Wednesday, 9 February 2011

பெண்ணெனும் வீணையின் ராகங்கள்!!

திரைப்படங்களில் ஒரு பெண்ணின் உணர்வுகளை கவிஞர்கள் எல்லோரும் காலம் காலமாய் போட்டி போட்டுக்கொன்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மகளாய், காதலியாய், மனைவியாய், மருமகளாய், தாயாய், பின் வயது முதிரும்போது பாட்டியாய்-இப்படி பல நிலைகளை ஒவ்வொன்றாகக் கடக்கும்போதும் அவள் தன்னிலை மறந்து மற்றவர்களை உள்ளன்புடன் பேணும்போது அவள் என்றுமே சிறப்படைகிறாள். அவளின் ஒவ்வொரு நிலையையும் கவிஞர்கள் எப்படி வர்ணித்திருக்கிறர்கள் என்று பார்க்கலாம்.


இந்தப் பாடல்களை நான் பழைய திரைப்படங்களிலிருந்துதான் எடுத்திருக்கிறேன். காரணம், இன்றைக்கு நிறைய பேருக்கு, எண்பதுகளில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப்பற்றித் தெரியும். ஆனால் அதற்கு முன் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கண்ணதாசனும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் கோலோச்சிய காலங்களைப்பற்றியும் அவர்களின் மறக்க முடியாத பாடல்களைப்பற்றியும் அவ்வளவாகத் தெரியாது. அவர்களும் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மாகாதேவன், பாடகர்கள் சுசீலா, டி.எம்.செளந்தரராஜன், -பிபி.சீனிவாஸ் -இவர்கள் பிரகாசித்த காலத்தைத் திரையுலகின் பொற்காலமென்று சொல்வார்கள். அதனால் அவற்றிலிருந்துதான் இங்கே பாடல்களைக் குறிப்பிடப்போகிறேன்.

ஒரு பெண்ணின் இளம் வயதில் ஆயிரம் கனவுச் சிதறல்கள் பூந்தூறலாய்த்தூவிக்கொண்டிருக்கும். ஒரு வீட்டின் செல்ல மகளாய், வாழ்க்கையின் சுழல்களுக்கு அர்த்தமே தெரியாமல், சிட்டுக்குருவியாய் பாடித்திரிகிற காலம் அது.


சவாலே சமாளி திரைப்படத்தில் அந்த மனநிலையை ஜெயலலிதா அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். சுசீலாவின் தேன் குரலில் அந்தப் பாடல் இதோ!


சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே, உனக்கெது சொந்த வீடு?
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு!


மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்?
மண்ணின் நடக்கும் நதியே!
உன்னைப் படைத்தவரா இங்கு பாதை சொன்னார்?
உங்கள் வழியே உந்தன் உலகு!
இந்த வழிதான் எந்தன் கனவு!


வளரும் தென்னை மரமே
நீ வளர்ந்ததைப்போல் நான் நிமிர்ந்து நிற்பேன்!
வளைந்து நெளியும் நாணல்
நீ வளைவதைப்போல் தலை குனிவதில்லை!
பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்
பாவை உலகம் மதிக்க வேண்டும்


அவள் ஒருவனிடம் மனதைப்பறி கொடுத்த பின் அவள் உலகம் அப்படியே மாறுகிறது. பார்க்கும் அத்தனையும் அழகாய்த் தெரிகின்றன. கண்கள் கனவுலகில் மிதந்தவாறே, கவிதைகள் பல பாடிக்கொண்டிருக்கும் பெண்ணின் இந்த நிலையைப்பற்றி கண்ணதாசனின் வரிகளில் சுசீலா தன் இனிய குரலில் ‘ மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பார்.


ஒரு நாள் யாரோ
என்னப்பாடல் சொல்லித்தந்தாரோ!
கண்ணுக்குள் ராகம், நெஞ்சுக்குள் தாளம் !
என்னென்று சொல்வேன் தோழி?


உள்ளம் விழித்தது மெல்ல! அந்தப்பாடலின் பாதையில் செல்ல!
மெல்லத்திறந்தது கதவு! என்னை வாவென்று சொன்னது உறவு!
நில்லடி என்றது நாணம்! விட்டுச் செல்லடி என்றது ஆசை!


செக்கச்சிவந்தன விழிகள்! கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்!
இமை பிரிந்தது உறக்கம்! நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்!


கால வெள்ளத்தின் சுழல்களுக்கிடையே அவன் அவளைப் பிரியும் நிலை ஏற்படுகிறது. அழகாய் மலர்ந்து சிரித்த உலகம் அவளுக்கு இப்போது கசந்து போகிறது. கண்ணதாசனின் பாடலை 'வாழ்க்கை வாழ்வதற்கே ' என்ற திரைப்படத்தில் சுசீலா அருமையாகப் பாடியிருப்பார்.


அவன் போருக்குப் போனான்- நான் போர்க்களமானேன்
அவன் வேல் கொன்டு சென்றான்- நான் விழிகளை இழந்தேன்

அவன் காவலன் என்றான்- நான் காவலை இழந்தேன்
அவன் பாவலன் என்றான்- நான் பாடலை மறந்தேன்
அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ?
அவன் தோளும் வராதோ? ஒரு தூது சொல்லாதோ?


பிரிவு விலகி அவள் அவனுடன் திருமணத்தில் இணைகிறாள். மனதில் பூத்திருந்த கனவுகள் அத்தனையும் நனவாகி அவளின் இல்லறம் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறது. அவன் அவளுக்கு உயிராகிறான். அந்த மன நிலையில் ஒரு மனைவி பாடும் பாடலில் இருக்கக்கூடிய அத்தனை மெல்லிய அன்பு உணர்வுகளை திருமதி..சுசீலா தன் இனிமையான குரலில் ‘கனி முத்து பாப்பா’ என்ற திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.


‘ராதையின் நெஞ்சமே கண்னனுக்குச் சொந்தமே!


ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வசந்த கால தேரில் வந்து வாழ்த்து கூறும் தென்றலே!


வாழ்வினில் ஒளி தரும் தீபத்தை ஏற்றுவேன்.
கோவிலைப்போலவே குடும்பத்தைப் போற்றுவேன்.
மாலையிட்ட மன்னனோடு மனம் நிறைந்து வாழுவேன்’


மனம் நிறைந்த தாம்பத்தியத்திற்கு சாட்சியாய் இளங்குருத்தாய் புது மழலையின் வரவு அவர்களின் வாழ்வை வசந்தமாக்குகிறது. தாய்மை அவளைப் புது உலகிற்கு பயணித்துச் செல்கிறது. வழி வழியாய் தொடரும் தாய்மைப் பாசம் அவளையும் பிணைக்கிறது இறுக்கமாக. தான் பெற்ற குழந்தையை அவள் எப்படியெல்லாம் நேசிக்கிறாள்! தன் உயிரையே அமுதாக்கி எத்தனை அன்புடன் அளிக்கிறாள்! எப்படியெல்லாம் அந்தக் குழந்தையை வர்ணிக்கிறாள்! ஒரு குழந்தையை இதை விட அழகாக வர்ணிக்க முடியாது என்பதுபோல் இந்தப் பாடல் இருக்கும். நான் என்றுமே நேசிக்கும் இந்தப் பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எம்.ஜி.ஆர், நடிகையர் திலகம் சாவித்திரி இணைந்து நடித்த ‘ மகாதேவி ’ என்ற படத்தில் வருகிறது இந்தப்பாட்டு.


‘ சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா?
மங்காத கண்களில் மையிட்டுப்பார்த்தாலே
தங்கமும் வைரமும் எதுக்கும்மா?
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே!
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் எதுக்கம்மா?


தன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்! மழலைச் சொல் தந்தாய்!!
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா!’


காலங்கள் மாறுகின்றன! மனிதர்கள் மாறுகின்றார்கள்! ஆயிரமாயிரம் அனுபவங்கள் அவளை பக்குவமடைய வைக்கின்றன. மூப்பும் நெருங்குகிறது. வாழ்வின் அத்தனை நிலைகளையும் கடந்த நிலையில்-மனதாலும் உடலாலும் சோர்வுற்ற நிலையில் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையையும் கண்ணதாசன் மிக அழகாக எழுதி திருமதி..சுசீலா தனது தேன் குரலில் அந்த உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டியிருப்பார். ஒரு பெண் குழந்தையைத் தாலாட்டும் அன்னை பாடும் அந்த அருமையான பாடல் இதோ!


‘பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை!
பிறப்பில் ஒரு தூக்கம், இறப்பில் மறு தூக்கம்.
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை.
என்னரிய கண்மணியே, கண்ணுறங்கு, கண்ணுறங்கு!!


காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!
காலமிதைத்தவற விட்டால் தூக்கமில்லை மகளே!


நாலு வயதான பின்பு பள்ளி விளையாடல்!
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத்தமிழ்ப்பாடல்!
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி!
ஈரேழு மொழிகளிலும் போராடச் சொல்லுமடி! தீராத தொல்லையடி!


மாறும் கன்னி மனம் மாறும்! கண்ணன் முகம் தேடும்!
ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது?
தான் நினைத்த காதலனை சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது?
மாலையிட்டக் கணவன் வந்து சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது?


ஐயிரண்டு திங்களிலே பிள்ளை பெறும்போதும்
அன்னையென்று வந்த பின்னே கண்ணுறக்கம் ஏது?
கை நடுங்கி கண் மறைத்து காலம் வந்து சேரும்.
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்!!

27 comments:

  1. பாடல்கள் அத்தனையும் வாசித்துப் பார்த்தேன்... வாவ்! அர்த்தங்களோடு, அருமையாக இருக்கின்றன.... பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. பாடல்கள் பகிர்வு அருமை.நினைவூட்டலுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. உங்களில் ரசித்த முத்துகள் அருமை, எல்லாமே நானும் முனுமுக்கும் பாடல் சூப்பர் செலக்‌ஷன்.

    உங்களுக்கு என் பதிவில் விருது கொடுத்துள்ளேன் முடிந்த போதுவந்து பெற்று கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. அக்கா,எப்படி எல்லாம் யோசித்து இருக்கீங்க!!பெண் இளமையில் இருந்து முதுமைவரை வரும் காலங்கட்டங்களுக்கு பொருத்தமான பாடல்களை அழகுற தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு

    ReplyDelete
  6. மிகவும் அருமையான பாடல்களின் தொகுப்பு.

    ReplyDelete
  7. அனைத்துப் பாடல் வரிகளும், அதற்கான தங்களின் விளக்கமும் அருமையாக உள்ளன. அந்தக் காலப் பாடல்கள் அனைத்துமே அழகாகவும், கருத்துள்ளதாகவும், காதுக்கு மிகவும் இனிமையாகவும் உள்ளன. பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  8. Amma arumaiyana padalkal pakirvu... romba azhaga ezhuthiirukkinga..

    ReplyDelete
  9. நீங்க ரசித்த முத்துக்கள் அத்தனையும் சூப்பர்.பெண்ணின் வாழ்க்கையை அழகாக பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
    கடைசிப்பாடல் கருத்து நிறைந்த பாடல்.நன்றி அக்கா.

    ReplyDelete
  10. அருமையான பாடல்கள்! அருமையான பகிர்வு!

    ReplyDelete
  11. அருமையான பாடல் தொகுப்பு!!

    ReplyDelete
  12. பாடல்கள் அத்தனையும் அருமை.பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  13. நல்ல தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. ஆஹா ... இனிமையான தொகுப்பு...உங்களின் நினைவுப் பெட்டகத்திலிருந்து முத்து முத்தான பாடல்கள்..ரசிக்க வைத்தது..

    ReplyDelete
  15. அத்தனை பாடல்களுமே இனிமையான பாடல்கள். அதை நீங்கள் தொகுத்துள்ள விதமும் அருமை. ”காலமிது காலமிது” பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    ReplyDelete
  16. நான் அதிகம் ரசிப்பது பழையப் பாடல்கள்தான்.. அதுவும் பி சுசிலா பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும் .

    இப்போது வரும் பாட்டுக்களில் இசை என்ற இரைச்சல்தான் இருக்கு பாட்டே மூனுதடவை கேட்டால்தான் புரியுது ..!!

    எப்பவும் ஓல்ட் ஈஸ் கோல்ட்தான் :-))

    ReplyDelete
  17. பாடல்கள் அத்தனையும் படித்து ரசித்தது மகிழ்வாக இருக்கிறது சித்ரா! அன்பு நன்றி!!

    ReplyDelete
  18. கருத்துக்கு அன்பு நன்றி ஆசியா!!

    ReplyDelete
  19. அன்பான பாராட்டுக்கு இதயங்கனிந்த நன்றி ஜலீலா! விருதுக்கும் அன்பு நன்றி!! ஊருக்குத் திரும்பி வந்ததும் உங்களின் அன்பான விருதை என் பதிவில் பெற்றுக்கொள்கிறேன்!!

    ReplyDelete
  20. மனந்திறந்த பாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா!!

    ReplyDelete
  21. அன்பு நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!!

    ReplyDelete
  22. மனமார்ந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!!

    ReplyDelete
  23. உளங்கனிந்த பாராட்டிற்கு இதயப்பூர்வமான நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

    ReplyDelete
  24. அன்பு மேனகா!
    அன்பார்ந்த ரமா!
    அன்பிற்குரிய ஆயிஷா!
    அன்பிற்கினிய காஞ்சனா!
    உங்கள் அனைவரது நெஞ்சார்ந்த இனிய பாராட்டுக்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் பல!!!

    ReplyDelete
  25. அன்புச்சகோதரர் குமார்!!
    அன்பார்ந்த சகோதரர் லக்ஷ்மிநாராயணன்!!
    தங்களின் நெஞ்சார்ந்த இனிய பாராட்டுக்களுக்கு உளங்கனிந்த நன்றிகள் !!

    ReplyDelete
  26. அன்புச் நெஞ்சங்கள் மாதவிக்கும் ஆதிக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!

    ReplyDelete
  27. உண்மைதான் சகோதரர் ஜெய்லானி!
    இப்போது வரும் பாடல்களில் மென்மையைவிட, இனிமையை விட, இரைச்சல்தான் இருக்கின்றன! ஒரு 15 பாடல்கள் பதிவு செய்வதற்கு பல மாதங்கள் காத்திருந்து தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது!
    தங்கள் கருத்துக்கும் நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் வருகைக்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete