Wednesday, 12 January 2011

கிராமத்துப் பொங்கல்

வழக்கம்போல பொங்கல் திருநாள் 15-1-2011 அன்று வரவிருக்கிறது. பொங்கல் என்றாலே என் புகுந்த வீட்டில் கொண்டாடிய பொங்கல் தான் என்றுமே நினைவில் எழும்.

என் புகுந்த வீடு தஞ்சை மாவட்டத்திலிருக்கும் அழகிய சிறு கிராமம். ஆற்றோரமாய் கிராமத்துக்குச் செல்லும் பாதை நீண்டு கொண்டே போகும். ஒரு பக்கம் நுங்கும் நுரையுமாக சலசலத்துச் செல்லும் ஆறும் மறுபக்கம் பசிய வயல்களும் குளுமையாக நமக்கு வரவேற்பு கூறும். பெரிய கூட்டுக்குடும்பம் என்பதால் வீட்டிலிருக்கும் நபர்கள் என்றில்லாமல் பக்கத்துத் தெருக்களிலிருந்து பார்க்க வருவோர், சாப்பிட வருவோர் என்று எப்போதும் அமர்க்களமாயிருக்கும்.

பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பேயே வீட்டில் களை கட்டி விடும். பொதுவாய் கிராமங்களில் மண் வீடுகளாயிருந்தால் புது மண் பூசி மெழுகுவது, சுண்ணாம்பு அடிப்பது என்று பொங்கலுக்கு ஒரு வாரம் இருக்கு முன்பே சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கும். போகி அன்று பழைய துணிகள், பழைய சாமான்கள் எல்லாம் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படும். பொங்கலுக்கென்றே அறுவடைக்கு முன்பே கொஞ்சமாக நெல்லை அறுத்து புத்தரிசி தயார் செய்வார்கள். வாழைத்தார், கரும்புக்கட்டு, மஞ்சள் கொத்துகள், புத்தம் புதிய பானைகள் எல்லாம் வீட்டில் வந்து இறங்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடைக்குச் சென்று பார்த்துப் பார்த்து பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி வந்து வீட்டிலிருக்கும் சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை கையெழுத்து வாங்கி தபாலில் அனுப்புவது ஒரு தனி சுவாரஸ்யம்.

என் மாமனார் காலத்தில் பொங்கல் பொங்குவதற்கென்றே ஆற்றங்கரைக்கு பார வண்டி ஓட்டிச் சென்று பெரிய பெரிய பாத்திரங்களில் நீர் எடுத்து வருவது வழக்கமாயிருந்தது. இதற்கென்றே அணைக்கட்டில் கொஞ்சம் தண்ணீர் திறந்து விடுவார்களாம். கிராம மக்கள் அனைவருமே குடங்களிலும் தவலைகளிலும் தண்ணீர் எடுத்து வருவார்களாம். தண்ணீர் குறைவாக இருந்தால் ஆற்று மண்ணில் ஊற்று தோண்டி அதிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சேமிப்பார்களாம். மண் அடுப்பை முதல் நாளே மெழுகி கோலம் போட்டு தயாராக வைத்து விடுவார்கள். .மாக்கோலங்களை பெண்கள் வீடு நிறைய இழைத்துக் கோலமிடுவார்கள்.


எங்கள் வீட்டில் பொங்கலன்று வாசலை அடைத்து எந்தக் கோலம் போடுவது என்பதில் முதல் நாள் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடக்கும். ஒரு வழியாக கோலத்தைத் தேர்வு செய்து முடித்த பின், அதற்கான வண்ணங்கள் பூச பொடிகளை சேகரிப்பது, கோலத்தின் நடுவே அலங்கரிக்க பரங்கிப்பூக்கள், சாணம் சேகரிப்பது என்று சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கும்.

பொங்கலன்று விடியற்காலை, இந்தக்கோலங்களுடன் தான் அழகாக பொழுது விடியும். ஐந்து மணிக்கே வீட்டுப்பெண்கள் எழுந்து, வீட்டிலிருக்கும் நண்டு சிண்டுகள் கோலப்பொயும் கலர்ப்பொடிகளும் எடுத்துக்கொடுத்துக் கொண்டே இருக்க வாசலை அடைத்து வரைந்த வண்ணக்கோலங்கள் நம்மை அழகாய் வரவேற்கும்.

புத்தம்புதிய பானைகளில் கோலமிட்டு, மஞ்சள் கொத்துக்களை அவற்றின் கழுத்தில் கட்டி, பாலூற்றி அடுப்பில் ஏற்றுவார்கள். ஒரு பக்கம் சர்க்கரைப் பொங்கலும் மறு பக்கம் வெண்பொங்கலும் தயாராகும். பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல் “ என்று தாம்பாளத்தில் கரண்டியாலடித்துக் கூவ சுற்றிலும் சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் காத்து நிற்பார்கள். எங்கள் வீட்டில் என் மாமியார் தன் பிள்ளைகளுடன் பொங்கல் கிண்டும் காட்சி பார்க்க அத்தனை ரம்யமாக இருக்கும். வீட்டுப் பெண்களுக்கு அன்று அவ்வளவாகப் பெரிய வேலைகள் இருக்காது. முந்திரிப் பருப்பு சுத்தம் செய்வது, ஏலமும் வெல்லமும் பொடித்துத் தருவது என்று சிறு சிறு வேலைகளே இருக்கும். வாழைக்காய், சர்க்கரை வள்ளி, பரங்கி, அவரை, சிறு கிழங்கு, கத்தரி, தக்காளி எல்லாம் போட்டு ஒரு பருப்புக்குழம்பு ஒரு பக்கம் கொதித்துக்கொண்டிருக்கும். பச்சரிசியும் பாலும் தேங்காய்த்துருவலுமாய் தயாராகியிருக்கும் வெண் பொங்கல் மிகுந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி இரவில் மூடி வைத்து விடுவார்கள். காலையில் அதில் கட்டித் தயிர் ஊற்றி பொங்கல் குழம்பைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அத்தனை அமிர்தமாக இருக்கும்! அதெல்லாம் ஒரு வசந்த காலம்!!

மறு நாள் மாட்டுப்பொங்கல். முதல் நாளே ஊர்ப் பஞ்சாயத்தில் கூடி, சீட்டுப் போட்டுக் குலுக்கி யார் வீட்டு மாட்டிற்கு முதல் மரியாதை செய்வது என்று தீர்மானித்து விடுவார்கள். அன்று காலை, ஒவ்வொரு வீட்டிலும் மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளை கூராக சீவி விட்டு, அதில் கொப்பி போட்டு, குஞ்சமும் சலங்கையும் வைத்துக் கட்டி, வண்ணங்களால் அழகூட்டி, நெட்டி மாலைகள் அணிவித்து, பொட்டிட்டு தயாராக வைத்திருப்பார்கள். மாட்டுத் தொழுவங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு கோலமிடப்படும். மாலையில் முதல் மரியாதை கொடுக்கப்பட்ட மாடுதான் முதலில் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். மாடுகளுக்கென்று உள்ல திடலுக்கு அது முன்னால் போய்ச் சேரும். பின்னாலேயே மற்ற மாடுகளும் வந்து சேர்ந்ததும் பூசாரி வந்து, பொட்டு வைத்து பூஜை செய்வார். தார தப்பட்டைகள் முழங்கும். பிறகு எல்லா மாடுகளையும் அவிழ்த்து விடுவார்கள். அவைகள் திமிறிக்கொண்டே நாலு கால் பாய்ச்சலில் வீட்டை நோக்கி ஓடி வர, அதன் பின்னாலேயே இளைஞர்கள் அவற்றை விரட்டிக்கொண்டே ஓடி வர, முறைப்பெண்கள் அவர்கள் மேல் மஞ்சள் தண்ணீர் விசிறியடிக்க, ஊரே கொண்டாட்டமாக இருக்கும்.

அடுத்த நாள் கன்னிப்பொங்கல். பல வகைக் கட்டு சாதங்களை மாலையில் செய்து எடுத்துக்கொண்டு பெண்கள் எல்லோரும் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். கோலாட்டம், கும்மி அடிப்பது என்று விளையாடி விட்டு சாத வகைகளைச் சாப்பிட்டு வருவார்கள்.

‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற பாடல்தான் மனதில் ஏக்கமாய்  எழுகிறது!

                                        
பொங்கும் பால் போல் அனைத்து சந்தோஷங்களும் என் இனிய அன்புத் தோழமைகளான உங்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் பொங்கிப் பெருக என் உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!


நன்றி: www.ekarai.net





78 comments:

  1. Happy pongal to you and your family, beautiful write up, cute kolam, great

    ReplyDelete
  2. கிராமத்துப்பொங்கலை கண் முன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள்.படிக்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

    ReplyDelete
  3. பொங்கலோ பொங்கல்,அருமையான பகிர்வு,அருமையான கோலம்.சர்க்கரை பொங்கல்,வெண்பொங்கல்,பொங்கல் குழம்பு ஆகா இப்பவே கிராமிய மணம் மனதை நிறைக்கிறது.
    அனைவருக்கும் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையா இருந்துச்சுமா.. படிக்கும் போதே......ஊர் நினைவு வந்துடுச்சு...!

    கண்டிப்பா இந்த பொங்கள் விடுமுறையிலயாச்சும் உங்களை சந்திக்க முயற்சி பண்றேன் அம்மா...!

    பொங்கல் வாழ்த்துக்கள்..அம்மா!

    ReplyDelete
  5. இனிய கிராமத்து பொங்கல் நினைவுகள். இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. Thank you very much for the nice appreciation krishnaveni! I wish you and your family a very happy pongal!

    ReplyDelete
  7. Thanks a lot for the lovely appreciation Vanathy! The kolam has been taken by google search.

    ReplyDelete
  8. கிராமத்துப்பொங்கல் அத்தனை சுவாரஸ்யமாகவும் மனதுக்கு நிறைவாயும் எப்போதும் இருக்கும் ஸாதிகா! ஆனால் இப்போதெல்லாம் சிறிது சிறிதாக பழக்க வழக்கங்கள் எல்லாம் குறைந்து வருகிற‌து.

    கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  9. கிராமிய மணம் அத்தனை அருமையானது ஆசியா! புகுந்த வீட்டில் மருமகளாக, வேலை செய்யும் ஆட்களுக்கெல்லாம் பொங்கலும் குழம்பும் பரிமாறுவது, அடுத்த நாள் மாட்டுப்பொங்கலன்று கறிக்கொழம்பும் கோழியுமாக பறிமாறுவதெல்லாமே நினைவுக்கு வ‌ருகிறது! என் மாமனார் அத்தனை வேலையாட்களுக்கும் வயலில் விவ‌சாயம் செய்த ஆட்களுக்கும் துணி மணிகளும் பழங்கள், கரும்புமாக வைத்துத் தருவார்களாம். அந்தக் காலம் அத்தனை பொன்னானது.

    ReplyDelete
  10. அழகான கோலம் அருமையான கிராமத்துப் பொங்கல் பதிவு.படிக்கும்போதே எனக்கு என் கிராமத்துப் பொங்கல் நினைவு வந்தது.தங்களுக்கு இனிமையான பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இப்பதிவை படிப்பவர்கள் பலருக்கும் பழைய நினைவுகள் மலர்ந்திருக்கும். மிக்க நன்றி அம்மா. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி தேவா!
    பொங்கல் என்றாலே ஊர் ஞாபகம் எப்போதும் வந்து விடும். இங்கே எப்போதும் முன்பெல்லாம் முக்கியமாக, நிறைய பேருக்கு பொங்கலன்று அழைத்து சாப்பாடு போடுவோம். உற‌வினர்க்கு துணிமணிகள் எடுத்துத் தருவோம். எங்கள் உணவகத்தில் பொங்கல் வகைகள், கட்டு சாதங்கள் என்று 25 வகைக‌ள் அன்று செய்வோம். என்ன இருந்தாலும் ஆறும் பசு மஞ்சள் கொத்துக்களும் மஞ்சு விரட்டும் கோலமும் கரும்புமாய் மணக்கும், ஊரில் வைக்கும் பொங்கலுக்கு ஈடாகுமா?
    உங்களுக்கு 10 நாட்களுக்கு முன் ஈமெயில் அனுப்பினேன். நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அவசியம் பொங்கல் விடுமுறையின் போது வாருங்கள்.

    ReplyDelete
  13. கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் உதயம்! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. உங்கள் பதிவை வாசிக்கும் போது, எனக்கும் ஊர் நினைப்பு வருகிறது. இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. கிராமத்துப்பொங்கலை கண் முன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள்.
    பொங்கல் வாழ்த்துக்கள்அம்மா.

    ReplyDelete
  16. அந்தக் காலம் ஒரு சுகம்தான். இப்போ எப்படிக் கொண்டாடுறீங்கன்னும் சொல்லுங்க அக்கா. ஹோட்டலில் பொங்கல் அன்று விசேஷ சாப்பாடு மெனு உண்டா?

    மலையாளிகளின் ஹோட்டல்களில், விஷூவன்று, சிறப்பு மெனு வைத்திருப்பார்கள். அதற்காகவே நாங்கள் அன்றைய தினம் ஹோட்டலுக்குச் செல்வோம். அதுபோல பொங்கலுக்கு தமிழ் உணவகங்களில் வழக்கம் உண்டா அக்கா?

    ReplyDelete
  17. பொங்கல் வாழ்த்துக்கள்..அம்மா!

    ReplyDelete
  18. படிக்கும் போதே ரொம்ப நல்ல இருக்கு. கிராமத்து பொங்க்ல் , சின்ன வயதில் வெளியூரில் உள்ள நினைவலைகள் வந்து சென்றன.

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். மனோ அக்கா

    ReplyDelete
  19. பொங்கல் நாளில் உங்க ஊருக்கு வந்ததுபோலவேஇருந்தது. மிகவும் அருமையான பதிவு.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அருமையான ,அழகான பொங்கல் நினைவுகள் அம்மா. என்ன இருந்தாலும் அவரவர் சொந்த ஊரில் கொண்டாடிய பண்டிகைகள் போல் வராது. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. ஊரில் கொண்டாடிய நினைவுகளை கிளப்பி விட்டுடுச்சு இந்த இடுகை..

    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  22. உங்க்ளுடன் ஊரில் பண்டிகைகள் கொண்டாடியது போலவே இருந்தது. பொங்கலுக்கு உங்கள் blog ன் வண்ணப் பொருத்தமும் அழகு.
    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. எனக்கும் எங்க ஊரு பொங்கல் பத்தி பதிவு போட ஆர்வம் இன்னும் அதிகம் ஆயிடுச்சி...!

    ReplyDelete
  24. அருமையான பசுமை நினைவுகள் அம்மா..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  25. இன்றும் கிராமத்து பொங்கல் இப்படித்தான் இருக்கிறதா?

    ReplyDelete
  26. படிக்கும் போதே நான் ஊருக்கு கற்பனையில் சென்றுவந்தேன் அம்மா கிராமத்து நினைவுகளில் அலைபாயும் உள்ளம் சொல்லில் அடங்கா கிராமத்து பொங்கல் உங்கள் வரிகளில் அற்புதம் அம்மா

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா

    ReplyDelete
  27. பொங்கல் வாழ்த்துக்கள்..அம்மா!

    ReplyDelete
  28. மிகவும் அருமையானதொரு பதிவு.

    சுத்தமான நெய் மணம் கமழ, ஏலக்காய் & முந்திரி மணம் மூக்கைத்துளைக்க, சுடச்சுட சர்க்கரைப் பொங்கல், தஞ்சையைச் சேர்ந்த தங்கள் கிராமத்தில், தாங்களே பரிமாற, நான் சாப்பிட்டது போல ஒரு திருப்தி ஏற்பட்டது, தங்கள் பதிவைப் படித்ததும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    இன்றும் கிராமத்து பொங்கல் இப்படித்தான் இருக்கிறதா?

    http://marumlogam.blogspot.com/2011/01/blog-post_7479.html

    இங்கு வந்து பாருங்கள் பொங்கலின் இன்றைய நிலை உணர்வீர்கள் அம்மா

    ReplyDelete
  30. அருமையான பகிர்வு,பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. நீங்கள் உள்பட எல்லோரையுமே இந்தப்பதிவு மூலம் ஊருக்கே அழைத்துச் சென்று விட்டேன் போலிருக்கிறது ராஜி! அந்த அளவு பசுமையானது ஊர் நினைவுகள்!!
    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றி!
    உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  32. கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கினிய நன்றி புவனேஸ்வரி!

    ReplyDelete
  33. கருத்துக்கும் வாழ்த்துக்கும் இனிய நன்றி சித்ரா!

    ReplyDelete
  34. கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்கும் இனிய நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  35. நிச்சயம் அந்தக் காலம் எல்லா விஷயங்களிலும் தனி சுகம்தான் ஹுஸைனம்மா!

    பொதுவாய் இங்கு எல்லா தமிழ் உண‌வகங்களிலும் பொங்கல் சிற‌ப்புணவு கொடுக்கிறார்கள். எங்கள் உண‌வகத்தில் எப்போதுமே பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் குழம்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், தய்ர் சாதம், சாம்பார், பலவித காய்கறி வகைகள் என்று 20க்கும் மேற்பட்ட உண‌வு வகைகளுடன் வாழைப்பழமும் கரும்புத்துண்டும் சேர்த்து வாழையிலையில் உண‌வு படைப்போம். நிறைய பேர் சொல்லி வைத்து வாங்கிச் செல்வார்கள்.

    ReplyDelete
  36. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பிற்கினிய நன்றி சகோதரர் மஹாராஜன்!!

    ReplyDelete
  37. அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் இனிய நன்றி ஜலீலா!

    ReplyDelete
  38. அன்பார்ந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் இனிய நன்றி சகோதரி லக்ஷ்மி!

    ReplyDelete
  39. வாழ்த்துக்களுக்கும் அன்பான கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி ஆதி!

    ReplyDelete
  40. வாழ்த்துக்கும் கருத்துக்கும் உளமார்ந்த நன்றி அமைதிச்சாரல்!

    ReplyDelete
  41. பாராட்டு, வாழ்த்து, அன்பான கருத்து என்று மகிழ்வுறச் செய்து விட்டீர்கள் மாதவி! உங்களுக்கு என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  42. அவசியம் உங்கள் ஊர்ப்பொங்கலைப்பற்றி பதிவு போடுங்கள் சகோதரர் தமிழ் அமுதன்! நிச்சயம் அது இன்னும் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்! ஏனெனில் நம் தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் பழக்க வழக்கங்கள் வித்தியாசமாகத்தானே இருக்கிறது!

    ReplyDelete
  43. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  44. இதிலென்ன சந்தேகம் வித்யா சுப்ரமண்யம்? நகர்ப்புறத்தில்தான் மண் பானைகளுக்கு பதிலாக பாத்திரங்கள் பொங்கலைத் தயாரிக்கவென்றே வந்து விட்டன. ஆனால் கிராமங்களில் இன்னும் பழைய வழக்கங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மண் பானைப்பொங்கல், நல்ல நேரம் பார்த்து முற்றத்திலோ, வீட்டு வாசலிலோ பொங்கல் பொங்குவது, மஞ்சு விரட்டு, மஞ்சள் தண்ணீர் தெளிப்பது என்று பழைய கலாச்சாரங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன!

    ReplyDelete
  45. வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துக்களுக்கும் உளமார்ந்த நன்றி தினேஷ்குமார்!

    ReplyDelete
  46. முதல் வ‌ருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஆயிஷா!

    ReplyDelete
  47. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
    பொங்கலைப்பற்றிய வர்ணனை பிரமாதம்! இப்படி ஒரு பாராட்டு இருந்தால் நிச்சயம் யாருக்குமே அருமையாக சர்க்கரைப்பொங்கல் செய்ய வரும்!

    ReplyDelete
  48. வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  49. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி குறிஞ்சி!

    ReplyDelete
  50. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  51. நல்ல சுவாரஷ்யமான பதிவு மனோ அக்கா. ஒரு பொங்கலை பொங்கி முடித்ததுபோலவே இருந்தது படிக்க. அப்படியே நினைவுகள் பின்னோக்கிப் பறந்தன.

    ReplyDelete
  52. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    அருமையான பகிர்வு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  53. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...

    இப்பொழுது எல்லா பண்டிகையும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி எனும் வகையில் ஒன்றாகி விட்டது... உங்கள் ஏக்கத்தில் நியாயம் உள்ளது.

    முதலில் குறிப்பாக கிராமங்களில், காப்பு கட்டில் தொடங்கி, தைநோன்பாக முதல் நாள் வீட்டில் பொங்கலிட்டு, அடுத்த நாள் தோட்டத்தில் பட்டிப் பண்டிகையாக உழவையும் கால் நடைகளுக்கும் வந்தனம் செய்து..அடுத்த நாள் பூப்பறிக்கும் பண்டிகையாக.. ஆட்டமும் கும்மியுமாக ஊர்கூடி குலுங்கும்...

    ReplyDelete
  54. கிராமத்து பொங்கல் நினைவுகள் அருமையாக இருக்குங்க.என்னுடைய பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம்ங்க.நீங்க சொன்னது மிகவும் சரி.‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ன்னு நாம இப்போ நினைச்சுக்க வேண்டி இருக்கு. அருமையான பகிர்வு.
    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...

    ReplyDelete
  55. வாழ்த்துக்களுக்கு அன்பான நன்றி சகோதரர் அப்துல் காதர்!

    ReplyDelete
  56. ரொம்ப நாட்களுக்குப்பின் உங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது அதிரா! உங்கள் வாழ்த்துக்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  57. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் இதயங்கனிந்த நன்றி தமிழ்த்தோட்டம்!!

    ReplyDelete
  58. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் உள‌மார்ந்த நன்றி சகோதரர் பத்மநாபன்! உங்களின் பகிர்வு இன்னும் கிராமத்துப்பொங்கல் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லுகிறது.

    ReplyDelete
  59. பல்புகளும் மொக்கைகளும்
    அதிகம் உள்ள பதிவர் உலகில்
    இல்லப் பாங்கானது
    இனிமையானது உங்கள் பதிவு
    எனவே நாளும் தொடர்கிறேன்.
    வாழ்த்துக்களுடன்
    ...

    ReplyDelete
  60. இனிய பொங்கல் நினைவுகளை அழகாக படம் பிடித்து பதிவாக்கி இருக்கிறீர்கள்...

    அந்த பழைய நாட்கள் மீண்டும் வருமா?

    தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (பகுதி-1) http://edakumadaku.blogspot.com/2011/01/1.html

    வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete
  61. பொங்கல் நல்வழ்த்துக்கள்

    ReplyDelete
  62. மானோ மேடம்..,உங்கள் பக்கத்திற்க்கு இன்றே நான் விஜயம் செய்துள்ளேன்.(ஒரு வழியா தேடிட்டேன் ங்க...)ரொம்ப நல்லா இருக்கு.எடுத்ததுமே அழகான பதிவு.பொதுவா பொங்கல்ன்னா அது கிராம பகுதிகளில் கலை கட்டும்னு சொல்லலாம்.... அந்த அழகான நினைவலைகளை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.இன்னும் உங்களுடைய இதர பக்கங்களை பார்வையிட்டபின் கருத்துக்களோடு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  63. வாழ்த்துக்கள்.wonderful flash back!!

    ReplyDelete
  64. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ரத்னவேல்!

    ReplyDelete
  65. தங்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்துகின்றது சகோதரர் ரமணி! தங்களுக்கு என் அன்பு நன்றி!

    ReplyDelete
  66. நல்ல எழுதியிருக்கீங்க.

    பெரிய கூட்டத்தோடு பொங்கல் கொண்டாடுவதே தனிதான். நான் பொள்ளாச்சியில் இருந்த போது பட்டிப் பொங்கல்-ல் கலந்து கொண்டந்தது மறக்கவே முடியாதது. வயல்வெளிக்கே சென்று கொண்டாடுவதை பட்டிப் பொங்கல் என்பார்கள்

    ReplyDelete
  67. பாராட்டுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஜிஜி!

    நீங்கள் திருவாரூரைச் சேர்ந்தவர் என்பதால் பெரும்பாலும் பொங்கல் கலாச்சாரங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும் தஞ்சை மாவட்டத்தைப்போல!

    ReplyDelete
  68. வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் கோபி!

    ReplyDelete
  69. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி ஆமினா!

    ReplyDelete
  70. முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் உளமார்ந்த நன்றி அப்சரா!

    ReplyDelete
  71. வாழ்த்துக்கும் அன்புக்கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி கீதா!

    ReplyDelete
  72. முதல் வருகையும் கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது சகோதரர் ரிஷபன்!
    அதற்காக என் இதயங்கனிந்த நன்றி!
    வயல்வெளியில் பொங்கலைக்கொன்டாடுவதும் முன்பெல்லாம் தஞ்சை மாவட்டத்திலும் பழக்கமாயிருந்தது. அப்புறம் தான் வீட்டில் மண்பானைப் பொங்கல் என்று மாறி விட்டது.

    ReplyDelete
  73. இண்ட்லியில் இணைந்து இப்பதிவிற்கு புத்துணர்ச்சி கொடுத்த அன்புத் தோழமைகள் சித்ரா, ஷ்ருவிஷ், சுக்கு மாணிக்கம், கோபி, பனித்துளி சங்கர், kovai2Delhi,Sriramanandha guruji, karthik, Dineshkumaar அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி!

    ReplyDelete
  74. பொங்கலோ பொங்கல்,அருமையான பகிர்வு மேடம்.
    கிராமத்துகே போய்வந்த ஓர் உணர்வு அருமை..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  75. எங்கள் அத்திம்பேரும் சித்தப்பாவும் வருடா வருடம் பொங்கல் வாழ்த்து அனுப்புவார்கள். டவுன் பொங்கல் ஹோட்டலில் சாப்பிடும் உணர்வைத்தான் தருகிறது. கிராமத்து நினைவுகளில் தான் குதூகலம்.. அழகான பதிவு.

    ReplyDelete