Sunday, 26 July 2020

ஒரு கேள்வியும் ஒரு சாதனையும்!!!!

ஒரு கேள்வி!

சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா?' என்று கேட்டதும் இன்றைக்கு ஆடி அமாவாசை என்பதால் விரதமிருந்து சமைக்கணும்மா. அப்புறம் தான் சாப்பிடனும்.' என்றது. கூடவே ஆண்கள் தான் தர்ப்ப்ணம் பண்ணனும் என்கிறார்கள். பெண்கள் அதைச் செய்ய முடியாது. அதனால் விரதமாவது இருந்து சமைக்கலாம் என்று வருஷா வருஷம் இப்படித்தான் செய்கிறேன்' என்றது. அது சென்றதும் அதைக்கேட்டுக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுப்பெண்,  ' இது தப்பும்மா.கணவர் இருக்கும்போது இறந்து போன பெரியவர்களுக்காக இந்த சுமங்கலிப்பெண் விரதம் இருக்கக்கூடாது' என்று சொன்னது. ' அதற்கு காரணம் என்ன? ' என்று நான் கேட்டதும் ' எனக்கு அதற்கெல்லாம் பதில் தெரியாது' என்றது. அதன் பிறகு என் சினேகிதியை தொலைபேசியில் அழைத்துக்கேட போது அவரும் ' காரணம் தெரியாது' என்றே சொன்னார். காரணம் கீதா சாம்பசிவம் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

இளம் வயதில் என் தந்தை காவல் அதிகாரியாய் பணியாற்றிய சமயங்களில் ஆடிப்பெருக்கு, சரஸ்வதி பூஜைக்குக்கூட பத்தாடைகள் அணிந்து சாமி கும்பிடுவோம். ஆனால் பெரியாரின் அடிபணிந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டபோது பூஜை புனஸ்காரங்கள் நின்று போயின. என் மாமியார் நான் உள்பட தன் ஏழு மருமகள்களுக்கும் எந்த சீரும் கேட்கவில்லை. ஜாதகம் என்ற ஒரு விஷயமே நடந்ததில்லை. திருமணச்செலவும் மணமகன் வீட்டினர் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களை மனங்குளிர வரவேற்று உணவருந்தித்தான் செல்ல வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அது போலவே எங்களையும் பழக்கி வைத்திருந்தார்கள். எங்கள் வீட்டில் சின்னக்குழந்தைகள்கூட வந்தவர்களை சாப்பிட்டுப்போகச்சொல்வார்கள். இப்படி எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்கள் இருந்த போதிலும்  மேற்சொன்ன நாளுங்கிழமையுமான பழக்க வழக்கங்கள் என் அம்மா வீட்டோடு நின்று போய் விட்டதென்றே சொல்லலாம். அம்மா வீட்டிலுமே ரொம்பவும்  முறைமைகளைப்பார்க்க மாட்டார்கள்.

சென்ற திங்கட்கிழமை தான் என் நெருங்கிய சினேகிதியும் இறந்த நாள். சென்ற வருடம் இறந்தார்கள். அவர்களின் மகன் தன் 27ம் வயதில் சாலை விபத்தில் இறந்து போனான். 2003ம் வருடம் என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து அவர்களின் மலர்ந்த முகம் மறைந்து விட்டது. கணவர் நோய்வாய்ப்பட்டு 10 வருடங்கள் கழித்து இறந்து போனார். பெண் வீட்டில் தான் கடைசி வரை இருந்தார்கள். அவர்கள் கணவர் இறந்ததும் கொள்ளி வைப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் சகோதரிகள் வழியில் நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொள்ளி போட உரிமையில்லையென்றும் அவர்கள் கணவர் வழி சகோதரர்கள் பிள்ளைகளில் யாராவது தான் கொள்ளி போட வேண்டுமென்று சொல்லவே, என் சினேகிதி தன் மகளையே தன் அப்பாவுக்கு கொள்ளி வைக்கச் சொல்லி விட்டார்கள். இப்போது அம்மாவும் இறந்த போது அதே பெண் தான் அவர்களுக்கும் கொள்ளி வைத்தது. சென்ற திங்கள் அன்று நான் ஒரு வருட பூர்த்தியில் திவசம் எப்படி நடந்தது என்று அந்தப்பெண்ணை விசாரிக்கையில் ‘ நான் தான் செய்தேன் அத்தை. ஐயர் வைத்து நொய்யலாற்றங்கரையில் அம்மாவுக்கு தவசம் செய்தேன்.’ என்றது. காலம் மாற மாற பழக்கங்கள் மாறுகிறதா? அப்படியென்றால் அமாவாசை அன்று அந்தப்பெண் தானே விரதமிருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்?

ஒரு சாதனை

ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையைப்படித்ததனால் வந்த தாக்கம் மிகப்பெரிது என்பதை பிரசாந்த் கேட் உணர்த்தியிருக்கிறார். அந்த செய்தி இது தான்.
ஒவ்வொரு வருஷமும் சுமார் 40000 மக்களுக்கு சாலை விபத்துக்களில் கைகள் இல்லாமல் போகின்றன. சிலர் பிறப்பிலேயே கைகள் இல்லாமல் பிறக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்ததினால் உருவானது தான் " இனாலி கைகள்"!



கைகள் இல்லாதவர்களுக்கு ரோபோட்டிக் முறையில் கைகளை இவர் எந்த செலவுமில்லாமல் தன் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.
இவரது முயற்சிக்கு வித்திட்டவர் பிரான்ஸ் நாட்டு நிக்கோலச் ஹட்செட். அவர் பயோனிக் முறையில் தனக்குத்தானே கைகளை உண்டாக்கிக்கொண்டவர்.
அவரை முன்னுதாரணமாக மனதில் ஏற்றுக்கொண்டார்.  பிறவியிலேயே கைகளை இழந்த ஒரு சிறுமிக்கு கைகள் வழங்க முயற்சி செய்த போது உலக நாடுகளில் அதற்கான விலையைப்பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சாதாரண, எளிய மக்கள் எப்படி கைகளைப்பெறுவார்கள் என்ற கேள்வியும் மற்றவர்களின் கிண்டலையும் புறக்கணிப்பையும் பொருட்படுத்தாத மன உறுதியும் இவரது இலக்கை, ஒரு உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேற வைத்தன. இடை விடாது நிதி திரட்டி ஆயிரம் கைகளை இவர் முதன் முதலாக தயாரித்தார். இதில் 700 கைகளை இலவசமாகவும் மீதமுள்ள 300 கைகளை விற்று வந்த பணத்தில் மறுபடியும் கைக‌ள் செய்து அவற்றையும் இலவசமாக கொடுத்தார்.

இலவசம் என்றால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால் இப்போது ஒரு விலையும் இதற்கு மதிப்பிட்டு விற்பனை செய்கிறார்.
எப்படி மூளையின் உத்தரவிற்கு ஏற்ப கைகள் செயல்படுகின்றனவோ, அதேபோல இந்த செயற்கை கைகளும் செயல்படும். இந்த ரோபோட்டிக் கைகள் மூலம் 10 கிலோ எடை வரை தூக்க முடியும்.

தனக்கு முழுமையாக தைரியமும் ஊக்கமும் கொடுத்த தன் மனைவி பெயரான " இனாலி "யையே இந்தக்கைகளுக்கு பெயராக வைத்திருக்கிறார். மற்றவர்களின் நிதி, உதவிகளால் இவரின் இந்த இயக்கம் சிறப்பாக இயங்கி வருகிறது.

https://inalifoundation.com/

25 comments:

  1. பிரசாந்த் கேட் போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்

    ReplyDelete
  2. இன்றைய செய்தித் தொகுப்புகள் இரண்டுமே சிந்திக்க வைத்தன..

    சிறப்பு..

    ReplyDelete
  3. இனாலி கைகள் சிறப்பான தகவல்... நல்ல மனம் வாழ்க...

    ReplyDelete
  4. இரண்டாவது செய்தியை வரும் வார பாஸிட்டிவ் செய்திக்கு எடுத்துக் கொள்கிறேன். . நன்றி.

    ReplyDelete
  5. இனாலி கைகள் இதுவரை அறியாதது..அறியத்தந்மைக்கு வாழ்த்துகள்...அந்தப் பெண் சடங்கு விசயம் இன்னும் மாறப்பலகாலம் ஆகும்...

    ReplyDelete
  6. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  7. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!!

    ReplyDelete
  8. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  9. இந்த செய்தி பாஸிட்டிவ் செய்தியில் வந்தால் இந்த உயர்ந்த மனிதரைப்பற்றிய தகவல்கள் இன்னுமே பரந்து விரியும் சகோதரர் ஸ்ரீராம்! இனிய நன்றி!

    ReplyDelete

  10. //கைகள் இல்லாதவர்களுக்கு ரோபோட்டிக் முறையில் கைகளை இவர் எந்த செலவுமில்லாமல் தன் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.//

    இனாலி கைகள் தந்த நல்ல மனிதரை பாரட்ட வேண்டும்.

    ReplyDelete
  11. அன்பு மனோ முதல் செய்தி ,
    நோக வைத்தாலும் சிந்திக்க வைத்தது.
    என் பெற்றோருக்கு, திதி கொடுக்க வேண்டிய
    சகோதர்கள் ,என் தம்பிகள் இப்போது இல்லை.
    நான் நினைத்துக் கொள்வேன் எனக்கேன் அனுமதி இல்லை என்று.
    தம்பி மகன் அதை செய்கிறான்.
    இன்னோரு தம்பிக்கு மகள் மட்டுமே.
    கைப்புல் என்ற வழக்கம் உண்டு. அந்த முறைப்படி
    அவன் மனைவி அந்தணரிடம் கொடுத்து செய்யச் சொல்கிறார்.

    உங்கள் செய்தி மனம் நிறைக்கிறது.

    நல் உதவி செய்யும் உயர்ந்த மனிதர் இனாலி
    நிறைந்த நல்வாழ்வு பெற வேண்டும்.

    ReplyDelete
  12. காலம் மாறி வருகிறது. உங்கள் தோழியின் வாழ்க்கையில் நேர்ந்த துயரங்கள் வருத்தம் அளிக்கின்றன. பெண்ணுக்கு தைரியம் தந்து சென்றிருக்கிறார்.

    பிரசாந்த் கேட் எளிய மக்களுக்காக செய்திருக்கும் மகத்தான சேவை இது. பாராட்டி வாழ்த்துவோம்.

    ReplyDelete
  13. முதலில் பிரசாந்த் கேட் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள். அவரின் தொண்டு சிறக்கட்டும். நல்லபடியாக அனைவருக்கும் தொடர்ந்து உதவிகள் செய்து வரட்டும். வாழ்க! வளர்க!

    ReplyDelete
  14. இப்போது உங்கள் முதல் பிரச்னைக்குப் பதில்/அல்ல கேள்விக்குத் தீர்வு. பலரும் இந்து சாஸ்திரங்கள்/சநாதன தர்மம் பெண்களைத் தங்கள் தாய், தந்தைக்குத் திதி கொடுக்கவோ அல்லது அவர்கள் இறக்கும்போது கொள்ளி வைப்பதையோ தடுப்பதாகவே நினைத்துக் கொள்கிறார்கள்/நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி எல்லாம் இல்லவே இல்லை. ஒரு பெற்றோருக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் வாரிசு மட்டும் இருந்தால் அந்தப் பெண் தான் பெற்றோருக்குக் கொள்ளி வைக்க வேண்டும். வருடா வருடம் திதியும் கொடுக்க வேண்டும். அந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகி ஆண் பிள்ளை இருந்தால் அந்தப் பேரன் பெண்வழிப்பேரன் தாராளமாகச் செய்யலாம். ஆனால் இதற்குத் தான் அந்தப் பெண்ணின் புக்ககத்தினர் ஒத்துக்கொள்ள வேண்டும். தங்கள் பேரன், பிள்ளையின் பிள்ளை தங்கள் பிள்ளையும் மருமகளும் இருக்கும்போது இந்தக் காரியங்கள் செய்வதற்கு ஒத்துக்கொள்வது அபூர்வம். அநேகமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே இறந்தவரின் பெண் வாரிசு கொள்ளி போடலாம். தொடர்ந்து திதியும் செய்யலாம். நேரிடையாக மந்திரங்களைச் சொல்லக் கூடாது என்பார்கள். ஆகவே கையில் தர்ப்பை வைத்துப் பிடித்துக் கொண்டு சங்கல்பம் செய்து தன்னுடைய அதிகாரத்தைப் புரோகிதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ அல்லது கணவனுக்கோ கொடுக்கலாம். இந்த இடத்தில் கணவன் மனைவியிடம் கைப்புல் வாங்கிச் செய்வதையும் அவன் பெற்றோர் ஏற்க வேண்டும். பலரும் இதையும் ஏற்கமாட்டார்கள், நாங்க இருக்கும்போது எங்க பிள்ளை இந்தக் கடைசிக் காரியம் செய்யக் கூடாது என்பார்கள். ஆக இப்படித் தான் தடங்கல் ஏற்படுமே தவிர்த்து புரோகிதர் வேண்டாம்னு சொல்ல மாட்டார். சாஸ்திரங்களும் மறுப்பதில்லை. இப்படி யாருமே முன்வராத பட்சத்தில் அந்தப் பெண்ணின் கைப்புல்லை/தர்ப்பையை வாங்கிப் புரோகிதரே செய்து தருவார். அநேகமாக இப்படித் தான் நடக்கும். நடக்க வேண்டும். வேறு வழியில்லை. இது மனிதர்களால் ஏற்படுத்தப்படும் தடை! சாஸ்திரமோ, சம்பிரதாயமோ, இந்து மதமோ சொன்னதில்லை. சொல்லவும் சொல்லாது.

    ReplyDelete
  15. இப்போ உங்க வீட்டில் வேலை செய்யும் பெண் தன் பெற்றோருக்குத்திதி கொடுக்காமல் விரதம் இருப்பதால் தப்பில்லை. ஒரு வேளை அவள் புக்ககத்தில் திதி கொடுக்கக் கூடாது என்று சொல்லி இருக்கலாம். அந்தப் பெண்ணிற்கு இப்படி ஒரு வழிமுறை இருப்பது தெரியாமல் இருக்கலாம். தெரிந்தவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அந்த இன்னொரு பெண் சொன்னது போல் சுமங்கலிப் பெண் இப்படி இருக்கக் கூடாது என்பதெல்லாம் இல்லை. என் தம்பி மனைவி அவள் அம்மா/அப்பா இருவருக்கும் தன் கைப்புல்லை என் தம்பியிடம் கொடுத்து தம்பி தான் செய்து வருகிறார். சுமார் 20 வருடங்களாக. என் அப்பா இருந்தப்போவே! இன்னும் சொல்லப் போனால் மகளைக் கல்யாணம் செய்து கொடுத்த இடத்தில் புக்ககத்தினர் அவளைக் கொள்ளி போடக் கூடாது. காரியங்கள் செய்யக் கூடாது என்று தடுத்தால் மனைவியே கொள்ளி போட்டுக் காரியங்கள் செய்யலாம். என் நாத்தனார்கள் இருவர் அப்படித் தான் செய்து வருகின்றனர். என் பெரிய மாமியாரும் அவர் கணவருக்கு அவரே கொள்ளி போட்டுக் கடைசி வரை ஸ்ராத்தம் செய்தார்.

    ReplyDelete
  16. இப்போ ரேவதிக்கு! நீங்க உங்க பெற்றோருக்குச் செய்ய முடியாமல் போனது குறித்து வருந்துகிறீர்கள். ஆனால் உங்க தம்பி பிள்ளை தன் அப்பாவைப் பித்ருக்களிடம் சேர்க்கும்போது மூன்றாம் தலைமுறைக் கொள்ளுத்தாத்தாவை நீக்கிவிட்டு உங்க தம்பியைச் சேர்த்திருப்பார். ஆகவே அவர் உங்க அப்பாவுக்கும் சேர்த்தே இப்போப் பிண்டப்பிரதானம் செய்வார். இதிலே நீங்க குறைப்பட்டுக்க ஒன்றுமே இல்லை. இன்னொரு தம்பிக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் அவர் மனைவி கைப்புல்லை வாங்கிப் புரோகிதர் செய்கிறார். இதுவும் தப்பில்லை. பின்னால் இந்தத் தம்பி பிள்ளை தன் சித்தப்பா பெயரையும் தர்ப்பணம்/மஹாலயம் ஆகியவற்றில் சேர்த்துக்கொண்டே ஆகணும். ஆகவே அவருக்கும் நற்கதி கிடைக்கும். இதில் கலங்க எதுவுமே இல்லை. முக்கியமான விஷயம் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. 2013 ஆம் ஆண்டில் எங்க பெரிய மாமியார் இறந்தப்போ என் கணவர் தான் எல்லாமும் செய்யணும்னு அவங்க பெண் சொன்னப்போப் புரோகிதர் அழுத்தம் திருத்தமாக நீங்க இருக்கையில் அவர் செய்யக் கூடாது. சொந்தப் பிள்ளை என்றால் தான் செய்யணும் என்று சொல்லிவிட்டார். அவர் தான் செய்தார்.

    ReplyDelete
  17. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வல்லிசிம்ஹன்! அன்பு நன்றி!
    என் அப்பா இறந்த போது, எனக்கு சகோதரர் இல்லையென்பதால் அடிக்கடி தகராறுகள் செய்யும் என் பெரியப்பா, அவர்கள் மகன்களை எதிர்பார்க்காது என் அம்மா அக்கா கணவரையே கொள்ளி வைக்கச் சொன்னார்கள். இதனால் பெரிய வாக்குவாதம் வந்தபோது அந்த துக்கத்திலும் எழுந்து வந்து பலர் முன்னிலையில் எல்லோரையும் விட என் மருமகனுக்குத்தான் தகுதி உண்டு. அவர் எனக்கு இன்னொரு மகன்' என்று சொன்னார்.
    இந்த பழக்க வழக்கங்களை விட இறந்தவருக்கு யார் மீது அதிக அன்போ, அவரே கொள்ளி வைக்கலாம் என்பதே என் கருத்து.

    ReplyDelete
  18. அழகான கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  19. மிகச் சிறப்பாக, அருமையாக விளக்கம் அளித்திருக்கிறீர்கள் கீதா! என் சந்தேகத்திற்கு ஒரு நல்ல பதில் கிடைத்தது. அன்பு நன்றி!

    ReplyDelete
  20. செயற்கைக் கைகள் வழங்கும் அவர் முயற்சி வாழ்க

    ReplyDelete
  21. இரண்டாவது விஷயம் மனதை நெகிழ்ச்சியடைய வைத்தது. பாராட்டப்பட வேண்டிய சேவை. பிரசாந்த் கேட் எளிய மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை. அவரைப் பாராட்டி வாழ்த்துவோம்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  22. முதலாவது மரண வீடு சம்பந்தமாக இதே கேள்வியுடன் அறிந்ததும் புரிந்ததும் என்றபகுதியில் 2014 இல் கேட்டிருந்தேன். கொஞ்சம் வித்தியாசம். பெற்றோருக்கு மட்டும்தானா ஆடியமாவாசை சித்திராபௌர்ணமி சகோதரர்கள் சிறுவயதில் இறந்தால் அவர்கள் ஆன்மா சாந்தியடையத் தேவை இல்லையா போன்ற பல கேள்விகள் கேட்டிருந்தேன். அதை உங்கள் பதிவு நினைவு படுத்துகின்றது.
    http://www.gowsy.com/2014/07/blog-post_30.html

    கணவன் எந்த விதத்தில் தந்தையுடைய இடத்திர்க்கு வார முடியும். திருமணமான பெண்கள் ஆடியமாவாசை விரதம் பிடிக்கக் கூடாது என்பார்கள். ஏனென்றால் கணவன் தந்தைக்கு சமமாம். இது எல்லாம் அவரவர் விருப்பமும் சந்தோஷமும் பற்றியதே. பெண் பிள்ளை மட்டும் இருந்தால் அவர் கொல்லி வைக்க வேண்டியது தான்.

    செயற்க்கைக்கை பொருத்தித் தன்னுடைய மனைவி பெயரை வைத்த அந்த நல்ல உள்ளத்தூக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  23. செயற்கைக்கை பொருத்த உதவும் நபர் பாராட்டுக்குரியவர்.

    இரண்டு முத்துகளும் நன்று.

    ReplyDelete
  24. பெண்கள் பெற்றோர்களுக்கு இறுதிச் சடங்குக செய்வது குறித்து  கீதா அக்கா தெளிவாக விலக்கி விட்டார்கள். ஹிந்து மத கோட்பாடுகளின்படி பிதுர் காரியங்களில் பெண்களுக்கு பவர் அதிகம். பெண்ணிற்கு பிறந்த மகன் கையால் இறுதிச் சடங்குகள் செய்யப் படுவது ஒரு பாக்கியமாகவே கருதப் படும். ஆனால், நடைமுறையில் இதற்கு  பெரும்பாலானோர் ஒப்புக் கொள்ளாததால் பிள்ளைகள் இல்லையென்றால், மனை வியிடமிருந்து தர்ப்பை புல்லை யாராவது வாங்கி சடங்குகள் செய்கின்றனர். பவர் ஆஃப் அட்டாரணி கொடுப்பது போலத்தான் இது.  என் கணவரின் சித்தப்பா ஒருவருக்கு ஒரே ஒரு பெண்தான். அவர் இறந்த பொழுது அந்தப் பெண்தான் எல்லா சடங்குகளும் செய்தாள். 

    ReplyDelete
  25. பிரசாந்த் கேட் பற்றி இன்றைய பாசிட்டிவ் செய்திகளிலும் படித்தேன். 

    ReplyDelete