Friday, 12 November 2010

புறப்படு பெண்ணே புவியசைக்க!

இன்றைய பெண்கள் நிச்சயம் தங்களின் மனோபலத்தால், அறிவினால் புவியசைத்து பெருமிதம் கொள்ள வைக்கிறார்கள் பல துறைகளில்! அதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

நம் பாரதத்தில் எத்தனையோ பெண்கள் அவற்றிற்கு நல் உதாரணங்களாய் திகழ்கிறார்கள். அதிலும் எந்த விதக் குறைகளும் இல்லை.

பின் எவற்றில் குறைகள் ஏற்படுகின்றன?

குடும்ப வாழ்க்கை, அன்பு, பாசம், தாய்மை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, இவற்றின் முழு அர்த்தங்கள் புரியாமல்தான் இன்று பெரும்பாலான பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். அன்றைய காலக்கட்டத்தில் அறிவுடன் அச்சம், நாணம்,மடம், பயிர்ப்பு போன்றவற்றையெல்லாம் பெண்கள் மனதில் அவர்களுடைய பெற்றோரும் வீட்டிலிருந்த முதியவர்களும் பதிய வைத்தார்கள். குடும்பம் ஒரு கோவில் என்பதும் பெரியவர்களுக்கு மரியாதை தரவேண்டுமென்பதும் அவர்கள் வளரும்போதே புரிந்திருந்தது. நாணம் என்பது சும்மா வெட்கித் தலைகுனிதல் என்பதல்ல, அந்நிய ஆண்களிடம் வருவது மட்டுமல்ல, நல்லன அல்லாதவற்றுக்கும் சுய தவறுகளுக்கும்கூட அந்த உணர்வு தன்னிடத்தில் இருக்க வேண்டுமென்று புரிந்து வளர்ந்தார்கள். கவிஞர் பாரதியின் ‘நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகளுடன்’ வாழ வேண்டிய அறிவை நல்ல புத்தகங்கள் கொடுத்தன. அடுத்தவர் மனதையும் பார்வையையும் கவராத- இழுக்காத அளவில் அவர்களின் உடையலங்காரம் இருந்தது.

ஆனால் இன்றைக்கு?
திருமண வயதைக் கடந்தும் பெண்கள் சம்பாதிக்கிறார்கள். சம உரிமை பேசப்படுகிறது. மேல்நாட்டுக் கலாசாரங்களைப் பின்பற்றுகிறார்கள். உடைகள் விஷயத்திலும் பழக்க வழக்கங்களிலும் அத்து மீறல்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிறு நகரத்தில்கூட இரவு நேரத்தில் மட்டுமே அணிய வேண்டிய ‘நைட்டி’ உடை வெளியே கடைகளுக்குக்கூட போய்வர பயன்படுத்தப்படுகிறது. இரவு இரண்டாவது ஷோவில்கூட கல்லூரி மாணவிகள் தென்படுகிறார்கள். ஆறு வயது குழந்தைகள் கையில் கூட மொபைல் ஃபோன்கள்! பெரிய நகரங்களில் கேட்கவே வேண்டாம். உலகளவில் பெண்களின் பார்வையும் அறிவும் விரிவடைய விரிவடைய தன் பெற்றோருடனும் மற்றோருடனும் அவர்கள் தர்க்கம் புரிகிறார்கள். திருமண விஷயத்திலோ கேட்கவே வேண்டாம். தனக்கு வரவேண்டிய மணமகன் எப்படி இருக்கவேண்டுமென்று திருமண மையங்களில் வாதிடுவதும் தன் பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுவதும் பரவலாக எங்கும் நடக்கிறது. மாலை நேரங்களில் பள்ளிச் சிறுவர்கள், சிறுமிகள் மொய்க்கும் கம்ப்யூட்டர் செண்டர்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. அவர்கள் என்ன அங்கு செய்கிறார்கள், என்ன பார்க்கிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரிவதில்லை. பெற்றோர் பெருமையாகவும் நம்பிக்கையின் பேரிலும் கொடுக்கும் சுதந்திரம் பெரும்பாலும் நிறைய வழிகளில் இன்று இளைஞர்களால் மீறப்படுகிறது.

நான் ஒரு சமயம் எனக்குத் தெரிந்த ஒரு திருமண மையத்திற்குச் சென்ற போது, 30 வயதைக் கடந்த ஒரு பெண், தன் பெற்றோரையும் தாய் மாமனையும் பேச வேண்டாமெனக்கூறி வாதிட்டுக்கொண்டிருந்தார். அந்த மையத்தின் நிறுவனர் அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.

‘ உனக்கு இப்போது 31 வயது நடக்கிறது. உனக்கு வரும் வரன் நிச்சயம் 35 வயதைக் கடந்துதான் இருப்பார்கள். தலையில் சிறிது வழுக்கை விழுந்திருக்கலாம். நீ தோற்றமும் அழகாக, இளமையாக இருக்க வேண்டும், படிப்பும் உன்னை விட அதிகம் இருக்க வேண்டுமென்று சொன்னால் எப்படி? நீயே இத்தனை வயது வரை படித்து எல்லா எழுத்துக்களையும் பின்னால் போட்டுக்கொண்டிருக்கிறாய். 2 லட்சம் சம்பாதிக்கிறாய். இதில் எல்லாவற்றிலும் உனக்கு வரும் மாப்பிள்ளை அதிகமாக இருக்க வேண்டுமென்று சொன்னால் எப்படி? எதிலாவது நீ விட்டுக்கொடுத்தால்தான் நல்ல வாழ்க்கை அமையும்’ என்றார்.

ஆனால் அந்தப் பெண் இதில் யாருடைய யோசனனயும் தேவையில்லை என்று சொல்லி விட்டது. கூட்டுக்குடும்ப நன்மைகள், குழந்தை பாக்கியம், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அன்புடன் இல்லற வாழ்க்கையை வாழுவது-இந்தக் கோட்பாடுகள் எல்லாம் போய், இந்த மாதிரி கோட்பாடுகள்தான் திருமணங்களை நிச்சயிக்கிறது. இப்படி அமைகிற வாழ்க்கை பரஸ்பர வித்தியாசங்களிலும் விவாதங்களிலும் அடிபட்டு சீக்கிரமே விவாகரத்தில் முடிகிறது.

இன்னொரு சின்ன பெண்- பள்ளி வாழ்க்கையையே இன்னும் முடிக்காதவள்- சில வருடங்களுக்கு முன் ஒரு பிரயாணத்தில் அவளைச் சந்தித்தேன். பூமியிலிருந்து வானம் வரை எல்லா விஷயங்களையும் தொட்டுப் பேசுகிற அளவு 15 வயதுக்குள் அறிவு முதிர்ச்சி இருந்தது. கூடவே தற்போது நகரத்தில் எந்தப் பள்ளியில் கருச்சிதைவுகள் அதிகம் நடக்கின்றன, அவள் வயது பெண்களும் ஆண்களும் கணினியை எப்படியெல்லாம் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும் விலாவாரியாகச் சொன்னாள்.

இப்படி மிகச் சிறு பிராயத்திலேயே எல்லாமே தெரிந்து விடுவதால் சீக்கிரமே முகத்தில் முதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. எப்போதுமே அந்த வயதில் வெகுளித்தனத்துக்கு ஒரு அழகு இருக்கும். அது இன்றைய இளம் பெண்கள் நிறைய பேரிடம் இல்லை என்றுதான் சொல்வேன்.

எப்போதுமே பாடாத கவிதைக்கும், பேசாத மொழிக்கும் சிந்தாத கண்ணீர்த்துளிகளுக்கும் மதிப்பு அதிகம். இவை பரிசுத்தமானது. இவற்றிற்கு நிகரான பரிசுத்தம் வளர்ந்து வரும் ஒரு இளம் பெண்ணுக்கு இருக்கின்றது.

அதனால்தான் மனசு பரிசுத்தமாக இருக்கும்போதே அன்றைக்கு இளம் வயதில் மனமும் வளையும் பருவத்தில் பெண்களுக்குத் திருமணம் செய்வித்தார்கள். புகுந்த வீட்டின் கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொண்டு, எல்லாவற்றிலும் பக்குவப்பட மனது தயாரானது. ஆனால் இன்றைக்கோ, ஒரு சின்ன சலசலப்பு கூட விவாகரத்தில் முடிகிறது, பெற்றோரின் துணையுடன்!

எனக்குத் திருமணமாகி, புகுந்தவீடு செல்வதற்கு முன் என் பாட்டி என்னிடம் வந்து அவரின் திருமணத்தின்போது அவருடைய தகப்பனார் பரிசாகக் கொடுத்த கடிதத்தைக் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். அதைப்படித்து நான் அசந்து போனேன். அதில், ஒரு பெண் தன் மாமனார், மாமியாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், கணவரிடம் எப்படி மரியாதையுடன் இருக்க வேண்டும், பொறுப்புகளை எப்படி பொறுமையுடன் சுமக்க வேண்டும்-இப்படி எத்தனையோ புத்திமதிகள் அதில் இருந்தன. நானும் அப்படியே நடந்து கொள்வேன் என்று என் பாட்டியிடம் உறுதியளித்தபோது அவர்களின் முகத்தில் எத்தனை சந்தோஷம்!

ஆனால் இன்றைய நடைமுறையில்?

பெரும்பாலான பெண்கள் வீட்டில் அவர்களின் தாயார்கள் ‘ என் பெண்ணை எந்த வேலலயும் செய்யாதபடி தான் வளர்க்கிறேன். காப்பி வைக்கக்கூடத் தெரியாது. போகிற இடத்தில்தான் கஷ்டப்படப்போகிறாள். இங்கேயாவது அதுவரை நிம்மதியாக, கஷ்டப்படாமல் இருக்கட்டுமே’ என்று பேசுவது இப்போது பரவலாக இருக்கிறது. திருமணமாகுமுன்னரேயே இந்த மாதிரி விஷ விதைகள் புகுந்த வீட்டைப்பற்றி பெண்களின் மனதில் விதைக்கப்படுகின்றன. அப்புறம் எப்படி அந்தப் பெண்ணால் சின்ன சின்ன சலசலப்புகளைக்கூட தாங்க முடியும்? குடும்பமென்ற ஆலமரத்தின் விழுதுகளைத் தாங்க முடியும்? உறுதியான அஸ்திவாரங்களல்லவா குடும்பமென்ற கட்டிடத்தை உறுதியாக கடைசி வரைத் தாங்கிப் பிடிக்கிறது?

இதை இன்றைய பெற்றோர் உணர வேண்டும். வெறும் கல்வியும் சம்பாத்தியமும் ஒரு பெண்ணை முழுமையாக்காது. தான் கொடுக்கும் கல்வியும் அவள் சம்பாதிக்கும் செல்வமும் அவளுடைய எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சோதனைகளை முறியடிக்கக்கூடிய ஆயுதங்கள் என்பதை பெற்றோர் அவர்கள் வளர வளர உணர்த்த வேண்டும். அதற்கும் அப்பால் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதி நாகரீகமான உடைகளும் பேச்சும் பாவனையும் பெண்ணீயமல்ல, ‘நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்தான் பெண்களுக்கு அழகு என்பதையும் ஆடர்வர்களும் மற்றோரும் மதிக்கத்தக்க ஆடையலங்காரம்தான் அவளுடைய உண்மையான அணிகலன்கள் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

அடக்கம், பொறுமை, அன்பு, அறிவு, கருணை என்ற ஆயுதங்களுடன் புவியசைக்கப் புறப்படும் பெண்ணை யாரால் வெல்ல முடியும்?

இப்பதிவு இம்மாத ‘ லேடீஸ் ஸ்பெஷலில்’ வெளி வந்திருக்கிறது. திருமதி. தேனம்மையின் தூண்டுகோலுக்கும், இதை வெளியிட்ட ‘ லேடீஸ் ஸ்பெஷல்’ ஆசிரியருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!
ஓவியம் மட்டும் இந்த வலைப்பதிவிற்காக இப்போது நான் வரைந்து சேர்த்திருக்கிறேன். கணினியில் PAINT பகுதியில் வரைந்து இணைத்திருக்கிறேன்.
இஸ்லாமிய சகோதர சகோதரியர் அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள்!!

47 comments:

  1. congrats congrats. I saw in Ladies Special.
    Very nice story and meaning too.

    ReplyDelete
  2. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஓவியம் எப்போதும் போல மிக அழகு. பாட்டியின் கடிதம் நல்ல பகிர்வு. லேடீஸ் ஸ்பெஷலுக்கு வாழ்த்துக்கள்.

    தேனம்மைக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அட! நேற்று தான் என் தாயிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். எல்லா விதங்களிலும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இங்கு எல்லாம் இந்திய உணவு தயாரிப்பதை கூட பட்டிக்காட்டுத்தனம் என்று சொல்வதை முக்கியமாக சொல்லிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக உடை/பழக்க வழக்கம்/ஆன்மீக /கலை விசயங்களில் மாறி வரும் மக்கள் இந்திய உணவு என்பது ஒரு பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை கூட மறந்துவிடுகின்றனர்.

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை. கணினி PAINT உபயோகித்து வரைந்த ஓவியம் அற்புதமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

    ReplyDelete
  5. அக்கா,

    நானும் லேடீஸ்ஸ்பெஷலில் பார்த்துவிட்டு உங்களுக்கு மினஞ்சலில் வாழ்த்து தெரிவித்தேன்.இப்பொழுது மீண்டும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.

    அந்த ஆர்டிகளை அச்சேற்றத்தில் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது.அருமையான பயனுள்ள தகவல்கள் தந்து அசத்திய மனோ அக்காவுக்கு ஒரு பூங்கொத்து.

    // என் பெண்ணை எந்த வேலலயும் செய்யாதபடி தான் வளர்க்கிறேன். காப்பி வைக்கக்கூடத் தெரியாது. போகிற இடத்தில்தான் கஷ்டப்படப்போகிறாள். இங்கேயாவது அதுவரை நிம்மதியாக, கஷ்டப்படாமல் இருக்கட்டுமே’//பல பெற்றோர்கள் இப்படி பேசுவது மற்றுமின்றி அதனை பெறுமைக்குறிய விஷயாமாக கருதுகின்றனர் என்பது கசப்பான உண்மை.

    //வெறும் கல்வியும் சம்பாத்தியமும் ஒரு பெண்ணை முழுமையாக்காது.// வைர வரிகள்.

    ReplyDelete
  6. லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் கட்டுரை வெளிவந்ததில் மகிழ்ச்சி. உங்கள் பார்வை அருமை.

    ReplyDelete
  7. //இதை இன்றைய பெற்றோர் உணர வேண்டும். வெறும் கல்வியும் சம்பாத்தியமும் ஒரு பெண்ணை முழுமையாக்காது //

    மில்லியன் டாலர் கேள்வி..!! தன் வாழ்கைக்கு பயன் படாத கல்வியும் பணமும் இருந்து என்ன பயன்..!!

    ReplyDelete
  8. அழகா சொல்லியிருக்கறீங்க... நிறைய புதிய விசயங்கள்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. கையால் வரைந்து ஸ்கேன் செய்தால் நேரம் குறைவா வரும் . பொருமையா வரைஞ்சிருக்கீங்க சாவித்திரி, சரோஜா தேவி சாயல் தெரிகிறது :-))

    ReplyDelete
  10. Very good article. Congrats as it got published in Ladies special book.

    ReplyDelete
  11. நான் 'லேடீஸ் ஸ்பெஷலில்’ படித்தேன்.
    நல்ல சிந்தனை.
    நன்றி.

    ReplyDelete
  12. வணக்கம் அம்மா
    நல்ல பதிவும்மா ஆனா பெண்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்ம்மா வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தயவு செய்து தங்கள் தந்தையையோ அல்லது சகோதரர்கலையோ துணைக்கு அழைத்துச் செல்லுங்கள் நீங்கள் தைரியசாலிதான் உண்மை ஆனால் பாதுகாப்பில்லாமல் செல்கிறது உலகம் சகோதரனாக சொல்கிறேன் மாற்றிகொல்லுங்கள் சகோதரிகளே........

    தடை சொல்ல
    மனதில்லை
    துணைகொண்டு
    துணிந்து செல்ல
    துயரங்கள்
    மறையும்
    தோழிகளே.........

    அம்மா என் பக்கம் உங்கள் தரிசனமும் வேண்டும்மா வருவீங்களாம்மா

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அம்மா...தேனக்கவும்,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர்க்கும் வாழ்த்துக்கள்....ஒவியம் செம அழகு...

    ReplyDelete
  14. ஓவியம சூப்பர். நான் எழுதின கதை லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வந்துள்ளது. சமயம் கிடைக்குமோது படிங்கள். நன்றி.

    ReplyDelete
  15. Thank you very much for the nice appreciation as well as the greetings Viji!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  17. அன்பான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி இலா!

    ReplyDelete
  18. ஓவியத்திற்கும் கட்டுரைக்குமான உங்களின் பாராட்டிற்கும் என் மகிழ்வான அன்பு நன்றி புவனேஸ்வரி!!‌

    ReplyDelete
  19. பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  20. நீன்ட நாளிற்குப்பின் உங்களின் நீன்ட பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்தது ஸாதிகா! மின்னஞ்சல்களின் பக்கம் போய்ப் பார்க்கவேயில்லை ரொம்ப நாளாய்! இப்போதுதான் பார்த்தேன். சீக்கிரம் பதில் எழுதுகிறேன். வாழ்த்துக்களுடன் கூடிய பூங்கொத்திற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  21. தன் வாழ்கைக்கு பயன் படாத கல்வியும் பணமும் இருந்து என்ன பயன்..!!

    அருமையான வரிகள் சகோதரர் ஜெய்லானி!
    ஓவியத்திற்கான பாராட்டிற்கு அன்பு நன்றி! கணினியில் வரைவதுதான் மிகவும் சிரமம்! கை நரம்புகளில் சில சமயம் வலி வந்து விடும்! ரொம்ப நாளாயிற்றே என்று கணினியில் வரைந்தேன்!

    ReplyDelete
  22. மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் சங்கவி!

    ReplyDelete
  23. Thanks a lot for the nice compliement Mohankumar!

    ReplyDelete
  24. இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் அமைதி அப்பா!

    ReplyDelete
  25. சிந்தனைகளுக்கும் அன்பான அழைப்பிற்கும் இனிய நன்றி தினேஷ்குமார்!

    ReplyDelete
  26. வாழ்த்துக்களுக்கும் ஓவியத்திற்கான பாராட்டிற்கும் அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  27. சொன்ன வரிகள் சொன்ன விளக்கங்கள் நல்ல முத்துக்கள்

    அன்புடன்
    நெல்லை பெ. நடேசன்
    அமீரகம்

    ReplyDelete
  28. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. அக்கா, அழகாக, அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். கல்லூரிப் படிக்கும் பெண்ணானாலும் கர்சீப் கூடத் துவைக்கத் தெரியாது; ஒரு காஃபி கூடப் போடத் தெரியாது. அதற்கு இதே காரணம் - இப்போதாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று!! இது என்ன மனோபாவமோ தெரியவில்லை. புகுந்த வீட்டிற்காக அல்லாமல், தன்வேலைகளைத் தானே செய்ய வேண்டும் என்ற அளவிலாவது அடிப்படை வேலைகள் தெரிந்திருக்க வேண்டாமா?

    எனினும், ஒரு சிறு (மாற்றுக்) கருத்து: பெண்களைப் பெற்றவர்கள் என்றில்லாமல், ஆண்மக்களுக்கும்கூட திருமணமானபின் நடந்துகொள்ள வேண்டிய முறைகள், செய்துகொள்ள வேண்டிய அட்ஜஸ்ட்மெண்ட்கள், செய்ய வேண்டிய உதவிகள் என்று தாய்மார் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெரும்பாலும், ஆண்கள் கொஞ்சம் வளைந்துகொடுத்தால்கூட அதைக் கேலி செய்பவர்களும் (நண்பர்கள்), கண்டிப்பவர்களுமே (உறவினர்கள்) அதிகம். இதனால்தான் பொதுவாக,திருமணம் என்பது பெண்களாலும், பெண்வீட்டினராலும் அச்சத்தோடு எதிர்கொள்ளப்படுகீறதோ என்று ஒரு எண்ணம். தாய்க்கு வீட்டு வேலைகளில் உதவுபவர்கள் மனைவிக்கும் உதவ முன்வருவார்கள். இது என் அனுபவம். இதுகுறித்து உங்கள் கருத்தையும் சொல்லுங்க அக்கா (முடிந்தால் தனி பதிவாக)

    ReplyDelete
  30. சொல்ல மறந்துவிட்டேன். ஓவியம் அழகு. கணினியில் வரைந்தது என்பதால் கூடுதல் பாராட்டுகள்.

    ReplyDelete
  31. அன்பு அக்கா ஓவியம் சூப்பர் ஆனால் இங்கு பார்க்கவும்.

    http://ujiladevi.blogspot.com/2010/11/16.html

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  32. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் நடேசன்!

    ReplyDelete
  33. தங்களின் அன்பார்ந்த பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  34. ஓவியத்திற்கான பாராட்டிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் அன்பு நன்றி ஹுஸைனம்மா!

    நீங்கள் சொல்வது மாதிரி, தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளவாவது பெண்கள் தெரிந்து கொன்டிருக்க வேண்டாமா? ஆண்களைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் முற்றிலும் சரியே! நீங்கள் சொல்வது மாதிரி இதற்கென தனிப்பதிவு போட வேண்டும். ஆனால் கவனித்த வரையிலும் அனுபவங்கள் மூலமாயும் அறிந்ததென்னவோ இன்றைய ஆண்கள் நிறைய விஷயங்களில், ஏன் குழந்தையை வளர்ப்பதில்கூட‌ மனைவியுடன் நிறையவே அனுசரித்துப் போகிறார்கள். வெளியிடங்களில்கூட, மனைவி ஷாப்பிங்கில் இருக்க, ஃபீடிங் பாட்டில மூலம் ஆண்கள் பாலூட்டுவதைக் கண்கூடாக பார்க்கிறேன். இந்த 'அனுசரித்துப்போதல்' பெண்களிடம் நிறையவே குறைந்து விட்டது என்பதுதான் என் வருத்தம்!!

    ReplyDelete
  35. அன்பு சகோதரர் ஹைஷ்!

    நீண்ட நாட்க‌ளுக்குப்பின் தங்களது வருகைக்கும் ஓவியத்திற்கான பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!
    தங்களது குறிப்பையும் பார்த்தேன். நன்றி! விரைவில் இதை சரி செய்ய முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  36. I read your article in Ladies special.I fully agree with your thoughts.Nice visiting your blog
    anahdirajansartsncrafts.blogspot.com

    ReplyDelete
  37. என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (2/11/11 -புதன் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/ நன்றி.

    ReplyDelete
  38. Mudhal murayaga indrudhan thangalin valaipadhivai parthen migavum arumai.........

    ReplyDelete
  39. Indhrudhan thangaludaya valaipadhivai parthen padithen migavum arumai....

    ReplyDelete
  40. அருமையான பதிவு.
    எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. அக்கா இந்த பகிர்வு எப்படி என் கண்ணில் இத்தனை நாட்கள் படாமல் போனது.அருமையாக சொல்லியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. என்றைக்கும் தேவையான நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய பெண்கள் பலருக்கும் நாகரிக மோகமும், ஆடம்பர வாழ்வின் மீதான பற்றுதலும் பல சிக்கல்களை விதைக்கின்றன. சரிசெய்யவேண்டிய பெற்றோரே சாதகமாக இருப்பது வேதனைக்குரியது. சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி மனோ மேடம்.

    இப்பதிவை வலைச்சரம் மூலம் அறியச் செய்த சாகம்பரிக்கும் என் நன்றி.

    ReplyDelete
  43. அன்பான பாராட்டிற்கும் முதல் வருகைக்கும் இதயங்கனிந்த நன்றி தனலக்ஷ்மி!

    ReplyDelete
  44. தங்களின் உளமார்ந்த பாராட்டு என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்துகிறது சகோதரர் ரத்னவேல்! தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  45. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பார்ந்த நன்றி ஆசியா!!

    ReplyDelete
  46. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி கீதா!

    ReplyDelete
  47. என்னை மறுபடியும் அன்புத் தோழமைகள் இந்தப்பதிவு குறித்து பாராட்டச் செய்ததற்கு அன்பு நன்றி சகம்பரி!!

    ReplyDelete