Monday, 7 November 2011

மருத்துவ உலகின் மறுபக்கம்!!

புதுவையிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 22 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, அங்கே மருத்துவக்கல்வித்துறையில் தலைவராக இருக்கும் டாக்டர் சேதுராமன், மருத்துவத் துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தி வந்ததுடன் அதற்காக சக டாக்டர்களுடன் இணைந்து ஒரு அமைப்பையும் ஏற்படுத்தினார். மருத்துவர்களின் வியாபாரத்தந்திரங்களை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய இவரின் TRICK OR TREAT என்ற புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப்படித்ததனால் ஏற்பட்ட தாக்கம். ஆனந்த விகடன் ஆசிரியரால் 'போஸ்ட்மார்ட்டம்' என்ற மருத்துவ விழிப்புணர்வு தொடரை டாக்டர் சேதுராமனைக் கொண்டு 2003 ஆம் ஆண்டு விகடனில் எழுத வைத்தது.

மருந்துகள் தயாரிப்பைப்பற்றியும் கமிஷன் என்ற நஞ்சு இன்றைக்கு மருத்துவர்களிடையேயும், மருந்துக் கம்பெனிகளிடையேயும் எந்த அளவு கொடூரமாகப் பரவியிருக்கிறது என்பதை அவர் அருமையாக விவரித்திருக்கிறார்.

இதை நிறைய பேர்கள் படித்திருக்க மாட்டார்கள். முக்கியமாக இளைய தலைமுறையினர்.  இந்தப் புத்தகத்திலுள்ள சில அதிர வைக்கும் சில உண்மைகளை, மனதை உறைய வைக்கும் நிகழ்வுகளை அனைவருக்கும் எடுத்துச் சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம். மேலும் ஒரு குடும்ப வைத்தியரை நாம் எல்லோரும் வைத்துகொள்ளுவது எவ்வளவு அவசியம், என்பதையும் அந்த மருத்துவர் வழியாகவே ஒரு தரமான ஸ்கான் செண்டர், ஒரு தரமான ரத்த பரிசோதனை நிலையம் என்று செல்வது எந்த அளவு நல்லது என்பதையும் எல்லோருமே விழிப்புணர்வுடன் இருப்பது உடல் நலத்திற்கு எந்த அளவு முக்கியமானது என்பதையும் வலியுறுத்திச் சொல்வதற்காகவே இந்தப்பதிவை ஒரு கருவியாக நான் நினைக்கிறேன்.

இனி டாக்டர். சேதுராமன் அவர்களது கருத்துக்கள்......

சுமார் 3000ற்கு மேற்பட்ட வேதிப்பொருள்களை வெவ்வேறு கூட்டணியில் பயன்படுத்தித்தான் மருந்து தயாரிக்கிறார்கள். ஒரே மாத்திரைக்கு வேறு வேறு பெயர்களைச் சூட்டி பல கம்பெனிகள் விற்கின்றன. உதாரணத்திற்கு ஜுரத்திற்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால், குரோசின், தெர்மோநில், டோலோ, மெட்டாசின் என்ற பெயர்களில் வலம் வருகின்றன. இப்படி விற்கப்படும் மாத்திரைகள் 1 லட்சத்துக்கும் மேல்! மனித மூளையின் ஞாபக சக்திக்கு வரையறை இருக்கிறது. ஒரு அபாரமான ஞாபக சக்தி உடைய மருத்துவரால் கூட ஒரே சமயத்தில் 500 மாத்திரைகள் பெயர்களைத்தான் நினைவு வைத்துக் கொள்ள முடியும். மருத்துவரின் ஞாபகத்திலுள்ள TOP- 100. மாத்திரைகள் லிஸ்ட்டில் தங்களது தயாரிப்பும் இடம் பெற வேண்டுமென்று தான் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு வேலை செய்கிறது.  தங்கள் மருந்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுத வெளி நாட்டுக்கு பல வசதிகள் தந்து அழைத்துச் செல்வதிலிருந்து, கார், ஃப்ரிட்ஜ் தருவதிலிருந்து இந்த மருந்துக் கம்பெனிகள் போகாத எல்லையே இல்லை.





“இரண்டு நாளா தலைவலி' என்று யார் வந்தாலும் சி.டி.ஸ்கான் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்துப்பார்த்து விடலாம் என்று சில டாக்டர்கள் உடனேயே கூறுகிறார்கள். பொதுவாக இந்த ஸ்கான் வகைகளை எடுக்க 2500 லிருந்து 10000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இதிலிருந்து 20 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை டாக்டர்களுக்கு கமிஷன் போகிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இந்த கமிஷன் பிஸினஸ் ஒரு வைரஸ் மாதிரி மருத்துவ உலகத்தில் ஊடுருவியிருக்கிறது.
மனசாட்சியுள்ள நல்ல மருத்துவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் கமிஷன் என்ற வியாபாரத்தை அழிக்க போராடவே செய்கிறார்கள். அதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

இப்போதெல்லாம் நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவ மனைகள் ஏராளமாய் வந்து விட்டன. இவரின் நண்பர் அது மாதிரி ஒரு மருத்துவ மனையில் காலையில் சில மணி நேரங்களும் மாலையில் சில மணி நேரங்களும் பணியாற்றும் ' விஸிட்டிங் கன்சல்டண்ட்' ஆக பொறுப்பேற்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நிறைய நோயாளிகளுக்கு அங்குள்ள செகரட்டரியிடம் அப்பாயின்மெண்ட் ஆகியிருக்கிறது. இவர் போய் உட்கார்ந்தால் யாருமே வருவதில்லையாம். செகரட்டரியை அழைத்துக் கேட்டால் ' யாருமே வரவில்லையே சார்' என்கிறாராம். ஒன்றுமே புரியாமல் சக மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசிய போது அவர் கேட்டாராம், ' அந்த செகரட்டரியிடமும் அட்டெண்டரிடமும் பிஸினஸ் பேசி விட்டீர்களா?'

எதுவும் புரியாமல் இந்த டாக்டர் விழித்தபோது அவரே அதற்கு விளக்கமும் அளித்தாராம்.

‘உங்களிடம் appointment வாங்கிய நோயாளிகள் உங்களிடமே வைத்தியம் பார்க்க வரவேண்டுமென்றால், அவர்களிடம் நீங்கள் வாங்கும் பணத்தில் பத்து சதவிகிதத்தை அந்த செகரட்டரியிடமும் அட்டெண்டரிடமும் தரவேண்டும். அப்படி நீங்கள் ஒத்துழைக்கவில்லையென்றால் உங்களைப் போன்ற இன்னொரு ஸ்பெஷலிஸ்டிடம் நோயாளிகளை அனுப்பி விடுவார்கள்.’

மிரண்டு போன அந்த மருத்துவர் அடுத்த மாதமே அங்கிருந்து விலகி விட்டார்.

இவர் ஆதங்கப்படும் மற்றொரு விஷயம் மருத்துவர்கள் தாங்களே சொந்தமாக மருந்துக்கடை வைத்துக்கொள்வது. மருத்துவர்கள் சொந்தமாக மருந்துக்கடை வைத்து மாத்திரைகள் விற்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் தடை செய்திருந்தும் மருத்துவர்கள் பலர் இதை மதிப்பதில்லை என்றும் மருந்து ஆய்வாளரிடம் உரிய லைசென்ஸ் பெறாமல், விற்பனை வரியும் கட்டாமல் இப்படி குறுக்கு வழியில் வியாபாரம் செய்யும் மருத்துவர்களை பல ஊர்களில் பார்க்க முடிகிறது என்று வருத்தப்படுகிறார் இவர்.

சர்க்கரை வியாதிக்காக சிறுநீர் பரிசோதனை பல பரிசோதனை நிலையங்களில் செய்யும் விதத்தைப்பற்றி இவர் எழுதியிருப்பதைப் படிக்கும்போது பகீரென்கிறது.

பல laboratoryகளில் இன்று ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே சிறுநீரைப் பரிசோதனை செய்வதில்லையாம். 20 சாம்பிள்கள் வரும்வரைக் காத்திருந்து, 20 சாம்பிள்களிலிருந்தும் சிறிது சிறுநீரை எடுது, அவற்றை மொத்தமாய் ஒரு சோதனைக்குழாயில் ஊற்றி பரிசோதனை செய்வார்களாம். மொத்தமாக நெகடிவ் என்று வந்து விட்டால் பிரச்சினையில்லை. 20 பேருக்கும் நெகடிவ் என்று எழுதிக்கொடுத்து விடலாம். ஒரே கல்லில் 20 மாங்காய்கள்!! அதில் ஒரு வேளை பாஸிடிவ் என்று வந்தால் அந்த 20 சாம்பிள்களையும் ஐந்து ஐந்தாய் பிரித்து மறுபடியும் பரிசோதனை செய்வார்களாம். மறுபடியும் பாஸிடிவ் என்று காண்பிக்கும் பிரிவை மட்டும் தனித்தனியே எடுத்து பரிசோதனையை செய்வார்களாம். இந்தத் தவறால் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஒரு சர்க்கரை நோயாளி, தகுந்த சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை இழக்கிறார்.



இவரின் மாணவர்-பீகாரில் மருத்துவராக வேலை செய்தவர், அங்கே கிராமப்புறங்களில் எடுக்கும் எக்ஸ்ரே பற்றி சொன்னதை வேதனையுடன் எடுத்துரைக்கிறார்.

மின் வசதி இல்லாத கிராமப்புற நோயாளிகள் நகர்ப்புறம் வந்து மருத்துவர்களை சந்திக்கும்போது, அவர்களிடம் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லி பக்கத்து செண்டருக்கு அனுப்பி விடுவார்களாம். அங்கே ஆளுயரம் ஃபிரிட்ஜ் இருக்குமாம். அங்கு வேலை செய்பவர் அதை வேகமாகத் திறந்து மூடுவாராம் திறந்ததும் வரும் வெளிச்சத்தை மிரள மிரள பார்ப்பவர்களிடம் எக்ஸ்ரே எடுத்து முடிந்தாகி விட்டது என்று சொல்லி,, ஃபிரிட்ஜின் அடியில் தண்ணீர் தேங்குவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ட்ரேயில் ஏற்கனவே தயாராக போட்டு வைத்திருந்த பழைய எக்ஸ்ரே படம் ஒன்றைக் கொடுத்து அனுப்புவாராம். இதை வைத்து சிகிச்சை செய்வதாக அந்த மருத்துவரும் கூறுவாராம். அந்த எக்ஸ்ரே படம் அடுத்த சுற்றுக்கு உடனேயே அந்த செண்டருக்குத் திரும்ப வந்து விடுமாம். எத்தனை ஏமாற்று வேலை இது! .

மேலும் தொடர்கிறது.. .. .


படங்களுக்கு நன்றி: கூகிள்

37 comments:

  1. ரெம்ப கொடூரமாக உள்ளது. பீஸ் பயத்தால் பல நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு செல்ல அசசப்பட்டு மருந்து கடைகளை நாட வேண்டி உள்ளது.

    ReplyDelete
  2. எனக்கே இவையெல்லாம் புதிய தகவல்களாக உள்ளது மேடம். படித்ததும் மிகவும் பயம் ஏற்படுகிறது. இப்படியும் நம் உயிருடன், உபாதைகளுடன் கூட விளையாடுவார்களா? என்று நினைக்கத்தோன்றுகிறது. நாம் முழு நம்பிக்கை வைத்தல்லவா மருத்துவ மனைக்கும், மருத்துவரிடமும் செல்கிறோம்.

    நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

    எல்லாவற்றிலும் Business & Profit என்று ஆகிவிட்டதே இப்படி. வேதனை தான். vgk

    ReplyDelete
  3. பணம் சம்பாதிக்க எப்படியெல்லாம் வழி கண்டுபிடிக்கிறார்கள்....

    ஒரு உன்னதமான பணியை இப்படி மோசமாக்கி விட்டனர் சில மருத்துவர்கள்.... :(

    ReplyDelete
  4. பயங்கரமாக (வேறு என்ன வார்த்தை உபயோகிப்பத்து என்று தெரியவில்லை.)இருக்கு,மேடம்.ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு தொடங்கியிருக்கீங்க,தொடருங்கள், தெரிந்து கொள்கிறோம்.

    ReplyDelete
  5. மிக்கசரியான விழிப்புனர்வு தரும் பதிவு,
    மனோ அக்கா ரத்த பரிசோதனையில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு பிறகு முடிந்த போது பகிர்கிறேன்,.\

    முழுவதும் படிக்க நேரம் இல்லை பிறகு வருகிறேன்

    ReplyDelete
  6. மிகவும் பயமாக உள்ளது; தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  7. இது ரொம்ப அனியாயம். பணம் பறிக்க உயிர்களுடனா விளையாடுவது?

    ReplyDelete
  8. அய்யய்யோ பகீர்னு இருக்கே, அப்போ நான் சுகர் டெஸ்ட் பண்ணினது என்னாச்சோ தெரியலையே, இப்பிடியுமா நடக்குது ஆண்டவா முடியலை...!!!

    ReplyDelete
  9. அதிர்ச்சி அளிக்கிறது.
    லட்ச லட்சமாக காசு கட்டி டாக்டரானா செலவு செஞ்ச பணத்தை
    திரும்ப பெறுவதற்கு மக்களின் உயிர் தான் விலையா?

    ReplyDelete
  10. ஹ்ம்ம்.இந்த துறை என்றில்லை..எல்லலாவற்றிலும் இந்த தகிடுதத்தம் உள்ளதுதான்,ஆனாலும் மருத்துவத்துறையில் இப்படி என்ரால் ஜீரணிக்கக்கூட இயலவில்லை.

    நல்ல விழீபுணர்வுதரக்கூடிய பகிர்வு!

    ReplyDelete
  11. படிக்கும்போதே தலைசுற்றுகிறது. நவீன மருத்துவத்தில் எனக்கு நம்பிக்கையின்மை ஏற்கனவே உண்டு மேடம். தொடர்கிறேன்.

    ReplyDelete
  12. பகீர் எச்சரிக்கை பதிவு

    //தங்கள் மருந்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுத வெளி நாட்டுக்கு பல வசதிகள் தந்து அழைத்துச் செல்வதிலிருந்து, கார், ஃப்ரிட்ஜ் தருவதிலிருந்து இந்த மருந்துக் கம்பெனிகள் போகாத எல்லையே இல்லை.//

    சமீபத்தில் ஊர் சென்றபோது அறிந்துகொண்டது .ஒரு நிறுவனம் இப்படி சேல்ஸ் ப்ரோமொஷனுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு points முறை ஏற்படுத்தி குறிப்பிட்ட points பெற்றால் டயமன்ட் மற்றும்
    overseas cash trip incentive worth Rs.70,000 தருகிறார்கள் .

    .யாருக்கேனும் சிறு உடல்நலகுறைவா உடனே இந்த வெளிநாட்டு மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள் .
    really frustrating.

    .தொடருங்கள் தெரிந்து கொள்கிறோம்.

    ReplyDelete
  13. மேலும் தொடர்கிறது.. .. /

    கனக்கவைக்கிறது தொடர்..

    ReplyDelete
  14. திகிலாக இருக்கிறது:(!

    ReplyDelete
  15. மருத்துவ உலகின் மறுபக்கம் சீல் பிடித்தல்லவா
    போயிருக்கிறது
    பூனைக்கு யார் மணிகட்டுவது ?
    அதிரவைத்துப்போகும் பதிவு

    ReplyDelete
  16. மக்கள் இறைவனுக்கு அடுத்தபடியாக
    மருத்துவர்களைத் தான் மனதில் வைத்திருப்பார்கள்..
    அப்படிப்பட்ட புனிதமான தொழிலை உடையவர்கள்
    கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்...

    நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

    ReplyDelete
  17. இப்படியும் நடக்குதா? கேட்டாலே பயமா இருக்குங்க..........
    படிப்பறிவில்லாத மக்களெல்லாம் என்ன செய்வாங்க ...பாவம்

    ReplyDelete
  18. டாக்டர் சேதுராமன் எழுதிய உண்மைகள் அப்படித்தான் கொடூரமாக இருக்கிறது சகோதரர் ரமேஷ்!
    கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  19. நீண்ட கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  20. நீங்கள் சொல்வது போல ஒரு உன்னதமான பணிக்கு ஒரு சில மருத்துவர்களால் இழுக்கு ஏற்பட்டுத்தானிருக்கிறது சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  21. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராம்வி!

    ReplyDelete
  22. கருத்துக்கு அன்பு நன்றி ஜலீலா! நீங்களும் உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள் விரைவில்!

    ReplyDelete
  23. கருத்துக்கு அன்பு நன்றி மாதவி!

    ReplyDelete
  24. இப்படித்தான் லக்ஷ்மியம்மா சில மருத்துவர்கள் மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள். சொந்த அனுபவமே நிறைய இருந்தாலும், இந்தப் புத்தகம் மிகவும் அதிர்ச்சி த‌ருகிற‌து படிக்கப் ப‌டிக்க!

    ReplyDelete
  25. நீங்கள் சுகர் டெஸ்ட் பண்ணுகிற லாப் தரமானதா என்று விசாரியுங்கள் நாஞ்சில் மனோ! சந்தேகம் இருந்தால், வேறொரு பரிசோதனைக்கூட‌த்திலும் செய்து பாருங்கள்!

    ReplyDelete
  26. இனிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  27. அன்பான க‌ருத்துரைக்கு உளமார்ந்த நன்றி சாகம்பரி!

    ReplyDelete
  28. விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!!

    ReplyDelete
  29. கருத்துக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  30. கருத்துக்கு இனிய நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  31. படிப்புச்செல‌வை ஈடு கட்டுவதற்கு மட்டுமில்லை, மருத்துவ மனை கட்டிய செல‌வை ஈடுகட்டவும்கூட இப்படிப்பட்ட வியாபாரங்கள் நடந்து கொன்டு தானிருக்கிறது!
    கருத்துக்கு அன்பு நன்றி கோகுல்!

    ReplyDelete
  32. இனிய க‌ருத்துக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  33. விரிவான க‌ருத்துரைக்கு அன்பு நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  34. நானும் அப்படித்தான் எப்போதுமே நினைப்பேன், படித்த நமக்கே தலை சுற்றும்போது, படிக்காத மக்கள் எப்படியெல்லாம் ஏமாந்து போகிறார்கள் என்று!
    அன்பான க‌ருத்துக்கு இனிய நன்றி கார்த்தி!

    ReplyDelete
  35. மிரள வைக்கும் விவரங்கள். தனியார் மருத்துவமனைகளில் அந்தந்த வார்ட் பார்க்கும் மருத்துவர்களிடம் தலைமை மருத்துவர் அல்லது ஆஸ்பத்திரி பொறுப்பாளர் அவர் பொறுப்பிலிருக்கும் பிரிவில் படுக்கைகள் ஏதாவது காலியாக இருந்தால் கோபிப்பாராம்.

    ReplyDelete
  36. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete