின்னதுன்னு படத்துல அடிக்கடி வசனம் வைப்பாங்க எனக்கு இப்போ அதுதான் ஞாபகத்திற்க்கு வருகிறது! விசித்திரமான நிகழ்வு தான்!

    ReplyDelete
  4. விசித்திர‌மான‌ புதின‌ங்க‌ளையெல்லாம் தோற்க‌டிக்கிற‌து நிஜ‌ வாழ்வில் நிக‌ழும் விசித்திர‌ங்க‌ள்!

    இதில் ந‌ல்ல‌ திருப்ப‌மாக‌ அப்பெண்ணுக்கு பேறு கால‌ ம‌ன‌ப்பிற‌ழ்வு வ‌ராம‌லிருக்க‌ட்டும்!

    ReplyDelete
  5. என்னவொரு விநோதமான நிகழ்வுகள். சுற்றிச் சுழன்று வட்டத்துக்குள் அகப்படுகிறது வாழ்க்கை. அந்தப்பெண் எந்தக்குறையும் இல்லாமல் தாய்மையுற்று குழந்தையை நல்லமுறையில் பெற்றெடுக்கட்டும். தலைமுறைத் தகராறுகள் இல்லாமல் போகட்டும்.

    மிகவும் வியக்கவைத்ததொரு நிகழ்வின் பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  6. விசித்திரம் தான்.
    அனைத்திற்கும் விடை தெரிந்து விட்டால் மனிதனின் ஆட்டத்தால்
    அந்த இறைவனே ஆட்டம் கண்டு விடுவரோ என்னவோ ?
    அதனால் தான் பல விஷயங்களுக்கு பதில் கிடைப்பதில்லை போலும்.

    ReplyDelete
  7. வாழ்க்கையை விடப் பெரிய ச்ருஷ்டி வேறெதுவும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது அதிசயமான இச்சம்பவம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி மனோ அக்கா.

    ReplyDelete
  8. வாழ்க்கை விசித்திரம் தான்....

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  9. முதல் இரு பாராக்களை படித்தவுடன் இந்த பாடல் தான் ஞாபகம் வந்தது :
    /// நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை... நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை... ///

    உண்மைக்கதையாக இருந்தாலும், சிவப்பிரகாசத்தின் மனைவிக்கு ஏற்படும் பயம் என் மனதிலும் தொற்றிக் கொள்வதோ உண்மை... நல்லதே நடக்கட்டும்.

    தொடர வாழ்த்துக்கள்...
    நன்றி…

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  10. விந்தையான நிகழ்வுதான்..நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற நல் எண்ணத்துடன் பேரன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னது போல், அந்த நல்ல மனதிற்கு அவனின் மனைவிக்கு மன பிறழ்வு இல்லாத பிரசவம் அமைய கடவுள் அருள் என்றும் கிட்டும் .

    ReplyDelete
  11. ரொம்ப ஆச்சரியம். எதுவும் நடக்க கூடாதுன்னு பிரார்த்தனை செய்யறேன்.

    ReplyDelete
  12. மிகவும் வியப்பூட்டும் முத்து ... உலகில் எத்தனை எல்லாம் நடக்கிறது.உண்மைகதை என்பதால் நல்லதே நடக்கட்டும்...

    ReplyDelete
  13. ஆச்சர்யம்தான் உலகத்ல என்னல்லாமோ நடந்துகிட்டுதான் இருக்கு நாம மத்தவங்க கூட பகிரும்போதுதான் எல்லாருக்கும் தெரியவருது.

    ReplyDelete
  14. ஆச்சர்யம்தான். அந்தப் பெண்ணின் சுகப்பிரசவத்திற்கும், மகிழ்ச்சிக்கும் எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  15. இப்படியும் நடக்குமா? இது தொடர் தானே? நல்ல பதிவு.

    ReplyDelete
  16. Thrilling & wonderful incident.
    Thanks for sharing, Madam.
    vgk

    ReplyDelete
  17. நல்லதே நடக்க பிரார்த்தனைகள் !

    ReplyDelete
  18. இறையாசீர் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  19. உண்மையிலேயே இது மிகவும் ஆச்சரியமான விசித்திரமான சம்பவம்தான் வேதா!

    அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  20. ஆச்சர்யமான சம்பவம். கற்பனைகளை விட நிஜங்கள் ஆச்சர்யமானவையே!

    ReplyDelete
  21. நிகழ்வுகளை அழகாக பகிர்நதமை அருமை.இது தொடர் தானே மனோ அக்கா.சில நிஜங்கள் எப்பவும் சூடாத்தான் இருக்கிறது.!!!

    ReplyDelete
  22. நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஏஞ்ச‌லின்! அந்தப்பெண்ணின் பிரசவம் நல்லபடியாக நடந்ததா என்று இன்னும் சில மாதங்களில் தெரிய வ‌ரும். கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  23. ஆமாம், உலகம் உண்மையிலேயே சிறியது தான்! வரலாற்றுச்சுவடுகளின் கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  24. நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி அந்தப் பெண்ணுக்கு பேறு கால மனப்பிறழ்வு வராமலிருக்கட்டும்! கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமக்ள்!

    ReplyDelete
  25. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஸ்வ‌ராணி! அனைத்திற்கும் விடை தெரிந்து விட்டால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும்தான். கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  26. உண்மை தான் சுந்தர்ஜி! அதைத்தான் நான் வாழ்க்கை ஒரு விசித்திரம் என்று சொன்னேன்! கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  27. கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  28. நீங்கள் குறிப்பிட்ட பாடல் இந்தப்பதிவு எழுதும்போது என் மனதிலும் தோன்றியது சகோதரர் தனபாலன்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  29. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ராதா! கருத்துரைக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  30. கருத்துரைக்கு இனிய நன்றி புதுகைத்தென்றல்!

    ReplyDelete
  31. அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி விஜி!

    ReplyDelete
  32. இனிய கருத்துரைக்கு மனமார்ந்த‌ நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  33. உண்மை தான் லக்ஷ்மிம்மா! மற்றவர்களுடன் பகிரும்போது நாமும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம் இல்லையா?

    ReplyDelete
  34. இது தொடரில்லை வானதி. ஒரு அனுபவப்பகிர்வு, அவ்வளவு தான்! பாராட்டுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  35. கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி ஹுசைனம்மா!

    ReplyDelete
  36. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  37. ந‌ல்ல‌தொரு வேன்டுத‌லுக்கு அன்பு ந‌ன்றி அதிச‌யா!

    ReplyDelete
  38. உண்மை தான் ஸ்ரீராம்! கற்பனையைவிட, நிஜங்கள் என்றுமே அதிசயங்கள் நிறைந்தவை! கருத்துரைக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  39. ஊரிலிருந்து வந்து விட்டீர்களா ஆசியா?

    இது தொடரில்லை. ஒரு அனுபவப்பகிர்வு, அவ்வளவு தான்! பாராட்டுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  40. அம்மா நான் சமீபத்தில்தான் உங்கள் வலைபூ வாசகன் ஆனேன்... உங்கள் படைப்புகள் அதனையும் அருமை.... இவ்வுலகில் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து நன்றாக வாழ்ந்தவர்களும் உண்டு... ரொம்ப நுணுக்கமாக ஜாதகம் பார்த்து திருமணம் செய்து இரெண்டே மாதத்தில் விவாரத்து ஆனவர்களும் உண்டு

    ReplyDelete