Wednesday, 26 January 2011

அனுபவங்களே அருமையான மருந்துகள்!!!

மருத்துவக் குறிப்புகள் பொதுவாக, மற்றவர்கள் அனுபவங்கள் மூலமாகவும் பத்திரிகைகளில் வந்தவை மூலமாகவும் நம் சொந்த அனுபவங்கள் மூலமாகவும் கிடைப்பதுதான். சில அனுபவங்கள் கேள்விப்படாததாகக்கூட இருக்கும். சில அனுபவங்கள் ஆச்சரியப்படவைக்கும். ஆனால் அந்த அனுபவங்கள் யாருக்காவது பலனளிப்பவையாக இருந்தால் அதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்கப்போகிறது? அதே நோக்கத்தில்தான் இங்கே இரு அனுபவங்களை எழுதி இருக்கிறேன். முதலாவது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம். இரண்டாவது ஒருத்தர் வலியில் கிடைத்த பாடம்.

முதல் அனுபவம்:

 
முப்பது வருடங்களுக்கு முன் நான் வார, மாத இதழ்களில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த நேரம். தினமணி கதிர், சாவி முதலிய இதழ்களில் என் சிறுகதைகளும் வெளி வந்து கொண்டிருந்தன. முதன் முதலாக ஆனந்த விகடனுக்கு ஓவியங்கள் அல்லாது ஒரு சிறு கதையும் அனுப்பி அது உடனே பிரசுரமானதுடன் விகடனின் உதவி ஆசிரியர் திரு.பரணீதரனிடமிருந்து பாரட்டுக்கடிதமும் வந்தது. தஞ்சைக்கு, நான் கொடுத்திருந்த முகவரிக்கு தன் தஞ்சைப் பிரதிநிதியை அனுப்பி, விகடனில் ஓவியராக தொடர்ந்து பணியாற்றவும் கேட்டிருந்தார். அப்போதுதான் நான் வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்க வேண்டியதாயிற்று. உடனேயே இங்குள்ள முகவரிக்கு ஒரு சிறு கதையை அவர் அனுப்பி ஓவியம் வரைந்து அனுப்புமாறு கேட்டிருந்த நேரம்.. .. ..

ஒரு நாள் காலை ஃப்ரீஸரிலிருந்து பெரிய மீனை எடுத்துப்போட்டு வெட்டிக்கொண்டிருந்தேன். எப்படி அது நேர்ந்தது எனத் தெரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் செவுள் பக்கமிருந்த ஒரு பெரிய முள் என் வலது கை ஆள்காட்டி விரலில் பாய்ந்து உள்ளே சென்று விட்டது. பொதுவாக எந்த வலியையும் அமைதியாகவேத் தாங்கும் பழக்கமுடையவள் நான். முதல் முதலாக விரலை உதறி உதறி துடிக்க ஆரம்பித்தேன்., கண்ணீரோ அருவியாய்க்கொட்டிக்கொண்டிருந்தது. தொடர்ந்து வலியால் விரல்களை உதறிக்கொண்டிருந்ததால் விரலின் இரு பக்கமும் நீட்டிக்கொண்டிருந்த முள் விரலுக்குள்ளேயே போய்விட்டது. என் கணவர் அருகில் இல்லாத நேரம் அப்போது. என் உறவினர் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் மருத்துவரைப்போய்ப் பார்த்தேன். அப்போது முள் குத்திய தடயமோ, வலியோ இல்லை. மருத்துவரும் முள் உள்ளே இருந்தால் வலிக்கும், நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார். நான் எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை.

இரண்டு நாட்களில் என் கணவர் வரவும் விரலில் வலி மீண்டும் கடுமையாக வரவும் சரியாக இருந்தது. சர்ஜன் ஒருவரிடம் சென்றோம். அவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து விட்டு ‘ நீங்கள் சொன்னது மாதிரி முள் இருக்கிறது. ஆனால் அது இரண்டாய் உடைந்து இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்தால் நரம்பும் வெள்ளை, முள்ளும் வெள்ளை என்பதால் சில சமயம் நரம்பு ஏதேனும் வெட்டுப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. நான் ஒரு மருந்து எழுதித் தருகிறேன். அதை சிறிது தண்ணீரில் இட்டு தினமும் இருவேளை விரலை அரை மணி நேரம் வைத்திருங்கள். நாளடைவில் வலி குறைந்து அந்த முள்ளும் உள்ளே நகர்ந்து விடும் அல்லது கரையக்கூடிய சாத்தியமும் இருக்கிறது’ என்றார். நானும் சில நாட்கள் அது போலவே செய்தும் வலி மட்டும் அதிகமாகவே இருந்தது. அந்த சமயம் ஊரிலிருந்து என் சினேகிதி ஒரு மருத்துவம் எழுதியிருந்தார். பாட்டி வைத்தியம், பழமையான வைத்தியம் அது! அதன்படி 2 கப் நீரில் 2 மேசைக்கரண்டி அரிசி ரவா, 2 ஸ்பூன் நல்லெண்ணெய், சிறிது மஞ்சள் தூள் போட்டு சுண்டக்காய்ச்சி சற்று சூடாக விரலின் மீது வைத்து கட்டுப்போட்டுக் கொண்டிருந்தேன். சரியாக 4 மாதங்கள் கழித்து குத்திய துவாரம் வழியே பாதி முள் துண்டு தோலைக்கீறிக்கொண்டு வெளியேறியது. மறுபடியும் 4 மாதங்கள் கழித்து மீதித் துண்டும் அடுத்தப் பக்க துவாரம் வழியே தோலைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தது.

கற்றுக்கொண்டது:

இந்த மாதிரி முள் உள்ளே சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் கூர்மையான பொருள் விரலுக்குள் புகுந்தாலோ, மேற்கண்ட சிகிச்சை எடுப்பது மிகுந்த பலனளிக்கும்.

பின்குறிப்பு:

ஓவியம் வரையவும் கதை எழுதவும் மனதில் எப்போதும் கனன்று கொண்டிருந்த நெருப்பு இந்தப் போராட்டத்தில் அணைந்தே போனது.

இரண்டாவது அனுபவம்

என் நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. இரவில் உணவுக்குப்பின் பால் அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று முதுகில் இடுப்பு விலா அருகே கடுமையான வலி ஏற்பட்டது. வலி நிதானமாக ஏற்பட்டு அதிகரிக்கவில்லை. இதென்ன வலி என்று யோசிக்கும்போதே வலி சில விநாடிகளில் மிகக்கடுமையாகத் தாக்க ஆரம்பித்தது. இதயத்தாக்குதல் போல வியர்வை வெள்ளமாக வழிய, வலி வெட்டி வெட்டி கொடுமையாக அதிர வைத்தது. அவரை உடனேயே தெரிந்த மருத்துவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதும், அந்த மருத்துவர் எந்த விளக்கமும் சொல்லாமல் ஊசி போட்டு மருந்துகளை சாப்பிடச் சொல்லி இன்னும் அரை மணி நேரத்தில் இந்த வலி நிற்காவிடில் மருத்துவமனையில் அவசர சிக்கிச்சையில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். வீட்டுக்கு வந்து 15 நிமிடங்களுக்குள்ளேயே அந்த வலி அவருக்குத் திடீரென்று நின்றது. உடனேயே சிறுநீர் வெண்மையாகப் பிரிந்தது. நிறைய பால் அருந்தி தூங்கிப் போனார் அவர்.

மறு நாள் மாலை அவருக்குத் திரும்பவும் அதே வலி. வியர்வை வெள்ளம். கையில் தயாராக வைத்திருந்த மாத்திரைகளைப் போட்டதும் வலி முன்போலவே உடன் நின்றது. ஆரஞ்சும் ப்ளம்ஸ் பழங்களும் நிறைய எடுத்துக்கொண்டதில் உடலில் சிறிது. தெம்பு வந்தது என் உறவினர் முதலில் சென்றது ஒரு வயிறு குடல் நிபுணரிடம்தான். பல வித சிகிச்சைகள், ஸ்கான் என்று சோதனைகள் செய்யப்பட்டதில் வலி வந்ததற்கான காரணம் புலப்படவில்லை.

யதேச்சையாக தினந்தந்தி வார இதழில் ‘ சிறுநீரகக்குழாய் அடைப்பு பற்றி விரிவாக அவர் படிக்க நேர்ந்தது. அவர் எப்படியெல்லாம் வலியின் வேதனையை அனுபவித்தாரோ, அதே வலியைப்பற்றி மிகத் தெளிவாக அதில் குறிப்பிட்டிருந்தார் ஒரு இயற்கை மருத்துவர். இந்த வலி ஏற்பட்டவர்கள் பால், ப்ளம்ஸ் பழங்கள் சாப்பிடக்கூடாது என்றும் இறைச்சி வகைளை அறவே நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

என் உறவினர் உடனே ஒரு சிறுநீரக சிறப்பு மருத்துவரிடம் சென்றார். அவர் பரிசோதனைகளை முடித்தபின் கேட்ட முதல் கேள்வி “ சித்த மருந்துகள் ஏதேனும் தொடர்ந்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ‘ என்பதுதான். என் உறவினரும் தான் தொடர்ந்து 6 மாதங்கள் வேறு ஒரு பிரச்சினைக்காகச் சாப்பிட்டதைச் சொல்ல, மருத்துவர் “ சித்த மருந்துகளில் மிகக்குறைந்த சதவிகிதம் கலக்கப்படும் தாமிரம் முதலியவை சிறுநீரகக்குழாயில் மணல்போலத் தங்கி விடுகிறது. இப்படித்தான் உங்களுக்கு அதில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது.” என்றவர் தொடர்ந்து ஸ்கான் செய்து, தங்கியிருந்த பொடி போன்றவை அனைத்துமே எடுத்துக்கொண்ட மருந்துகளால் வெளியேறி விட்டதாகக் கூறி 4 மாதங்களுக்கு தொடர்ந்து மருந்துகள் எடுக்கச் சொன்னார்.

கற்றுக்கொண்டது:

1. வெளியே பயணங்கள் தொடர்ந்து செய்பவர்கள் முக்கியமாக காய்ச்சிய வெந்நீரை எப்போதும் தன்னுடன் எடுத்துச் செல்வது மிகவும் அவசியம். அப்படி முடியாவிட்டாலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பது நல்லது.

2. இந்த மாதிரி காரணங்கள் அறியாத உடல் நலப்பிரச்சினைகள் தாக்கும்போது அப்போதைக்கு மருந்துகள் தீர்வுகளானதும் சும்மா இருந்து விடாமல் தன் உடலுக்கு வந்த பிரச்சினை என்ன என்பதை கண்டறியும் முயற்சி ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதே பிரச்சினை மறுபடியும் தலை தூக்கும்போது சமாளிக்க இயலும்.

3. வெயில் காலங்களில் நீர்க்கடுப்பு சாதரரணமாகவே நிறைய பேருக்கு வருவதுண்டு. தண்ணீருக்கு பதில் உளுந்து ஊறவைத்த நீரை அடிக்கடி குடித்துக்கொண்டிருந்தால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

4. உயிருக்கு அத்தியாவசியமான சில மருந்துகள் தவிர எந்த மருந்தையும் 3 மாதங்களுக்கு மேல் தொடர்வது நல்லதல்ல. மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுத் தொடரவேண்டும்.

61 comments:

  1. அறிய வேண்டிய அவசிய முத்துக்கள்

    ஆனாலும் எப்படித்தான் வலி தாங்கினீர்களோ மேடம்
    முதல் அனுபவத்தின் கை வைத்தியம் வியக்க வைக்கிறது
    கட்டாயம் இதனால் நிறைய பேர் பலனடைவார்கள்
    தங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. ஓவியம் வரையவும் கதை எழுதவும் மனதில் எப்போதும் கனன்று கொண்டிருந்த நெருப்பு இந்தப் போராட்டத்தில் அணைந்தே போனது.


    ......நீங்கள் மீண்டும் ஓவியம் வரைய வேண்டும், அம்மா.... ! முன்பு எழுதிய கதைகள், வரைந்த ஓவியங்கள் எல்லாம், உங்கள் பதிவில் போடலாமே.

    நீங்கள் கொடுத்து இருக்கும் அனுபவ குறிப்புகள் இரண்டும், மனதில் பதித்து கொள்ள வேண்டியவையே. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. நல்ல பதிவு. தேவையான தகவல்கள்

    ReplyDelete
  4. புத்தகத் திருவிழாவின்போது வித்யா சுப்ரமணியம் மேடத்தைச் சென்னையில் சந்தித்தேன். அவர் வீட்டில் வரைந்து வைத்திருந்த ஓவியங்களைப் பற்றிப் பேசும்போது உங்களைப் பற்றிய பேச்சும் எழுந்தது. தாங்கள் அவருக்கு நண்பர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete
  5. மருத்துவக் குறிப்புக்கு நன்றிமா.

    ReplyDelete
  6. அறிய வேண்டிய தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  7. அனுபவப் பாடம் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமையான / அவசியமான பதிவு
    பகிர்வுக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  9. அம்மா மிகவும் பயனுள்ள பதிவு. உங்களுடைய ஓவியங்களை விரைவில் எதிர் பார்க்கிறேன்.

    குறிஞ்சி குடில்

    ReplyDelete
  10. அனுபவங்களே அருமையான மருந்துகள் உண்மைதான். இங்கே உங்களின் பிரசுரமான ஒரு கதையை போடுங்கள். நானும் பத்திரிகைகளில் எழுதி உள்ளேன்.

    ReplyDelete
  11. அம்மா...
    எத்தனையோ வேதனைகள்...
    எல்லாவற்றிற்காகவும் நம் திறமையை வீணாக்கக்கூடாது.
    நீங்கள் மீண்டும் ஓவியம் வரையுங்கள்.

    ReplyDelete
  12. மிகவும் பயனுள்ள அனுபவங்கள், பலருக்கும் பயன்படும் வீட்டுக்குறிப்புகள். நன்றி.

    ReplyDelete
  13. நம் சந்திப்பின்போது, ஏன் தொடர்ந்து வரையவில்லை என்ற என் சந்தேகத்திற்குப் பதிலாக இதை நீங்கள் பகிர்ந்து கொண்டபோதே, இப்படியும் நடக்குமா என்று அரண்டு போயிருந்தேன்.

    //தொடர்ந்து வலியால் விரல்களை உதறிக்கொண்டிருந்ததால் விரலின் இரு பக்கமும் நீட்டிக்கொண்டிருந்த முள் விரலுக்குள்ளேயே போய்விட்டது//

    எலும்பு முறிவு ஏற்பட்டால் சொல்வதுபோல, வேறு காயங்கள் ஏற்பட்டாலும் அந்த இடத்தை அசைக்காமல் வைத்து கொள்வது நல்லது என்றும் தோன்றுகிறது இதன்மூலம், இல்லையா அக்கா?

    ஆயுர்வேத/சித்த/ஹோமியோ போன்ற மருந்துவமுறைகளில் இதுபோன்ற உலோகங்கள் கலக்கப்படுவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல, அவசியமில்லாவிட்டால் தொடர் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்தல் நலம்தான்.

    ReplyDelete
  14. மிகவும் பயனுள்ள குறிப்புகள் அம்மா. பாட்டி வைத்தியத்தில் தான் எத்தனை ஆச்சர்யங்கள்.

    ReplyDelete
  15. "உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் எங்களுக்கு ஓர் பாடம்." உங்க பதிவு படிக்கும்போது என் அம்மா ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.(இவ்வுலகில் அவர் இல்லை.)
    நல்லதொரு பதிவு. நீங்கள் மீண்டும் ஓவியம் வரையுங்கள்.வரைதல் என்பது ஒரு கொடை.நேரம் கிடைக்கும் போது வரையுங்கள். நன்றி.

    ReplyDelete
  16. இந்த அனுபவங்கள் நல்ல விழிப்புணரவை ஏற்படுத்துகிறது அக்கா.விரலில் முள் மாட்டிக்கொண்டதை விவரித்து இருந்த விதம் நேரிலேயே பார்த்துக்கொண்டிருந்ததைப்போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்தி விட்டது எழுத்துக்களில் அவ்வளவு உயிரோட்டம்.

    ReplyDelete
  17. உங்களின் இந்த அனுபவம் நிச்சயமாக வேறு யாருக்காவது எப்போதாவது பயன் படக்கூடும்.
    நல்லதொரு ஓவியத் திறமையுள்ளவர், வெளி நாட்டில் இருப்பதால், இன்றைய தமிழ்ப் பத்திரிகை உலகம் பயன் படுத்திக்கொள்ள முடியாமல் உள்ளதே, என வருத்தமாகத் தான் உள்ளது.

    ReplyDelete
  18. //சரியாக 4 மாதங்கள் கழித்து குத்திய துவாரம் வழியே பாதி முள் துண்டு தோலைக்கீறிக்கொண்டு வெளியேறியது. மறுபடியும் 4 மாதங்கள் கழித்து மீதித் துண்டும் அடுத்தப் பக்க துவாரம் வழியே தோலைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தது//

    அதுவரை எந்த தொந்தரவும் இல்லையா மேடம்?! அனுபவப் பாடங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுகிறது என்றாலும், உங்கள் அனுபவமும் அடுத்தவ‌ர்களுக்கு நிச்சயம் பாடமாக அமையும் மனோ மேடம்.

    ReplyDelete
  19. நல்ல குறிப்புகள் சகோ. சிறு வயதில் காலில் முள் குத்தி உள்ளே சென்றுவிடும் சமயங்களில் அம்மா, காலில் மஞ்சள் பொடி, அரிசி மாவு சிறிது தண்ணீரில் கலந்து சிறிது சூடு செய்து குத்திய இடத்தில் வைத்து கட்டி விடுவார். இரவு கட்டினால், காலை எழும்போது முள் வெளியே தெரியும்! அதை மெதுவாக எடுத்து விடுவார் என்பது நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  20. மனோ அக்கா முதல் அனுபவம் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது, உங்களின் ஓவியம்,கதை பார்க்க வாசிக்க மிக்க ஆவல்,நீங்களே கதையும் எழுதி ஓவியமும் வரைந்து உங்கள் ப்ளாக்கில் போடுங்க அக்கா.

    இரண்டாவது அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. நல்லதொரு அனுபவப்பாடம் மனோம்மா.

    தவிர்க்கமுடியாம மாசக்கணக்கா மருந்துகள் எடுக்க நேர்ந்தால் தினம் குடிக்கும் தண்ணீரின் அளவை நிச்சயமா அதிகரிக்கணும். அது ஓரளவு மருந்துகளால் ஏற்படும் சிறுநீரகப்பாதிப்பை குறைக்கும்ன்னு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் சொன்னார்.

    ReplyDelete
  22. scare to read, but it gives some lesson, thanks for sharing madam

    ReplyDelete
  23. மனோ அக்கா, உங்கள் அனுபவ முத்துக்கள் அனைத்துமே எமக்கு நல்ல அனுபவத்தைத் தருகிறது.

    அந்த முள்ளு.... அதை எப்படி அவ்வளவு நாட்களாக கொண்டு திரிந்தீங்க விரலுக்குள்? நினைக்கவே உடல் கூசுதே.. நல்லவேளை தானாக வெளியே வந்தது.

    ReplyDelete
  24. இன்றைய தலைமுறைக்கு நன்கு புரியும் வண்ணம் கூறியுள்ளிர்கள் நன்றி.

    ReplyDelete
  25. பின்குறிப்பில் சொல்லப்பட்ட காயத்தின் பின்விளைவுகள் தான் வருத்தம் தருகின்றன.!

    ReplyDelete
  26. கருத்துக்கு அன்பு நன்றி ராஜி!

    உண்மைதான். அந்த வலி பொறுக்க முடியாததாக இருந்தது. அந்த 8 மாதங்களும் விரலை அசைக்க முடியாத அளவு வலி இருந்தது. காய்கறி நறுக்குவதும் மற்ற‌ கடினமான வேலைகளும் என் கணவர்தான் செய்தார்.

    ReplyDelete
  27. அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா!

    விரைவில் என் சிறுக‌தைக‌ளை ப‌திவிடுகிறேன். ஓவிய‌ம் இப்போதும் எப்போதாவ‌து வ‌ரைவ‌துண்டு. ஆனால் ப‌த்திரிகைக‌ளுக்கு வரைந்து அனுப்புவ‌துதான் அப்போதே நின்று விட்ட‌து.

    ReplyDelete
  28. எழுத்தாள‌ர் வித்யா சுப்ரமண்யத்தைச் சந்தித்துப் பேசியது பற்றி அறிந்து மகிழ்ந்தேன் சகோதரர் கோபி!
    அவரின் 'உன்னிடம் மயங்கிறேன்' நாவல் தொடராக வெளியானபோது தான் அவரது அறிமுகம் ஏற்பட்டது!

    ReplyDelete
  29. கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் எல்.கே!

    ReplyDelete
  30. கருத்துக்கு அன்பு நன்றி பிரஷா!

    ReplyDelete
  31. அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ரிஷபன்!

    ReplyDelete
  32. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் மகாராஜன்!

    ReplyDelete
  33. அன்புள்ள குறிஞ்சி!

    கருத்துக்கு இனிய நன்றி! நான் ஏற்கனவே என் ஓவியங்களை 'ஓவிய முத்துக்கள்' என்ற தலைப்பில் இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  34. கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் உதயம்!
    நீங்களும் கதை எழுதி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது!
    வெளியுலகம் அறியாத எழுத்தாளர்கள் இங்கே வலைப்பூக்களில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லியிருப்பது எத்தனை உண்மை!!!

    ReplyDelete
  35. தங்களின் அன்பான அக்கறைக்கு இனிய நன்றி சகோதரர் குமார்!
    நான் இப்போதும் அவ்வப்போது வரைந்து கொண்டுதான் இருக்கிறேன். பத்திரிக்கைகளில் எழுதுவதும் வரைவதும்தான் அந்த காயத்துடன் நின்றே போனது!!

    ReplyDelete
  36. கூடிய விரைவில் தங்கள் கைகளால் ஓவியம் பேசட்டும்..அனைவராலும் பேசப் படட்டும்!!!

    ReplyDelete
  37. நல்ல அநுபவ முத்துக்கள். நல்ல தகவ்ல்கள். எப்படி தான் வேதனை முள் வெளிவரும் வரை தாங்கினிங்களோ க்ரேட்.
    மீண்டும் ஒவியம் வரையுங்க நாங்க எல்லாம் பார்க்கனும்.

    நிண்ட நாட்களுக்கு பின் இப்ப தான் வரமுடிந்தது.
    கொஞ்சம் உடல்நிலை சரியில்லை ட்ரிட்மெண்ட் எடுத்து கொண்டிருக்கேன்.

    ReplyDelete
  38. வருகைக்கு நன்றி மோகன்குமார்!

    ReplyDelete
  39. அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி லட்சுமி!

    ReplyDelete
  40. கையால் அசைக்காமல் வைத்துக்கொள்ள நினைத்தாலும் பளீரென்று தொடர்ந்து குத்திக்கொன்டிருந்த வலியில் அப்படி செய்ய முடிய வில்லை ஹுஸைனம்மா! நடைமுறையில் சாத்தியப்படவில்லை.

    அன்பான கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  41. கருத்துக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!

    ReplyDelete
  42. என்னில் உங்களின் அம்மா நினைவுக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி ரமா!
    ஓவியம் அவ்வப்போது வரைந்து கொன்டுதானிருக்கிறேன். பத்திரிகைகளுக்கு அனுப்புவதைத்தான் அந்த நிமிடத்திலிருந்து விட்டு விட்டேன்.

    ReplyDelete
  43. அன்பான கருத்துக்கு இனிய நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  44. அன்பார்ந்த கருத்துக்கு உள‌மார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  45. ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அஸ்மா!
    உண்மைதான்! அந்த‌‌ 8 மாத‌ங்க‌ளும் வ‌லியால் மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டேன். வ‌ல‌து கையால் அழுத்த‌ம் கொடுத்து எந்த‌‌ வேலைக‌ளையும் பார்க்க‌ முடியாது. அதெல்லாம் என் க‌ண‌வ‌ர்தான் செய்தார். அதுவும் அப்போது என் க‌ண‌வ‌ர் OFF SHORE [pETROLEUM COMPANY]வேலையில் இருந்தார்க‌ள். ஒரு வார‌ம் க‌ட‌லில். இன்னொரு வார‌ம் வீட்டில். அவ‌ர்க‌ள் இல்லாத‌ வார‌ம் வ‌லியுட‌ன் அனைத்தையும் ச‌மாளிக்க‌ மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டிருக்கிறேன்!

    ReplyDelete
  46. கருத்துக்கு அன்பு நன்றி வெங்கட் நாகராஜ்!
    பாருங்க‌ள், உங்க‌ள் அம்மாவுக்கு அப்போதே இந்த‌‌ அருமையான‌ வைத்திய‌ம் தெரிந்திருக்கிற‌து!

    ReplyDelete
  47. கருத்துக்கும் அக்கறைக்கும் அன்பு நன்றி ஆசியா!
    விரைவில் அப்போது வெளியான சிறுகதைகளை பதிவிடத்தான் நினைத்துக்கொன்டிருக்கிறேன்.

    ReplyDelete
  48. மிகவும் பயனுள்ள குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றிமா.

    ReplyDelete
  49. இந்த அனுபவங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கும் அம்மா. விரைவில் உங்கள் கதை ஓவியங்களை பதிவில் எதிர்பார்க்கிறோம். நாங்களும் நீர்க்கடுப்பை தடுக்க கோடைக் காலங்களில் தண்ணீரில் சீரகத்தை போட்டு குடிப்பதுண்டு.

    ReplyDelete
  50. அறிய வேண்டிய தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  51. இரெண்டுமே அருமையான குறிப்புகள்....!! முதல் குறிப்பில் இஞ்சியை நசுக்கி வைத்து அப்படியே கட்டுப்போட்டால் எந்த ஒரு முள குத்தி இருந்தாலும் விஷம் ஏறாது தானாகவே முள் வெளியேடு விடும்.

    இரண்டாவது குறிப்பு பெருஞ்சீரகத்தை ஒரு கைப்பிடி எடுத்து நன்றாக அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடித்தால் கல் அடைப்பு அடுத்த அரை மணிநேரத்தில் சரியாகும் ( கல் அளவை பொருத்து சிலருக்கு இரண்டு முன்று தடவை தரனும் ) .. இது நான் நேரில் கண்டது..எனது பாக்கிஸ்தானிய டிரைவர் வலியால் துடித்த போது ஒரு எகிப்திய பள்ளி இமாம் இதை செய்து கொடுத்தார். கல் வெளியேறியதை டிரைவர் ஒத்துக்கொண்டார்..

    ReplyDelete
  52. மீன் முள் குத்தியது பற்றி நீங்கள் சொன்னவுடன் எனக்கொரு முறை தொண்டையில் முள் குத்தியது தான் நினைவிற்கு வருகிறது. அப்ப்பா... அதை மருத்துவரிடம் சென்ற பின்பு தான் நீக்க முடிந்தது.

    நீங்கள் கற்றுகொண்டதை எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி அக்கா.

    ஜெய்லானி...இனி என்ன பிரச்சினை என்றாலும் உங்களுக்கு ஒரு போன் பண்ணினா டாக்டர் செலவு மிச்சம் போலயே...

    ReplyDelete
  53. அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி ஆயிஷா!

    ReplyDelete
  54. கருத்துக்கு அன்பு நன்றி ஆதி!

    சிரகம் நீர்க்கடுப்பு வராமல் தடுக்கக்கூடிய சக்தி கொடுக்கும். ஆனால் இந்த உளுந்து தண்ணீர் குடிப்பது உடனடியான பலனைக்கொடுக்கும்!!

    ReplyDelete
  55. கருத்துக்கு அன்பு நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  56. கருத்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!
    புதிய குறிப்புகள் நிச்சயம் ம்ற்ற‌வர்களுக்கு பலன் தரும்!
    முதலாவது குறிப்பு ‍நசுக்கிய இஞ்சியை வைத்துக்கட்டுவது நான் கேள்வியே பட்டதில்லை. இரன்டாவது கேள்விப்பட்டிருக்கிறேன். இரன்டு நல்ல குறிப்புகளையும் எழுதியதற்கு ம‌னமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  57. கருத்துக்கு அன்பு நன்றி என்றென்றும்16!
    தொண்டையில் முள் குத்தி என்னையும்விட கஷ்டப்பட்டிருப்பீர்கள்! நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!

    ReplyDelete
  58. என் பதிவிற்கு ஓட்டளித்த அன்புத் தோழமைகள்
    karthikVK, Sriramanandhaguruji, piraasha, RDX, Shruvish, Rishaban, Mohankumar, Maragatham, venkat Nagaraj, Spice74, Inbathurai, Asiya, RahimGazali, hihi12, Tharun, Ambuli, Paarvai, jegadeesh, Jollyjegan, tamilz, Ashok, Abdul kadher, Ilamthuuyavan, Jeylani, Riyas, Razack அனைவருக்கும் அன்பு நனறி!

    ReplyDelete
  59. முதல் அனுபவம் பற்றீ முன்பே பகிர்ந்து இருக்கீங்க மனோ, அக்கா கேட்டு ரொம்ப வருத்தமா இருந்தது,
    எனக்கும் சஙகரா மீன் முள் இது போல் ஆழமாக குத்தி இருக்கு, ஆனால் சர்ஜரி அள்வுக்கு இல்லை.

    இரண்டாவது தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவ அலை


    (ஜெய்லானி சொல்லும் இஞ்சி புதுசா இருக்கு , இனி யாராவது கேட்டா சொல்லனும், நான் இரண்டு மூன்று முறை குத்து பட்டத்தில் இருந்து , மிக உஷாராக தான் முள் மீன் களை சமைப்பது,

    ReplyDelete
  60. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete